சூழல் பாதுகாப்பின் முன்னோடி

இந்திரா காந்தி என்றால் நெருக்கடி நிலையை மட்டும் நினைவுபடுத்துவது சரியல்ல. மாறுபட்ட பொருளியல் சூழ்நிலைக்கு ஏற்ப இன்றைய பிரதமர் இந்தியாவில் தயாரிப்போம் -மேக் இன் இந்தியா-

இந்திரா காந்தி என்றால் நெருக்கடி நிலையை மட்டும் நினைவுபடுத்துவது சரியல்ல. மாறுபட்ட பொருளியல் சூழ்நிலைக்கு ஏற்ப இன்றைய பிரதமர் இந்தியாவில் தயாரிப்போம் -மேக் இன் இந்தியா- என்ற கோஷத்தை முன்வைத்து எவ்வாறு வளர்ச்சியில் கவனம் செலுத்துவதை உலகம் பாராட்டுகிறதோ, அதைவிட அதிக அளவில் இந்திரா காந்தியின் 'கரீபி ஹட்டாவோ' அதாவது 'வறுமையை ஒழிப்போம்' என்ற கோஷத்தை முன்வைத்த நடவடிக்கை, மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகளை நாட்டுடமையாக்கியது, பசுமைப் புரட்சி மூலம் உணவு இறக்குமதி ஒழிப்பு, கிராமங்களில் பணப்புழக்கம் ஆகியவற்றுக்காக உலகம் அன்று அவரையும் பாராட்டியிருக்கிறது. தான் நினைத்த பொருளாதார திட்டங்களை அவர் ஆற்றலுடன் செயல்படுத்த தமிழ்நாட்டின் தலைசிறந்த நிர்வாகிகளான சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், மோகன் குமாரமங்கலம் போன்றோரின் ஆற்றல்களைத் திறம்படப் பயன்படுத்தியவர் இந்திரா. குறிப்பாக, ஆர்.வெங்கட்ராமன், காமராஜரின் கண்டுபிடிப்பு. காமராஜ் தமிழ்நாட்டின் முதலமைச்சராயிருந்தபோது தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஆர். வெங்கட்ராமன். இந்திராவின் நன்மதிப்பைப் பெற்று இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்த முதல் தமிழர்.
இப்படியெல்லாம் இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி அசுர வேகத்தில் நடத்திச் சென்ற இந்திரா காந்தி, சுற்றுச்சூழலின் காவலராகவும் பரிணமித்த அற்புதத்தை நாம் மறந்துவிட முடியாது.
இந்திரா காந்தி முறைசார்ந்த கல்வி கற்ற பட்டதாரி கூட இல்லை. தாகூரின் விஸ்வபாரதி சாந்திநிகேதனில் முறைசாராக் கல்வி பயின்றவர். இந்தியாவில் பதவி வகித்த எந்தப் பிரதமருக்கும் இல்லாத சூழல் அறிவு இந்திராவுக்கு இருந்ததால் இந்திய வனங்களும், காட்டு விலங்குகளும் பறவைகளும் காப்பாற்றப்பட்டன. 
தமிழ்நாடும் கேரளமும் சந்திக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை, குறிப்பாகப் பாலக்காடு மாவட்டத்தில் 'அமைதிப் பள்ளத்தாக்கு' உள்ளது. அருமையான இயற்கை எழில் கொஞ்சும் இந்த அமைதிப்பள்ளத்தாக்கில் ஓடும் குந்திப்புழை நதியில் பெரிய அணை கட்டும் திட்டத்தை அம்மாநில மின்சார வாரியம் முன்மொழிந்து ஒப்புதலும் பெறப்பட்டு ஆயத்த வேலை தொடங்கியபோது, கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் என்ற இயக்கம் 1970-இல் மக்களைத் திரட்டிப் போராடியது. உலக வனவிலங்கு வனப் பாதுகாப்பு நிதியமும் இந்தத் திட்டத்தை எதிர்த்தது. கேரள உயர் நீதிமன்றமும் தடை விதித்தது. இவ்வளவையும் மீறி மாநில அரசு அணையைக் கட்டும் பணியைத் தொடங்கியபோது, இந்திரா காந்தி நாட்டின் பிரதமர் என்ற முறையில் தலையிட்டு அமைதிப்பள்ளத்தாக்கை ஒரு காப்பிடமாகவும், தேசியப்பூங்காவாகவும் அறிவித்துக் காப்பாற்றியவர். 
இன்றுவரை இந்திரா காந்தியைப் போல் இயற்கையின்பால் நேசம் கொண்ட பிரதமர்கள் பின்னர் யாரும் தோன்றவில்லை. மரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிய நூல்களை ஆழ்ந்து படித்தவர். ஒரு முறை இந்திரா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் தேசியப் பூங்காவைப் பார்வையிடத் வந்தபோது, ஒரு வனக்காவலர் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டு விளக்கம் சொல்ல வந்தாராம். ஆனால் அவருக்கு இந்திரா வழிகாட்டியாக மாறி, சுமார் 90 வகையான பறவைகளை அடையாளப்படுத்திக் கூறியதாக விலங்கியல் வல்லுநர் பிரானாசிங் பிந்த்ரா குறிப்பிடுகிறார்.
இந்திரா காந்தி பதவியிலிருந்த காலகட்டத்தில், இன்றைக்கு உத்தரகண்ட் என அழைக்கப்படும் பகுதியில் சிப்கோ இயக்கம் உச்ச கட்டத்தில் நிகழ்ந்துவந்தது. இந்த இயக்கத்திற்கு ஆதரவாக சுந்தர்லால் பகுகுணா என்ற பத்திரிகையாளர் உண்ணாவிரதம் இருந்து பிரபலமானார். இந்திரா காந்திக்கு இதன் பின்புலம் விளங்கவில்லை. சுந்தர்லால் பகுகுணாவின் பத்திரிக்கைத் தொடர்பு காரணமாக ஊடகங்கள் மூலம் அரைகுறையாகக் கேள்விப்பட்ட இந்திரா காந்தியை 1980-இல் ஒரு நிருபர் சந்தித்துக் கேள்விகேட்டபோது,“எனக்கு சிப்கோ பற்றி எதுவும் தெரியாது என்றும், மரங்களை வெட்டாமல் பாதுகாப்பதுதான் குறிக்கோள் என்றால், அந்தக் குறிக்கோளை நான் ஆதரிப்பேன் என்றும் பதில் கூறினார்.
சிப்கோ இயக்கம் என்பது மரங்களைக் காப்பாற்றுவதற்கும் மேல், கிராம மக்களை நகரங்களுக்குக் குடிபெயராமல் கிராமத்திலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இயக்கம் என்று இந்திரா காந்திக்குத் தெரிய வந்தது.
வனப் பாதுகாப்பில் இந்திரா காந்திக்கு மணிமகுடம் சூட்ட வேண்டிய வெற்றித் திட்டமே 'புலிப் பாதுகாப்புத் திட்டம்' என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதைத்தொடர்ந்து யானைப் பாதுகாப்புத் திட்டமும் நிறைவேறியது. உலக வனவிலங்கு நிதியத்துடன் இணைந்து உயிரி வட்டக் காப்பிடங்கள் அறிவிக்கப்பட்டன. தேசியப்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வனவிலங்கு சரணாலயங்கள் காப்பிடங்களாக்கப்பட்டன. இந்திரா காந்தி வகுத்தளித்த திட்டங்களின் பயனாக வனவிலங்குகளின் எண்ணிக்கை உயர்ந்தது. சிங்கம், புலி, யானை வேட்டைக் கட்டுக்குள் நின்றது. 
ஜுனாகாத் நவாப் குஜராத்தில் இந்திராவின் சிங்கப் பாதுகாப்புத் திட்டம் வெற்றி பெற உதவியுள்ளார். கிர் சரணாலயத்தில் வழக்கற்றுப்போக இருந்த இந்திய சிங்கங்கள் காப்பாற்றப்பட்டன. இந்தியாவில் யானைகளும் புலிகளும் எல்லா வனச் சரணாலயங்களிலும் காணப்படும். ஆனால் கிர் சிங்கவனச் சரணாலயத்தில் மட்டுமே சிங்கத்தைக் காண முடியும். சரணாலயத் திட்டத்துக்கு முன்பு 20 சிங்கங்கள் மட்டுமே இருந்தன. இன்று 300 சிங்கங்கள் உள்ளன. இவ்வாறு சிங்க எண்ணிக்கை பெருகியது இந்திராவின் சீரிய முயற்சியால்தான்.
வனப் பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது வனங்களைச் சுற்றியிருந்த குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டன. அதனால் எதிர்ப்புக்குரல் எழாமல் இல்லை. 
எவ்வளவோ பாதிப்புகள் இருப்பினும் நெருக்கடி நிலையினால் பொருளாதாரமும் பாதுகாப்பும் உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களே. மிசா தண்டனை சற்றுக் கடுமையானதே. இன்று நரேந்திர மோடியை சர்வாதிகாரி என்று ஏசுபவர்கள், அன்று இந்திராவின் எமர்ஜன்சியை வாழ்த்தினார்களே.
வளரும் நாடுகளின் சூழல் பிரச்னைகள் வேறு. வளர்ந்த நாடுகளின் சூழல் பிரச்சனைகள்வேறு. ஆகவே, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் மாற்று எரிசக்தி போன்ற திட்டங்களுக்கு வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும் என்பதுடன், மாசுக் கட்டுப்பாட்டில் எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரியான சமத்துவம் பாராட்டாமல் வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி வீதம் குறைக்கப்பட்டு, வளரும் நாடுகளின் வளர்ச்சி வீதத்தைக் கூட்டவேண்டும் என்று உலக சுற்றுச்சூழல் ஐ.நா. மகாநாடு 1972-இல் ஸ்டாக் ஹோமில் நிகழ்ந்தபோது, 'வறுமையே ஒரு மோசமான மாசு என்று பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, மாசுக் கட்டுப்பாட்டில் வளரும் நாடுகளில் அதிகபட்ச பங்களிப்பை ஒரு கொள்கையளவில் உலக நாடுகள் ஏற்றுள்ளதை மறக்க முடியாது.
இந்திரா காந்தி அவர்களின் ஆட்சிக் காலத்தை இன்று சீர்தூக்கிப் பார்க்கும்போது, வளர்ச்சியையும் சூழல் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்து இந்தியாவை அவர் வளர்ச்சிப் பாதையில் நடத்திச் சென்றது புலனாகும். அனைத்துலக இயற்கைக் காப்பிட ஒன்றியத்தின் சார்பில் 1983-ம் ஆண்டு நிகழ்ந்த கருத்தரங்கில் தலைமையுரை ஆற்றிய டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திரா காந்தியை' நிகழ்காலத்தின் மாபெரும் சுற்றுச்சூழல் காவலர் என்று குறிப்பிட்டுள்ளார். சூழல் ஆர்வலர்களுக்கு அக்குறிப்பு சற்று மிகையாகத் தெரிந்தாலும், இந்திராவின் வனப் பாதுகாப்புத் திட்டத்தை முன்வைத்து கவனித்தால் அக்கூற்றில் மிகை எதுவும் இல்லை என்று எண்ணத் தோன்றும். வன விலங்குப் பாதுகாப்புத் நெறிமுறைகளைத் தீட்டிப் புலிப் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும், மேற்குத் தொடர்ச்சி மலையில் பாதுகாக்கப்பட்ட அமைதிப்பள்ளத்தாக்கு ஆகியவை இந்திராவை சூழல் பாதுகாப்பின் முன்னோடி என்ற பட்டத்திற்கு முழுத் தகுதியுடைவராக்கியுள்ளது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com