சுதந்திரக் கூச்சல்!

சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரித்தானது. அது அவர்கள் உரிமையும் கூட. ஒருவர் தனக்குத் தோன்றும் எண்ணங்களை எழுத்தில் வடிக்கலாம், ஓவியமாக்கி வண்ணம் தீட்டலாம்,

சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரித்தானது. அது அவர்கள் உரிமையும் கூட. ஒருவர் தனக்குத் தோன்றும் எண்ணங்களை எழுத்தில் வடிக்கலாம், ஓவியமாக்கி வண்ணம் தீட்டலாம், வாய்மொழியாக்கலாம், பாட்டாக்கலாம், நடித்துக் காட்டலாம்... ஆடை, எழுத்து, ஓவியம், பேச்சு, உணவு என்று எல்லாவற்றிலும் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. இவற்றின் மீது மனிதர்களுக்குண்டான சுதந்திரத்தை எவரும் மறுக்கவோ, தடுக்கவோ முடியாது. ஆனால் இவை ஒவ்வொன்றிற்குமான சுதந்திரத்திற்கும் நிச்சயமாக எல்லைகள் உண்டு. 
சிலரின் பார்வையில் இந்த எல்லைகள் எட்ட இயலாத அளவிற்குப் பரந்து, விரிந்து இருக்கலாம். சிலருக்கோ கை எட்டும் தொலைவில் இருக்கலாம். எத்தகைய ஆடை உடுத்துவதும், உடுத்தாததும் என் சுதந்திரம் என்று யாரேனும் கூற முடியுமா? எதை வேண்டுமானாலும் உண்பது என் உரிமை என்று கூறி, ஒருவர் நரமாமிசம் சாப்பிடுவதை எவராயினும் ஒப்புக் கொள்வரோ? அது போலவே ஒருவர், 'மனத்திற்குத் தோன்றுவதை எல்லாம் எழுதுவதோ, வரைவதோ என் உரிமை' என்று சொல்ல முடியாது. சுதந்திரத்திற்கு எல்லைகள் உண்டு என்பதை உணர்வதற்கு மனிதர்களுக்குப் பெரிதாக சிந்தனா சக்தி தேவை இல்லை.
பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆடை குறித்த சுதந்திரம் பற்றியே அதிகமாகப் பேசுகிறார்கள். ஆடை தொடர்பான சுதந்திரம் வினோதமானது! ஆணின் ஆடை விவாதப் பொருளாக எப்பொழுதும் இருந்ததில்லை. எந்த ஒரு ஆணும் அரை அல்லது முக்கால் கால் சட்டை அணிந்து அலுவலகம் செல்வதை நாம் பார்த்திருக்க முடியாது. அப்படி செல்வதற்கு அனுமதியும் கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு பெண்களுக்கு வந்தால் விவாதமாகிறது. அவளின் ஆடை எப்பொழுதும் பேசப்படும் பொருளாகி விடுகிறது.
ஆணைப் போலவே பெண்ணும் தவறு செய்வதில் போட்டி போடுவதும் அதை நியாயப்படுத்துவதும் ஏற்புடையது அன்று. ஒரு ஆண் துணிந்து தவறு செய்யும்போது அதே தவறை பெண் செய்யக் கூடாதா என்று கேட்பதில் பெண்ணின் சுதந்திரமோ அல்லது உரிமையோ அடங்கி விடாது. அப்படிக் கேள்வி கேட்பதை விடுத்து பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வி, பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு போன்ற பல விஷயங்களுக்காக பெண்கள் போராடுவதிலும், ஓங்கிக் குரல் கொடுத்து வெற்றி பெறுவதிலும்தான் பெண்களின் உண்மையான சுதந்திரம் உள்ளது. பெண்களிடம் அதிகமான உழைப்பைச் சுரண்டி குறைவான கூலி கொடுத்தல், பெண்கள் இழிவாக நடத்தப்படுதல் போன்றவற்றை எதிர்த்து செயல்படுதலில் உண்மையான சுதந்திரம் உள்ளது என்று சொல்லலாம்.
உயிரினங்களில், ஆண் இனமே அழகும், கம்பீரமும் மிக்கதாகப் போற்றப்படுகிறது. மனிதர்களில் மட்டும் பெண் இனமே அழகு, கவர்ச்சி என்பதாக எல்லோர் மனதிலும், மூளையிலும் (தவறுதலாக?) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணமே ஆணின் பார்வையில் பெண்ணை வேறுபடுத்திக் காட்டுகிறது. இதுவே பெண்களின் பாதுகாப்பிற்கும் எதிராகச் செயல்படுகிறது. போதாதற்கு ஆடைச் சுதந்திரம் என்ற பெயரில் எதிர் பாலினரை தவறு செய்யத் தூண்டும் அளவுக்குப் பெண் தன் உடல் அழகைக் காட்டுகிறாள், அல்லது கவர்ச்சிப் பொருளாகக் காட்டப்படுகிறாள்.
சுதந்திரம் என்ற பெயரில் ஒழுக்க மீறல்களும், கலாசாரச் சீரழிவுகளும் தங்கள் அனுமதியின் பெயரிலேயே நடப்பதை தெரியாத அளவிற்கு அறியாமை உள்ளவர்களா பெண்கள்? அரைகுறை ஆடை அலங்காரமும், மது அருந்துதலும் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, மேல்தட்டு வர்க்கத்தினரின் கெளரவமாகக் கருதப்பட்டு, இன்று படித்தவர், படிக்காதவர் என்று எல்லோரையும் ஆட்டி வைக்கிறது. ஒருவர் தானும் கெட்டு, சமுதாயத்தில் குற்றங்கள் பெருகுவதற்குக் காரணமாக இருப்பதா குடிப்பவரின் சுதந்திரம்? 
நம் எண்ணங்களின் வெளிப்பாட்டில் வலிமை இருக்கலாம், ஆனால் பிறருக்கு வலியை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. அரசியல், மதம், ஜாதி போன்றவற்றின் மீதான நம்முடைய பார்வை மற்றும் நமது கருத்துகள் சம்பந்தப்பட்டவர்களைப் புண்படுத்தும்படியாக இருப்பது சுதந்திரம் அன்று.
கொஞ்சம், கொஞ்சமாக மேற்கத்திய கலாசாரம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்ள சுய விருப்பதுடனே அனுமதித்து விட்டோம் என்றுதான் கூற வேண்டும். அதனால்தான் வரைமுறையற்ற உறவு முறைகள் பல்கிப் பெருகிவிட்டன. ஆண், பெண் சேர்ந்து பழகுவதில் கட்டுப்பெட்டித்தனம் எதற்கு என்ற லேசான முணுமுணுப்புகள் மெது,மெதுவாகப் பெருங்குரலெடுத்து சுதந்திரக் கூச்சலாக மாறிவிட்டது. ஒழுக்கச் சீர்குலைவுகளும் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துவிட்டது. கலாசாரம், பாரம்பரியம் என்று பேசுபவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் போன்று பார்க்கப்படுகிறார்கள்.
பொதுசமூகத்தால் ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்படாத விஷயங்கள் பற்றி வெளிப்படையாக விவாதங்கள் நடைபெறுகின்றன. அவை நியாயப்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பற்றி கவலைப்படும் கூட்டத்தினர் பத்தாம்பசலிகள் என்றும், பைத்தியக்காரர்கள் என்றும், காலச்சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளாதவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.
கட்டுப்பாடற்ற சுதந்திரம் தவறு என்று மேலைநாட்டினர் எண்ணத் தொடங்கிவிட்டனர். கை மீறிப் போய்விட்ட விஷயங்களை, எதுவும் செய்ய முடியாமல், அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கையறு நிலையை அதிவிரைவில் நாமும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதுதான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com