ஆழிப்பேரலை ஆய்வுகள் தரும் செய்தி

நில அதிர்வு, எரிமலை வெடிப்பு, சூறாவளி, மழைவெள்ளம், வறட்சி இன்னோரன்ன இயற்கைச் சீற்றங்களைப் பேரிடர்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

நில அதிர்வு, எரிமலை வெடிப்பு, சூறாவளி, மழைவெள்ளம், வறட்சி இன்னோரன்ன இயற்கைச் சீற்றங்களைப் பேரிடர்களுக்கு உதாரணமாகக் கூறலாம். இந்த வகையில் மாபெரும் பேரிடராய் மனித இனத்திற்கு சவாலாக இருந்தது, இருப்பது சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையாகும். 
மிகக் கொடூரமான வகையில் மனித குலத்தை அச்சுறுத்திய ஆழிப்பேரலை என்று இந்தியப் பெருங்கடலில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 24 -ஆம் நாள் சுமத்ரா தீவின் அருகே நிகழ்ந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட சுனாமியை காம்பெல் பிலிப்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். இந்த இயற்கைச் சீற்றத்தால் பல்வேறு நாடுகளில் ஏறத்தாழ இரண்டு லட்சத்து முப்பதாயிரம் மக்கள் பலியாகினர்.
கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கின்ற மிகப் பெரும்பாலான ஆழிப்பேரலைகள் நில அதிர்வு காரணமாகவும் சில சம்பவங்கள் கடல் நீருக்கடியில் ஏற்படும் எரிமலைச் சீற்றத்தையடுத்த நிலச்சரிவு காரணமாகவும் நிகழ்ந்திருக்கின்றன. கண்டத்தட்டுகளின் நகர்வுகளினாலும் விண்கற்கள் வீழ்வதாலும் கூட சுனாமி ஏற்படுகின்றது. சுனாமி சம்பந்தப்பட்ட தரவுகளை சேகரித்துள்ள ஆய்வு மையங்கள் கடந்த 370 ஆண்டுகளில் ஏறத்தாழ 1960 ஆழிப்பேரலைகள் சிறிதும் பெரிதுமாக ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியை மட்டும் கடந்த 400 ஆண்டுகளில் 280-க்கும் மேற்பட்ட ஆழிப்பேரலைகள் தாக்கியிருக்கின்றன.
நமது நாட்டைப் பொருத்தவரை சுனாமியால் உயிருக்கும் உடைமைக்கும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பல்வேறு முகமைகளிடையே புள்ளி விவரங்களில் வித்தியாசங்கள் உள்ளன. இந்தியாவில் மரித்தோர் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 16,400 என கணக்கிடப் பட்டது. இதில் அதிகமான உயிர்ச்சேதம் தமிழகத்தில் ஏற்பட்டது. 
ஆழிப்பேரலைகளின் பாதிப்புகள் பல பரிமாணங்கள் கொண்டவை. அவற்றில் முக்கியமானவை உளவியல் அடிப்படையிலான பாதிப்புகளே ஆகும். 
ஆழிப்பேரலையின் காரணமாக ஏற்பட்ட அச்சத்திலிருந்து மீனவர்கள் விடுபட்டு மீண்டும் தொழிலைத் தொடர்ந்தாலும் சிறிது காலத்திற்கு கடலும் கடல் சார்ந்த வளங்களும் அயன்மைத் தன்மையோடும் புரிபடாத புதிராகவுமே காட்சியளித்தன. சுனாமி பாதித்த இடங்களில் மீன் பிடித் தொழிலை மீண்டும் தொடரவே சில மாதங்கள் பிடித்தன என்பதையும் நாம் கண் கூடாகக் கண்டோம்.
2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளையும் எட்டியது. இந்தப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது மாங்ரோவ்ஸ் எனப்படும் அலையாத்திக் காடுகளின் பின்னால் இருந்த மனிதர்களின் வாழ்விடங்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக இருந்தன. இப்போது பல உலக நாடுகள் அலையாத்திக் காடுகளின் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. ஆழிப்பேரலையின்போது கரைகளின் மீது மோதும் அலைகளின் வேகம் அலையாத்திக் காடுகளிடையே மேவிடும்போது எந்த அளவிற்கு மட்டுப்படுகின்றது என்பது குறித்த ஆய்வுகள் உலகமெங்கும் பெருமளவு மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
உலகில் 20 நாடுகள் அலையாத்திக் காடுகள் அதிகம் உள்ள பகுதிகளாக உள்ளன. உலகில் உள்ள அலையாத்திக் காடுகளில் 7 விழுக்காடு இந்தியாவில் உள்ளது. தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் இவை உள்ளன. பெரிய நிலப்பரப்புகள் கொண்ட அலையாத்திக் காடுகளை உடைய மாநிலங்களின் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருப்பவை மேற்கு வங்கம், குஜராத் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள்.
இந்தியப் பெருங்கடல் சுனாமியின்போது மனிதர்களின் வாழ்விடங்களையொட்டி அமைந்துள்ள அலையாத்திக் காடுகளால் ( காடுகளல்லாத மற்ற இடங்களைக் காட்டிலும்) 8 விழுக்காடு குறைவாகவே உயிர்ச்சேதம் ஏற்பட்டது என ஃபிரெட் பியர்ஸ் எனும் ஆய்வாளர் கூறுதுகிறார். இந்த மதிப்பீடு சதவீத அளவில் குறைவானதாகக் கருதப் பட்டாலும் பல்லாயிரம் மனித உயிர்களை இக்காடுகள் காப்பாற்றின என்பது அவரது வாதமாகும். சுமத்ரா பகுதியைச் சேர்ந்த 1,67,000 இந்தோனேசியர்கள் ஆழிப்பேரலையால் மரித்ததாகக் குறிப்பிடும் இவர், பத்து ஆண்டுகளுக்குப் பின் சுனாமி பாதித்த பகுதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தார். பெரும் பாதிப்புக்குள்ளான சுமத்ரா தீவின் பல பகுதிகளில் இன்றைக்கு பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறும் இவர் சிறுசேமிப்புத் திட்டங்களின் மூலம் அலையாத்திக் காடுகளுக்குப் பொருத்தமான பல்லாயிரக்கணக்கான மரங்களை இங்குள்ள மக்கள் வளர்த்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார். 
இனி எந்த இயற்கைச் சீற்றம் வந்தாலும் இந்தக் காடுகள் தங்களைக் காப்பாற்றும் என இந்த சமுதாயம் உறுதியாக நம்புவதாகவும் இந்த ஆய்வாளர் தெரிவிக்கிறார்.
அலையாத்திக் காடுகளால் வேறு பல உபயோகங்களும் உண்டு. பல்லுயிர்ப் பெருக்கம் முகத்துவாரங்களின் மீன்வளம், கரையோர மண் அரிமானத்தை தடுத்தல், ராட்சத அலைகளிலிருந்து கரையோர குடியிருப்புகளைக் காத்தல், இடம் பெயரும் பறவையினங்களுக்கு இனப் பெருக்கம் மற்றும் உணவு ஆகியவைகளுக்கு ஆதாரமையங்களாக விளங்குதல் போன்று பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. 
இக் காரணங்களால் அலையாத்திக் காடுகள் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளின் பராமரிப்பிலும் இவற்றின் விரிவாக்கத்திலும் கவனம் செலுத்துதல் இந்த நூற்றாண்டின் முக்கியக் கடமை எனலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com