மேலாண்மை வாரியம் அல்லது வேண்டாத விளைவு

இயற்கை நீதியின்படி காவிரியாற்றில் நமக்குரிய நீரைப்பெற 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழகம் நடத்தி வந்த சட்டப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக விவசாயி

இயற்கை நீதியின்படி காவிரியாற்றில் நமக்குரிய நீரைப்பெற 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழகம் நடத்தி வந்த சட்டப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பாவது செயல்படுத்தப்படுமா? அல்லது முந்திய தீர்ப்புகளைப்போல ஏட்டளவு தீர்ப்பாக இருக்குமா? என்ற கேள்வி விவசாயிகளின் உள்ளங்களைக் குடைந்து கொண்டிருக்கிறது.
நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையிலிருந்து அதனுடைய இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும் என்பது வரை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் முறையிட்டுப் பெற்ற தீர்ப்புகளும் கருநாடக அரசினாலும் மத்திய அரசினாலும் ஒருபோதும் மதிக்கப்படவில்லை. தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டு சனவரியில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை சட்டப்படி மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டி தமிழகம் முறையிட்டு, உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகே அரசிதழில் அத்தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும் அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மீண்டும் உச்ச நீதிமன்றத்தைத் தமிழகம் நாடிய பிறகே இப்போது இந்தத் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
1987 மற்றும் 2002-ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு வெளியிட்ட தேசிய நீர்க்கொள்கை, 1966-ஆம் ஆண்டு உலக நாடுகளால் வகுக்கப்பட்ட எல்சிங்கி விதிகள், உலகச் சட்டக்கழக மாநாடு 2004-ஆண்டு வகுத்த பெர்லின் விதிகள் ஆகியவற்றுக்கிணங்க பன்மாநில மற்றும் பன்னாட்டு நதிகளின் நீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது குறித்த விதி முறைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். 
பன்மாநில நதி எந்தவொரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. எந்த மாநிலமும் தனி உரிமை கொண்டாட முடியாது. அந்நதியின் நீரைத் தடுத்த நிறுத்தவோ, திசை திருப்பவோ உரிமை கிடையாது. இயற்கை அளித்த இந்தப் பரிசு அனைவர்க்கும் சொந்தமானது. அவரவர்க்கு உள்ள உரிமைகளை அனுபவிக்க வேண்டுமே தவிர அதை மீறக்கூடாது. நியாய முறையில் நீர்ப்பகிர்வு செய்துகொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடித்துரைத்துள்ளது. நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. நீர் ஒதுக்கியது. ஆனால் இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி.யாகக் குறைந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இதில் மேலும் 14.5 டி.எம்.சி. குறைத்து 177.25 டி.எம்.சி.யாக தமிழகத்துக்கு அளித்துள்ளது. பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காக கருநாடகத்துக்கு இந்த 14.5 டி.எம்.சி. நீரைக் கொடுத்துள்ளது. 
பெங்களூரு நகரம் நாள்தோறும் பெறும் நீரிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் அங்காடிகள், நீர் விளையாட்டுப் பூங்காக்கள் செயற்கைக் கடல்கள் ஆடம்பர விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள் போன்றவற்றுக்காக 50%க்கு மேலான நீர் வீணடிக்கப்படுகிறது. ஆனால் 14.75 டி.எம்.சி. நீரைத் தமிழகம் இழப்பதன் முலம் 88,500 ஏக்கர் நிலம் நெல் பயிர் விளைச்சலை இழக்கும். உணவு உற்பத்திக்கு நீர் முக்கியமா? அல்லது உல்லாசப் பயன்பாட்டுக்கு முக்கியமா? இந்த நீர்க்குறைப்பை காவிரிப்படுகையில் உள்ள நிலத்தடி நீரின் முலம் ஈடுகட்டிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தவறான கண்ணோட்டமாகும்.
தமிழக பொது மற்றும் பாசனத்துறை தலைமைப் பொறியாளராகவும் காவிரி பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்குவகித்தவருமான எஸ்.பி. நமச்சிவாயம் பின்வருமாறு கூறியுள்ளார். காவிரி படுகைப் பகுதியில் நிலத்தடி நீர் குறித்து ஐ.நா. வளர்ச்சித் திட்ட வல்லுநர்கள் நடத்திய ஆய்வின் முடிவின்படி சூன் மாதத்தில் மேட்டூரிலிருந்து வழியும் தண்ணீர் ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் ஓடிய 15 நாட்களுக்குள் காவிரிப் படுகைப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் விரைவில் மேலேறிவிடும். வயல்களில் கட்டும் நீர் கீழே மண்ணுக்குள் விரைவில் கீழே இயங்குவதில்லை. ஏனெனில் கீழ்மட்டத்தில் உள்ள மணற்பாங்கான ஊற்று மண்ணுக்கும் மேலே உள்ள உழுத மண்ணுக்கும் இடையில் கனத்த தகடு விரித்தாற்போல களிமண் திரை விரிந்து கிடக்கிறது. இந்தக் களிமண் வயலில் கட்டிய நீரை கீழே இறங்காமல் தடுத்துவிடுகிறது. இதற்கு மாறாக ஆறுகள் மற்றும் வாய்க்கால்களின் படுகைக்குக் கீழே மணற்பாங்கு இருப்பதால் தண்ணீர் விரைவாக இறங்கிவிடுகிறது. இதற்கும் அடியில் உள்ள ஊற்று மண் பகுதிக்கும் தொடர்பு இருப்பதால் அப்பகுதி முழுவதிலும் விரைவில் நீர் நிரம்பிவிடுகிறது. மேட்டுர் அணை திறந்தபிறகு நான்கரை மாதங்கள் வரை நிலத்தடி நீர் இருக்கும். இதைப் பயன்படுத்தினால் ஆற்றுநீர் மீண்டும் கீழே இறங்கிவிடும். எனவே, நிலத்தடி நீரை முழுமையாகப் பயன்படுத்த இயலாது. மேட்டூர் அணை திறக்கும்வரை நாற்று நடவுக்கு ஆயத்தம் செய்யவும், தாளடிப் பருவத்தின் கடைசியில் ஏற்படும் தணணீர் பற்றக்குறையைச் சமாளிக்கவும், சாகுபடிப் பருவங்களில் மழை பற்றாக்குறை ஏற்படும் காலத்திலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தலாமே தவிர முழுமையான சாகுபடிக்குப் பயன்படுத்துவது இயலாத ஒன்றாகும்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சிந்து நதி நீர்ப் பங்கீட்டு உடன்பாட்டில் அந்தந்த நாடுகளில் உள்ள நிலத்தடி நீரை அந்தந்த நாடுகளே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நடுவர் மன்றத் தீர்ப்பிலும் நிலத்தடி நீர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம் கருநாடகமும் அவ்வாறே நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறவில்லை.
நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு சமமானதாகக் கருதப்பட வேண்டும் என்பதற்குப் பல சான்றாதாரங்களை இத்தீர்ப்பு சுட்டிக் காட்டியுள்ளது. குறிப்பாக பன்மாநில நதி நீர்ச்சட்டம் - 1956 இன் 6 (2) பிரிவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. தீர்ப்பினை செயல்படுத்தும் வகையில் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கிணங்க மத்திய அரசு ஆறு வார காலத்திற்குள் அதற்கான அமைப்பினை உருவாக்க வேண்டும். நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பினை தற்போது திருத்தி அமைத்ததற்கு ஏற்ப அவை எத்தகைய எதிர்ப்பும் இல்லாமல் செயற்படுத்த வேண்டும். நடுவர் மன்றம் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. நீர் ஒதுக்கி, மாதந்தோறும் அளிக்கப்பட வேண்டிய நீரளவையும் திட்டவட்டமாகக் கூறியிருந்தது. இப்போது தமிழகத்திற்கு 177.25 டி.எ.ம்.சி. நீராக குறைப்பட்டபோதிலும் அதற்கேற்ற அளவில் மாதந்தோறும் நீர் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு அளிக்கப்பட மாட்டாது என உச்ச நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறியுள்ளது. 
1956 நதிநீர்ச் சட்டம் 6-ஆவது பிரிவின்படி, மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் விருப்பத்திற்குட்பட்டது என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பினை நிறைவேற்றுவதற்காகவே மேலாண்மை வாரியம் அமைக்கப்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றம் அழுத்தந் திருத்தமாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இத்தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்கள், செயற்பாடுகள் ஆகியவற்றை வகுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். ஆணைய அமைப்பு திறமையுடனும் செம்மையாகவும் செயல்படக் கூடிய நீர் மேலாண்மை வல்லுநர்களைக் கொண்ட குழுவாக அமைக்கப்பட வேண்டும். செயலாக்கமும் அதை செவ்வனே நிறைவேற்றுவதற்குரிய அதிகாரமும் திறமையும் கொண்டதாக அமைய வேண்டும். அரசியல்ரீதியான விருப்பு வெறுப்பற்ற தன்மையில் தன்னிச்சையாகச் செயற்பட வேண்டும். காவிரி பாயும் மாநிலங்களின் பருவந்தோறும் தேவைப்படும் நீர் வளம் பாதிப்புக்கு ஆளாக்காமலும் நீர் விரயம் ஆகாமலும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். இதற்கு ஏற்றவாறு காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
28-5-2014இல் கோதாவரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளிவந்த மறுநாளே அதாவது, 29-5-2014இல் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அதைப்போல மத்திய அரசு காலந்தாழ்த்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வரவேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனக் கருநாடக முதலமைச்சர் கூறியுள்ளார். அம்மாநிலத்தைச் சேர்ந்த பா.ச.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கே இது அறைகூவலாகும். நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக கருநாடக முதல்வர் மீது உச்சநீதி மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் அரசமைப்புச் சட்டம், உச்சநீதி மன்றம் ஆகியவற்றின் மாண்பு நிலைநிறுத்தப்படும். அனைத்திந்திய கட்சித் தலைவர்கள் அனைவரும் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த தங்களின் கட்சித் தலைவர்களை இடித்துரைத்துத் திருத்த வேண்டும். இல்லையேல் இக்கட்சிகளின் தேசிய ஒருமைப்பாட்டு முழக்கம் வெற்று வார்த்தைகளாகிவிடும். இத்தகைய போக்கினை வளரவிடுவது வேண்டாத விளைவுகளுக்கு வழி வகுக்கும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பஞ்சாப் - சிந்து ஆகிய மாநிலங்களுக்கிடையே நிலவிய சிந்து நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னை தீர்க்கப்படாமல் நீடித்தது. ஆனால் அந்நிய ஆட்சி அகன்ற பிறகு இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பிரச்னை ஆயிற்று. உலக வங்கியின் தலையீட்டின் விளைவாக சுமுகத் தீர்வு காணப்பட்டது. இரு மாநிலங்களாக இருந்தவரை தீராத பிரச்னை இரு நாடுகளான பிறகு தீர்க்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து அதைச் செயல்படுத்த இந்திய அரசு முன்வராவிட்டால், மேலே குறிப்பிடப்பட்ட வேண்டாத விளைவுகள் உருவாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com