முதியோர் எனும் சொத்து

அன்புதான் மனிதனை வாழ்வதற்குத் தூண்டுகிறது. அன்புதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது.


அன்புதான் மனிதனை வாழ்வதற்குத் தூண்டுகிறது. அன்புதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. உறவு என்பது சமூக கட்டமைப்பின் அடித்தளமாக இருந்து சமூக வாழ்வை உயர்த்துகிறது. மனிதன் சமூக விலங்காக கருதப்பட்ட காலம் முதல் உறவுப் பிணைப்பு அவனை வாழ்வதற்கும் மேம்பட்ட வாழ்க்கைச்சூழலை உருவாக்கிக் கொள்வதற்கும் உந்து சக்தியாக இருந்து வழிநடத்துகிறது.இத்தகைய அன்பும், உறவும் காலப்போக்கில் எத்தகைய பரிமாணங்களை அடைந்துள்ளன? வியாபாரமயமாகி விட்ட இந்த நூற்றாண்டில் உறவின் நிலை என்ன?
காலந்தோறும் கூடி வாழ்ந்த குடும்பம் என்ற அமைப்பு மனிதனை உயர்த்தி இருக்கிறது. ஒருங்கிணைந்த உழைப்பால் பெரும் பலன் தந்திருக்கிறது. விவசாயப் பெருங்குடி மக்களாய் வாழ்ந்த காலத்தில் கூடிவாழ்ந்த குடும்பத்தில் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தங்கள் உழைப்பை நிலத்தில் சிந்தி வேளாண்மை பெருகி, சீரும்சிறப்புமாய் வாழ்ந்ததை வரலாறு சொல்கிறது. இப்படி வாழ்ந்த சமூகத்தில் பெரியோர் மதிக்கப்பட்டனர். அவர்களின் அனுபவமும் அறிவும் இளையோருக்கு வழிகாட்டக் கிடைத்த பெரும் வரமாக கருதப்பட்டது. 
உழைப்பைத் தந்த குடும்பத்தில் முதியவர்கள் உடல் தளர்ந்து, தங்களால் உழைப்பை நிலத்தில் செலுத்த இயலாத காலத்தில் குடும்பத்திற்குப் பாதுகாவலாக இருந்து குழந்தைகள் பராமரிப்பு மற்றும் அவர்களை நல்வழிப்படுத்தும் ஒழுங்காற்றுப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால் அடுத்த தலைமுறையும் சீரிய ஒழுக்கத்தோடும் நெறிமுறைகளோடும் வாழத் தலைப்பட்டது. ஆனால், தற்போது அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் நிலை என்னவாக இருக்கிறது?
நமக்கு அன்றாடம் ராமாயணத்தையும் பாரதத்தையும் கதையாகச் சொல்லி நம்முடைய பண்பாட்டு விழுமியங்களை இயல்பாக நமக்குள் பதிவுசெய்தவர்களாக நம்முடைய முன்னோர்கள் இருந்தார்கள். அவர்கள் சொல்லித் தந்த கதைகள் வெறும் பொழுது போக்கு அம்சங்களாக இருக்கவில்லை. பின்னாளில் வாழ்வை எதிர்கொள்வதற்கான மனஉறுதியைக் கொண்டிருந்தன. இத்தகைய தாத்தா-பாட்டிகளை நாம் தொலைத்துவிட்டு மன அழுத்தத்திற்கு மனநல மருத்துவர்களை நாடிச் செல்வதும், ஆலோசகர்களை அணுகி ஆலோசனை கேட்பதும் பேதைமை நிறைந்தது.
நம் முன்னோர்கள் விவசாயம் அறிந்திருந்தார்கள். பருவநிலையைப் புரிந்திருந்தார்கள். மனித மனங்களைப் பற்றிய தெளிவு அவர்களுக்கு இருந்தது. வாழ்வின் தேவை என்ன? நிம்மதியாய் வாழ்வதற்கானவழிவகை என்ன என்பதையும்அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.இவற்றையெல்லாம் நமக்குத் தேவையான பொழுது கற்றுத் தருவதற்கும் காத்திருந்தார்கள். இன்றைக்கு அந்தத் தாத்தாக்கள் தொலைந்து போனார்கள்.
ஒவ்வொரு முதியவரும், தமக்குள் கொண்டிருக்கும் ஆற்றல், அனுபவம், அன்பு இவற்றின் தொகுப்பாக விளங்குகிறார்கள். இந்த மதிப்புமிக்க பெரியோர்கள் நம் தேசத்தின் சொத்து. இதனை உதாசீனப்படுத்துவதும், ஒதுக்கி வைப்பதும் நம்முடைய வளர்ச்சியை பாதிக்கும் செயல். இதனை நாம் உணரத் தலைப்படும்பொழுது இன்னும் மிகுந்த வளர்ச்சியோடு வேகத்தோடு நவீன யுகத்தில் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, முதியோர்களின் அறிவாற்றலும் திறமையும் உழைப்பும் கொண்டுதான் நாம் வாழும் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே. இன்று நாம் அனுபவிப்பவை அனைத்தும் நேற்றைய தலைமுறையினரின் உழைப்பின் பலன்தான். நம்மைக் காட்டிலும் முதியவர்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்லர். சொல்லப் போனால், வாய்ப்புகள் இத்தனை உலகளாவிய அளவில் வாய்க்கப் பெறாத காலத்திலும் அவர்கள் சமூகத்தை மேம்பட்ட நிலையில் வைத்திருந்தார்கள். 
கலை இலக்கியம் அறிவியல் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறையில் முதியவர்கள் நமது முன்னோடிகள். அப்துல் கலாம் போன்ற அறிவியல் அறிஞர்கள், நம்மாழ்வார் போன்ற வேளாண் வல்லுநர்கள், ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள், 96 வயதிலும் யோகக் கலையில் சிறந்து விளங்கும் நானம்மாள் பாட்டி, அதே வயதில் கல்வி கற்கும் ஆர்வத்தோடு படித்துத் தேர்வுகளில் முன் நிற்கும் கார்த்தியாயினி அம்மாள், 82 வயதில் சற்றும் சளைக்காமல் வெறும் கால்களுடன் ஓடி ஆசிய போட்டிகளில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்று இன்னமும் முனைப்போடு சர்வதேச போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் ராஜேந்திரன், 96 வயதிலும் இன்னமும் புதினங்களை சளைக்காமல் புதிது புதிதாக எழுதிக் கொண்டே இருக்கும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன்- இப்படி எத்தனை எத்தனையோ சாதனைப் பெரியவர்கள் நம் தேசத்தில் உண்டு.
முதியவர்கள் நமக்கு வழிகாட்டிகள் எனும் எண்ணம் உருவாக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இன்றைய உளவியல் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வாக முதியவர்கள் இருக்க முடியும். உடல் ஆரோக்கியம் காப்பதற்கு நம் பாட்டிமார்களை நாம் மீட்டெடுத்துத் தீர வேண்டும். எத்தகைய இக்கட்டான நிலையிலும் இவர்கள் நம்முடைய நலனைப் பேணுபவர்களாக இருந்தார்கள். நமக்குப் பொருள் ஈட்டித் தந்திருக்கிறார்கள். அவர்கள் ஈட்டித் தந்த பொருளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் சம்பாதித்த அனுபவங்களை ஏற்க மறுப்பது, நம் மூதாதையரின் சொத்துகளை நாம் வேண்டாம் என்று மறுப்பதற்கு ஒப்பானது. 
ஒவ்வொரு குடும்பத்திலும் தத்தமது பெற்றோர்களைஅல்லது தாத்தா பாட்டிகளை பாதுகாக்க வேண்டிய அடிப்படை பொறுப்பு உள்ளவர்கள் இளைஞர்கள். இளம் சமூகம் தன் துடிப்போடும் வேகத்தோடும் முதியோரின் அனுபவத்தையும் ஏற்றுக்கொண்டு செயல்படும்பொழுது அனுபவம்-ஆற்றல் இந்தக் கூட்டுச் சேர்க்கை வெற்றி பெறுவதற்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை.
அடுத்த தலைமுறைக்காக உழைத்து நம்மை வாழவைத்த முதியவர்கள் தங்கள் முதுமையின் காரணமாக சற்றே தளர்ந்து போகும்பொழுது அவர்களுக்குக் கைகொடுக்க வேண்டியது தம்முடைய கடமை என்பதை இன்றைய தலைமுறை மறந்து கொண்டிருக்கிறது. அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியதும் நமது பொறுப்பே. உடல்நல தடைகள் காரணமாக இவர்கள் தவிப்புக்கு ஆளாகிறார்கள். இதனைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான ஆரோக்கியமான நல்ல சூழலை உருவாக்கித் தர வேண்டிய கடமை இன்றைய இளம் தலைமுறைக்கு உண்டு. 
முதுமையில் உடல் தளர்வு காரணமாக தன்னைச் சுற்றி உள்ளவர்களை சார்ந்து வாழும் நிலை தோன்றும் பொழுது நாம் அதனை சுமையாகக் கருதும் மனப்பான்மையை தற்போது பெற்றிருக்கிறோம். இந்த மனப்பான்மை முதியோர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல, வளரும் தலைமுறைக்கும் நஷ்டமேயாகும்.
அரசு இவர்களின் தேவைகளை, பிரச்னைகளை உணர்ந்து சட்டங்களை இயற்றி இருக்கிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் வாயிலாக கைவிடப்பட்ட, உறவினர்களால் ஒதுக்கப்பட்ட முதியோருக்கு அவர்களது சொத்துகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்தல், கைவிடப்பட்ட முதியோருக்கு சட்டப்படியானபாதுகாப்பினை வழங்குதல், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் அமைத்தல் என்று பல சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. 
உதவித்தொகை வழங்குவதில் அரசு பல சட்டங்களை இயற்றி இருக்கிறது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர், ஆதரவற்ற முதியோர், கைம்பெண்களுக்கான உதவித்தொகை, திருமணம் செய்து கொள்ளாது தனித்து வாழும் பெண்களுக்கான உதவித் தொகை என்று பல விதங்களில் அரசு இவர்களை கவனத்தில் கொண்டு இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனஅறிவித்தது. வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் மற்றும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு 2002- ஆம்ஆண்டிலிருந்து முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. 
ரயில்வே முன்பதிவு தொடங்கி, வருமான வரிச்சலுகைவரை, முதியவர்களுக்கு என்று பல சலுகைகளும் மதிப்பும் அரசால் வழங்கப்படுகிறது. முதியோருக்கான சுதந்திரம், உலகில், அவர்களுடைய பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் உலக முதியோர் தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர்களும் இந்த உலகின் பங்குதாரர்களே.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்பது சமூகம் ஆரோக்கியமின்மை நோக்கி நகர்வதற்கான அறிகுறி. சமூக மாற்றத்திற்கு, இயந்திரத்தனமான வாழ்க்கை, மேலை நாட்டுக் கலாசாரத்தை பின்பற்றுதல், ஒருவருக்காக மற்றவர் நேரம் செலவிட முடியாமல் ஓடுவது என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 
தேசத்தின் புராண வரலாறு, கலாசாரப் பெருமை இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது, இத்தகைய மாறுதல் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. 
குடும்பம்-உறவு எனும் இரு பெரும் கோட்பாடுகளை உலகிற்கு வழங்கிய தேசத்தில், முதியோர் உரிய மரியாதையோடு நடத்தப்பட வேண்டும். இளையோர் அதனை உறுதி செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com