மறைந்தும் மறையாத மலை - வானமாமலை

நிகழ்காலச் சமூகத்தின் தேய்மானத்தை நினைத்து நைந்து நெஞ்சுருகிக் கொண்டிருக்கும் சராசரி மனிதனுக்கும்

நிகழ்காலச் சமூகத்தின் தேய்மானத்தை நினைத்து நைந்து நெஞ்சுருகிக் கொண்டிருக்கும் சராசரி மனிதனுக்கும், திடீரென்று வீசும் புதுக்காற்று புது நம்பிக்கையைத் தரும். அப்படி வீசிய புதுக்காற்று - புது நம்பிக்கை நாங்குநேரி நா. வானமாமலை ஆவார். ஒரு காலத்தில் நன்செய் பயிர்கள் தலைகாட்டாத தாலுகா - வறட்சிப் பிரதேசம், நாங்குநேரி ஆகும். அந்த மண்ணில் பாலைவனச் சோலையாக 07.12.1917 அன்று நாராயணன் - திருவேங்கடம் தம்பதியர்க்கு அருமந்த புத்திரனாக உதித்தவர் நா. வானமாமலை. பக்திப்பயிர் பச்சை கட்டிய வைணவக் குடும்பத்தில், மார்க்சியம் என்னும் வீரியத்தைத் தாங்கிக் கொண்டு வந்து விழுந்த விதைதான், பேராசிரியர் நா. வானமாமலை.
பல்கலைக்கழகத்தின் படிக்கட்டில் நின்று பேராசிரியர் ஆனவர்கள் பலர். ஆனால் பல்கலைக் கழகமே படிப்பதற்குரிய பாடங்களைப் படைத்துத் தந்து பேராசிரியர் ஆனவர்கள் சிலர். அப்படிப்பட்டவர்களில் முதல்வர் பேராசிரியர் கல்கி, இரண்டாமவர் பேராசிரியர் நாராயண துரைக்கண்ணன், மூன்றாமவர் பேராசிரியர் நா.வானமாமலை.
நான்கு ஏரிகளின் ஈரக்காற்றில், வானமாமலை உயர்நிலைப்பள்ளிக் கல்வியைக் கற்றார். பின்னர் தாமிரபரணி தாலாட்டும் திருநெல்வேலி எம்.டி.டி. இந்துக் கல்லூரியிலும், ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வைகைக் கரையில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரியிலும், முதுகலை வரை படித்தார். 
பேராசிரியர் கார்மேகக் கோனார் ஊட்டிய உற்சாகத்தில் வானமாமலைக்குச் சங்க இலக்கியங்களும், காப்பிய இலக்கியங்களும் அத்துப்படி ஆயின. மேலும், சுயவிருப்பத்தில் ஏற்பட்ட அறிவுப்பசியால், ஷெல்லி, பைரன், ஷேக்ஸ்பியர், மாக்சிம் கார்க்கி போன்றோர் அவரிடம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.
1942-ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆசிரியர் பணி. அதிகாரிகளிடமும் ஆசிரியப் பெருமக்களிடமும் இரத்தத்தோடு ஊறிப்போயிருந்த ஆங்கில மோகத்தையும் அடிமைத்தனத்தையும் கண்டு ஆவேசப்பட்டார். அழுக்கடைந்த குட்டையில் அதற்கு மேலும் வாழ விரும்பாமல், உடையில் ஒட்டியிருந்த தூசுகளையும் துடைத்தெறிந்துவிட்டு வெளியேறினார்.
1935-களில் மார்க்சிய காற்று பாளையங்கோட்டை, நாங்குனேரி வட்டாரத்து இளைஞர்களுடைய சுவாசக் காற்று ஆயிற்று. தோழர்கள் ஜீவா, பி. இராமமூர்த்தி, பி. சீனிவாசராவ் போன்றோரின் கனல் மணக்கும் பேச்சுக்கள், வானமாமலை நடக்க வேண்டிய பாதைக்கு வழித்தடம் அமைத்துத் தந்தன. அதுமுதல் மார்க்சும், லெனினும் அவருடைய வலது இடது கரங்களாயினர்.
இன்றைய சூழலில் இயக்கங்கள், தனி மனிதர்களிடம் சரண் அடைந்து கடைசியில் ஒரேயடியாகக் காலாவதி ஆகிப்போவதைக் காண்கிறோம். ஆனால், தனிமனிதராகிய நா. வானமாமலை ஓர் இயக்கமானார். அந்த இயக்கத்தின், தாக்கம் அவர் மறைந்த பிறகும் உலைக்கள நெருப்பாய் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.
இடறி விழுந்த இடமெல்லாம் ஏற்றத்தாழ்வுகளும், வர்க்க வேறுபாடுகளும் சமூகத்தை எலும்புருக்கி நோயாய் உருக்குலைத்து வருவதைக் கண்டு ஆத்திரம் கொண்டார்; களத்தில் இறங்கினால் அன்றிக் காரியம் ஆகாது என்ற முடிவுக்கு வந்தார்.
நாங்குனேரி வட்டார விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் நேரடியாகப் பங்கேற்றார். 1948-இல் ஒருமுறையம், 1970-இல் நிலமீட்சிப் போராட்டத்திலும் கைது செய்யப்பட்டார். பிரபலமான நெல்லைச் சதி வழக்கில் விசாரணைக் கைதியாக விசாரிக்கப்பட்டார். நில மீட்சிப் போராட்டத்தில் பங்கேற்று ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தார். சிறையில் இருந்தபோது எஸ்.ஏ. டாங்கே எழுதிய 'காந்தியும் லெனினும்' எனும் நூலைப் படித்தார். அந்நூல் அவரை வெகுவாகப் புரட்டிப் போட்டது. சிறைக்காலத்திலேயே திவான் ஜர்மன்தாஸ் எழுதிய 'மகாராஜ்' எனும் நூலைப் படித்து, அதனைத் தமிழில் மொழி பெயர்க்கவும் செய்தார். இந்திய சமஸ்தானாதிபதிகளைப் பற்றிய அந்நூலைக் கட்டுரைகளாக வெளியிடவும் செய்தார்.
ஓர் இராணுவம் ஆற்ற வேண்டிய பணியை ஒரே ஒரு போர்வீரன் மட்டுமே ஆற்றுவதுபோல், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், மானுடவியல், கல்வெட்டியல், செப்பேட்டியல், தொல்பொருள் ஆய்வியல், ஒப்பிலக்கியம், தொன்மங்கள், கதைப்பாடல்கள், வாய்மொழித் தரவுகள், நாட்டுப்புறவியல், கள ஆய்வு, புதுக்கவிதை ஆகிய அனைத்துத் துறைகளிலும் வானமாமலை முத்திரை பதித்து நின்றார்.
1947-இல் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளான தொ.மு.சி. ரகுநாதன், தி.க. சிவசங்கரன், சிந்துபூந்துறை அண்ணாச்சி சண்முகம்பிள்ளை ஆகியோரை இணைத்து, 'நெல்லை இலக்கியச் சங்கம் என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். அறிவியல் நோக்கு, சமூக அக்கறை, படிப்பில் ஈடுபாடு, ஆய்வில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு இந்த அமைப்பு, ஒரு போர்ப்பாசறை ஆயிற்று. 1969-ஆம் ஆண்டு 'ஆராய்ச்சி' எனும் காலாண்டு ஆய்விதழைத் தொடங்கினார். பண்பாடு, தத்துவம், மானுடவியல், நாட்டார் வழக்காறுகள், மொழிபெயர்ப்பு ஆகிய அகண்ட வழித்தடங்களைத் தாங்கி நின்றது, அப்பத்திரிகை. பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி போன்ற மார்க்சிய அறிஞர்கள் அவ்விதழை உச்சி முகர்ந்து கொண்டாடினர்.
உள்நாட்டுத் தமிழறிஞர்களுக்கும் அயலகத் தமிழறிஞர்களுக்கும் 'ஆராய்ச்சி' ஓர் எழுத்துப் பட்டறை ஆயிற்று. காப்பி ஆற்றுவது போல் இலக்கிய ரசனையை மட்டும் வைத்து ஆலாபனை செய்து கொண்டிருந்த தமிழறிஞர்களுக்கு மத்தியில் ஆராய்ச்சி, சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டும் கருவியாகவும், அதனை மாற்றும் ஆயுதமாகவும் ஆயிற்று.
பேராசிரியர் நா. வானமாமலை கதைப்பாடல்களுக்கும், நாட்டுப்புறப் பாடல்களுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. ஆனால், நா. வானமாமலை நாட்டுப்புறப் பாடல்களுக்காகக் கள ஆய்வு செய்து, அவற்றிலுள்ள மானுடத்தையும் மனிதநேயத்தையும் பகுப்பாய்வு செய்து, அவை பல்கலைக்கழகங்களில் பாடம் ஆகும் அளவுக்கு உயர்த்தினார். 'நாட்டுப்புறப் பாடல்கள் தாம் பண்பாட்டின் அடிப்படை. இலக்கியத்திற்கு அதுவே தாய் என்றார்.
கதைப்பாடல்களுக்கும் நாட்டார் வழக்காற்றியலுக்கும் பேராசிரியர் ஆற்றிய பணியை வியந்து, 'நா. வானமாமலையின் தமிழ்ப்பணி, அநேக ஏட்டுப்பிரதிகளை அச்சேற்றி, அவற்றிற்குச் சாகாவரம் அளித்த டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் தமிழ்ப்பணிக்கு அடுத்தபடியாகச் சொல்லத்தக்கது எனப் பாராட்டியுள்ளார் கு. அழகிரிசாமி. தமிழறிஞர் உலகில் நெற்றிக்கண் படைத்த நேர்மையாளர் திரு.வ.அய். சுப்பிரமணியம் அவர்கள், வானமாமலையின் மலைபோன்ற தமிழ்ப்பணியை மதித்து, அவரை தார்வார் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியியல் கழகத்தின் சார்பில் ஓராண்டுக்கு (1975 - 1976) பேராய்வாளர் பணியில் அமர்த்தினார்.
இலக்கியப் பரப்பின் அனைத்துத் துறைகளின் அங்கமாக இருந்த நா. வானமாமலை, கல்விக்கூடங்களில் தமிழ்தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பதில் அழுத்தமான எண்ணம் கொண்டிருந்தார். 'சுதந்திரம் அடைந்த எந்த நாட்டிலும், அந்தந்த நாட்டு மொழிதான் பயிற்று மொழியாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இல்லை' எனக் கண்டனக் குரல் எழுப்பினார். மோகன் குமாரமங்கலம் வேண்டுகோளுக்கு இணங்க, 'தமிழால் முடியும் எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை 1965-ஆம் ஆண்டு கொணர்ந்தார்.
சமூகத்தில் எந்தப் பிரச்னைக்கும் மூலாதாரமாக இருப்பது வர்க்க வேறுபாடுதான் என்பதில் வானமாமலை அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
இலக்கிய ஆய்வில் அகலாய்வு (மேக்ரோ ஸ்டடி), நுண்ணாய்வு (மைக்ரோ ஸ்டடி) என இரண்டு வகை உண்டு. இந்த இரண்டிலும் ஆழங்காற்பட்டவர், வானமாமலை. 
மணிமேகலை காப்பியத்தில், தத்துவப் பார்வையும் பார்த்தார்; புதுக்கவிதையில் பாடுபொருளையும் பார்த்தார். புதுக்கவிதையை அவர் மதிப்பிட்ட பாங்கு இதுவரை யார் கண்ணிலும் தட்டுப்படாதது. 'புதுக்கவிதை, மனிதனுக்குத் தீமையானவற்றின்மீது மாபெரும் அருவருப்பை உண்டாக்குகிறது. ஒரு சிந்தனைத் தொடரைத் தொடங்கி வைக்கின்றது. சூழ்நிலை பற்றிய அகநோக்கை மாற்றுகிறது. என்றாலும், ஒரு மக்கள் போராட்டத்தில் உணர்ச்சி நிலையை உயர்த்தும் சக்தி அதற்கில்லை என ஒரு நீதியரசரைப் போல நின்று புதுக்கவிதையின் பலத்தையும் பலவீனத்தையும் எடுத்துரைக்கின்றார்.
20-ஆம் நூற்றாண்டு இலக்கியப் பயணத்தைச் சரியான திசையில் திருப்பிவிட்ட மாலுமி, வானமாமலை. எழுத்து, அஜீரணத்திற்கு மருந்தாக இருக்கக் கூடாது; பசித்தவன் வயிற்றுக்குக் கூழாக இருக்க வேண்டும் எனப் பாடுபட்டவர். 
அத்தகைய மாமலை, வானமாமலை, மத்தியப்பிரதேசத்திலுள்ள கோர்பாவில் தன் மகள் வீட்டில் தங்கியிருந்தபோது, 02.02.1980 இல் இயற்கை எய்தினார். அவருடைய இழப்பை எண்ணி வருந்திய இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், 13.09.1980 அன்று அவருக்கு 'கலாநிதி' (டாக்டர்) பட்டம் வழங்கியது.
தமிழன் இழந்த சொத்துகளை எல்லாம் தேடிக் கொடுத்த வானமாமலையின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்த எழுத்தாளர் சுஜாதா, 'வானமாமலையின் மீது சாகித்திய அகாடமியின் பார்வை படாதது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. அதற்கவர் இடதுசாரி சிந்தனைகள் காரணமாக இருக்கலாம் என்றால், அந்த ஆச்சர்யம் வெறுப்பாக மாறுகிறது என எழுதினார்.
தாமிரபரணித் தண்ணீரைப் பருகுவதற்கு முன்னர் அதனை நினைத்தாலே நாவில் நீர் சுரக்கும். அதுபோல வானமாமலையைப் படிப்பதற்கு முன்பு, அவரைப் பற்றி நினைத்தாலே மேனி சிலிர்க்கின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com