பலவீனங்களை வெல்வதற்கான பரீட்சை

பொதுவெளியில் பலத்திற்கான பரீட்சைதான் போட்டியாக நிகழ்கிறது. பலத்திற்கு எதிரானது பலவீனம். உடலளவில் பலம் குன்றியவர்கள் பலர் உள்ளனர். பலம் குன்றியவர்கள் எல்லாருமே பலவீனர்கள் அல்ல.

பொதுவெளியில் பலத்திற்கான பரீட்சைதான் போட்டியாக நிகழ்கிறது. பலத்திற்கு எதிரானது பலவீனம். உடலளவில் பலம் குன்றியவர்கள் பலர் உள்ளனர். பலம் குன்றியவர்கள் எல்லாருமே பலவீனர்கள் அல்ல. சபலப்படுவது, சறுக்குவது, சலனப்படுவது மனத்திற்குள் நிகழ்கிற பலவீனங்கள்.
பலவீனத்தை ஜெயிக்கும் மன உறுதியை ஞானிகள் வைராக்கியம் என்கிறார்கள். அந்த வைராக்கியச் சுரப்பி ஆன்மாதான். ஆன்ம பலத்தால்தான் இந்தச் சபலங்களை, சறுக்கல்களை வெல்ல முடியும்.
இதை உதாரணப்படுத்த வேண்டுமானால், காந்திஜியிடம் இதைக் காணலாம். அவருடைய தோற்றம் கட்டுமஸ்தான மல்யுத்த வீரருக்குரியதல்ல. ராணுவக் காக்கி உடை அணிந்த தளபதியும் அல்ல அவர். மார்பு எலும்பு தெரிகிற அளவிற்கு இருந்தது அவருடைய உடம்பு. அவருடைய ஆன்ம பலமோ ஓர் ஆச்சரியம். அசைக்கவல்லாத நம்பிக்கையில் அது ஆழமாக வேரோடியது. 
இந்த ஆன்ம பலத்தால்தான் பிரிட்டன் சாம்ராஜ்யத்தையே அரசியலில் ஜெயித்தார் காந்திஜி. 
இன்றைக்கு மனிதர்களில் பலசாலிகள் அநேகர் உள்ளனர். அந்த பலம் அவர்கள் உடல் பலம் மட்டுமே. அந்தப் பலசாலிகள் தைரியசாலிகளா என்றால், அப்படிச் சொல்ல முடியாது. துறவிகளுக்கு பலம் ஞானமும் அவர்களின் மனோ தைரியமும்தான். 
உயரத்திலிருக்கும் வான்வெளியே உச்சிமீது விழுந்தாலும்கூட அச்சமில்லை, அச்சமில்லை என்று பாரதி பாடுவார். 
கன்னியாகுமரிக் கடற்கரையிலிருந்து பார்த்தால் ஒரு பாறை. கல்கத்தா இளைஞன் ஒருவனுக்கு அங்கே செல்ல வேண்டும் என்று ஆசை. கையில் காசில்லை. படகோட்டியோ காசு கேட்கிறான். இந்த இளைஞனோ கடலில் நீந்திச் சென்று அப்பாறையில் ஏறி அமர்கிறான். படகோட்டியோ பயந்துவிடுகிறான். கடல் தன்னை அடித்துக்கொண்டு போகும் என்று பயந்திருந்தால் அந்த இளைஞன் கரையைத் தாண்டியிருக்க மாட்டான். 
அவனுடைய ஞானமோ, ஆகாயத்தையும்விட அகலமானது. அதற்குச் சமமானதுதான் அவனுடைய அசாத்தியமான தைரியம். அந்த இளைஞன் சுவாமி விவேகானந்தர். பயம் இல்லாதவனுக்கே ஜெயம். 
இந்தப் பின்னணியில் நமக்காகத் தியாகம் செய்து நமது வாழ்க்கையை உயர்த்துவதற்கான தலைவர்களின் பலத்தைச் சோதிப்பதைவிட, அவர்களுடைய பலவீனத்தைச் சோதிப்பதுதான் கறாராக அவர்களை நிறுத்து அவர்களின் எடையைக் காண்பதற்கு உதவும்.
நமது தலைவர்கள் கட்சித் தலைவர்களாகவும், தேசியத் தலைவர்களாகவும் உலா வருவதால், இரண்டு குறைபாடுகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. கட்சித் தலைவராக இருப்பவர் தமது கட்சிப்பதவி போய்விடுமோ என்று எப்போதும் அதைக் காப்பதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டிருப்பவராகவே தொடர்கிறார். தேசியத் தலைவருக்கும் இது பொருந்தும். 
பத்திரிகைச் செய்திகளின் பிரகாசத்தில் இருப்பதையே இத்தலைவர்கள் விரும்புவார்கள். அவர்களைப் பற்றிய செய்திகள் வெளிவரவில்லை என்றால், ஏதாவது போராட்டங்களில் ஈடுபட்டாவது தங்களை வெளிச்சப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். மக்களின் கவனத்திலிருந்து மங்குவார்களானால், அதுவே அவர்களின் மரணத்திற்குச் சமமாகி விடுமென்று அஞ்சுவார்கள். அதனால், கட்சி அரசியலானாலும் சரி, தேசிய அரசியலானாலும் சரி செய்திகளின் அலைகளிலேயே அறிதுயில் கொள்ள ஆசைப்படுவார்கள். 
இந்தியாவின் துயரமே, பலவீனத்தை ஜெயித்த தலைவர்கள் நமக்குப் பஞ்சம் என்பதுதான். கடவுள் மிகவும் கஞ்சத்தனமாக காந்திஜியை வழங்கியதோடு நிறுத்திக்கொண்டார். இந்தியத் தலைவர்களை - அவர்களுடைய பலவீனங்களை ஒரு தட்டிலும், தன்னல மறுப்பு என்ற எடைக்கற்களை மறுதட்டிலும் வைத்தால், தன்னல மறுப்புத் தட்டு தரை தட்டியே கிடக்கும். 
நம் நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர் தகுதிக்கான மனுவில் கேட்கப்படுகிற கேள்விகளில் ஒன்று, அந்தத் தேதியிலுள்ள இவர்களின் அசையும், அசையாச் சொத்துக்களின் விவரங்கள் என்ன என்பதுதான். தேர்தலில் ஜெயித்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் அன்றைய சொத்து விபரங்களை ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும். 
வேட்புமனுச் செய்கிறபொழுது இருக்கிற இந்தக் கண்டிப்பு, பதவிக்காலம் முடிகிற பொழுதும் இதேபோல மனுச்செய்ய வேண்டும் என்ற கண்டிப்பு இல்லை.
நமது தலைவர்கள் அநேகர் பலவீனர்களாக இருப்பதால்தான் சபலங்களுக்கு ஆளாகிவிடுகிறார்கள். சறுக்கல்களைச் சந்திக்கிறார்கள். "எது வரினும் வருக, எது போகினும் போக' என்று மனதில் தோன்றியதை அச்சமற்றுப் பேசுவதுமில்லை. 
பலவீனம் என்பது குடும்பத் தலைவனுக்குக்கூட இருக்கலாகாது என்றால், கட்சித் தலைவருக்கோ அல்லது தேசியத் தலைவருக்கோ நிச்சயமாக அது இருக்கவே கூடாது. அப்படி இருப்பதால்தான் ஒவ்வொரு கட்சியும் பலவாறு சிதறிப் பல கட்சிகளாக மலிகின்றன. இந்த உடைசலுக்கான காரணம் வெளியே இல்லை. உள்ளேயே இருக்கிறது. அதுதான் தலைவர்களின் பலவீனம். 
பதவி, சொத்து, செல்வாக்கு, வாரிசு முதலிய பலகீனங்களுக்கு இரையாகின்றவர்களால்தான் இது போன்று நிகழ்வது தொடர்கிறது.
பலத்தைப் பெருக்கிப் பிறரை ஜெயிப்பது என்பதைவிட, பலவீனத்தைப் பூஜ்யமாக்கித் தன்னை ஜெயிப்பவர்கள்தான், சமூகத்திற்குத் தேவை. சரித்திரத்தைப் படைப்பவர்கள் அவர்கள்தான்.
காந்திஜி தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பலவீனங்களை எதிர்த்துப் போராடியிருக்கிறார். இதேபோல பலவீனத்தை எதிர்த்துப் போராடிய தலைவர்கள் ஒரு சிலரை இனம் காண அருமையான தருணம் அண்மையில் நமக்கு வாய்த்தது.
அண்மையில் குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. கடுமையான போட்டியை பா.ஜ.க. சந்திக்க நேர்ந்தது. குஜராத்தில் கணிசமாக உள்ள படேல் சாதியினரின் இளம் தலைவர் ஹார்திக் படேல், தன் சாதி மக்களைக் கவர்ந்து இழுக்கிறார். ஏறக்குறைய 20 லிருந்து 25 எம்.எல்.ஏ.க்களைப் படேல் சாதியிலிருந்து உருவாக்கக் கூடிய சக்தியுள்ள இளம் தலைவர் ஹார்திக் படேல். அவர் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்.
"படேல் சாதியினரின் ஆதரவு பாஜகவுக்குத் தொடர வேண்டுமானால், படேல் சாதியினருக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். உண்டா, இல்லையா? இரண்டில் ஒன்று' என்று வைக்கப்பட்ட கோரிக்கை அது. "சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடுக்கான வாக்குறுதி தர மாட்டேன்' என்கிறார் பிரதமர் மோடி.
அதேசமயம் தங்கள் கட்சி இட ஒதுக்கீடு தருகிறது, வாருங்கள் என்று தாம்பூலம் வைத்து வரவேற்கிறார். 
ஹார்திக் படேல், பாஜகவுக்குக் கெடு விதிக்கிறார். கெடு முடிவதற்குள் ஒப்புக்கொண்டால் படேல் சாதியினரின் ஆதரவு பாஜகவுக்கு உண்டு. இல்லையென்றால், காங்கிரஸ் கட்சிக்கே என்கிறார்.
குஜராத் தேர்தலைக் குறுக்கு வழியில் ஜெயித்துவிடப் பிரதமர் மோடி நினைத்திருந்தால், ஹார்திக் படேலின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பார். அவருக்கு எச்சரிக்கையும் செய்யப்படுகிறது. படேல் சாதியினரின் ஆதரவு இல்லையென்றால் பாஜக தோற்கலாம் என்ற கருத்துக்கணிப்பும் வருகிறது. 
இவ்வளவிற்கும் பிறகு படேல் சாதியினருக்கு இட ஒதுக்கீடு தர முடியாது என்று நரேந்திரமோடி அறிவிக்கிறார். ராகுல் காந்தியோ, படேல் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு தருவதாக அறிவிக்கிறார். 
அறிவிக்கப்பட்ட அத்தருணத்தை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். நரேந்திரமோடி பலவீனமான தலைவராக நடமாடியிருப்பாரானால், ஹார்திக் படேலை வளைத்துப் போடுவதற்கான அனைத்துவித முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பார். ஆனால், அவரோ தோற்றாலும் கவலையில்லை. சாதி அரசியலுக்கு நான் பலியாக மாட்டேன் என்று உறுதியாக நின்றார். அதற்குரிய வைராக்கியம் அவரது உள்ளத்தில் நிரம்பி வழிந்தது. குறுகிய பெரும்பான்மையில்தான் வெற்றி பெற நேர்ந்தது. ஒருவேளை தோற்றுப் போனாலும் கவலைப்பட்டிருக்க வேண்டியதில்லை. 
ஏனெனில், தோற்பதற்கான ஆரோக்கியமான காரணம் அவரிடத்தில் இருந்தது. அப்படி வருகிற தோல்வியைப் பெருமையாகத்தான் கருதியிருப்பார் என்றே கூறலாம்.
கழுத்துக்குப் பக்கத்தில் தேர்தல் என்ற கத்தி வைக்கப்பட்டிருந்த கட்டத்தில் நரேந்திரமோடி நடந்துகொண்டதை அவருடைய பராக்கிரமம் என்பதா? 
பலவீனத்தை இப்படிப் புறமுதுகு காட்டி ஓட ஓட விரட்டிய சம்பவம் பாரத வரலாற்றில் முன்பு எப்போதாவது பதிவாகி இருக்கிறதா என்றால், பாரத வரலாற்றில் ஒன்றே ஒன்றைப் பார்க்க முடிகிறது.
1996-இல் மத்திய ஆட்சியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முடியாத நிலை திடீரென வியாபித்தது. காங்கிரஸ், பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க விரும்பின. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர்க ஹர்கிஷண்சிங் சுர்ஜித் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஒருவேளை சம்மதித்திருந்தால் நேருஜிக்குப் பிறகு ஒரு நீண்ட ஆட்சிக்கான பிரதமராகத் தோழர் ஜோதிபாசு நீடித்துச் செயல்பட்டிருக்கக் கூடும்.
ஆனால், கொள்கை அடிப்படையில் வெற்றி பெற்றுப் பிரதமராக வேண்டுமே தவிர, ஒரு குழப்ப சூழ்நிலையை உபயோகித்து அப்படி ஆகக் கூடாது என்று சுர்ஜித் கருதினார். அதனால், பிரதமராவதற்கு ஜோதிபாசுவும் சம்மதிக்கவில்லை. பதவிக்கான பலவீனங்களைப் போட்டி போட்டல்லவா இந்த இருவரும் ஜெயித்திருக்கிறார்கள்!
பலவீனங்களை வெல்லும் வல்லமை நமது சகல தலைவர்களுக்கும் எப்போது சித்திக்குமோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com