விடிவு பிறக்காதா?

நம் நாடு இன்று மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. எனினும் இதில் கவனம் செலுத்த வேண்டியவர்களில் பலரும் அந்த மோசமான நிலைமையின் காரணங்களையும், விளைவுகளையும் புரிந்து கொள்ளாமல், வேறு

நம் நாடு இன்று மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. எனினும் இதில் கவனம் செலுத்த வேண்டியவர்களில் பலரும் அந்த மோசமான நிலைமையின் காரணங்களையும், விளைவுகளையும் புரிந்து கொள்ளாமல், வேறு சாதாரணமான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 
நமது மக்களில் 26 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாடுகிறார்கள் என்ற கணக்கெடுப்பு வெளியாகியிருக்கிறது. இவர்களைவிட கொஞ்சம் அதிக வருமானம் ஈட்டும் ஏழை மக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் சுமார் 26 கோடி பேர்! இந்த 52 கோடி மக்களுக்கும் பிறக்கும் குழந்தைகள் வளரும் முழு காலத்திற்கும் குறைவான சத்துள்ள உணவுகளை அருந்தி நோய்வாய்ப்பட்டு வளருகிறார்கள். 
நடுத்தட்டு மக்களில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களும் தரமான வாழ்க்கையை வாழ முடியவில்லை. மேலும், நம் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் பணக்காரர்கள் அதிக பணம் ஈட்டுவதும், ஏழைகள் மிகவும் ஏழைகளாகப் போவதும் நடைமுறையாகிப் போனது. நமது நாட்டின் எல்லா இடங்களிலும் பரவலாகிப் போனவை இரண்டு அம்சங்களே, அவை அசுத்தமான கழிவுகளும், ஊழலும்தான்!
மிகவும் பெரிய பாராட்டுதற்குரிய நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப் பட்ட அதிக மதிப்புச் செலாவாணிகள் செல்லாததாக்கப்பட்ட திட்டம், எதிர்பார்த்த எந்தவிதப் பயனையும் அளிக்காமல் நிலைமை பழைய போக்குக்கு மாறிவிட்டிருக்கிறது. வங்கிகளிலிருந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுக்கப்பட்டு, அது ஊழலுக்கு பயன்படுத்தப்படக் கூடிய நடைமுறை மறுபடியும் வந்துவிட்டது! இதைக் கட்டுப்படுத்த முடியாததால் இன்றைய எல்லா வியாபாரங்களிலும், "இரண்டாம் தரப் பணம்' என்று அழைக்கப்படும் கருப்புப் பணம் பரிமாறப்படுகிறது. அதிக மதிப்புச் செலாவணிகளான ரூ.500-ம், ரூ.1,000-மும் செல்லாததாக்கப்பட்டதால் பொருளாதாரச் சீர் குலைவுதான் நடந்ததே தவிர, கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா என்றால் இல்லை.
மக்களின் சுகாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு, நாட்டின் எல்லா பெரிய நகரங்களும் விஷமாகிப் போனது. உலக நாடுகளை ஆராய்ந்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில், மனிதர்களின் வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 134-ஆவது இடத்திலும், தொழில் செய்ய எளிதான நாடுகளின் பட்டியலில் 90-ஆவது இடத்திலும் உள்ளது. 
விவசாயிகளின் தற்கொலைகள் சர்வசாதாரணமாகிப் போனது. நீர் வளத்தைப் பெருக்குவதும், நீர்நிலைகள் சார்ந்த மின்சார உற்பத்தியும் அடிமட்டத்திற்கு சென்றுள்ளன. விவசாயிகளின் தற்கொலை சாதாரண நடைமுறையாகியுள்ளது. எல்லா துறைகளின் முன்னேற்றத்திற்கும் தேவையான அடிப்படை கட்டமைப்புகளும் வளர்ச்சியடையாமல் முடங்கிப் போயின.
வங்கிகளின் வாராக் கடன் ரூ.10 லட்சம் கோடி ஆகியுள்ளது. வங்கிகளில் உள்ள மற்ற கடன்களும் வட்டி கட்டாமல் தள்ளாடும் நிலைமையில் உள்ளன. மருத்துவக் கல்வியும், பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரமும், இதுவரையில் இல்லாத அடிமட்ட நிலைக்குத் தாழ்ந்து போனது. 
நாட்டின் எல்லா மாநிலங்களும் கடன் சுமையால் தள்ளாடும் நிதி நிலைமைக்குச் சென்றுள்ளன. எல்லா வங்கிகளிலும் நியாயமான வகையில் மக்கள் தங்கள் வருமானத்தை சேமித்து வைத்திருக்கிறார்கள். அந்த மாதிரியான நியாயமான சேமிப்புகளை வங்கிகள் தங்கள் நஷ்டத்தை ஈடு செய்து கொள்ள சேமிப்பாளர்களின் ஒப்புதல் இல்லாமலேயே உபயோகித்துக் கொள்ள வகை செய்யும் ஒரு சட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது.
அரசின் பொருளாதார வளர்ச்சி 7% அல்லது 8% என இந்த ஆண்டு கணக்கிடப்படுவது உண்மையான வளர்ச்சியா அல்லது காகிதக் கணக்கு மட்டும்தானா? 
ஏர் இந்தியா எனும் அரசின் விமான அமைப்பு மற்றும் மாநில அரசுகளின் எல்லா மின் நிலையங்களும் மிக அதிக அளவில் கடன் பெற்றுத் தங்கள் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதைப்போலவே இந்தியாவின் ரயில்வேயும் கடன் சுமையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
இவை எல்லாவற்றையும்விட, நமது நாட்டின் தலைமை நீதிமன்றம் தனது நடுநிலைமையை பாதிக்கும் வகையில் நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளனர். மேலே விவரிக்கப்பட்ட எல்லா நிகழ்வுகளும் தோல்வியடைந்த ஒரு தேசத்தை மக்களுக்கு உணர்த்துகின்றன. இதை நாம் பெரிதுபடுத்திக் கூறுவதாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக பிறநாடுகளின் வளர்ச்சிப் பாதையை நோக்கலாம்!
இரண்டாம் உலகப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட போலந்து நாட்டை எடுத்துக்கொள்வோம். ஜப்பான் நாடு குண்டுகளால் எரித்துத் தள்ளப் பட்டது. சீனா 10 ஆண்டுகளாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டது. அடுத்து, மாசேதுங்கின் கலாசார புரட்சியினால் 1950-ஆம் ஆண்டில் சீனாவில் 7 கோடி மக்கள் கொல்லப்பட்டனர். 1978-ஆம் ஆண்டு வரையில் சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து-27.2% ஆண்டு வீழ்ச்சி என்ற நிலையை எய்தது. அந்த வேளையில் டெங் ஜியோபிங் எனும் தலைவர் தலையெடுத்து அந்த நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றினார்.
போலந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டன. அப்படி அவை உருவாகக் காரணமான தலைவர்கள் யாருமே சுயநலத்துடன் பொது வாழ்க்கையில் புகுந்து பதவி சுகங்களை அனுபவிக்கவில்லை. இதற்கு எதிர்மாறாக ஏழை, வளர்ந்துவரும் நாடுகள் வளர்ச்சியடைய முடியாமல் போவதற்கான காரணம் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்புகளே.
இந்தியாவின் அரசியல் பாழடைய ஆரம்பித்தது, 1966-ஆம் ஆண்டிற்குப் பிறகு- பிரதமர் லால்பஹதூர் சாஸ்திரி மறைவிற்குப் பிறகுதான். இந்த சீரழிவு அரசியல்வாதிகளிலிருந்து அரசின் அதிகாரிகளுக்கும் பரவி, நேர்மை, திறமை ஆகியவை நிர்வாகத்திற்குத் தேவையே இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கின. திறமையான அதிகாரிகள் எப்போதும் சுயமரியாதையுடன், வணங்காமுடிகளாக இருந்து நேர்மையைக் கடைப்பிடிப்பார்கள் என்பதால் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு, அரசியல் தலைவர்களின் அடிவருடிகளான திறமையற்ற ஊழல் அதிகாரிகள் உயரிய பதவிகள் பலவற்றிற்கும் தேர்ந்தெடுக்கப்படும் கலாசாரம் உருவாகிப் பரவலானது!
இன்றைய நிலைமையில், 33 சதவீத தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன. இன்றைய அரசுகளின் எல்லா மட்டத்திலிருப்பவர்களும் கோடிக் கணக்கில் பணம் சேர்ப்பதும், அதை மக்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் வகையில் பல இனாம்களையும் மானிய விலையில் பொருட்களை வழங்குவதையும் மிகப்பெரிய வாக்கு வங்கி அரசியல் நடவடிக்கையாக நடைமுறைப் படுத்துகின்றனர்.
இதனால், நம் நாடு எந்த அளவு பாதிக்கும் என்ற கவலை அவர்களுக்கு கிடையாது. இதுபோன்ற அரசியல் செய்யும் எதிர்க்கட்சியினரும் இதை முறியடித்து ஆட்சிக்கு வந்து நேர்மையான அரசியல் நடவடிக்கைகளை எடுத்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதில்லை. நம் நாட்டில் எதிர்க்கட்சியில் இருக்கும்போதே கோடிக்கணக்கில் பணம் சேர்க்கும் கலாசாரம் உருவாகிவிட்டது.
எதிர்க்கட்சியின் தலைவர்களாக இருப்பவர்கள் ஆட்சிக் கட்டிலில் உள்ள அமைச்சர்களிடம் கையூட்டு பெறுவது வழக்கமாகிப் போனது. தங்களது சிபாரிசுகளை ஏற்றுக் கொள்ளும் அமைச்சர்களைப் பற்றி எந்த குற்றச்சாட்டையும், இதுபோல் பலனடைந்த தலைவர்கள் சட்டசபையில் முன்வைப்பது கிடையாது! ஊழல் அமைச்சர்கள் இதை விரும்பிச் செய்வது வழக்கமாகிப் போனது!
பிரிட்டனின் எக்கனாமிஸ்ட் குழுமம் எனும் ஆராய்ச்சி மையம் உலகின் எல்லா நாடுகளையும் ஆராய்ந்து, தனது ஆண்டு அறிக்கையை வெளியிடுகிறது. இந்த மையத்தின் சிறப்பான ஆராய்ச்சி அனுபவத்தின் அடிப்படையில், அரசுகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் நிதிநிறுவனங்கள் உலகின் நாடுகள் எப்படி மாறுகின்றன என்பதை அறிந்து கொள்ளும்படியான அறிக்கைகளை வெளியிடும். இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 165 சுதந்திர நாடுகள் ஐந்து வகையாக பிரிக்கப்படுகின்றன. நல்ல தேர்தல் நடக்கும் நாடுகள், சமூக சுதந்திரம், திறமையாக இயங்கும் அரசுகள் உள்ள நாடுகள், எல்லா மக்களும் கலந்துகொள்ளும் அரசியல் மற்றும் அரசியல் கலாசாரம்- இந்த அடிப்படையில் பிரிக்கப்பட்ட நான்கு வகையான நாடுகள், முழு ஜனநாயக நாடுகள், குறைபாடுள்ள நாடுகள், கூட்டு அரசுகள் மற்றும் சர்வாதிகார ஆட்சிகள் ஆகும்!
இந்தப் பட்டியலில், சென்ற ஆண்டில் 32-ஆவது இடத்திலிருந்து 12-ஆவது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுவிட்டது. இதற்கான காரணம், பழங்கால மதம் சார்ந்த கொள்கைகளை சில அரசியல்வாதிகள் கையிலெடுத்து சிறுபான்மையினரை தாக்குவதுதான் காரணம் என எக்கனாமிஸ்ட் குழுமத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஜெஃப்ரி சாக்ஸ் எனும் பொருளாதார நிபுணரின் அறிவுரை. அதன்படி, ஒரு தேசத்தில் செழிப்பான வளர்ச்சிக்கு கட்டமைப்புகளின் வளர்ச்சி மற்றும் நிர்வாகமும் பொருளாதாரமும் சீர்செய்யப்படுதல் ஆகிய வழிகளே என்பது அவரது அறிவுரை.
இந்தியாவை மிகக் கடுமையாக பாதித்திருப்பது மக்கள்தொகை பெருக்கமே. இன்றைய மக்கள்தொகை 132 கோடி. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகும், மக்கள்தொகை எண்ணிக்கை, ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகைக்கு ஈடாகும்! இதே நிலைமை நீடித்தால் 2027-ஆம் ஆண்டில் நமது ஜனத்தொகை 150 கோடியாகும்! இந்தப் பிரச்னையை புரிந்து கொண்டு, அதை நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினரும் விவாதிப்பதே இல்லை! 
இத்தனை பிரச்னைகள், துயரங்கள் இருக்கின்றன. இது குறித்த கவலையே இல்லாமல், ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சியினரும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், தேவையில்லாத பிரச்னைகள் குறித்துக் கவலைப்படுகிறார்களே... இதிலிருந்து இந்தியாவுக்கு விடிவு பிறக்காதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com