சமத்துவ மருத்துவம்

'கல்வியா செல்வமா வீரமா' சிவாஜி பாடுவார் 'சரஸ்வதி சபதம்' திரைப்படத்தில். கல்விதான் அழியாசெல்வம்,

'கல்வியா செல்வமா வீரமா' சிவாஜி பாடுவார் 'சரஸ்வதி சபதம்' திரைப்படத்தில். கல்விதான் அழியாசெல்வம், அது இருந்தால் வேறு செல்வம் தேடி வரும் .கல்வியோடு நவீன உலகில் தேவை சுகாதாரம். அறிவுசார் உலகம். அன்னை சரஸ்வதிதான் ஆட்சிபுரிகிறாள். உலகில் இவை இரண்டும்தான் வளமையை நிர்ணயிக்கிறது. மனிதவள மேம்பாட்டுக் குறியீடு ஒரு நாட்டு மக்களின் செயல்திறனை குறிக்கிறது. அதில் கல்வியும் சுகாதாரம் உடல் வலிமை முக்கியமான ஆதாரங்கள்.
நேஷனல் ஹெல்த் மிஷன் - தேசிய சுகாதார ஆணையம் -மாநில அளவில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நிதியும் திட்டங்களையும் வகுத்துக் கொடுக்கிறது. மேலும் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக குழந்தைகள் பெறும் தாய்மார்கள் சுகமாகப் பிரசவிக்க வேண்டும், பிறந்த குழந்தைகள் நலமாக, புஷ்டியாக வளர வேண்டும். அதற்கான குறியீடுகளை மாநிலங்களுக்கு அளித்து எந்த அளவிற்கு அவை அடையப்பட்டிருக்கின்றன என்பதைக் கணக்கிட்டு, அதனை மேம்படுத்த செயல் திட்டங்களை வகுக்கிறது.
சுகாதாரத்துறையில் பல குறியீடுகளை ஒப்பிடுகையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. மாநிலத்தின் நடப்பு குழந்தை இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 17-ஆக உள்ளது (2016). இது தேசிய ஆயிரம் உயிருடன் பிறந்த குழந்தைகளுக்கு 27 இறப்பு எனும் தேசிய இலக்கைவிடக் குறைவாகும்.
தாய்மார்கள் இறப்பு விகிதமான 1 லட்சம் பிறந்த குழந்தைகளுக்கு 109 என்ற தேசிய இலக்கிருந்த நிலையில், தமிழகத்தில் 2015 -16இல் ஒரு லட்சம் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மார்கள் இறப்பு விகிதம் 62-ஆகும். முன்பு இருந்த 79 என்பதிலிருந்து நன்கு குறைந்துள்ளது. 
சராசரி இறப்புக் குறியீடு ஓர் அளவு. ஆனால் சில பிற்பட்ட பழங்குடியினர் வாழும் பகுதிகளில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை 1 லட்சம் குழந்தை பிறப்பிற்கு முன்னூறுக்கும் மேல் உள்ளது கவலைக்குரியது. காரணம், மருத்துவ வசதி எல்லா இடங்களுக்கும் சீராகச் சென்றடையவில்லை.
அணுக எளிமை, தரமான மருத்துவ வசதி, மலிவான செலவு இவைதான் மக்கள் நலம் பேண முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று தேசிய மக்கள் நல திட்ட வடிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் களத்தில் மக்கள் படும் சிரமங்கள் குறைந்தபாடில்லை.
ஆரம்ப சுகாதார மருத்துவ வசதி, இரண்டாவது கட்டமாக மருத்துவமனைகள், மூன்றாவது நிலையாக மருத்துவ நிபுணர்கள் கொண்ட உயர் ரக சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் என்று மூன்று நிலைகளாக மருத்துவ சேவை பிரிக்கப்படுகிறது. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது, பாகுபாடின்றி நோயாளிகளுக்கு கிடைக்கக் கூடிய படுக்கை வசதி. இந்தக் குறியீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில், ஆயிரம் பேருக்கு 0.9 படுக்கை என்று உள்ளது. உலக சராசரி விகிதம் 2.9. 
2022-ஆம் ஆண்டுக்குள் படுக்கை வசதி நமது நாட்டில் ஆயிரம் மக்கள்தொகைக்கு இரண்டு என்ற அளவில் உயர வேண்டும் என்பது இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது .
2015-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 20,306 அரசு மருத்துவமனைகள். அதில் 82.8% கிராமப்புறங்களிலும், 17.2 % நகர்ப்புறங்களிலும் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் 400 பலதரப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் 10,929 சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம் மக்கள்த்தொகை வரை ஒரு நிலையம் என்ற கணக்கில் 1747 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. ஐந்தாயிரம் ஜனத்தொகை சமவெளியிலும், மூவாயிரம் மலைப்பகுதியில் ஒரு துணை சுகாதார நிலையம் என்ற விகிதத்தில் 8706 துணை சுகாதார நிலையங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகின்றன.
மருத்துவ வசதி அளிப்பதில் இன்னொரு முக்கிய பிரச்னை காலிப்பணியிடங்கள். கட்டடம் திறந்துவிடுவார்கள். ஆனால் மருத்துவர்கள், செவலியர்கள், உதவியாளர்கள் நியமிப்பதில் தாமதம் ஏற்படும். தேர்ந்த மருத்துவர்கள் பற்றாக்குறை தேசிய அளவிலான பிரச்னை.
2008-லிருந்து 2016 வரை பதிவுபெற்ற டாக்டர்கள் எண்ணிக்கை 32% உயர்ந்து 10,05,281 என்ற எண்ணிக்கையை எட்டியது. ஆயினும் ஒவ்வொரு பிரிவு நிபுணர், அறுவை சிகிக்சை மருத்துவர், தாய்சேய் நலன் காக்கும் கைனெக் , குழந்தைநல மருத்துவர் என்று எல்லா பிரிவிலும் பற்றாக்குறை தொடர்கிறது. 
ஐக்கிய நாடுகள் சபை அங்கமான உலக சுகாதார அமைப்பு ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளார்கள். ஆனால் நமது நாட்டில் 1700 மக்கள்தொகைக்கு ஒரு மருத்துவர். மருத்துவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் பணி செய்ய விரும்புவார்கள். காலிப்பணியிடங்கள் கிராமப்புறங்களில் அதிகமாக இருக்கும். பல மருத்துவ மனைகளில் தாழ்வாரத்தில் நோயாளிகள் மருத்துவர் வருகைக்காக படுத்துக் கிடக்கும் அவலம் தொடர்கிறது. பல விலை உயர்ந்த மருத்துவ கருவிகள் வாங்கப்படும். இயக்க ஆள் இல்லாமல் அட்டை கூட பிரிக்கப்படாமல் உறங்கும்.
குறைந்த பட்சம் 23 மருத்துவப் பணியாளர்கள் மருத்துவர்கள் உட்பட பத்தாயிரம் மக்கள்தொகைக்கு இருக்க வேண்டும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கிறது. இதிலும் இந்தியா பின் தங்கியிருக்கிறது.
தமிழ் நாட்டில் காலிப் பணியிடங்களை விரைவாக பூர்த்தி செய்ய தனியே மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியான திட்டம். இதன் மூலம் போன வருடம் மே வரை 20, 852 பணியாளர்கள், 7541 மருத்துவர்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது நிறைவளிக்கக் கூடியது.
மருத்துவப் படிப்பு, அடிப்படை மேல்படிப்பு, செவிலியருக்கான பயிற்சி இவை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு தேசிய மருத்துவ கமிஷன் அமைக்க மசோதா தாக்கல் செய்துள்ளது. 
இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பிற்கு பதிலாக மருத்துவ கல்வித் தரம் தொடர்புடைய பிரச்னைகளை கவனிக்கத் தனி அமைப்பு தேவை. மருத்துவ கவுன்சில் தலைவர், அங்கத்தினர்கள் பல ஊழல் குற்றசாட்டுகளுக்கு உள்ளாயினர் என்பதால் புதிய அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. நுழைவுத் தேர்வு இன்னொரு பிரச்னை.
நீட் நுழைவுத் தேர்விற்கு தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டில் 472 கல்லூரிகளில் மொத்தம் 65183 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் உள்ளன. இதில் அரசுக் கல்லூரிகள் 212 தனியார் 260. தமிழ் நாட்டில் மருத்துவ பட்டப் படிப்பிற்கு 2900 இடங்கள், பல் மருத்துவத்திற்கு 100 இடங்கள் அரசுக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளில் 2252 இடங்கள் உள்ளன. நீட் தேர்வு முறையில் ஒரு வாய்ப்பு என்னவென்றால் மற்ற மாநிலங்களில் பிற மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்குப் போட்டியிடலாம். அந்த வகையில் அதிக மாணவர்கள் நமது மாநிலத்திலிருந்து மருத்துவப் படிப்பு மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
மருத்துவத் துறையின் முக்கியப் பொறுப்பு தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பது, மாறும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு வரக்கூடிய நோய்கள் வராமல் தடுப்பது, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக வருமுன் காப்பது. காவல்துறை குற்றங்கள் நடவாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிற்கு ஒப்பானது. உயிர் காக்கும் உன்னதப் பணி மருத்துவப் பணி. 
முன்பு மலேரியா, பெரியம்மை, காசநோய், போலியோ போன்ற நோய்கள் பரவலாக இருந்தது இப்போது கட்டுக்குள் வந்துள்ளது. வாழ்வுமுறை மாற்றங்களால் வரக்கூடிய சக்கரை நோய் இருதய நோய் கல்லீரல் நுரையீரல் பாதிப்பு அதிகமாக இறப்பிற்கு காரணமாகிறது. அதற்கான உயர் சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டும். 
தமிழகத்தில் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டும். சுமார் ஆயிரம் அதிக இடங்கள் மருத்துவ படிப்பிற்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது மாணவர்களுக்கு நற்செய்தி.
உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதிக சாலை விபத்து மரணங்களும் தமிழகத்தில்தான் அதிகம். சுமார் 15000 உயிரிழப்பு ஆண்டுதோறும் போக்குவரத்து விபத்துகளில் ஏற்படுகிறது. விபத்துகளை குறைக்க நடவடிக்கை தேவை. மற்ற நாடுகளில் சாலை விபத்துக்களை குறைக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுத்து வெற்றி கண்டிருக்கிறார்கள். ஏனோ நமது நாட்டில் அதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. விபத்தின்மையே முழுமையான சாலை பாதுகாப்பு. 
உடல் உறுப்பு தானம் தானங்களிலே மிக உயர்ந்த தானம். அகால மரணம் அடைந்த ஹிதேந்திரன் பெற்றோர் மகனின் உடலை தானம் செய்ய முன் வந்தது நாட்டில் மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பலர் தானம் செய்தனர். அதற்கேற்ற கட்டமைப்பும் நிபுணத்துவமும் மேம்பட்டது. முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் பிரத்யேகமாக இதற்கு வழிமுறைகளை வகுத்ததால் மாற்று சிகிச்சை சிறப்பாக மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழகம் விளங்குகிறது.
மருத்துவ வசதி வளர்ந்தாலும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமின்றி சாதாரண மக்களும் பயனடையும் வகையில் அமைய வேண்டும். மொத்த மருத்துவ செலவில் 67% தனி நபர்களும் இன்சூரன்ஸ் மூலமாகவும் அளிக்கப்படுகிறது என்பது மிக அதிகம். அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் ஓரளவு செலவு சுமை ஈடு செய்யப்படுகிறது என்றாலும் மருத்துவ வசதி பணம் படைத்தவர்க்கே என்ற நிலை தொடர்கிறது. கைகாசு போட்டு எப்படி மருத்துவச் செலவை ஏற்க முடியும்? கொடிய நோய் தாக்கினால் ஏழ்மையும் கூடவே வந்து தாக்குகிறது. ஏற்கெனவே மது அரக்கனுக்கு அடிமைப்பட்டு குடும்பத்தையும் மறந்து உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் மதுவில் கரைகிறது. கெடுத்துக்கொண்ட உடலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை. என்ன கோரமான சுழற்சி!
மருத்துவக் காப்பீட்டு ஆதாரம் மூலம் எந்த மருத்துவமனையையும் அணுகி சிகிச்சை பெற்று, பாரமின்றி வெளிவரலாம் என்ற நிலை வந்தால்தான் ஏழைகளுக்கு விடிவு பிறக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com