மாநிலங்களவை என்னும் தடைக்கல்!

இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளைக் கொண்டிருப்பது, கூட்டாட்சி முறையில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகத்துக்கு ஒருவகையில் தடைக்கல்லாகவே மாறிவிட்டிருக்கிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளைக் கொண்டிருப்பது, கூட்டாட்சி முறையில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகத்துக்கு ஒருவகையில் தடைக்கல்லாகவே மாறிவிட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பெருவாரியான மக்கள் ஆதரவுடன் வென்றாலும்கூட, மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆட்சியாளர்கள் நிறைவேற்றாமல் மாநிலங்களவையால் தடுக்க முடியும் என்ற சூழல் நிலவும்வரை, மக்களவை வெற்றியை மட்டும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் வலிமையானதாகக் கருத முடியாது.
விடுதலை அடைந்த பிறகான இத்தனை ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி என்ற ஒற்றைக் கட்சி ஆட்சி நிலவிய காலம் தவிர்த்து, வேறெந்த ஆட்சியாளர்களும் மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றதில்லை. இந்த நிதர்சன உண்மையின் கசப்பை சமாளிக்க முடியாமல் பிரதமர் நரேந்திர மோடியின் அரசும் திணறி வருகிறது. அவரது அரசு மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்கு நாடாளுமன்ற மேலவை தடையாகவே இருந்து வருகிறது.
எதிர்க்கட்சிகளின் கண்மூடித்தனமான எதிர்ப்பால் அரசின் சட்ட நிறைவேற்ற முயற்சிகள் மாநிலங்களவையில் முடக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாகவே கூறிவிட்டார். கடந்த மாதம் கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், முத்தலாக் தடை சட்ட மசோதாவும், பிற பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) ஆணைய மசோதாவும் எவ்வாறு எதிர்க்கட்சிகளால் சட்டமாகாமல் தடுக்கப்பட்டன என்று விவரித்தார்.
ஓ.பி.சி. ஆணைய மசோதா 2017 ஏப்ரலிலேயே மக்களவையில் நிறைவேறிவிட்டது. அதேபோல, முத்தலாக் தடைச் சட்ட மசோதாவும் கடந்த டிசம்பரில் மக்களவையில் நிறைவேறிவிட்டது. ஆனால், இவை இரண்டையும் மாநிலங்களைவையில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கிவிட்டன.
இத்தகைய அனுபவத்தை இதற்கு முன்னரும் பல பிரதமர்கள் சந்தித்திருக்கின்றனர். அவர்கள் மக்களவையில் பெரும்பான்மை பெற்றிருந்தபோதும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், அவர்களது எதிரிகளின் பெரும்பான்மை பலத்தின் முன்பு தவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும், ஆளும் கட்சியின் முடிவுகளுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவு பெற பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாகிறது. 
மாநிலங்களில் அதிக இடங்களில் வெல்லும் கட்சியே மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பெற முடியும். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறும்போது ஆளும்கட்சியோ, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளோ மாநிலங்களவைக்கு கூடுதல் உறுப்பினர்களை அனுப்பினால் அங்கு அவர்களின் பலம் கூடும். அந்த வகையில் இரண்டு தடவை இத்தகைய தேர்தல்கள் நடந்து முடியும்போது, ஆளும்கட்சியின் பலம் மாநிலங்களவையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்குள் அந்த அரசின் மக்களவைப் பதவிக் காலம் முடியும் தருவாயை எட்டிவிடும்.
அதாவது, மத்திய அரசை நடத்தும் கட்சியானது, மக்களவையில் வென்றால் மட்டும் போதாது; அது பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் வென்று ஆட்சி அமைக்க வேண்டும். ஏனெனில், சட்டப் பேரவை உறுப்பினர்கள்தான் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்கிறார்கள். அந்த நிலையில் மட்டும்தான், மத்தியில் ஆட்சி புரியும் கட்சி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற முடியும். பெரும்பாலான பிரதமர்களால் இத்தகைய நிலையை எட்ட முடிவதில்லை.
கிரேக்க புராணக் கதையில் வரும் எபிரா நாட்டு மன்னன் சிஸிபஸ் ஒரு சாபத்தால் மலையுச்சிக்கு பாறாங்கல் ஒன்றை உருட்டிச் சென்று வைக்க வேண்டியதாகிறது. அவன் ஒவ்வொரு முறையும் மலையுச்சிக்குச் செல்லும்போது, பாறாங்கல் உருண்டு கீழே வந்துவிடும். மீண்டும் பாறாங்கல்லை மலையுச்சிக்கு உருட்டிக் கொண்டு போக வேண்டும். மீண்டும் அது கீழே உருண்டு விழும்... அதுபோலத்தான், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஆளும் கட்சி பெரும்பான்மை பெறுவதென்பது சிக்கலானதாக மாறி இருக்கிறது.
1952-இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமைக்கப்பட்டபோது, நாடு முழுவதும் காங்கிரஸ் ஏகபோகமாக ஆண்டு வந்தது. எனவே அக்கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை என்பது பிரச்னையாக இருக்கவில்லை. ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய மூன்று காங்கிரஸ் பிரதமர்களும் மாநிலங்களவையில் அதீதப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தவர்கள்; நேரு பிரதமராக இருந்த காலம் முழுவதுமே நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருந்தார்; இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும், போதிய பெரும்பான்மை பெற்றிருந்தார்கள். மற்றொரு காங்கிரஸ் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியும்கூட, மாநிலங்களவையில் வலுவான பெரும்பான்மை பெற்றிருந்தார். அவருக்கு ஆதரவாக 166 எம்.பி.க்கள் மேலவையில் இருந்தனர்.
இந்த நால்வர் தவிர்த்து வேறெந்தப் பிரதமரும் மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவு பெற்றதில்லை. அதிலும், காங்கிரஸ் பிரதமரான நரசிம்ம ராவோ மக்களவையிலேயே பெரும்பான்மை இல்லாமல்தான் ஆட்சி செய்தார். அவருக்கு மக்களவையில் 232 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே இருந்தது! 
ஆனாலும் கூட, அவர்தான் அதுவரை கடைப்பிடிக்கப்பட்ட போலித்தனமான நேருவிய- சோஷலிஸ பொருளாதாரப் பாதையிலிருந்து நாட்டை விடுவித்து, பொருளாதார வல்லரசு என்ற நிலையை நோக்கி இந்தியாவை நடை போடச் செய்தார்.
அடுத்து, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் காலத்தில் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 50-ஐத் தாண்டியது.
1989-க்குப் பிறகு கடந்த 28 ஆண்டுகளில் எந்தப் பிரதமரும் மாநிலங்களவையில் பெரும்பான்மை வலுவை அடையவில்லை.
இந்த யதார்த்த நிலையை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான், ஆளும் கட்சியின் சட்ட நிறைவேற்ற முயற்சிகள் எவ்வாறு எதிர்க்கட்சிகளால் மாநிலங்களவையில் முடக்கப்படுகின்றன என்பதையும், அதுகுறித்துப் பிரதமர் மோடி குறை கூறுவதையும் உணர முடியும்.
இந்த ஆண்டு மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது. எனவே, புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. 
மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 245. இதில் தற்போது பாஜகவின் வலிமை 58 உறுப்பினர்கள் மட்டுமே. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற முறையில் கணக்கிட்டால், ஆளும் தரப்பின் பலம் எண்பதை நெருங்குகிறது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 57 ஆக மட்டுமே இருந்தது. 
இந்த ஆண்டு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தல்களில் பாஜகவின் பலம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும், மாநிலங்களவையில் 123 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மை இலக்கை ஆளும் கூட்டணி அடைவது சிரமமே. தேர்தலில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களால் நரேந்திர மோடி பிரதமராகத் தேர்வானவர். ஆனால், மக்களின் அபிலாஷைகளை அரசு பூர்த்தி செய்ய விடாமல் மாநிலங்களவையில் தடைக்கற்கள் போடப்படுகின்றன.
மோடி பிரதமரான 2014-லேயே இந்த இடையூறு துவங்கிவிட்டது. 2014-இல் நடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டன. நிலக்கரிச் சுரங்க சீர்திருத்த சிறப்பு மசோதா, காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா ஆகியவை அப்போது தடுக்கப்பட்டன.
சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் ஓ.பி.சி. ஆணைய மசோதாவை 2017 ஏப்ரலில் மாநிலங்களவை முடக்கியது. அங்கு எதிர்க்கட்சிகள் அந்த மசோதாவில் பல திருத்தங்களைச் சேர்த்தன. எனவே திருத்தப்பட்ட ஓ.பி.சி. ஆணைய மசோதாவை மீண்டும் கீழவையில் (மக்களவையில்) அரசு நிறைவேற்ற வேண்டி வந்தது. தற்போதும் இந்த மசோதா முழுமையாக நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா என்பது தெளிவாகவில்லை.
அதுபோலவே, முஸ்லிம் பெண்களை முத்தலாக் விவாகரத்து என்னும் தீங்கிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்ட மசோதா மக்களவையில் 2017 டிச. 28-இல் நிறைவேறிவிட்டது. அதனை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த அரசு முயன்றபோது, எதிர்க்கட்சியான காங்கிரஸ், பலவிதமான முறைகளில் எதிர்ப்பு தெரிவித்து, அதை அவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு நிர்பந்தித்தது. இந்த இரு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுமாறி வருவதற்குக் காரணம், மாநிலங்களவையில் அரசுக்குப் போதிய பெரும்பான்மை இல்லை என்பதே.
நாடாளுமன்ற இரு அவைகளை நிறுவிய நமது முன்னோர் இத்தகைய நிலையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதுதொடர்பாக அரசியல் சாஸன சபையில் தீவிரமான விவாதம் நடந்தபோது, மேலவை அமைக்கப்படுவதற்கு சபை உறுப்பினர்கள் பலரும் பெருவாரியாக ஆதரவு தெரிவித்தனர். 
இருந்தபோதும், அரசியல் சாஸன சிற்பிகள் மக்களவையே பிரதானமானது என்று தற்செயலாகவேனும் உறுதிப்படுத்தினர். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இரு அவைகளுக்கும் சம உரிமைகள் அளிக்கப்பட்டபோதும், மக்களவையே மேலானது என்று அவர்கள் கருதினர். அதனால்தான் நிதி மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையின் அனுமதி தேவையில்லை என்று அவர்கள் முடிவெடுத்தனர்.
அண்மைக்காலமாக நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இடையூறாக மாநிலங்களவை மாறி வருவதைக் காணும்போது வருத்தம் ஏற்படுகிறது.
அரசியல் சாஸன சபை உறுப்பினரான என். கோபாலசுவாமி ஐயங்கார் நாடாளுமன்ற மேலவையின் முக்கியத்துவதை வலியுறுத்தியவர்களுள் முதன்மையானவர். விடுதலைப் போராட்டக் கால காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையை தேச வளர்ச்சிக்குத் தடைக்கலாக மாற்றும் என்று அவர் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார். நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றவோ, அரசு நிர்வாகத்துக்கோ மாநிலங்களவை ஒருபோதும் தடையாக இருக்காது என்று அவர் அப்போது நம்பிக்கையுடன் சொன்னது இன்று பொய்யாகிவிட்டது.
இதுவே தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கும் தடைக்கல்லாக மாறிவிட்டது.

கட்டுரையாளர்: தலைவர், பிரஸார் பாரதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com