கோயில்களா? வணிக வளாகங்களா?

கோயில்கள் மக்களால் வழிபடப்படும் இடங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கலைக் கருவூலங்களாகும்.

கோயில்கள் மக்களால் வழிபடப்படும் இடங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கலைக் கருவூலங்களாகும்.
மதுரை மாநகரின் நடுநாயகமாக அமைந்திருக்கிற மீனாட்சியம்மன் கோயிலும் அதன் சிறப்பான சிற்பக்கலை நுணுக்கம் மிகுந்த கட்டமைப்பும் உலகப்புகழ் பெற்றவை. கோயிலுக்குள் நான்கு ஆடி வீதிகளும், கோயில்களைச் சுற்றி நான்கு சித்திரை வீதிகளும், அவற்றைச் சுற்றி நான்கு ஆவணி மூல வீதிகளும், அவற்றையொட்டி நான்கு மாசி வீதிகளும் இவற்றுக்கப்பால் நான்கு வெளி வீதிகளையும் கொண்ட தாமரைப்பூ வடிவில் அமைந்த மூதூர் மதுரையாகும். இம்மலரின் மகரந்தம் போல் விளங்குவது மீனாட்சியம்மன் கோயிலாகும். மாதங்களின் பெயரால் கோயிலைச் சுற்றியிருக்கும் வீதிகளில் அந்தந்த மாதங்களில் திருவிழாக்கள் நடத்தப்பெறுவது வழக்கம். சிவபெருமான் புரிந்த ஆய திருவிளையாடல்கள் அறுபத்துநான்கும் குறிப்பிட்ட நாட்களில் கோயிலுக்குள்ளும், கோயிலுக்கு வெளியிலும் நடத்திக்காட்டப்படும். பெருந்திரளான மக்கள் இந்த விழாக்களில் பங்குபெற்று வழிபடுவார்கள். 
ஆண்டு முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு நிற்கும் மதுரை நகரம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி அதிகாலையில் கண்ணீரும் கம்பலையுமாகக் காட்சி அளித்தது. முதல்நாள் நள்ளிரவில் மீனாட்சிக் கோயிலில் மூண்டெழுந்த பெருந் தீ விபத்தே இதற்குக் காரணமாகும். கோயிலைச் சுற்றித் திரண்ட ஏராளமான பெண்கள் கதறிக்கதறி அழுத காட்சிகளை ஊடகங்களும், பத்திரிகைகளும் வெளியிட்டன. இவற்றைக்கண்ட தமிழக மக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். 
மீனாட்சிக் கோயிலில் கிழக்கு இராசகோபுரத்தின் உள்பகுதியான ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் இருந்த கடைகளில் நள்ளிரவில் பற்றிக் கொண்ட தீ மிக உயர்ந்த அந்த மண்டபத்தின் முகட்டைத் தொடும் அளவுக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. இருபுறமும் நெடிதுயர்ந்த 46 தூண்களைக் கொண்ட மிகப்பெரிய மண்டபம் இதுவாகும். இரவு முழுவதிலும் எரிந்த தீ கடும் போராட்டத்திற்குப் பிறகே அணைக்கப்பட்டது. கல்லால் அமைக்கப்பட்ட மேற்கூரையில் 7,000 சதுரடி அளவுக்கு கற்கள் தகர்ந்து கீழே விழுந்தன. 20 தூண்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. எப்போது வேண்டுமானாலும் இம்மண்டபத்தின் பல பகுதிகள் இடிந்து விழலாம். 
கி.பி. 1611-ஆம் ஆண்டு இம்மண்டபம் கட்டுவிக்கப்பட்டது. திருமலைநாயக்கரின் தமையனாரான முத்துவீரப்ப நாயக்கர் என்பவர் இந்த வீர வசந்தராயர் மண்டபத்தைக் கட்டுவித்தார். சாமி சன்னிதிக்கு நேராக இது அமைந்துள்ளது. இதைப்போன்ற மண்டபம் அம்மன் சன்னிதியிலும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் கி.பி. 1708-இல் சமூகம் மீனாட்சி நாயக்கர் என்பவர் பெரிய மண்டபத்தைக் கட்டுவித்தார். இந்த இரு இம்மண்டபங்களின் தூண்களின் மேலுள்ள விட்டங்களில் பல சிறிய சிற்பங்கள் வரிசையாக அமைக்கப்பெற்றுள்ளன. வீர வசந்தராயர் மண்டபத்தில் கீழ்ப்புறமுள்ள தூண்களில் மிக அழகான பெரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் நடுவிதானத்தில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. எழிலுற செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் சிறப்பினை அனைவரும் கண்டு மகிழ்வதை அடியோடு மறைக்கும் வகையில் இந்த இரு மண்டபங்களிலும் ஏராளமான கடைகள், நெரிசலாக அமைக்கப்பட்டன.
பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்டபங்களில் இடதுபுறம் சில வளையல் மற்றும் கைவினைப் பொருட்களை விற்கும் கடைகளும், வலதுபுறம் பூமாலைகள் விற்கும் கடைகளும் மட்டுமே இருந்தன. ஆனால், 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அறங்காவலர்களாகத் தங்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களை நியமித்தபோது ஏராளமான கடைகள் திறக்கப்பட்டன. மக்கள் நடமாடுவதற்கே திண்டாடும் வகையில் மிக நெருக்கமாக கடைகள் மிகுந்தன. இறைவன் - இறைவி ஆகியோர்களை வழிபட்டுத் தங்கள் குறைகளைப் போக்குவதற்கு பக்தர்களும், கோயிலின் கலையழகைக் கண்டு மகிழ வரும் வெளிநாட்டவரும் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மீனாட்சிக் கோவில் வணிகமயமாக்கப்பட்டது. கோயிலின் சிற்ப அழகு மறைக்கப்பட்டது.
காந்தியடிகள் காசி விசுவநாதர் கோயிலுக்குச் சென்று வந்ததைக் குறித்து தனது சத்திய சோதனை நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்... 
"குறுகிய வழுக்கலான சந்து ஒன்றின் மூலம் கோயிலுக்குச் செல்லவேண்டும். அவ்விடத்தில் அமைதி என்பது அணுவளவும் இல்லை. கடைக்காரர்களும், யாத்ரீகர்களும் எழுப்பிய சத்தமும், ஏகமாய் மொய்த்த ஈக்களும் சகிக்க வொண்ணாதவையாக இருந்தன. தியானத்திற்கும், பிரார்த்தனைக்கும் ஏற்றதாய் இருக்கும் என்று எவரும் எதிர்பார்க்கக்கூடிய அவ்விடம், உண்மையில் அவ்வாறு இல்லவே இல்லை. கோவிலைச் சுற்றித் தூய்மையும், இனிமையுறும் சாந்தமும் குடிகொண்டிருக்கச் செய்வது கோயில் பொறுப்பாளர்களின் கடமையாகும். இதற்குப் பதிலாக தந்திரசாலிகளான வியாபாரிகள், மிட்டாய்களும், புது தினுசு விளையாட்டுக் கருவிகளும் விற்றுக்கொண்டிருந்த கடைகளையே நான் அங்கு கண்டேன். கோயிலை அடைந்ததும் நுழைவு வாயிலில் அழுகி நாற்றம் எடுத்த பூக்குவியல் எனக்கு நல்வரவு கூறிற்று. உட்புறம் சலவைக் கற்களால் போடப்பட்டிருந்த தள வரிசையில் அழகுணர்ச்சியற்ற பக்தர்கள் அக்கற்களை உடைத்து ஆங்காங்கே ரூபாய்களைப் பதித்திருந்தனர். இதன் விளைவாக தரையில் அழுக்குச் சேர்ந்து கிடந்தது.' 
விசுவநாதர் கோயிலைப் பற்றி 1920-களில் காந்தியடிகள் கூறியது 98 ஆண்டுகளுக்குப் பிறகும் மீனாட்சிக் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள கோயிலுக்கு அப்படியே பொருந்தும் என்பதில் ஐயமில்லை. கோயில்களைக் கூடத் தூய்மையாக வைத்துக்கொள்ள விரும்பாமல் தங்களின் தன்னலத்திற்காக அவற்றை வணிகமயமாக்கிய அறங்காவலர்களும், அதிகாரிகளும், சமூகக் கேட்டிற்குக் காரணமானார்கள். நம்முடைய முன்னோர்கள் எத்தகைய உயர்ந்த நோக்கத்திற்காக இந்தக் கோயில்களைக் கட்டினார்களோ அந்த நோக்கத்தையே சிதைத்த குற்றத்திற்கு இவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
மதுரை மீனாட்சிக் கோயில் ஏதோ சில ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட ஒன்றல்ல. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் தொடங்கி 18-ஆம் நூற்றாண்டுவரை எழுநூறு ஆண்டு கால கட்டத்தில் பல மன்னர்களாலும், செல்வர்களாலும் பல கட்டங்களில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கி.பி. 1168 முதல் கி.பி. 1175 வரை மதுரையை ஆண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவரே இத்திருப்பணியைத் தொடங்கியவர். 13-ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன், விக்கிரம பாண்டியன், 14-ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன், 15-ஆம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன், மாவலி வாணாதிராயர், ஆகியோரும், 16-ஆம் நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ண வீரப்ப நாயக்கர், தளவாய் அரியநாதர் ஆகியோரும், 17-ஆம் நூற்றாண்டில் விசுவநாத நாயக்கர், முத்துவீரப்ப நாயக்கர், திருமலை நாயக்கர், 18-ஆம் நூற்றாண்டில் சமூகம் மீனாட்சி நாயக்கர், விசயரெங்க சொக்கநாத நாயக்கர் ஆகியோரும் மேற்கண்ட நூற்றாண்டுகளில் வாழ்ந்த அரசிகள், அமைச்சர்கள், பெருஞ் செல்வர்கள் ஆகியோரும் மீனாட்சிக் கோயிலின் பல பகுதிகளைக் கட்டுவதில் பங்கெடுத்தவர்கள் கட்டியதோடு மட்டுமல்ல, அதன் நிர்வாகத்திற்கும், பாதுகாப்பிற்கும் தேவையான மானியங்களை வழங்கிவிட்டே சென்றிருக்கிறார்கள்.
கீழக் கோபுரத்திற்கு எதிரில் கீழச் சித்திரை வீதிக்கும், கீழ ஆவணி மூல வீதிக்கும் இடையில் புகழ்பெற்ற புது மண்டபத்தை மன்னர் திருமலை நாயக்கர் கட்டுவித்தார். 25 அடி உயரமுள்ள 124 தூண்கள் 4 வரிசைகளாக அமைக்கப்பெற்றுள்ளன. மண்டபத்தைச் சுற்றியிலும் திருவிழாக் காலத்தில் தண்ணீர் தேங்குவதற்கு ஏற்றவாறு சிறிய அகழிகள் கட்டப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் நடுப்பகுதியில் திருமலை நாயக்கர் உள்ளிட்ட நாயக்கர் மன்னர்களின் 11 பேர்களின் உருவச்சிலைகள் அழகுறச் செதுக்கப்பெற்றுள்ளன. மண்டபத்தின் கிழக்கு - மேற்குப்புறத் தூண்களில் கண்ணைக் கவரும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் மீனாட்சிக் கோயில் கலை நயத்துடனும், சிற்ப ஓவிய அழகு மிளிரமிளிர ஏறத்தாழ 700 ஆண்டு காலத்தில் கட்டப்பட்டு, தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ளது.
இக்கோயிலுக்கு வெளியில் இராய கோபுரம் அருகே உள்ள தெருவில் ஏழு கடல் என்ற பெயரில் தெப்பக்குளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. வைகை ஆற்றிலிருந்து அதற்குத் தண்ணீர் வரும் கால்வாய் கட்டடங்களால் தூர்க்கப்பட்டுவிட்டது. காய்ந்துகிடந்த அந்தத் தெப்பக் குளத்தைக் குப்பைக் கிடங்காக நகராட்சி மாற்றியதன் விளைவாகப் பெரும் சுகாதாரக் கேடு விளைந்தது. அக்குளத்தைச் சுற்றிலும் வாழ்ந்த மக்களின் முறையீட்டின் பேரில் அந்தத் தெப்பக் குளத்தைத் தூர்த்துவிட்டு அந்த இடத்தில் வணிகவளாகம் ஒன்றைக் கட்டுவித்து கோயிலுக்குள் இருக்கும் கடைகளை அங்கு மாற்ற வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. அவ்விதமே மூன்று மாடி உயரமுள்ள வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு 1985-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. கோயிலில் உள்ள கடைகளை அங்கு மாற்றுவதற்குப் பதில் புதியவர் பலருக்கு அந்தக் கடைகள் வழங்கப்பட்டுவிட்டன. அப்போதே கோயிலில் உள்ள கடைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் பிற்காலத்தில் தீ விபத்தோ, அதனால் ஏற்பட்டுள்ள பேரழிவோ நேர்ந்திருக்காது. 
மீனாட்சிக் கோயிலுக்குள்ளும், புது மண்டபத்திற்குள்ளும் 450 கடைகளுக்கு மேல் உள்ளன. இங்குமட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்திலும் இந்த நிலை உள்ளது. அவற்றை அப்புறப்படுத்தி கோயில்களின் கலை அழகினையும், அமைதியையும் மீட்டுத் தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. தீயினால் ஏற்பட்ட அழிவிலிருந்து வீர வசந்தராயர் மண்டபத்தை பழைமைக் கோலத்தில் புதுப்பிக்க வேண்டிய கடமையும் அரசைச் சார்ந்ததாகும். 
பாரம்பரியப் பெருமை மிக்கத் தமிழர்களின் சிற்பத் திறமைக்கும், கட்டட அறிவியலுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் தமிழ்நாட்டுக் கோயில்களின் கலையழகைக் காப்பாற்ற வேண்டியது தமிழக மக்களின் கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com