நல்லவை போற்றுதும்!

வனத்துறையின் எச்சரிக்கை அறிவிப்பு; "வனங்களையும் வன உயிர்களையும் அழித்து வாழ நினைக்காதீர்கள். ஒரு கட்டத்தில் பண நோட்டுகள் மட்டும்தான் மிஞ்சும். அதை உண்ண முடியாது' - இது எவ்வளவு உண்மை!

வனத்துறையின் எச்சரிக்கை அறிவிப்பு; "வனங்களையும் வன உயிர்களையும் அழித்து வாழ நினைக்காதீர்கள். ஒரு கட்டத்தில் பண நோட்டுகள் மட்டும்தான் மிஞ்சும். அதை உண்ண முடியாது' - இது எவ்வளவு உண்மை!
 இயற்கையை சீண்டுவது மிகப்பெரிய மனித உரிமை மீறல். நாம் இயற்கை அன்னையை அவமதித்த குற்றத்திற்கு வர்தா புயல் கொடுமையான தணடனை கொடுத்தது. ஆயினும் நமது அழித்தொழிப்பு குறைந்தபாடில்லை.
 "கஜா' புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும், சீரிய நிவாரணப் பணிகளாலும் இயற்கை சீற்றத்தின் தாக்கம் தணிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடரைத் தவிர்க்க முடியாவிட்டாலும் அதன் விளைவுகளைத் திறமையான நிவாரணப்பணிகள் மூலம் குறைக்கலாம். அதனால்தான் தேசிய பேரிடர் ஆணையம் "டிசாஸ்டர் பிரிவென்ஷன்' என்ற நிலையில் இருந்து "டிசாஸ்டர் மிடிகேஷன்' - பேரிடர் தாக்கத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளை முன்னிறுத்தியுள்ளது.
 மனித குலத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களை ஆதரிப்பதாலும், மனித உரிமைகளை நிலைநிறுத்த குரல் கொடுக்காமல் இருப்பதாலும்தான் உரிமை மீறல்கள் தொடர்கின்றன. மனிதன் நோக மனிதன் பார்ப்பதே பாவம் என்றார் மகாகவி பாரதி. ஆனால் மனிதன் மனிதனை கொன்று குவிக்கும் பாவங்கள் உலகெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
 உலகளாவிய அளவில் மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்ட வருடம் 1948. இரண்டாம் உலகப் போரின் கொடுமையை உணர்ந்த மனித சமூகம், "இனி ஒரு விதி செய்வோம் உரிமை மீறல்களால் நிகழும் கொடுமைகளை ஒழித்திடுவோம் "என்ற சபதம், அன்றைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மனைவி எலினார் ரூஸ்வெல்ட் தலைமையில் அமைக்கப்பட்ட மனித உரிமை குழு கொடுத்த முப்பது ஷரத்துக்கள் கொண்ட அறிக்கை மூலம் எடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.
 எழுபதாவது வருடத்தில் அடி வைக்கும் இத்தருணத்தில், உலக நாடுகள் எந்த அளவு மனித உரிமைகளை பாதுகாத்தன என்று பார்த்தால், சாதனைகளைவிட வேதனைகளே மேலோங்கி நிற்கின்றன. இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட உயிரிழப்பை விட பன்மடங்கு உயிரிழப்பு பயங்கரவாத தாக்குதல் மூலம் நிகழ்ந்துள்ளது.
 பயங்கரவாதிகள் மக்களுக்காக போராடுகிறோம் என்று தம்மை சுதந்திர போராட்ட வீரர்களாக முன்னிறுத்தி அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதலில் ஈடுபடுகின்றனர். அந்த வன்முறையை முறியடிக்க அந்த நாட்டின் அரசு எதிர்த்தாக்குதல் நடத்துகிறது. இந்த உள்நாட்டு பயங்கரவாதம் அண்டை நாடுகளால் தூண்டி விடப்படுகிறது.
 நாடுகளுக்கிடையேயான யுத்தம் வெளி விவகார அரசியலின் ஒரு பக்கம் என்றால், பயங்கரவாதம் யுத்தத்தின் மறைமுகமான மறுபக்கம். இதில் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகளும்தான்.
 "மனித உரிமைகளைப் பாதுகாக்க உயிர்தெழுங்கள்' என்பதுதான் இவ்வாண்டு மனித உரிமைகள் தினத்தின் அறைகூவல். மனித உரிமை, கல்வி, வறுமை ஒழிப்பு, காவல் பாதுகாப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு என்று ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் மைய கருத்து ஒன்றை கோடிட்டுகாட்டி அதன் அடிப்படையில் விழிப்புணர்வை உலகெங்கும் ஏற்படுத்த அறிவுறுத்துகிறது.
 பல நாடுகள் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைத்துள்ளன. இந்தியா 1993-ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையம் அமைத்து மனித உரிமைகள் சட்டமும் இயற்றியுள்ளது. வாழ்வு, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் இவை அடிப்படை மனித உரிமைகள்.
 சுதந்திரம், சமத்துவம் இரண்டும் இன்றியமையாதவை. வேறுபாடு காட்டும் நடவடிக்கை ஒழிப்பு, வாழ்வாதாரம் பாதுகாப்பு, அடிமைத்தனம், துன்புறுத்தல் ஒழிப்பு, சட்டத்தில் தனி மனிதனுக்கு அங்கீகாரம் , சட்டத்தின் முன் எல்லோரும் சமம் இந்த ஏழு ஷரத்துக்களும் மிகவும் முக்கியமானவை.
 "மனித உரிமைகள், மக்கள் புழங்கும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கின்றன. இதை நாம் உணராவிட்டாலோ, பாதுகாக்கத் தவறினாலோ உரிமை மீறல்களைக் களைய முடியாது. இதற்கு ஒவ்வொரு நாட்டு குடிமக்களும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற எலினார் ரூஸ்வெல்ட்டின் வேண்டுகோளை நாம் மறக்கலாகாது.
 பல கிராமங்களில் விவசாயிகள் உயர்ந்த வகை மாடுகளை மற்ற மாநிலங்களிலிருந்து வாங்கி வருவது வழக்கம். எப்படி காங்கேயம் மாடு உயர்ந்ததோ அதே போன்று குஜராத் மற்றும் வட மாநில கறவை மாடுகளான கிர், பாதவாரி, தேசன், காத்தியவாரி, சுரதி, சிகப்பு சிந்து, சஹிவால் ஆகியவை பிரசித்தி பெற்றவை.
 ஆனால் இப்போது வட மாநிலங்களில் "கோ ரக்ஷக்' என்ற அமைப்பால் கறவை மாடுகள் வாங்கி வரும் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதுவும் உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி பிரச்னையால் வன்முறை அதிகரித்துள்ளது. அங்குள்ள புலந்த்ஷேர் என்ற வனப்பகுதியில் 25 மாடுகளின் எலும்பு கூடுகள் கிடந்தால், மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது.
 டிசம்பர் மூன்றாம் தேதி நிகழ்ந்த இந்தக் கலவரத்தில், சியானா காவல் நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பசுவதை தடுக்கப்பட வேண்டும். அதற்கு சட்டம் இருக்கிறது. ஆனால், அதுவே இனக்கலவரத்திற்கு வித்திடுவது கொடுமை. "பசுவதைத் தடுப்பு' என்ற போர்வையில் சக மனிதர்களைத் தாக்குவது உரிமைகள் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவால்.
 இப்போது சமுதாயத்தில் இருக்ககூடிய பிரச்னைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஒழுக்கக் குறைவே காரணம். சமுதாயத்தில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்டால் குற்றம் குறையும். "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்றார் வள்ளுவர். "வசுதைவ குடும்பகம்' (உலகமே ஒரு குடும்பம்) என்கிறோம். எல்லாரையும் சமமாக பாவிப்பதும் அன்போடு நடத்துவதுமே மனித கலாசாரம்.
 அதிகாரம் கைக்கு வந்தாலும் அதனை முழுமையாக செயல்பட என்பதையும் உணர்கிறோம். சமுதாயத்தை ஒரு ராணுவத்தை இயக்குவது போல் இயக்க முடியாது. ஒவ்வொருவரின் குணம் நாடி, குற்றம் நாடி, புரிந்து செயல்பட வேண்டும். நமது செயல்களுக்குத் தடையாக இருப்பது நமது மனத்தில் இருக்கும் பயம்.
 பயம் நம்மை ஆட்டிப் படைக்கிறது. தனிமை பயம், உயரம் பயம், பகை பயம், போலீஸ் பயம், டாக்டர் பயம், தோல்வி பயம், வெற்றியைத் தக்கவைக்க பயம், பேச பயம், கேட்க பயம் என்று பலவகை பயங்கள். பயம் ஒரு தொற்று நோய். பயம்தான் உலகளாவிய சிந்தனையைத் தடுக்கிறது. மனம் அமைதியின்றி அலைகிறது.
 எந்த ஒரு செய்கையும் ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்கிறது. குறிக்கோளை குறி வைக்கிறோம் செய்கையை மறந்து விடுகிறோம். செய்கைகளை திசை திருப்பும் வகையில் எதிர்ப்புகள் வருகின்றன. எதற்கெடுத்தாலும் போராட்டம், எதிர்ப்பு. தினமும் சில போராட்டக்காரர்களால் பெண்களையும் குழந்தைகளையும் முன்வைத்து சாலை மறியல் நடத்தப்படுவது வேதனைக்குரியது.
 சிறு பிரச்னையைப் பெரிதாக்கி தூண்டி விடும் போக்கிரிகள் இருக்கிறார்கள்.
 குறிக்கோளை அடைய முடியாமல் தேக்கம் ஏற்படுத்துவதே வேலையாக சிலர் திரிகிறார்கள். இலக்கை அடைய முடியாவிட்டால் அழுத்தம் ஏற்படுகிறது. அதுவே செயலைத் தடுக்கிறது. வளர்ச்சிப் பணிகளை தடுப்பதே வேலையாகப் பலர் திரிகிறார்கள்.
 நல்ல நிகழ்வுகளைப் போற்றினால்தான் நாட்டில் நன்மை உண்டாகும். தீயவை நல்லவற்றைவிட ஐந்து மடங்கு வலிமையானவை. நல்லவை நிலைக்க வேண்டும் என்றால் ஐந்து மடங்கு வலிமை சேர்க்க நாம் பாடு பட வேண்டும்.
 இந்தியா, சர்வதேசப் போட்டிகளில் அதிகம் சாதிப்பதில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. பயிற்சி சரியில்லை, விளையாட்டு வீரர்களுக்கு போஷாக்கு கொடுப்பதில்லை போன்ற பலவகை குற்றசாட்டுகள். இவற்றையெல்லாம் தகர்த்து சாதனை படைத்துள்ள வீர பெண்மணி ஹிமா தாஸ்.
 அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தவர். விவசாயியின் பெண். அவர் சாப்பிட்டது வெறும் அரிசிச் சோறு. புரத சத்து இல்லை. அவர் முதலில் ஓடியது வயற்காட்டில். கிழிந்த பழைய காலணி, ஆனால் மனத்தில் சாதிக்க துடிக்கும் வைராக்கியம். ஒரே குறிக்கோள் ஓட்டப்பந்தயத்தில் முந்த வேண்டும் அவ்வளவே!
 இளைஞர்களுக்கான தடகளப் போட்டியில் நானூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று பெருமை சேர்த்தார். சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்.
 இந்த சாதனை ஊடகங்களில் அவ்வளவாக வரவில்லை. "மீ டூ' விவகாரம்தான் எல்லார் கவனத்தையும் ஈர்க்கிறது.
 நல்லவை மூலம் வெற்றி அடைவது அவ்வளவு எளிதானதல்ல. மக்கள் விபரீத நிகழ்வுகளில் கவனம் செலுத்துகிறார்கள். தனக்கு நன்மை வராவிட்டாலும் மற்றவர்களுக்கு நன்மை வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும் நிலையைக் காண முடிகிறது.
 உரிமைக்கு பெருமை பாராட்டலாம். ஆனால் அந்த உரிமை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது. இது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றால் இல்லை. அந்த நிலை மாற வேண்டும்.
 சரியான ஒன்றைச் செய்வது கடினமல்ல; எது சரி என்பதை அறிவதுதான் கடினம்.
 எது சரி என்று அறிந்தபின், அந்தச்சரியான ஒன்றைச் சரியாக செய்யாமல் இருக்க முடியாது.
 எல்லாரும் இணைந்து நல்லவற்றைப் போற்றிடவும் மனித உரிமைகளைப் பாதுகாத்திடவும் சபதம் ஏற்போம்.
 இன்று (டிச. 10) மனித உரிமைகள் நாள்
 கட்டுரையாளர்:
 சட்டப்பேரவை உறுப்பினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com