எங்கே செல்லும் இந்தப் பாதை?

என் சிறுபிராயத்தில் பார்த்து வளர்ந்த உலகம் மாறிவிட்டது. ஊடகம் மட்டும் மாறாமல் இருக்குமா? அதிநவீன தொழில்நுட்பத்தில் மீடியா என்ற வார்த்தையின் எல்லையும் பரப்பும் விரிந்திருக்கிறது.


என் சிறுபிராயத்தில் பார்த்து வளர்ந்த உலகம் மாறிவிட்டது. ஊடகம் மட்டும் மாறாமல் இருக்குமா? அதிநவீன தொழில்நுட்பத்தில் மீடியா என்ற வார்த்தையின் எல்லையும் பரப்பும் விரிந்திருக்கிறது. ஆனால், அதன் கடமையும் பொறுப்பும் சமூகத்தையும் மக்கள் நலன்களையும் புறக்கணித்த நிலையில் பயணிக்கிறதோ என்ற கவலையும் வருத்தமும் மனதில் தேங்கியிருக்கிறது. தமிழகத்தில் காட்சி ஊடகங்களின் நிலை கவலைக்குரியதாக மாறிவருகிறது. பல ஆண்டுகளாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுடன், பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருப்பவன் என்ற முறையில் சில அக்கறைகளை தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
பத்திரிகையை எழுத்துக்கூட்டிப் படித்த தலைமுறை வாட்ஸ் அப்பில் செய்தியைப் பார்க்கிறது. பேஸ்புக்கில் உள்ளூர் பிரச்னை முதல் உலகப்பிரச்னை வரை கருத்து சொல்கிறார்கள். கட்டற்ற சுதந்திரமான காலம். உண்மைதான். தனிமனித சுதந்திரம் தேவைதான். இதே நிலை தனிமனிதர்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் சமூக ஊடகங்களில் தொடர்கிறது. 
இன்று இணைய தொடர்பும் ஸ்மார்ட்போன்களும் வைத்திருக்கிற ஒவ்வொருவரும் ஊடகர்களாக மாறியுள்ளனர். பொதுவெளிகளில் ஒரு விஐபியைப் பார்க்கும் அவர்கள், அதன் சாட்சியாக செல்பியாக, புகைப்படங்களாக உடனே எடுத்து வெளியிடுகிறார்கள். அதுவே காட்சி ஊடகங்களின் செய்திகளுக்கான தீனியாகவும் மாறிவருகிறது.
ஒடிசா மாநில காவல்துறை கூடுதல் தலைவர் மனோஜ் சாப்ரா ஒரு பத்திரிகையில் எழுதிய பத்தியில், "கடுமையான தணிக்கைகளையும் தகவல்கள் உண்மையா என்பதற்கான சோதனைகளையும் தாண்டி வரவேண்டியிருந்தது.
தற்போது அதற்கு போட்டியாக உருவெடுத்துள்ள சமூக ஊடகங்கள் புதிய திசை மாற்றத்தை உருவாக்கியுள்ளன. இது ஒரு பேரழிவுத் தொழில்நுட்பமாகிவிட்டது.
தற்காலத்தில் எல்லாருமே செய்திகளைப் படிக்கும் வாசகரோ தொலைக்காட்சி பார்வையாளரோ மட்டுமல்ல. அவரே தகவல்களையும் செய்திகளையும் உருவாக்குபவராக இருக்கிறார். டிஜிட்டல் வெளியில் செய்திகளின் உண்மைத்தன்மையைப் பரிசோதிக்க வழியே இல்லை' என்று கவலையுடன் குறிப்பிடுகிறார்.
தற்கால ஊடகங்களின் நிலையைப் பற்றி சுட்டிக்காட்டும் அவர் மிர்சா காலிப்பின் கவிதையை எடுத்துக்காட்டுகிறார். ஒவ்வொரு முறை கண்ணாடியைத் துடைத்தாலும், அதில் முகத்தைக் காணும்போது அழுக்காகவே தெரிகிறது. முகத்தை சுத்தமாக்காமல் கண்ணாடியைத் துடைத்து என்ன பயன்? ஆயினும் வாழ்க்கை முழுவதும் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டே இருந்தேன். காட்சி மாறவேயில்லை, என்கிறது அந்தக் கவிதை.
இன்றைய நிலையை இதைவிடத் தெளிவாக சொல்லிவிட முடியாது. தமிழகத்தில் பெருகியுள்ள தனியார் காட்சி ஊடகங்களில் நேர்மையற்ற உண்மைக்குப் புறம்பான பல செய்திகளை அன்றாடம் பார்க்க முடிகிறது. வாட்ஸ் அப்பில் வெளியாகும் எடிட் செய்யப்படாத காட்சிகளை செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள். உள்ளூரில் நடக்கும் குற்றச்செயல்கள் அப்படியே வெளிவருகின்றன. நெறி என்பதை மண்ணில் புதைத்துவிட்டதைப் போன்ற உணர்வு.
சமூக வெளியில் சின்ன பிழை நேர்ந்தாலும், ஒரு பிரபல மனிதரை கேவலப்படுத்திவிட முடிகிறது. சமூக ஊடகங்களில் இருக்கிற எல்லோருமே விமர்சகர்களாக, சிறு தவறும் செய்யாத மாமனிதர்களாக, குற்றம் செய்யாத குணவான்களாக தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். அபத்தமாக இருக்கிறது. நடிகர் சிவகுமார், ஏதோவொரு சூழலில் செல்பி எடுக்கும் செல்போனை தட்டிவிடுகிறார். அவ்வளவுதான், அவருடைய சாதியில் இருந்து, அவர் பேசும் பேச்சில் இருந்து விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவரே தவறு என்று உணர்ந்து அறிக்கை வெளியிட்ட பிறகும் அவரை விடவில்லை.  என்ன மனநிலையில் நாம் இருக்கிறோம். எனக்குப் புரியவில்லை. மன்னிக்கும் மனநிலையை மறந்துவிட்டோமோ. நாம் செய்யாத ஒரு தவறை அவர் செய்துவிட்டாரா...  மகாத்மாவாகவே இருக்கட்டும். தவறுகள் நேராதா.
தினமும் சமூகவெளியில், அலுவலகத்தில், குடும்பத்தில் என தனிமனித வாழ்வில் எத்தனையோ அபத்தங்களையும் குற்றவாளி  மனிதர்களையும் சகித்துக்கொள்கிற, கண்முன்னால் நேர்கிற குற்றங்களை எதிர்த்துக் கேட்கத் திராணியற்ற நாம்தான் பிரபலங்களைப் பற்றி வாய்கிழியப் பேசுகிறாம். இது சரியான அணுகுமுறையா?  யோசிக்க வேண்டும்.
வாட்ஸ் அப்பில் தினமும்  ஆதாரமற்ற அவதூறுகள் அதிகம் வெளிவருகின்றன. அந்த செய்திகளைக்கூட  விசாரிக்காமலேயே பத்திரிகைகள் வெளியிடத் தொடங்கிவிட்டன. நான் முந்தி, நீ முந்தி என்கிற ரேட்டிங் போட்டியில் மக்கள்தான் பணயக் கைதிகளாக மாறுகிறார்கள். அவர்களுக்குத் தேவையற்ற அநாவசியமான நூற்றுக்கணக்கான செய்திகளை ஊடகங்கள் திணிக்கின்றன.
 தலைவர்கள் எந்த தியாகமும், தகுதியும் இல்லாமல் பொது வாழ்வில் நுழைந்து அவர்களுக்கும் ஊடக வெளிச்சத்தை தாராளமாக ஏற்படுத்திக் கொடுக்கும் வேலையைத் தான் இன்றைய ஊடகங்கள் செய்கின்றன.
இப்படியான சில திடீர் தலைவர்களுக்கு இந்த ஊடக வெளிச்சங்களால்தான் தங்களுடைய இருப்புகளையும் காட்டிக் கொள்கிறார்கள். இரவுநேர விவாதங்கள் என்ற சம்பாஷணைகளில் பிரச்னைகளின் தன்மையை தெரியாத சிலரை எல்லாம் எதற்கு அழைத்து முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதும் கமுக்கமாக உள்ளது. இதுவே இன்றைய ஊடகங்களின் 24 மணி நேர செய்திச் சேவையாக உள்ளது.
களநிலவரம் தெரியாத செய்தி ஊடகங்கள் ஒரு நாள் மக்களால் புறக்கணிக்கப்படும். இன்றே அது மெல்ல நடக்கத் தொடங்கிவிட்டது. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு செய்திகளை ஆர்வத்துடன் பார்த்தவர்கள், சீரியல்கள் தேவலாம் என்று பேசுகிறார்கள்.
இன்றைய செய்தி ஊடகங்களின் பின்னணி அரசியலை மக்கள் தெரிந்துவைத்துப் பேசுகிறார்கள். இந்த செய்தி ஏன் இப்படி வருகிறது என்ற மக்களின் கேள்விக்குப் பின்னால் உள்ள அரசியல் வெளிப்படையாக தெரியத் தொடங்கிவிட்டது.
புதுதில்லியில் நடந்த ஒரு விருது விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறிய கருத்து நினைவு கூரத்தக்கது."நம் நாட்டில் பத்திரிகைத் துறைக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் ஆகியவற்றுடன் பத்திரிகை துறைக்கு நெருங்கிய தொடர்பும் பங்களிப்பும் இருக்கிறது. 1819 - ம் ஆண்டு ராஜாராம் 
மோகன்ராய் கொண்டு வந்த சம்வாத் கௌமுதி முதல் மகாத்மா காந்தி கொண்டு வந்த ஹரிஜன், யங் இந்தியா வரையில், சமூகத்தையும், தேசியத்தையும் வளர்த்ததில் அச்சு ஊடகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியால் ஊடகங்களின் எல்லை பரந்து விரிந்துவிட்டது. சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது' என்றார்.
பிரிட்டனில் சமூக ஊடகங்கள் இளைஞர்களின் மனநலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூகவலைதளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது என்று தெரியவந்தது.
சமூக ஊடகங்களை நன்மைக்கான ஒரு கருவியாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அதே நேரத்தில், இன்ஸ்டாகிராம், சுய வெளிப்பாடு மற்றும் சுய அடையாளம் ஆகியவற்றின்மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. ஆய்வில் வெளியாகியுள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், மனநலத்தை பாதிக்கும் பிரச்னைகளை சரிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மனநல பாதிப்பு உள்ளவர்களை சமூக ஊடகங்கள் அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவியை பற்றிய தகவல்களை மறைமுகமாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களின் தாக்கம் ஒருபுறம், மறுபுறத்தில் செய்தி என்ற பெயரிலான யூ டியூப் சேனல்களின் கட்டற்ற சுதந்திரம் எல்லாமே வளர்ச்சியுடன் கலந்த 
கவலையாகவே தெரிகிறது. சிலர் அவசியமற்றதை  ஊதிப்பெருக்குவதிலேயே குறியாக இருப்பார்கள்.
சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட, பிரச்னைகளே இல்லாத சமாசாரங்கள், உப்புக்கு சப்பில்லாத பேட்டிகள் பெரிதாக்கப்பட்டு நேரத்தை வீணடித்து இதுதொடர்பான செய்திகளில் வெளியிடப்பட்ட யூ டியூப் காட்சிகள், டிரோல்கள், மீம்ஸ்கள் ஆராயப்பட வேண்டியவை.
இவை நாகரிக சமூகத்தின் அடையாளமா என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
விதியே விதியே தமிழக சாதியை, என் செய்ய நினைத்தாயோ?

கட்டுரையாளர்: செய்தித் தொடர்பாளர், திராவிட முன்னேற்றக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com