வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் 

நாம் பிறந்த இந்தப் புண்ணிய பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். சமயத் துறையில் தலைவர்களாக விளங்கிய இவர்கள்,

நாம் பிறந்த இந்தப் புண்ணிய பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். சமயத் துறையில் தலைவர்களாக விளங்கிய இவர்கள், மக்களுக்கு அருள்வழியைக் காட்டியிருக்கிறார்கள்.
அது போலவே சமுதாயத் துறையில் கணக்கற்ற பெரியோர்களை நம் பாரத பூமி காலமெல்லாம் தோற்றுவித்திருக்கிறது. சமுதாயத் தலைவர்களாக விளங்கிய இவர்கள், எத்தனை எத்தனையோ துறைகளில் நம் பாரத சமுதாயத்தின் நலனுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அரும்பணி ஆற்றியுள்ளனர்.
சமயத் தலைவர்களாக இந்தியாவில் எவ்வளவோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். சமுதாயத் தலைவர்களாகவும் இந்தியாவில் எவ்வளவோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். 
சமயத் தலைவராகவும் அதே சமயத்தில் சமுதாயத் தலைவராகவும் வாழ்ந்து, மக்களுக்கு வழி காட்டியவர்களும் இந்தப் பாரதப் புண்ணிய பூமியில் உண்டு. இந்த வரிசையில் சமீப காலத்தில் தோன்றிய மாமனிதர் சுவாமி விவேகானந்தர்.
இன்று நம் பாரதம் ஒரு சுதந்திர பூமி. இந்தச் சுதந்திர பூமியை உருவாக்குவதற்குப் போற்றுதலுக்குரிய நம் தேசபக்தர்களும் தேசியத் தலைவர்களும் எல்லையற்ற துன்பங்களையும் தியாகங்களையும் மேற்கொண்டனர். அவர்களை நாம் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவைக் தட்டியெழுப்பி, வீறுகொண்டெழச் செய்தார் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தரின் வீரமுழக்கம்தான், அவரது அறைகூவல்தான் இந்திய மக்களைச் சிலிர்த்தெழுந்து சுதந்திரப் போராட்டத்தில் அன்று ஈடுபட வைத்தது. 
எனவேதான் மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றிச் சொல்லும்போது, ''விவேகானந்த பரமஹம்ச மூர்த்தியே இந்தியா விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்'' என்று குறிப்பிட்டார்.
சுவாமி விவேகானந்தரை 'தேசபக்த ஞானி' என்று பெரியோர்கள் சொல்வார்கள். 
அவர் வெற்றி வீரராக அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது, அவர் சென்ற இடமெல்லாம் பாரத மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரைக் கோலாகலமாக வரவேற்றார்கள். 
அப்போது அவர் இந்தியாவில் பல பாகங்களிலும் தேசபக்தி ததும்பும் வீரச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அந்தச் சொற்பொழிவுகள், இன்று 'கொழும்பு முதல் அல்மோரா வரை நிகழ்த்திய சொற்பொழிவுகள்' என்ற தலைப்பில் தனி நூலாக உள்ளன. இந்தச் சொற்பொழிவுகள் தேசபக்தியைத் தரும் ஓர் உபநிஷதம் போன்று தேசோபநிஷதமாக, இந்திய தேசியத்துக்கே வழிகாட்டியாக விளங்கின; விளங்குகின்றன.
''சுவாமி விவேகானந்தர் உயிருடன் இருந்திருந்தால், நான் எப்போதும் அவர் காலடியில் அமர்ந்திருக்கவே விரும்புவேன். உண்மையைச் சொல்வதானால் இன்றைய இந்தியா அவருடைய படைப்பே ஆகும்'' என்று நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் சொல்வது வழக்கம்.
சுவாமி விவேகானந்தரின் நூல்கள், நமது உள்ளத்தில் உண்மையான தேசபக்தியைத் தோற்றுவிக்கும் ஆற்றல் வாய்ந்தவையாக விளங்கி வருகின்றன. அவற்றை நாம் படிக்கும்போது,'நம் தாய்நாட்டின் நலனுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்!' என்ற எண்ணம், இயல்பாகவே நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.
இதோ, தேசபிதா மகாத்மா காந்தி கூறிய வாசகங்கள்: ''சுவாமி விவேகானந்தர் எழுதிய எல்லா நூல்களையும் நான் முழுவதும் படித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு எனக்கு எனது தாய்நாட்டின் மீதிருந்த அன்பு ஆயிரம் மடங்காக அதிகமாயிற்று.''
''இயசுபிரான் கல்லறையிலிருந்து உயிர் பெற்று எழுந்ததைப் போல், விவேகானந்தரால் இந்துமதம் எழுச்சி பெற்றது. அவர் இல்லாமல் இருந்திருந்தால் நாம் (ஆங்கிலேயரிடமிருந்து) விடுதலை பெற்றிருக்க மாட்டோம்'' என்று மூதறிஞர் ராஜாஜி கூறினார்.
நமது பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்தவர் தத்துவமேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் தமது இளமைப் பருவத்தில் சுவாமி விவேகானந்தரால் பெரிதும் கவரப்பட்டவர். 
தமது மாணவப் பருவத்தைப் பற்றி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் குறிப்பிடும்போது பின்வருமாறு கூறினார்:
''சென்னையில் நான் மாணவனாக இருந்தபோது, சுவாமி விவேகானந்தரின் நூல்களும் பேருரைகளும் கையேட்டுப் பிரதிகளாக மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்டன. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அவரது அருள்வாக்கு மாணவர்களை மந்திரத்தில் கட்டுண்டவர்களைப் போல மயக்கிவிட்டது. நான் மாணவனாக இருந்தபோது இதை என் அனுபவத்தில் கண்டேன்.''
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தேசத் தலைவர்கள் அனைவரின் உள்ளங்களிலும் சுவாமி விவேகானந்தர் சிறப்பான இடம் பெற்றிருந்தார்.
சுதந்திர பாரதத்தின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, விவேகானந்தரைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்:
''சுவாமி விவேகானந்தரைப் போன்ற வீரரை நீங்கள் எங்கே பார்க்க முடியும்? இந்தியா தன்னுடைய வீரத்தையெல்லாம் இழந்து கோழையாகி விட்டிருந்த நேரத்தில், இந்த நாடே ஆண்மையற்றுச் சிதறிப்போன காலத்தில், அவர் இந்த நாட்டிற்கு வீரத்தையும் ஆண்மையையும் ஊட்டினார். என் கருத்துப்படி, இந்திய விடுதலைக்காகத் தேசியப் போராட்டத்தைத் துவக்கிய மகோன்னதமான இயக்கத்தை, அவருக்குப் பின்னால் நாடு முழுவதற்கும் பரப்பிய பலரும், அதற்கான வலிமையையும் வேகத்தையும் விவேகானந்தரிடமிருந்தே பெற்றனர். நேராகவும் மறைமுகமாகவும் இன்றைய இந்தியா விவேகானந்தராலேயே பெரும்பாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்று ஜவாஹர்லால் நேரு குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், சுவாமி விவேகானந்தரைப் பற்றிச் சொல்லும்போது, ''இந்தியாவுக்கு வேதாந்தத்தால் புத்துயிர் வழங்கிய ஞானசூரியன் சுவாமி விவேகானந்தர். இலட்சம் பேர் சிறை சென்று எழுப்பும் தேசபக்தியை சுவாமி விவேகானந்தரின் ஒரு பேச்சு எழுப்பிவிடும்'' என்று குறிப்பிட்டார்.
பொதுவுடைமை இயக்கத் தலைவர் அமரர் ப. ஜீவானந்தம், சுவாமி விவேகானந்தரைப் பற்றி இவ்விதம் குறிப்பிட்டிருக்கிறார்: 
''இந்தப் பாரினைக் குலுக்கிய பாரதத் துறவி; துறவிகளிலும் தனக்கு நிகர் தானேயான அரசியல் துறவி. பாரதமணித் திருநாடே, தான் என்று உருவகித்து வாழ்ந்த முழுமையான தேசபக்தத் துறவி; நவீன இந்தியாவின் ஞானாசிரியர்; பக்தத் துறவி; நவீன இந்தியாவின் ஞானாசிரியர்; இந்திய ஆன்மிக ஞானமும், மேற்கத்திய அறிவியலும் இணைந்து உறவாடி ஒளிவிட்ட கூட்டு மேதை; எம்மதமும் சம்மதமே என்ற பொது நெறிப் பெரியார்; ஏழை எளிய மக்களுக்காகக் காலம் முழுவதும் இதய இரத்தம் பெருக்கிய கருணைக் கடல்; தீர்க்கதரிசிகளில் தீர்க்கதரிசி. பெருநாவலர்களில் பெருநாவலர். துறவி உடையில் திகழ்ந்த புரட்சிவேள். இந்திய மண்ணில் சமதர்மக் கருத்தை வரவேற்ற முதல்வர். பேச்சில், நடையில், பார்வையில் வீரதீரர்; காட்டுத்தீ; கர்ஜிக்கும் சிங்கம்; இருபதாம் நூற்றாண்டைக் காட்டி மறைந்த மானுடன். இவர்தான் சுவாமி விவேகானந்தர்.''
பாலகங்காதர திலகர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., லாலா லஜபதி ராய், பிபின்சந்திர பால், என்.என்.ராய், அரவிந்தர், கோபாலகிருஷ்ண கோகலே, சுப்ரமண்ய சிவா உட்பட, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் ஊக்கமும் உற்சாகமும் தந்து அவர்களைச் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தின.
இதுவே அன்றைய பாரதத்தின் சுருக்கமான வரலாறு.
''எதிர்கால இந்தியா முன்பு எப்போதும் இருந்ததை விடவும் மிகுந்த சிறப்போடும் பெருமையோடும் விளங்கப் போகிறது'' என்று சுவாமி விவேகானந்தர் தீர்க்க தரிசனமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
விவேகானந்தரின் வார்த்தைகள் சத்திய வார்த்தைகள். தெய்வமே அவர் மூலமாகப் பேசியது. ஆதலால் எதிர்கால இந்தியா உலக வரலாற்றில் உன்னதமான இடத்தைப் பெற்று மிகவும் சிறந்து விளங்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
புதிய பாரதம் தலையெடுக்க, தேசத் தொண்டில் ஈடுபடும்படி நம்மையெல்லாம் இன்றும் அழைத்தபடியே இருக்கிறார் சுவாமி விவேகானந்தர். அவரது சில கருத்துக்கள் வருமாறு:
''பாரத மாதாவின் நன்மைக்காக அவளுடைய மிகவும் சிறந்த, மிகவும் உத்தமமான புதல்வர்களின் தியாகம் தேவையாக இருக்கிறது என்பதை நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன். பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும்.
தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும், தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையில் உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
நல்லவர்கள் மற்றவர்களின் நன்மைக்காக மட்டும் வாழ்கிறார்கள். மற்றவர்களின் நன்மைக்காக அறிஞன் தன்னைத் தானே தியாகம் செய்துவிட வேண்டும்.
பெரியவர்கள் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனித குலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்துவிட விரும்பினால், அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதல்ல. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்துவிட விரும்புகிறாயா? அப்படி நீ செய்தால் கடவுளாகவே நீ ஆகிவிடுவாய்.
மற்றவர்களின் நன்மைக்காகத் தங்களுடைய இதயத்தின் இரத்தத்தைச் சிந்தி, பாதை அமைப்பவர்கள்தாம் பெரியோர் ஆவார்கள். ஒருவர் தமது உடலைத் தந்து பாலம் ஒன்றை அமைக்கிறார். அந்தப் பாலத்தின் உதவியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த ஆற்றைக் கடந்துவிடுகிறார்கள். இப்படி நீண்ட நெடுங்காலமாக நடந்துகொண்டு வந்திருக்கிறது. இந்த முறை அப்படியே இருக்கட்டும்! அப்படியே இன்றைக்கும் இருக்கட்டும்!
எனது வீர இளைஞர்களே! செயலில் ஈடுபடத் தொடங்குங்கள். தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். 
நமது தாய்நாட்டின் இளைஞர்களே! ஆக்கப்பூர்வமான நற்பணிகளில் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக முழு மனதுடன் ஈடுபடுங்கள்.
நம்புங்கள்! உறுதியாக நம்புங்கள்! இந்தியா கண்விழித்து எழுந்திருக்க வேண்டும் என்று ஆண்டவன் கட்டளை பிறந்துவிட்டது. இந்தியா எழுச்சி பெற்று முன்னேற்றப் பாதையில்தான் செல்ல வேண்டும் என்று இறைவன் ஆணை பிறப்பித்தாகிவிட்டது.
இப்போதிருக்கும் இந்தக் குழப்பத்திலிருந்தும், போராட்டத்திலிருந்தும் மகிமை பொருந்திய பரிபூரண எதிர்கால இந்தியா கிளம்பி எழுவதை நான் என் மனக்கண்ணால் பார்க்கிறேன். அது எவராலும் வெல்ல முடியாததாகக் கிளம்பி எழும்புவதை நான் என் மனக்கண்ணால் பார்க்கிறேன்.
என் சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது.
புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்த பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.
கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும்! மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்தும் புதிய இந்தியா எழட்டும்! பலசரக்குக் கடைகள், பலகாரக் கடைகளிலிருந்து அவள் தோன்றட்டும்! தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தைகள் ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்திய எழுந்து வெளிவரட்டும்!''

இன்று சுவாமி விவேகானந்தர் ஜயந்தி

கட்டுரையாசிரியர்
தலைவர், 
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com