மக்களை பாதிக்காத மறியல்

அரசுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காக, அரசுத்துறை அலுவலர்களை அழைப்பதற்காக நடத்தப்படும் போராட்டங்களில் ஒன்றுதான் சாலை மறியல்.


அரசுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காக, அரசுத்துறை அலுவலர்களை அழைப்பதற்காக நடத்தப்படும் போராட்டங்களில் ஒன்றுதான் சாலை மறியல். மேலும் போராட்டங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம், ஒப்பாரிப் போராட்டம், மௌனப் போராட்டம், கண்களைக் கட்டிக் கொண்டு நடத்தும் போராட்டம், கோஷம் போடும் போராட்டம், மண்சோறு சாப்பிடும் போராட்டம், மண்ணில் உருளும் போராட்டம் என்று பல வகை உள்ளன.
இவை மட்டுமல்ல, உயிருடன் இருப்பவரை இறந்தவர்போல் வாய் மற்றும் கால், கைகளைக் கட்டி, நெற்றியில் காசு வைத்து பாடையில் படுக்க வைத்துத் தூக்கும் போராட்டம், கடலில் இறங்கி நடத்தப்படும் போராட்டம், மண்ணை வாரி தூற்றும் போராட்டம் மற்றும் சமீப காலமாகச் சேர்ந்துள்ள நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் ஏராளமான போராட்டங்கள் உள்ளன. இன்னும் புதிய, புதிய பெயர்களில் போராட்டங்கள் உருவெடுத்து வந்து கொண்டேயிருக்கின்றன. 
சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அங்குள்ள ஆட்சியாளர்களை, தனியார் நிறுவன முதலாளிகளை எதிர்த்துப் போராட்டங்கள் செய்கிறார்கள். அப்போராட்டங்கள் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். ஆம், ஒரு நிறுவன நிர்வாகத்தை எதிர்த்து கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்துபவர்கள், வீதிக்கு வெளியே வந்து போராட்டம் நடத்த மாட்டார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உள்ளேயே போராட்டம் நடத்துவார்கள். உதாரணத்துக்கு ஷூ 
தயாரிப்பு நிறுவனத்தில் போராட்டம் செய்பவர்களாக இருந்தால், தினமும் 5 ஆயிரம் ஜோடி ஷூ தயாரிப்பவர்கள் என்றால், போராட்டம் செய்யும் அன்று மட்டும் 10 ஆயிரம் ஷூக்களை தயாரிப்பார்களாம்.
ஆனால், 10 ஆயிரம் ஷூ க்களும் வலது கால் ஷூவாகவோ அல்லது இடது கால் ஷூவாகவோ தயாரித்து இருப்பார்களாம். இதிலும், ஒரு சூட்சுமம் இருக்கிறது. ஒரு காலின் ஷூ மட்டும் எதற்கும் பயன்படாது. தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இப்படியே தயாரித்து, போராட்டம் நடத்துவார்களாம்.
கோரிக்கை நிறைவேறியதும், ஒற்றைக்கால் ஷூக்களாக, எத்தனை ஷூக்கள் இருக்கிறதோ, அத்தனைக்கும் மறுபக்கத்தின் ஷூக்களைத் தயார் செய்வார்களாம். இதுபோன்று நடத்தப்படும் இந்தப் போராட்டத்தால், நிறுவனத்திற்கும் லாபம் சேருகிறது. போராட்டம் செய்பவர்களின் கோரிக்கைகளும் நிறைவேறி விடுகின்றன. இதுபோல் போராட்டம் செய்வதால் பொது மக்கள் உள்ளிட்ட யாருக்கும் எந்தவிதக் கஷ்டமோ, பிரச்னையோ கிடையாது. யாருடைய மனத்தையும் புண்படுத்துவதும் இல்லை.
சாலை மறியல் என்பது மக்களைப் பாதிக்காதவாறு இருக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளை அரசுக்குத் தெரியப்படுத்தி அக்கோரிக்கைகளை வலியுறுத்தி செய்யப்படுவதுதான் போராட்டம் மற்றும் சாலை மறியலாகும். சாலை மறியல் செய்வது அவசியம்தான். மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய நடத்தப்படும் சாலை மறியலால், மக்களே பாதிக்கப்படக்கூடாது. சாலை மறியல் செய்யப்படுவதால் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறுகிறதோ, இல்லையோ புதிய பிரச்னைகள் எவ்வளவு ஏற்படுகிறது தெரியுமா ? 
சாலை மறியலில் ஓர் அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டு, அன்று அரசுப் பேருந்து ஓடவில்லையென்றால், அரசுக்கு வர வேண்டிய வருமானம் போய்விடும். ஆனால், அந்தப் பேருந்தில் பணியாற்றிய ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் வழங்கப்படும் சம்பளம் முழுமையாகக் கிடைத்து விடும். சாலை மறியலில் சிக்கிக் கொண்டதால், எவருடைய சம்பளத்தையும் நிறுத்தப் போவதில்லை. பாதிக்கப்படுவது அந்தப் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், தனியார் மற்றும் அரசு வேலைகளுக்கு செல்பவர்கள்தான். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருக்கும் நம்முடைய உறவுகள்தான். 
அரசுக்கு வரக்கூடிய வருமான இழப்பும் வரி என்ற பெயரில் நம்முடைய தலையில்தான் விழும். அடுத்து, சாலை மறியலில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு, தாமதமாகப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி சம்பளம் கண்டிப்பாக கிடைத்து விடும். ஆனால், தனியார் வேலைக்குச் செல்லக் கூடியவர்களுக்கு சம்பளம் கிடைக்காது. சிலருக்கு வேலையே போகக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும். வேலைக்கு வராமல் சம்பளம் கொடுப்பார்களா ? மறியல் செய்பவர்களுக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை. சாலை மறியலால், அவசரச் சிகிச்சைக்கு செல்லக் கூடியவர்கள், கர்ப்பிணிகள், வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்லக் கூடியவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நிவாரணப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் உரிய நேரத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்று சேராமல் தாமதம் ஏற்படுவது இத்தகைய சாலை மறியலால்தான். போராட்டங்களில் பங்கேற்பவர்களின் கூலியோ அல்லது சம்பளமோ - எதுவோ ஒன்று போய்விடும். 
இனிமேல், சாலை மறியல் செய்யும்போது, சாலையின் ஒரு பக்கத்தின் சாலையில் அமர்ந்து, குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு மட்டும் சாலை மறியல் செய்யலாம். மூன்று நாளைக்கு இதுபோல் ஒரு பக்கத்தில் சாலை மறியல் செய்து பார்க்கலாம். அதற்குள் கோரிக்கைகள் நிறைவேறவில்லையென்றால், அப்பகுதியிலேயே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதபடி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரலாம். இப்படியாக, மக்களுக்கு இடையூறு இல்லாதபடிதான் சாலை மறியலில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் மக்களின் ஆதரவு கிடைக்கும். மக்களின் ஆதரவு இல்லாத எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை என்பதே வரலாறு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com