வழமை வழுவா கொண்டாட்டம்!

கொண்டாட்டம் என்பதைப் பல வகைகளில் பார்க்கிறோம். பிரபல அமெரிக்க நர்த்தகி மார்த்தா கிரஹாம் கூறினார்:

கொண்டாட்டம் என்பதைப் பல வகைகளில் பார்க்கிறோம். பிரபல அமெரிக்க நர்த்தகி மார்த்தா கிரஹாம் கூறினார்: பாதத்தின் அற்புதத்தைப் பாருங்கள், சின்னதாகத்தான் இருக்கிறது. ஆனால் நமது முழு உடலின் பாரத்தையும் அது தாங்குகிறது. இது ஒரு விந்தை! இந்த விந்தையின் கொண்டாட்டம்தான் நாட்டியம் என்கிறார் அவர்.
 கொண்டாட்டம் என்பதை நன்றி தெரிவித்தலாகவும் நினைத்துக் கொள்ளலாம். மார்த்தா கிரஹாம் கூறுவது அதுபோன்றதொரு நன்றி தெரிவித்தல்தான்.
 "நான் என்னையே கொண்டாடிக் கொள்கிறேன் - என்னையே பாடிக் கொள்கிறேன்' என்று நூறாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வாழ்ந்த நவகவிஞன் வால்ட் விட்மன் பாடினான்.
 இதே வாக்குகளை ஓஷோவும் கூறுகிறார்: நான் என்னையே கொண்டாடிக் கொள்கிறேன். நீங்கள் உங்களையே கொண்டாடிக் கொள்ளும் நாள் விரைவில் வரும். உலகமெங்கும் ஆயிரமாயிரம் பேர் கொண்டாடும்போது, பாடும்போது, ஆடும்போது, தற்கொலைகளே இல்லாமல் போய்விடும். மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களும் சிரிப்பும் ஆரோக்கியமும் நற்சிந்தையும் இருந்தால் போர் எப்படி வரும்? என்கிறார் ஓஷோ.
 ஆனால் சில வகை கொண்டாட்டங்கள் உள்ளன. பண்டிகை அல்லாத, நமது தனிப்பட்ட வாழ்வில் நினைவுபடுத்திக் கொள்ளாத, ஆனால் அதே சமயம் மகிழ்வுடன் நாம் அனைவருமே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய சில கொண்டாட்ட நாள்கள் உள்ளன.
 ஏப்.23 உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. "புவி நாள்' என்று ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி கொண்டாடுகிறோம். இது வெறும் கொண்டாட்டம் அல்ல. உலக உயிர்கள் அனைத்துக்கும் உணவளிக்கும் பூமிக்கு நன்றி தெரிவித்தலாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
 பொதுவாகக் கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பிடிப்பது பிறந்த நாள் கொண்டாட்டம்தான். சிறிய வயதினர், பெரியவர்கள் என எல்லா வயதினருமே பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். திருமண நாள்கள், விழாக்கள் என்ற காரணங்களைக் கூறிக் கொண்டு, நண்பர்களும் உறவினர்களும் கூடிக் கொண்டாடுகிறோம். குழந்தைகளின் முதல் பிறந்த நாள், பெரியோரின் அறுபதாம் பிறந்தாள், அதற்கடுத்த கால மைல்கல்களின் கொண்டாட்டங்கள் விசேஷமானவை!
 பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அல்லது ஒரு தம்பதியின் திருமண நாள் நிகழ்ச்சியில் நாம் கலந்து கொள்ளும்போது, பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற, தங்கள் திருமண நாளைக் கொண்டாடுகின்ற நபர்களின் மகிழ்ச்சியில் நாமும் பங்கு கொள்கிறோம். அடிப்படைக் கொண்டாட்டம் அவர்களுடையது. நாம் அதில் கலந்து கொள்கிறோம்.
 வேறு ஒரு மதத்தினரின், வேறு ஒரு மாநிலத்தவரின் ஏதேனும் பண்டிகையை, முக்கிய நிகழ்வை அவர்கள் கொண்டாடும்போது நாம் அவர்களை வாழ்த்துகிறோம்.
 ஆவணி மாதத்தில் கேரளீய சகோதரர்கள் திருவோணம் பண்டிகையை வண்ணப்பூக்களங்களிட்டுக் கொண்டாடும்போது, நாம் அவர்களை வாழ்த்துகிறோம். ஆனால் கொண்டாட்டம் அவர்களுடையது.
 சீக்கியருக்கு "பைசாகி' என்பது புத்தாண்டு மட்டுமல்ல- குரு கோவிந்த்கல்சாவைத் தோற்றுவித்த தினமும் கூட. இது தமிழரின் புத்தாண்டு தினத்தைப் போல சித்திரை தொடக்கத்தில் வருவது. சீக்கியர் கொண்டாடும்போது நாம் வாழ்த்தி மகிழலாம். ஆனால் உணர்வுபூர்வமான கொண்டாட்டம் என்பது அவர்களுடையதாகத்தான் இருக்க முடியும்.
 அதே போல பிற மதத்தினரின் பல கொண்டாட்டங்களுக்கும் நாம் வாழ்த்து தெரிவித்து மகிழ்கிறோம். ஆனால் கொண்டாட்டம் அவர்களுடையது. அவர்களுடன் சில மணித் துளிகள் செலவிடுவதாலோ, அவர்களுடன் உணவு உண்பதாலோ, உணர்வுபூர்வமாக அந்தக் கொண்டாட்டம் நமதாகிவிடுவதில்லை.
 இது ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நேரம். இன்று அனைவர் வீட்டிலுமே இந்தக் காலக் கணக்கைக் குறிப்பிடும் நாள்காட்டிகள் இருக்கின்றன. இந்தியப் பாரம்பரிய நாள் காட்டும் பஞ்சாங்கம் என்பது அனைவர் வீட்டிலும் இருப்பதில்லை. அந்தப் பஞ்சாங்கத்திலும் கூட ஆங்கில ஆண்டு விவரத்தைக் குறிப்பிடும் வழக்கம் இப்போது உள்ளது. அதை வைத்து பாரதப் பாரம்பரிய முறைப்படியான நாள் விவரங்களைத் தெரிந்து கொள்ள வசதியாக அதைச் செய்திருக்கிறார்கள்.
 இந்தியா ஆங்கிலேயர் கீழிருந்தபோது, அவர்கள் ஆட்சிக்கு உதவி வந்த ஆங்கில காலக் கணக்கை நாம் இன்றும் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தி வருகிறோம். அதுவே நமது அரசின் காலக் கணக்குக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வகையில் உலகமே ஆங்கில (அல்லது கிறிஸ்தவ) காலக் கணக்கைத்தான் பயன்படுத்துகிறது எனலாம். ஆனால் இந்தியா, சீனா போன்ற சில சமூகங்கள் மட்டும் தங்கள் பாரம்பர்யத்தை மறவாமல் கடைப்பிடித்து வருகின்றன.
 இப்போது ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டம் பரவலாகி வருகிறது. அது அன்றாட அலுவல் மட்டுமல்லாமல், நமது பாரம்பரிய கோயில் வழக்கங்களிலும் குறுக்கிடத் தொடங்கிவிட்டது.
 தமிழ்ப் புத்தாண்டுக்கு நம் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறதோ இல்லையோ, ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்குப் பாரம்பரிய வழக்கங்களையும் மீறி, நள்ளிரவில் கோயில் வழிபாடு போன்ற மரபு மீறல்கள் சர்வ சாதாரணமாகி வருகிறது.
 "எல்லையில்லா மகிழ்ச்சி' என்று குறிப்பிடப்படுவதுண்டு. அதுபோல, எல்லையில்லா கொண்டாட்டமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதானோ, என்னவோ!
 சில வேளைகளில் வரம்பில்லா கொண்டாட்டமாகவும் அது மாறிவிடுகிறது! நாடு முழுவதும் கணிசமான எண்ணிக்கையினர் மது அருந்தி, கேளிக்கையுடன் இந்தப் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர்.
 தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் வீடுகளில், புத்தாண்டுப் பிறப்பன்று சமையலில் மாம்பழமும் வேப்பம்பூவும் உள்ள பாரம்பரிய சமையல் உண்டு. பருவங்களையொட்டி, இந்திய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவை வெறும் கேளிக்கையல்ல.
 ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை "ஹேப்பி நியூ இயர்' என்று உரக்கக் கூவிக் கூறுவதுபோல, தமிழ்ப் புத்தாண்டன்று, "புத்தாண்டு வாழ்த்துகள்' என்று பெரும்பாலானோர் வாழ்த்துவதில்லை என்றே கூறலாம். "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுச் சொல்வதுதான் பொதுவான வழக்கமாக இருக்கிறது.
 ஆங்கிலப் புத்தாண்டுக்கு இருக்கும் கோலாகலமும் கொண் டாட்டமும் தமிழ் புத்தாண்டுக்கு இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்றுதான் கூற வேண்டும்.
 எந்தப் பெயரில் கொண்டாடினால் என்ன, மகிழ்ச்சியாக இருப்போமே என்று சொல்வாரும் இருப்பார்கள். உண்மைதான்!
 கடந்ததை சிந்தையிலிருந்து களைவோம்! அன்றைய தினம் தின்மையைவிட்டு, நன்மையை மட்டுமே எண்ணி மகிழ்ந்து கொண்டாடலாம். அதனோடு கூடவே, அவரவர் பாரம்பரியத்தையும் மறவாது பின்பற்றிக் கொண்டாடலாம்.
 இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com