யானைகள் மோதிக் கொள்ளும்போது...

உலக நாடுகள் ஒருங்கிணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எல்லா உறுப்பு நாடுகளும் பயன் பெற்று உலக வர்த்தகம் உயர வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பு உருவானது.

உலக நாடுகள் ஒருங்கிணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எல்லா உறுப்பு நாடுகளும் பயன் பெற்று உலக வர்த்தகம் உயர வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பு உருவானது. தடையில்லா வர்த்தகமே அதன் குறிக்கோள். இந்தியாவில் உலக வர்த்தகம் பற்றிய ஞானக் குறைவுள்ள சில இடதுசாரிகளுக்கு ஒவ்வாமை உள்ளது இயல்பு. கார்ப்பரேட் ஆதிக்கம், உலக ஏகபோக முதலாளித்துவ சுரண்டல் என்றெல்லாம் தூற்றுவார்கள். ஆனால், உலக ஏகபோக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தலைவரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இன்று உலக வர்த்தக அமைப்பின் தடையில்லா சர்வதேச வர்த்தகக் கொள்கையைத் தூற்றுவது ஏன்? இரண்டு யானைகள் மோதிக் கொண்டால் புல்லுக்கு ஆபத்து என்பதுபோல், சர்வதேச வர்த்தகத்தால் பலன் பெற்று வரும் பல வளர்முக நாடுகள் கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் காரணமாகியுள்ளது. 
அமெரிக்க யானையுடன் சண்டை போடும் மற்றொரு யானை சீனாதான். உலக வர்த்தக அமைப்பு தோன்றிய வரலாற்றை கவனித்துவிட்டு இன்றைய நிலையை சீர்தூக்கிப் பார்ப்போம். 
இரண்டாவது உலகப்போர் முடிந்ததும் ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குன்றியிருந்தது. உலக வர்த்தகம் சுருங்கியிருந்தது. ஒவ்வொரு நாடும் தத்தம் வர்த்தக நலன் கருதி இறக்குமதிப் பொருட்களுக்கு எக்கச்சக்கமாக வரி விதித்தன. ஆரம்பத்தில் அதிகபட்சமாக முதலாளித்துவ மேற்கு நாடுகள் மட்டும் தத்தம் அந்நிய வர்த்தகத்தை உயர்த்த ஒரு பொதுவான உடன்பாட்டை ஜெனீவா நகரில் 1948-இல் செய்து கொண்டன. அதுவே "காட்' ஒப்பந்தம். எங்ய்ங்ழ்ஹப் அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் ர்ய் பஹழ்ண்ச்ச்ள் & பழ்ஹக்ங் - எஅபப - அதாவது, வரி விதிப்பு மற்றும் வர்த்தகம் குறித்த சர்வதேச பொது உடன்படிக்கை. 
அப்போது "காட்' உறுப்பு நாடுகள் 23 மட்டுமே. அந்த 23 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. காட் ஒப்பந்தத்தின் மூலம் 1949-லிருந்து உலக வர்த்தக அமைப்பாக காட் மாறும் முன் 1994 வரையில் இறக்குமதிகளுக்குரிய சுங்கத் தீர்வை 50 சதவீதத்திலிருந்து 5 சதவீதமானது. 
இருப்பினும் கூட உலக வர்த்தகம் உய்வு பெறவில்லை. காரணம் சோஷலிச மாயை. 1980-இல் சோவியத் யூனியன் நாடுகள் சிதறுண்டன. ரஷியா தனி நாடானது. சீனாவிலும் கம்யூனிசம் இருப்பினும் அந்நிய முதலீடுகளுக்கு ஆதரவு தோன்றியது. வளர்ச்சிப் பாதைக்கு சோஷலிசத்தை ஏற்றுக் கொண்டு பொதுத் துறையை வளர்த்த வளர்முக நாடுகளில் தேக்கம் உருவானது. பொதுத் துறைகள் நஷ்டமடைந்தன. வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் முதலீட்டுத் தேக்கம் ஏற்பட்ட சூழ்நிலையில்தான் "காட்' ஒப்பந்தம் நிலைத்தன்மையுள்ள உலக வர்த்தக அமைப்பாக உருவாகி, "ஒரே உலகம்' என்ற கொள்கையுடன் உலகமயமாக்கலுக்கு (குளோபலைúஸஷன்) வழிவிடும் நோக்கத்தில் டங்க்கெல் அறிக்கை எற்கப்பட்டது.
காட் ஒப்பந்த தலைமை இயக்குநராயிருந்த ஆர்தர் டங்க்கெல் என்ற பொருளாதார மேதைதடையில்லா வர்த்தகக் கொள்கை அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளுடன் தயாரித்த அறிக்கை 164 உறுப்பு நாடுகளாலும் ஏற்கப்பட்ட பின்பு இந்த உலக வர்த்தக அமைப்பு உருவானது. இவ்வாறு உலக வர்த்தக அமைப்பு உருவானதும் இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்பட்டது. ஆனால் இன்று காட் ஒப்பந்தம் உருவாக்கிய பழைய இருமுக வர்த்தக உறவு மீட்சியுற்றுப் பன்முக வர்த்தக உறவு முறிந்துவிடும் அபாயம் தோன்றிவிட்டது.
பதினோராவது அமைச்சர்கள் மாநாடு ஆர்ஜென்டீனா தலைநகரமான புவனஸ் ஏரிஸில், 2017 டிசம்பர் 10,11,12,13 தேதிகளில் நடைபெற்றது. சர்வதேச வர்த்தகம் குறித்து விவாதித்தனர். வர்த்தக சுதந்திரம் என்ற அடிப்படை விதியைத் தாக்கிப் பேசிய அமெரிக்க பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், உலக வர்த்தக வளர்ச்சியில் உலக வர்த்தக அமைப்பு போதிய கவனம் செலுத்தவில்லை என்று மேலோட்டமாகப் பேசிவிட்டு மாநாடு முடிவதற்கு ஒரு நாள் முன்பாகவே நழுவிவிட்டார்.
உலகில் சோஷலிச தத்துவம் தடம் மாறிய கதையை நாம் அறிவோம். படிப்படியாக ரஷியா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் காட் உறுப்பு நாடுகளாயின. உலக வர்த்தகத்தில் மீண்டும் ஒரு தொய்வு ஏற்பட்டது. முதலாளித்துவ கருத்துக் கோவையில் ஒரு புதிய சொல் அரங்கேறியது. அதுவே உலக மயமாதால்.
ஒரு நாட்டின் இறையாண்மைக்குக் கட்டுபட்டு, அந்த நாட்டில் அந்நிய முதலீடுகளுக்கு வரவேற்பு அளித்து, லாபத்தில் பங்கு பெறுவது என்று உலகமயமாதலை வளரும் நாடுகள் வரவேற்றன. இக்கருத்துக்கு ஆக்கமூட்டி உருவானதுதான் டங்க்கெல் திட்டமும், உலக வர்த்தக நிறுவன உருவாக்கமும். உலக வர்த்தக நிறுவனம் உருவாகி 24 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழ்நிலையில் இன்று அமெரிக்க அதிபர், "பழைய குருடி தகவைத் திறடி' என்று பேசுவது ஏன்?
அன்று டங்க்கெல் திட்டத்தை ஆதரித்த அமெரிக்கா, பன்னாட்டு வர்த்தக உறவை போற்றி வளர்த்ததை மறந்துவிட்டு இன்று பழையபடி இருநாடுகளிடையே ஒப்பந்தம் வர வேண்டும் என்று பேசுவதுதான் விந்தையிலும் விந்தை. காரணம் சீனாதான்.
ஒரு கம்யூனிச நாடாயிருந்து கொண்டு சோஷலிசம் பேசி கட்டுப்பாடாயிருந்த சீனா, உலகமயமாதலை ஏற்றுக்கொண்டு வர்த்தக சுதந்திரத்துக்காக வாள் வீசுவதைப் பார்த்து அமெரிக்கா அரண்டு போய்விட்டது. இந்த யானைப் போர் தனியார் முதலாளித்துவத்திற்கும் அரசு முதலாளித்துவத்திற்கும் இடையே நிகழ்வதாகவும் இடதுசாரிகள் பேசும் வாய்ப்பு உண்டு.
ஒபாமா அமெரிக்க அதிபராயிருந்த காலத்தில் அமெரிக்க - சீன உறவு அரசல் புரசலாயிருந்தது. இன்று ட்ரம்ப் பதவி ஏற்றதும் வெடித்துவிட்டது. அமெரிக்க அங்காடியை சீனா கைப்பற்றிவிட்ட காரணத்தால், ஆனானப்பட்ட அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 2016-இல் 347 பில்லியன் டாலர் என்ற நிலை மேலும் உயர்ந்து 400 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு அமெரிக்கா வர்த்தகப் பற்றாக்குறையில் அல்லாடுகிறது! 
சீனாவில் வழங்கப்படும் மானியங்களை உலக வர்த்தக நிறுவனம் ஏன் தடுத்த நிறுத்த முயற்சிக்கவில்லை, என்று கூப்பாடு போடுகிறது! தவிரவும், உலக வர்த்தக நிறுவனம் விதித்துள்ள பல விதிமுறைகளை உறுப்பு நாடுகள் மீறிவிட்டதாகவும் இனியும் பன்னாட்டு வர்த்தக உறவு அர்த்தமற்றது என்று அழுது புரளுகிறது! "அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே' என்று அந்நாடு ஓலமிடுவதில் வியப்பில்லை. பருத்தி விஷயத்தில் உலக வர்த்தக நிறுவனத்தின் நீதித்துறை கொடுத்த அடியின் வலி அப்படிப்பட்டது.
உலக வர்த்தக விதிகளை மீறுவதில் அமெரிக்காவுக்கு முதலிடம். அனைத்துலக சந்தையைப் பிடிப்பதற்கு ஏற்றுமதி மானியம் வழங்கி அமெரிக்க பருத்திக்கு விலைக்குறைப்பு நிகழ்ந்தபோது, பருத்தி ஏற்றுமதியை நம்பி வாழ்ந்த நான்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரம் பாதிப்புற்றது. 2005-இல் அமெரிக்காவின் பருத்தி மானியத்தை எதிர்த்து உலக வர்த்தக நீதிமன்றம் பருத்தி மானியத்தை நிறத்தும்படி அமெரிக்காவுக்கு உத்தரவு போட்டது. இந்தப் பிரச்னையை அமெரிக்கா வேறு விதமாக சமாளித்தது. பிரேசிலுக்கு 300 மில்லியன் டாலர் ரொக்கமாக வழங்கி, மேலும், ஆண்டுக்கு 147 மில்லியன் டாலர் தருவதாக ஆசைகாட்டி பிரேசிலை அடக்கிவிட்டுப் பருத்தி மானியத்தைத் தொடர்ந்தது. பாவம், பருத்தி விளையும் ஆப்பிரிக்கா நாடுகள் நீதிமன்றம் செல்லக் கூடப் பணம் இல்லாமல் அமைதி காத்தன. இந்தியாவில் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட வரலாற்றில் குற்றம் "பிடி' பருத்தியினுடையது மட்டுமல்ல - அனைத்துலகச் சந்தையில் விலைக்குறைப்பு செய்த அமெரிக்காவின் நரித்தந்திரமும் ஒரு காரணம். இவ்வளவு ஓட்டை உடைசலை வைத்துக்கொண்டு, "நீ என்ன ஒழுங்கு?' என்று சீன யானை அமெரிக்க யானையை வினவி மோதுகிறது!
உலக வர்த்தக நிறுவனத்தில் சீனா இணைந்து 15 ஆண்டுகள் கடந்தும் கூட, அந்நாட்டுக்கு அங்காடிப் பொருளியல் தகுதியே வழங்கப்படவில்லை. அங்காடிப் பொருளியல் தகுதி என்றால் விலை உரிமை. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கும் உள்ள விலை உரிமை சீனாவுக்கு மறுக்கப்படுவதால், அமெரிக்கா கேட்கும் அதே கேள்வியைத்தான் சீனாவும் கேட்கிறது - உலக வர்த்தக நிறுவனம் மதிக்க வேண்டிய சுதந்திர வணிகம் போற்றப்படாமல், நெறிமுறைகள் மீறப்படுவது ஏன்? 
கடந்த டிசம்பர் கூடிய உலக வர்த்தக நிறுவன அமைச்சர்கள் மாநாடு மோதலில் முடிந்த பின்னர் எழுந்த பேச்சு, "ஆட்டம் குளோஸ்'. "கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி' என்பது போல் தனக்குத் தானே அமெரிக்கா சூடு போட்டுக் கொண்ட காட்சி சுவாரசியமாயிருந்தது! இந்தியாவின் சார்பாகக் கலந்து கொண்ட நம் வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு மகிழ்ச்சியுடன் திரும்பினார். உணவு மானியக் குறைப்பு, ஓவராக உணவு இருப்பு வைத்தல் எல்லாம் விதியை மீறும் செயல் என்று இந்தியாவை வழக்கமாக எதிர்க்கும் அமெரிக்காவின் கவனம் எல்லாம் இம்முறை சீனா மீது திரும்பிவிட்டதால், வழக்கமான இந்திய நியாயத்தை முன்வைக்காமல், இந்த மட்டிலும் ஆளைவிட்டால் சரி என்று யானைகளின் சண்டைக்கிடையில் இந்தியப் பூனை நைசாக நழுவிவிட்டது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com