குற்றங்களை எதிர்கொள்ள புதியதோர் ஆயுதம்

ஒரு வீட்டை வாங்கும்போது, அது அமைந்துள்ள பகுதி பாதுகாப்பானதா என்று அறிந்துகொள்ள, அந்தப் பகுதியைச் சேர்ந்த நண்பர்களையோ அல்லது ஏற்கெனவே அங்கு வசித்து வருபவர்களையோ நாம் விசாரிப்போம்.


ஒரு வீட்டை வாங்கும்போது, அது அமைந்துள்ள பகுதி பாதுகாப்பானதா என்று அறிந்துகொள்ள, அந்தப் பகுதியைச் சேர்ந்த நண்பர்களையோ அல்லது ஏற்கெனவே அங்கு வசித்து வருபவர்களையோ நாம் விசாரிப்போம். ஆனால் மேலைநாட்டில் ஒரு பெருநகரில் நீங்கள் வீடு வாங்க வேண்டுமானால், பாதுகாப்பு பற்றி யாரிடமும் கேட்கத் தேவையில்லை. உங்களுக்குத் தேவையான தகவல்-நகர அளவிலும் சரி, தெரு அளவிலும் சரி-உங்கள் கைக்கே வந்து சேரும்.
நகரின் எந்தவொரு பகுதியிலும் நடைபெறும் குற்றச் செயல்கள் விகிதம், எந்தெந்த நேரங்களில் எந்த விதமான குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன, குற்றவாளி பிடிபட்டாரா, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டாரா போன்ற எல்லா தகவல்களும் கணினியை சில முறை தட்டினாலே, தன்னால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும் - இதற்கு ஒரு சிறு கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்-அவ்வளவே.
தகவல் என்பது ஒரு பெரிய சக்தி என்பதை சென்ற நூற்றாண்டு நமக்கு கற்றுத் தந்தது. ஆனால், தகவல்களின் அடிப்படையில் கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக், அமேஸான் ஆகிய நிறுவனங்கள் தனியொரு பொருளாதாரத்தை' நிறுவிய பிறகுதான், அது ரொக்கப் பணத்துக்கு இணையானது என்பதை உலகம் அறிந்து கொண்டது.
ஆதார் எண் பெறுவதற்குத் தேவையான தகவல்களை அளிப்பதிலும், அந்தரங்கத் தகவல்களை அளிப்பதிலும் நமக்குத் தயக்கம் இருந்தால்கூட, மேலே குறிப்பிட்ட பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் கேட்கும் தகவல்களையெல்லாம், மனமுவந்து அல்லது வேறு வழியில்லாமல் இலவசமாகவே கொடுத்துவிடுகிறோம். இப்படி அளிக்கப்படும் இலவசத் தகவல்கள்தான் இன்று உலகம் முழுவதும் லாபம் ஈட்டுவதற்கான மூலதனமாக இருக்கின்றன.
தகவல்கள் பணம் அளிக்கக் கூடியவை என்று நாம் அறிந்து வைத்திருப்பது என்பது ஒரு புறம்; ஆனால் தகவல்களை உண்மையிலேயே காசாக்குவது என்பது முற்றிலும் வேறு விஷயம். மக்கள்தொகைப் பட்டியலில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு என்னும் வகையில், நம்மிடம் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. ஆனால், வேதனை என்னவென்றால், நம்மைப் பற்றிய தகவல்களை வைத்துக் கொண்டு, நம்மைத் தவிர உலகம் முழுவதும் சம்பாதிக்கிறார்கள்; ஆனால், நாமோ நம்மைப் பற்றிய தகவலுக்கே கட்டணம் செலுத்துகிறோம் என்பதுதான்.
பணம் பண்ணுவதை விட்டுத் தள்ளுங்கள் - நமது அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவோ, நமது அன்றாட வாழ்வை மேம்படுத்தவோ கூட நம்மிடமிருக்கும் தகவல்கள் நமக்குப் பயன்படுவதில்லை. குற்றங்கள் குறித்த தகவல் ஓர் எடுத்துக்காட்டு.
உலகெங்கிலும் பின்பற்றப்படும் நவீன காவல்துறை நடைமுறைகள் அனைத்துமே, முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. இதற்கு அடிப்படையாக அமைபவை குற்றச் செயல்கள் பற்றிய விரிவான தகவல்கள். மேலை நாடுகளில் ஒவ்வொரு குற்றச் செயலின் நுட்பமான விவரமும் பதிவு செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வின்போதும், எந்த வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அதற்குத் தேவையான ஆள்பலம் போன்றவற்றை முடிவு செய்ய இந்தத் தகவல்கள் பயன்படுகின்றன.
தொடர்ந்து திரட்டப்படும் தகவல்களை மறு ஆய்வு செய்வதும், மதிப்பீடு செய்வதும், காவல் ஏற்பாடுகளை மேம்படுத்துவதும், அவ்வப்போது காவல் திட்டங்களில் மாறுதல்கள் செய்வதும் தொய்வின்றி நடைபெறுகின்றன. இந்த ஆய்வுகளையும் மதிப்பீடுகளையும் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள்தான் செய்கின்றன. இதற்கான செலவை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ காவல்துறை ஏற்றுக் கொள்கிறது.
குற்றச் செயல்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பது, அவற்றை ஆராய்வது போன்ற நடவடிக்கைகளில் மிகுந்த நேரமும் பணமும் செலவிடப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூகுள்', ஃபேஸ்புக்' போன்ற நிறுவனங்களும் இது போன்ற தகவல் சேகரிக்கும் பணிகளில் ஏராளமான பணத்தை முதலீடு செய்கின்றன என்பதையும், அதை வைத்து பெரும் லாபம் ஈட்டுகின்றன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
குற்றங்கள் பற்றிய தகவல் திரட்டு என்பது, பொதுமக்களுக்கு மிகத் தேவையான, பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய கருவி என்பதுடன், ஒரு நல்ல சந்தைச் சரக்கும் கூட. உதாரணமாக, சொந்த இல்லம் வாங்கத் திட்டமிடும் பகுதி, அல்லது நீண்ட காலம் வசிக்கப் போகும் பகுதியின் பாதுகாப்பு குறித்த துல்லியமான தகவல்களை அறிந்து கொள்ள மக்கள் நிச்சயம் கட்டணம் தரத் தயங்க மாட்டார்கள்.
நமது நாட்டில் குற்றங்கள் பற்றிய தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம்' தொகுத்து வருகிறது. இந்தியாவில் குற்றச் செயல்கள்' என்ற தொகுப்பை அந்த அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. தகவல்கள் திரட்டுவதும் அதனைப் பகுத்து தொகுப்பதும் சிறப்பாக உள்ளது. இந்த அமைப்பின் செயல்பாடு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்பதைக் குறிப்பிடும் அதே வேளையில், இந்தத் தகவல்கள் எவ்வளவு துல்லியமானவை, அவற்றை உறுதியாக எடுத்தாளலாமா என்பது பற்றிய விவாதமும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
புள்ளிவிவரம் என்பதைத் தவிர, ஆக்கபூர்வமான முறையில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு இந்த ஆவணத் தகவல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எல்லா திட்டமிடல்களும் காவல்துறை என்ற அமைப்பின் கூட்டு நினைவுத் திறன் அடிப்படையிலேயே நடக்கின்றன. தகவல்கள் தொகுப்பை ஆய்வு செய்து பயன்படுத்துவதைக் காணமுடியவில்லை.
ஒரு நகரத்துக்கு புதிதாக 500 காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர், 100 வாகனங்கள் ஒதுக்கப்படுகின்றன என்று வைத்துக் கொள்வோம். இந்தக் கூடுதல் திறனை 
காவல்துறை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? நகரின் பல்வேறு பகுதிகளில் காவலர்களையும் காவல்துறை வாகனங்களையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்ற முடிவை ஏதாவது ஒரு அடிப்படையில் எடுக்க வேண்டியிருக்கிறது. அறிவியல்பூர்வமான ஆராய்ச்சி முடிவுகள் இல்லாத நிலையில், காவல்துறைக்கே உண்டான தனித்துவமான திறன்' என்று கூறிக் கொண்டு, குருட்டுக் கணக்கு அடிப்படையிலும், ஊக அடிப்படையிலும், தரப்பட்ட கூடுதல் காவலர்களும் வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றனர்.
உறுதியான வழிமுறைகள் இல்லாத நிலையில், காவல்துறைத் தலைமைக்கு தேவையற்ற சிறப்புரிமை அளிக்கப்படுகிறது. தெருத்தெருவாக நடந்தபடி காவலர்கள் ரோந்து வருவதுதான் பொதுமக்களுக்கு சிறந்த பாதுகாப்பு என்று ஒரு பெருநகரின் காவல் ஆணையர் முடிவு செய்வார். அதன்படி, காவலர்களை அவர் ஈடுபடுத்துவார். அவருக்கு அடுத்ததாக வரும் ஆணையர், நகரில் வாகனங்களில் ரோந்து வருவதே சிறந்த வழிமுறை என்று முடிவு செய்யக் கூடும். இதுவும் அவருடைய தனிப்பட்ட, சொந்த முடிவுதான்.
இந்த இரண்டு முடிவுகளுமே நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டவைதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவை, பொதுமக்களின் பணம், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு குறித்த விஷயங்கள். ஆணையர் என்னதான் அனுபவம் மிக்கவராகவும் கெட்டிக்காரராகவும் இருந்தாலும், காவல் ஏற்பாடுகளை அவருடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கு எப்படி விடுவது? இதுபோன்ற முடிவுகளை அறிவியல் ரீதியாக எடுத்து, அதை பொது ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டாமா?
குற்றச் செயல்கள் போன்றவை பற்றிய தகவல்களை காவல்துறையினர் சேகரிக்காமல், நமது பல்கலைக்கழகங்களும் பிற கல்வி நிறுவனங்களும் சேகரித்து, ஆய்வு செய்ய வேண்டும். ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக காவல்துறை ஏற்படுத்தப்படவில்லை. அதற்கான திறனும் காவல்துறையினருக்கு கிடையாது. சரியான, நம்பகமான தகவல்களை மட்டுமே அவர்களால் அளிக்க முடியும்.
நமது பல்கலைக்கழகங்களிலும் பிற கல்வி நிறுவனங்களிலும் தகவல் விவரங்கள் இல்லை. அதனால் தகவல் அடிப்படையில் காவல்துறையை மேம்படுத்தும் வழிமுறைகளைக் கண்டடைய நமது கல்வித்துறையால் முடிவதில்லை. காவல்துறையினரிடம் தகவல் இருக்கிறது; ஆனால் அவர்களால் அதைப் பகுத்து ஆராய்ந்து ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த இயலாது.
காவல்துறை, பிற பாதுகாப்பு அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிலையங்கள் இவற்றுக்கிடையே ஆரோக்கியமான ஒத்துழைப்பு, பங்களிப்புகள் இருந்தால், நமது பாதுகாப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், நிதியை சேமிக்கவும் இயலும். ஆனால், காவல் விவகாரங்களில் இந்த அமைப்புகள் சார்பில், தீர்வுகள் காண எந்த முயற்சியும் நடக்கவில்லை.
இந்தச் சுழலில் நாம் சிக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான், நமது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு வீதியிலும் உள்ள போக்குவரத்து குறித்த தகவல்களை கூகுள் மேப்ஸ்' சேகரித்து, ஓலா', உபேர்' போன்ற பயணிகள் வாடகை வாகன நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. இந்த தகவல்களை இலவசமாக, மகிழ்வுடன் நாம் அளித்து வருகிறோம். தகவலை அளிப்பது மட்டுமல்ல, அதை வழிகாட்டி வரைபட விவரமாகப் பெற, அந்த வாடகை வாகன நிறுவனங்கள் வழியாக கூகுளு'க்கு பணமும் அளித்து வருகிறோம்!
புதையலை பூதம் காப்பது போல', தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சேகரித்து வைப்பதில் பயனில்லை. அந்தத் தகவல்களின் அடிப்படையில், காவல்துறையின் செயல்பாட்டை அறிவியல் ரீதியாக மேம்படுத்தவும், மக்களுக்கு உதவும் விதத்தில் அவற்றைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.
கட்டுரையாளர்:
இந்திய காவல்பணி அதிகாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com