இயற்கையைக் காப்போம்

ஒரு நாள் புத்தரின் மாணவர் ஒருவர், தனக்கு உடுத்திக் கொள்ள புதிய துணி ஒன்று வேண்டுமென்று கேட்டார். புத்தரிடம் அவ்வளவு சீக்கிரம் ஒரு புதிய துணி வாங்கிவிடமுடியுமா? புத்தர் அம்மாணவரிடம்,

ஒரு நாள் புத்தரின் மாணவர் ஒருவர், தனக்கு உடுத்திக் கொள்ள புதிய துணி ஒன்று வேண்டுமென்று கேட்டார். புத்தரிடம் அவ்வளவு சீக்கிரம் ஒரு புதிய துணி வாங்கிவிடமுடியுமா? புத்தர் அம்மாணவரிடம், உனது பழைய துணி என்னவாயிற்று' என்று கேட்டார். புத்தருடனேயே வாழ்வை நடத்தும் அந்த மாணவர் தயங்காமல் பதிலளிக்கத் தொடங்கினார்.
எனது பழைய துணி கிழிந்து விட்டது. அதனைச் சரியான வடிவத்தில் கத்தரித்து சன்னல்களுக்குத் திரைச்சீலையாக்கிவிட்டேன். ஏற்கனவே திரைச்சீலையாக இருந்த துணியை, அடுப்பிலிருந்து பாத்திரங்களை இறக்கப் பயன்படுத்தும் கந்தல் துணியாக்கி விட்டேன். ஏற்கெனவே கந்தல் துணியாக இருந்ததை வாயிலுக்கு முன்னால் போட்டு வைக்கும் மிதியடியாக மாற்றிவிட்டேன். பயன்பாட்டிலிருந்த மிதியடியை துண்டு துண்டுகளாகக் கிழித்து அடுப்பில் போட பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்' என்றாராம். புத்தரும் புன்னகைத்துக்கொண்டே புதியதுணியைப் பெற அனுமதி அளித்தாராம். 
பூமியில் வீசினால் மட்கும் என்ற பருத்தித் துணிக்கே இவ்வளவு பயன்பாடு இருக்கிறது என்பது பலரும் யோசிக்காத கோணமல்லவா? எனவே இச்சம்பவம் பலராலும் அடிக்கடி சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது. 
ஒரு திரைப்படத்தில் துணை நடிகர் ஒருவர் கதாநாயகியிடம் அண்டா, குண்டா போன்ற பெரிய பாத்திரம் ஒன்றைக் கேட்பார். கதாநாயகி எதற்கு' என்று 
கேட்கும்போது இரண்டு இட்லி வாங்கிக்கொண்டு அதற்கு சாம்பார் வாங்கிவரத்தான் அண்டா' என்பார். நல்ல நகைச்சுவை. ஒரு காலத்தில் ஹோட்டல்களுக்குச் செல்லும்போது சாம்பார், குருமா, காபி வாங்கி வர கூஜா, சொம்பு கொண்டுபோனவர்கள்தான் நாம். இன்று காபி, தேநீர், சாம்பார், பழச்சாறு, எண்ணெய், பிண்ணாக்கு எதுவாயிருந்தாலும் பிளாஸ்டிக் கவர்தான். சுடச்சுட போடப்படும் அப்பொருள்களால் பிளாஸ்டிக் கவர் மெல்ல மெல்ல உருகி அப்பொருள்களோடு நம் வயிற்றுக்குள் செல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை. 
1980-களில் முதல் முதலாக ஷாம்பு'தான் சிறு சிறு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வந்தன. அது, எளிய மனிதர்கள் வாங்கக் கூடிய மலிவு விலையில் நுகர்வுப் பொருட்களைத் திணிக்கும் முயற்சி என்பது அப்போது பலருக்கும் பிடிபடவில்லை. 1990 -களுக்குள்ளாகவே பல்வேறு பொருள்கள் பிளாஸ்டிக் பைகளில் வரத் தொடங்கி விட்டன. தனிப்பட்ட மனிதர்களும் தங்கள் குடும்பத்தில் நடக்கும் மிகப்பெரிய திருமணத்தைக் கூட கையில் ஒரு பை கூட கொண்டு போகாமல் நிகழ்த்தும் அளவுக்கும் நிலைமை மாறிவிட்டது. பிளாஸ்டிக் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் பரவியுள்ளது. தற்போது அனைத்தும் பிளாஸ்டிக் பைகளில்தான் கட்டிக் கட்டித் தரப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தியபின் சரியான முறையில் மறு சுழற்சிக்கோ, மறு பயன்பாட்டிற்கோ உள்படுத்தாததால் மறுநாளே தெருவை அடைந்து, சாக்கடைக்குள் நுழைந்து தண்ணீர் பாதையை அடைத்து விடுகிறது. இதுபோன்ற செய்திகளை அடிக்கடி நாளிதழ்களில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். 
இப்படிப் பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கலாசாரத்தால் பூமியின் தலையில் எங்கு பார்த்தாலும் இளநரைதான். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற எந்த வேறுபாடுமில்லாமல், எல்லாருமே பிளாஸ்டிக்கை பயன்படுத்தியபின் தூக்கி எறிந்து வருகிறோம். ஏதாவது நண்பர்களுடன் இது பற்றி உரையாடினால் அவர்கள் வாதம் வேறுவிதமாக இருக்கும். பிளாஸ்டிக் தயாரிப்பாளரும் நாமும் நெருங்கிய நண்பர்கள் என்பதுபோல முதலில் அவர்கள் பிளாஸ்டிக் தயாரிப்பை நிறுத்தச்சொல்லுங்கள்' என்பர். அது மட்டுமா? பிளாஸ்டிக்கைத் தவிர்த்து, கையில் மஞ்சள் பையுடன் கடைக்குச் செல்லும் தியாக சீலர்களை இந்த அறிவார்ந்த சமூகம் கேலியாய் வேறு பார்க்கும். இருந்தாலும் அந்த கேலியைப் பொருள்படுத்தாமல் ஒரு சிலர் தோலில் பையை மாட்டிக்கொண்டு திரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்றைய தலைமுறைக்கு வேண்டுமானால் துணிப்பைகள் புதிதாகத் தெரியலாம். ஆனால், இன்றைக்கு சுமார் 40 வயதுடையோர் தங்கள் வாழ்வைத் திரும்பிப் பார்த்தால் தெரியும். பள்ளி திறந்தவுடன் அவர்கள் அண்ணனுக்கோ அக்காவுக்கோ புதிய புத்தகப்பை (அதுவே துணிக்கடைகளில் இலவசமாகக் கொடுக்கப்பட்ட மஞ்சள் பைதான்) கிடைத்ததும், அவர்கள் பயன்படுத்தி வந்த பழைய பை அவர்களை அடையும். பைக்கே இந்த கதி என்றால் கால்சட்டை, சட்டைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால் நுகர்வு கலாசார மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் இன்றைய நடுத்தர வர்க்கத்துக் குழந்தைகள் தினம் ஒரு பையாகக் கொண்டு செல்கின்றனர். அதுவும் ரெக்சின் போன்ற பொருள்களால் தயாரிக்கப்படுபவை பூமியை மாசுபடுத்தும் ஆபத்தை உருவாக்குகின்றன. 
பிளாஸ்டிக் பயன்பாட்டில் மூன்று கோட்பாட்டை (3R) சூழலியலாளர்கள் வற்புறுத்துவர். மறுப்போம் (Refuse), மறு பயன்பாட்டிற்கு உள்படுத்துவோம் 
(Re-use), மறுசுழற்சிக்கு உட்படுத்துவோம் (Re-cycle). பொதுமக்கள் இவற்றைப் பின்பற்றினால்கூட தமிழக அரசு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ள பிளாஸ்டிக் தடை நல்லதொரு விளைவை ஏற்படுத்தும். 
பூமியின் ஆயுளை ஒப்பிடும்போது நமது வாழ்க்கை மிகவும் அற்பமானது.
ஆனால், பூமி உயிர்க் கோளமாயிருப்பதால்தான் நாம் உயிரோடிருக்கிறோம். அப்படிப்பட்ட பூமியை நாம் உயிர்க்கோளமாகவே அடுத்தத் தலைமுறைக்கும் விட்டுச் செல்ல வேண்டாமா? இலைகளிலும், தொன்னைகளிலும் சாப்பிட்டுத் தூக்கியெறிந்தபோது இயற்கைக்கு ஆபத்தில்லாமல் இருந்தது. பிளாஸ்டிக்கில் சாப்பிட்டுத் தூக்கியெறிந்தால் இயற்கைக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com