இருட்டை விதைக்கவா வெளிச்சம்?

வெளிச்சம் இருட்டை விரட்டுகிறது. சுற்றிக் கொண்டிருக்கும் பூமியில், இருட்டை விரட்டி விரட்டி வெளிச்சத்தை விதைத்துக் கொண்டே இருக்கிறது சூரியன். ஆனால் வெளிச்சத்தைக் கொண்டு வெளிச்சத்திலேயே

வெளிச்சம் இருட்டை விரட்டுகிறது. சுற்றிக் கொண்டிருக்கும் பூமியில், இருட்டை விரட்டி விரட்டி வெளிச்சத்தை விதைத்துக் கொண்டே இருக்கிறது சூரியன். ஆனால் வெளிச்சத்தைக் கொண்டு வெளிச்சத்திலேயே இருட்டை விதைக்க முடியுமா?
ஊடக வெளிச்சம் வீட்டிற்குள் வந்து இருட்டை விரட்டுகிறதா? விதைக்கிறதா? இருட்டை விரட்டுவதைவிட விதைப்பதில்தான் வியாபாரம் இருக்கிறதோ? 
உண்மையைவிட, உண்மை போல இருக்கும் பொய்க்கு மக்களை ஈர்க்கும் ஆற்றல் அதிகம் போல. 
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மேமெய்போலும்மே என்பதற்கு இரண்டுமுறை அழுத்தம் கொடுத்துச் சொல்கிறது அதிவீரராம பாண்டியனின் வெற்றிவேற்கை. பொய்யை மெய்யாக்க முடியாது. ஆனால் மெய்போல ஆக்க முடியுமாம்.
பொய்யை மெய்போல ஆக்குவதற்குச் சொல்லில் வன்மை வேண்டுமாம். வன்மை என்பதற்கு வலிமை, வன்சொல், ஆற்றல், வலாற்காரம், அழுத்தம், கோபம், கருத்து, வல்லெழுத்து என்று நிறைய பொருள்கள் உள்ளன.
சொல் வல்லமை என்று சொல்லாமல் சொல்வன்மை என்று கூறுகிறது வெற்றிவேற்கை. எனவே சொல் வலிமை என்பது சொல்பவரின் வலிமையாகிறது. அந்த வலிமையானவரால் பொய்யையும் மெய்போல ஆக்க முடியுமாம்! ஏனெனில் ஏழை சொல் அம்பலம் ஏறாது அல்லவா? 
சொல் ஏன் அம்பலம் ஏற வேண்டும்? அம்பலம் ஏறும் சொற்களே மக்களை அடைய முடியும்.
மக்களை அடையும் சொற்களைக் கொண்டே மக்கள் மனதை மாற்ற முடியும்; மனதை மாற்றுவது என்பது வசப்படுத்துவதாகும்; கட்டுப்படுத்துவதாகும்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஊடகமாக ஊர் அம்பலம் இருந்திருக்கிறது. மரத்தடியோ சாவடியோ ஊர்ச் செய்திகளுக்கு அம்பலமாக இருந்திருக்கிறது. நாட்டு நடப்பு அறிய வானொலி அம்பலமாக இருந்திருக்கிறது. அம்பலத்தில் உண்மைக்கு மட்டுமே இடம் என்று மக்கள் நம்பி இருக்கிறார்கள். ஊர்ச்சபையில் அல்லது ஒரு சிலர் வீட்டில் வானொலி இருந்தபோதும் உண்மைச் செய்திகள் விரைவில் நாடெங்கும் பரவி இருக்கின்றன. 
காந்தியும் பகத்சிங்கும் தனித்தனி ஊடகங்களைத் தம் கையில் வைத்திருக்கவில்லை. ஆனாலும் இந்தியக் கிராமங்களிலும் மக்கள் அவர்களைத் தெரிந்து வைத்திருந்தார்கள். பொய்யை மெய்போலாக்க வேண்டிய நெருக்கடிகள் அப்போது இல்லை போலும்.
இப்போது நிறைய ஊடகங்கள் இருக்கின்றன. சொல்வன்மையில் போட்டி போடுகின்றன. சொல்லுக்கு வலிமை சேர்க்கின்றன. பரபரப்புக்கு அவசரம் அவசரமாகச் சொற்களுக்கு வலிமை சேர்க்கின்றன.
உண்மையைச் சொல்வதற்குச் சொல்லுக்கு இருக்கும் ஆற்றல் போதும். உண்மையைச் சொல்ல வல்லமை கூட வேண்டாம்; இயல்பே போதும். பொய்யை மெய்போல ஆக்குவதற்கு அந்த ஆற்றல் போதுமானதாக இல்லை. பொய்யை உண்மைபோல சொல்ல வலிமை தேவை. ஆகவே சொல்லுக்குக் கூடுதலாக வலிமை சேர்க்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஊடக வெளிச்சத்தோடு திரை வெளிச்சமும் அதிகாரத்திற்குத் தேவைப்படுகிறது. ஏனெனில் சொல்லுக்கு வலிமை சேர்ப்பது சொல்பவரின் வல்லமையில் இல்லை. சொல்பவரின் அதிகார வெளிச்சத்தில் இருக்கிறது என்பதைச் சொல்பவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஊடக வெளிச்சம் அதிகார வெளிச்சத்தின் கட்டுப்பாட்டில் கிடக்கிறது.
வெளிச்சத்தால், வெளிச்சத்திலும் இருட்டை விதைக்க அவர்களால் முடிகிறது. ஊடக வெளிச்சத்தால் சொல்லுக்கு வலிமை ஏற்றிப் பொய்யை மெய்போல் ஆக்க முடிகிறது. பொய்யை மெய்போல் ஆக்கினால் மட்டும் போதாது. மக்கள் மனதில் விதைக்க வேண்டும். அதற்கு அது அம்பலம் ஏற வேண்டும். இப்போது அம்பலமாக ஊடக விவாதம் இருக்கிறது.
விவாதத்தில் கருத்தைவிட வன்மமே வெளிப்படுகிறது. பெறுவதற்கு அதில் ஒன்றுமில்லை எனினும் நிராகரிப்பதற்கு நிறையவே உள்ளன. 
வல்லமையில் புலமை வெளிப்படும்; வலிமையில் வன்முறை கிடக்கும். வல்லமை வேறு; வலிமை வேறு. மக்களிடம் வல்லமையைவிட வலிமையே அதிகம் எடுபடுகிறது என்று யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள். வலிமை மிக்கதை மக்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறார்கள்.
உண்மையைவிட உண்மைபோலக் காட்டப்படுவதை மக்கள் கொண்டாடுவார்கள் என்றும் உண்மையைவிட உண்மைபோல் இருப்பதைக் கொண்டு மக்களை எளிதில் நம்ப வைக்க முடியும் என்றும் எண்ணும் நிலைக்கு ஊடக வெளிச்சத்தைக் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறார்கள். 
அடிபட்டவனைப் பார்த்துவிட்டு அப்படியே போகிறவர்கள்கூட, அடிபட்டவன் போல நடிப்பவரோடு சேர்ந்து அழுகிறார்கள். உண்மையாகக் காதலிப்பவர்களைக் காவு வாங்குகிறவர்களும் காதல் காட்சிகளில் நடிப்பவர்களைக் கைதட்டிக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறார்கள். தான் அடிமையாக கிடப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்தவர் விடுதலைக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். மனசாட்சியை விற்றுவிட்டு மக்களைக் காப்பாற்றப் போராடப் போகிறார்கள். 
யாரிடமிருந்து யாரைக் காப்பாற்றப் போகிறார்கள்? விலங்குகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற தலைவன் தேவைப்பட்டிருக்கலாம். இப்போதும் மக்களுக்கு மேய்ப்பர்களும் ஏய்ப்பர்களும் ஏன் தேவைப்படுகிறார்கள்? எத்தனைபேர் வந்தாலும் கொண்டாடுகிறார்களே, ஏன்?
மக்கள் இப்படிப் பழக்கப்பட்டது எப்படி?
மக்களை இப்படிப் பழக்கியது எப்படி?
ஆதிமனிதன் பயத்தைப் போக்கியது வெளிச்சம். அடிமனதின் இடுக்குகளில் கிடக்கும் அந்த வெளிச்ச நம்பிக்கையில் ஆளுகிறவர்களுக்கு அவ்வப்போது தேவையானதை மக்களுக்குத் தேவையானதாக மாற்றிக் காலம்தோறும் மக்கள் மனதில் விதைத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். மக்களின் தன்மானத்தை/ நாட்டின் தன்மானத்தை மக்களுக்கு உணர்த்தவும் -வெளிச்சத்தில் விதைக்க வேண்டி இருந்தது. கூத்தும் நாடகமும் மேடையும் வெளிச்சத்தில் விதைத்தவை - மக்கள் மனதில் பதிந்தன. 
வெளிச்சம் போட்டுச் சொல்வதை மக்கள் நம்புகின்றனர். ஆழ்மனதில் கிடக்கும் நம்பிக்கை வெளிச்சம் அவர்களையும் அறியாமல் அவர்களை இயக்குகிறது. 
வெளிச்சத்தில் சொல்வதைக் காட்டிலும் வெளிச்சத்தில் (திரையில்) வந்தவர்கள் சொல்வதில் கூடுதல் நம்பிக்கை ஏற்படுகிறது போலும். தங்களுக்குத் தேவையானதைத்தான் அவர்கள் சொல்கிறார்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு வெளிச்சத்தை வரவேற்கிறார்கள். ஏனெனில் ஆதிமனதில் வெளிச்சம் அந்த நம்பிக்கையை விதைத்திருக்கிறது. தாயிடமிருந்துதான் தொப்புள் கொடி வெட்டப்படுகிறது. சமூகத்திலிருந்து வெட்ட முடிவதில்லை. மரபின் தொடர்பில் வெளிச்ச நம்பிக்கையில் மக்கள் பழக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் வீட்டுக்குள் வந்து ஊடகங்கள், வெளிச்சத்தில் இருட்டை விதைக்கின்றன.
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய் என்று காட்சி ஊடகம் வருவதற்கும் முன்பே பழமொழியைத் தமிழர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தீர விசாரிப்பதே மெய் என்று தீர்வும் சொல்லியிருக்கிறார்கள். 
தீர விசாரித்தது எல்லாம் மெய் சொல்லி இருக்கிறதா? சொல்ல விட்டிருக்கிறார்களா? ஒவ்வொரு நாளும் போட்டி போட்டுக் கொண்டு ஊடகங்களில் தீர விசாரணைகள் நடக்கின்றன. மெய்போல இருப்பதைப் பார்த்து உண்மையே நம்புகிற வகையில் விவாத வெளிச்சத்தில் சொல்வன்மை வெளிப்படுகிறது.
மக்களுக்குத் தேவை உண்மை. வெளிச்சம் மறைக்கும் அந்த மெய்ப்பொருளைக் கண்டுபிடிப்பது எப்படி? நாம் இருட்டில் இருந்தபோது வெளிச்சத்தில் நடந்தது தெரிந்தது. இப்போது நாம் வெளிச்சத்தில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம். இருட்டில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாமல் இருக்க நம்மை வெளிச்சத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள். 
அடுத்தவர் சொல்வதை அப்படியே நம்பினால் உண்மையைக் கண்டுபிடிக்க இயலாதாம். சொல்புத்திக் கேட்காதே என்றும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அப்படியென்றால் வேறு எப்படிக் கண்டுபிடிப்பது?
மெய்ப்பொருள் எது? பொய்ப்பொருள் எது? என்று கண்டுபிடிப்பது எளிது. ஆனால் மெய் போல இருக்கிற பொய்ப்பொருளைக் கண்டுபிடிப்பது எப்படி? 
'போல' இருப்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். 'மக்களே போல்வர் கயவர்' என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். கயவரைவிட மக்களைப் போல இருக்கிற கயவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். கண்டுபிடிப்பது எப்படி? வள்ளுவர் ஒரு வழி சொல்கிறார். அறிவால்தான் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
அறிவைக் கொண்டு ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் வரை உயிர்களை வகைப்படுத்தியவர் தொல்காப்பியர்.
அறிவின் வாயில்கள் ஐந்து. மெய், வாய், கண், மூக்கு, காது என்று ஐந்து வாயில்கள் வழியாக ஐந்து அறிவுகளைப் பெறுகிறோம். மனம் ஆறாவது அறிவு. ஐந்து பொறிகளும் அவற்றுக்குத் தொடர்புள்ளவை அவற்றைத் தொடும்போது மட்டுமே அனுபவம் பெறும். ஆனால் உடம்பு, கண், காது, வாய், காது அனுபவங்களை அவற்றிற்கான பொருட்கள் இல்லாமலே மனதால் அனுபவிக்க முடியும். அறிவாக்கிக் கொள்ள முடியும்.
ஐந்து பொறிகள்வழி பெறுவது அனுபவம் என்றால், அனுபவத்தை அறிவாக மாற்றிக் கொள்வது உயிரின் அடையாளங்களுள் முதன்மையானது. ஒவ்வொரு பொறிக்கும் அதற்கென்று ஒரு வேலை இருக்கிறது. மூக்குக்கு மூச்சுவிடுவது வேலை. மணம் அறிவது அதன் விருப்பம். அதன்வழி மணம் தரும் பொருளைக் காண்பது அறிவு.
அறிவுதான் உயிர்; அறிவில்லை என்றால் உயிரில்லை.
அனைத்துலக மனிதனை நோக்கி, தாகூர் இப்படிக் கூறுகிறார்-
எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ-
எங்கே மனம் தலை நிமிர்ந்து நிற்கிறதோ-
எங்கே அறிவு உரிமையுடன் இருக்கிறதோ-
எங்கே உண்மையின் ஆழ்ந்த அடிப்படை
யிலிருந்து சொற்கள் பிறக்கின்றனவோ-
எங்கே பகுத்தறிவு எனும் தெளிந்த ஓடை,
மூடப் பழக்க வழக்கம் என்னும்
வறண்ட பாலையில் வற்றிப் போகாது 
இருக்கிறதோ-
அங்கே -
அந்த உரிமையுள்ள இடத்தில்
என் நாடு விழிப்புறுக
வெளிச்சம் பயத்தைப் போக்க வேண்டும்.அறிவும் மனதும் அச்சமுற்று வாழ ஊடக வெளிச்சம் உதவ வேண்டும். உயிருள்ள மற்றவற்றிலிருந்து மனிதர்களை வேறுபடுத்துவதே அச்சமற்ற அறிவோடும் மனதோடும் வாழ்கிற அவர்களின் வாழ்க்கை முறைதான். அதற்கு வெளிச்சம் இருட்டை விரட்ட வேண்டாமா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com