தயக்கமே தடை!

எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் அடிப்படை நம் மனம் மற்றும் மனதில் எழும் எண்ணமே. ஆனால், நம்மிடையே காணப்படும் தயக்கங்கள், அந்த எண்ணங்களைத் தடுத்து, முயற்சிகளைக் கைவிடத் தூண்டுகின்றன. 

எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் அடிப்படை நம் மனம் மற்றும் மனதில் எழும் எண்ணமே. ஆனால், நம்மிடையே காணப்படும் தயக்கங்கள், அந்த எண்ணங்களைத் தடுத்து, முயற்சிகளைக் கைவிடத் தூண்டுகின்றன. 
தாழ்வு மனப்பான்மையின் இன்னொரு முகம்தான் இந்தத் தயக்க உணர்வு. முன்னேறத் துடிக்கும் பலருக்கும் இந்தத் தயக்க உணர்வு தான் தடையாக இருக்கிறது. எனவே தான் திருவள்ளுவரும் அச்சமே கீழ்களது ஆசாரம்" என்கிறார். 
தயக்கம் அடிமையின் குணம், அறிவினை மறைக்கும், துணிவை அழிக்கும், கோழைகளை வளர்க்கும். 
அளவுக்கதிமாகத் தயக்கமடைபவர்கள் தங்களின் பல அடிப்படை உரிமைகளைக் கூட இழக்கிறார்கள். இந்த தயக்க உணர்வு நம் மனதில் துளிர்விடும் எண்ணங்களை எப்போதும் மாற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தானாக இயங்கும் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். எந்தக் காரியத்தையும் மற்றவர்களைக் கேட்டே செய்வார்கள். 
தாங்களாகவே எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள். அதாவது மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, அவர் கோபித்து திட்டுவாரோ, இவர் பிறரிடம் சொல்லி கேலி பேச வைப்பாரோ என்ற எண்ணமே ஒருவனை தயக்கமடையச் செய்து, தாழ்வு மனப்பான்மையைத் தூபம் போட்டு வளர்க்கிறது. 
இதைப் பயன்படுத்தி, ஒருவர் செய்யும் சிறு தவறுகளையோ, அவரிடமிருக்கும் பய உணர்ச்சியையோ, காட்டும் தயக்கத்தையோ தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவரை மேலும் அச்சவுணர்வுக் கொள்ளச் செய்து இறுதியில் அவரை எதற்கும் பயனற்றவராக மாற்றிவிடுகிறார்கள் சிலர். 
தன்னுடைய சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் செயல்களைப் பற்றி அவர்களே முடிவு செய்யாமல், பிறர் என்ன நினைப்பார்களோ, சொல்வார்களோ என்ற யோசனையில் இரட்டை மனம் கொண்டு பல வாய்ப்புகளை இவர்கள் தவற விட்டு விடுவார்கள்.
பிறவியில் யாருக்கும் தயக்கம் உண்டாவதில்லை. தயக்க உணர்வுகளுக்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்துமே காரணமாகிறது என்றால் அது மிகையல்ல. 
பிறர் நம் குறையைச் சுட்டிக் காட்டும்போதும், பலர் முன்னிலையில் குறுகி நிற்கச் செய்யும்போதும், இந்தத் தயக்க உணர்வு பெருகிக் கொண்டே வந்து ஒருவரை செயலற்றவராக்குகிறது. இறுதியில் தாழ்வு மனப்பான்மை பெருகி, நான் ஒன்றுக்கும் உபயோகமில்லாதவன் என்ற நிலையை அவருக்குள் ஏற்படுத்திவிடுகிறது. 
முதலாவது வருபவரைத்தான் உலகம் நினைவில் வைத்திருக்கும். தயக்கம், பயம் ஆகியவை நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கான உதாரணங்கள் ஏராளம். ஒரு நிமிட தயக்கம் கூட, நமது மிகப் பெரிய வெற்றியைத் தடுத்துவிடுகிறது.
இந்தத் தயக்க உணர்வு ஒருவரின் வளர்ச்சியை அணை போட்டுத் தடுக்கிறது.
ஒருவர் பெற நினைத்ததை, கேட்க நினைத்ததை, அச்ச உணர்வு இல்லாத இன்னொருவர், திறனில்லாதபோதிலும் துணிந்து கேட்டு அந்த வாய்ப்பை முன்னவரிடமிருந்து தட்டிப் பறித்துக் கொள்கிறார். 
எந்த ஒரு மனிதனுக்கும் தயக்கவுணர்வு நீங்கினால்தான் அவனுடைய உண்மையான ஆற்றல்கள் வெளிப்படும். 
சிலருக்குப் பேசும்போது தயக்க உணர்வு காரணமாக, பேச வந்ததை விட்டுவிட்டு அவசர அவசரமாக ஏதேதோ பேசுவார்கள். 
அதிகாரிகளையோ, பெரியவர்களையோ சந்திக்கும்போது அமைதியாக, தயக்கமின்றி பேச கற்றுக் கொள்ள வேண்டும். தயக்க உணர்வு உள்ளவர்கள் திட்டமிட்டுப் பேச கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான சுய பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பிறருடன் பேசும்போது ஆவலுடன் கவனிப்பதும், புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நாமாகவே சென்று உரையாடுவதும், வீட்டில், பள்ளியில், பணி புரியும் இடத்தில் அதிகப்படியான தயக்கத்தை ஏற்படுத்தி, நம் வாய்ப்புகளை தட்டி பறித்து, நம்மை பேச விடாமல் தடுக்கும் நபர்களைக் கண்டால் அவர்களைவிட்டு விலகுவதும் நல்லது.
எங்கெல்லாம் தயக்கம் வருகிறதோ, அந்த செயலைப் பலமுறை முன் ஒத்திகை பார்த்தால் தயக்கம் ஓடிவிடும் என்றும், திரும்பத் திரும்பச் செய்யும் பயிற்சி மட்டும்தான் தயக்கத்தை விரட்டும் சிறந்த வழியாகும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். 
"அச்சம் தவிர், ரெüத்திரம் பழகு'" என்றார் மகாகவி பாரதியார். தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்" என்கிறது விவிலியம்.
தோல்வியின் அடையாளம் தயக்கம்; வெற்றியின் அடையாளம் துணிச்சல்; தயங்கியவர் வென்றதில்லை. துணிந்தவர் தோற்றதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com