மக்களுக்கான திட்டம்தானா?

இப்போது எங்கும் சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் பற்றிய பேச்சுதான். நாட்டின் வளர்ச்சியை எதிர்ப்பதா' என்று ஆட்சியாளர்களும், எங்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா' என்று மக்களும் கேள்வி எழுப்புகின்றன

இப்போது எங்கும் சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் பற்றிய பேச்சுதான். நாட்டின் வளர்ச்சியை எதிர்ப்பதா' என்று ஆட்சியாளர்களும், எங்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா' என்று மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
அரசு அதிகாரிகள் காவல்துறையின் துணையோடுதான் ஊருக்குள் நுழைய முடிகிறது. எட்டு வழிச் சாலைக்காக தங்கள் நிலங்களை அளந்து எல்லைக் கற்களை நடும் செயல் கிராம மக்களை ஆத்திரமடையச் செய்கிறது. இயலாமையால் அழுது புலம்பவும் வைக்கிறது.
அதிகாரிகள் பெருமளவில் இழப்பீடு கிடைக்கும் என்று கூறும் ஆசை வார்த்தைகள், மக்களை அசைக்கவில்லை. காவல்துறையினரோ, திட்டத்தையே சிலர் எதிர்ப்பதாகக் கூறி, கைது என்று மிரட்டி அடக்கப் பார்க்கின்றனர். பிரச்னை தலைக்கு மேல் போய்க் கொண்டிருக்கிறது. சமூக ஆர்வலர்கள் பலர் மக்களைத் தூண்டி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தேசத் துரோகிகளாகச் சித்திரிக்கப்படுகின்றனர். கிராமங்களும், கிராம மக்களும் இல்லாமல் தேசம் எது?
ஐந்து மாவட்ட மக்களும் தங்கள் மண்ணை இழக்க முடியாமல் போராடுகிறார்களே தவிர, யாரும் திட்டத்தை எதிர்க்கவில்லை. அவர்களுக்கு இந்தத் திட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்குத் தெரியப்படுத்தாதது யார் குற்றம்?
பாரத்மாலா பரியோஜனா' என்னும் மத்திய அரசின் நெடுஞ்சாலைத் திட்டம் மூலம் நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து சேலத்துக்குப் பசுமை வழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சென்னையிலிருந்து சேலம் வரை சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பசுமை வழிச் சாலை மூலமாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை இணைத்து வணிக, பொருளாதார வழித் தடங்களை மேம்படுத்த முடியும். இதனால் புதிய தொழிற்சாலைகள் வரும்; வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தமிழக அரசு கூறுகிறது.
காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இந்தப் பசுமை வழிச் சாலை அமைகிறது. இதில் 23 பெரிய பாலங்கள், 156 சிறிய பாலங்கள், 9 மேம்பாலங்கள், வாகனங்களுக்காக 22 கீழ்வழிப் பாதைகள், பாலங்களுடனான 2 கீழ்வழிப் பாதைகள், வனப்பகுதியில் 3 சுரங்கப் பாதைகள், 8 சுங்கச் சாவடிகள், பேருந்து மற்றும் லாரிகளுக்கான 10 நிறுத்தங்கள் ஆகியவை அமைக்கப்பட இருக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தகவல்களின்படி இத்திட்டத்துக்காக சுமார் 2,560 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதனால் இந்த வழி நெடுகிலும் உள்ள விளை
நிலங்கள், காடுகள், மரங்கள், மலைகள் பாதிக்கப்படும் என்று கூறி பொதுமக்களும், விவசாய இயக்கங்களும், சில அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விளை நிலங்கள் பாதிக்கப்படாமல் மாற்றுப் பாதையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.
இதற்கிடையே, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் 5 மாவட்ட மக்களிடம் கருத்துக் கேட்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. மக்கள் கூறும் கருத்துகளுக்கேற்ப இத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை - சேலம் இடையிலான 277 கி.மீ. பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கான மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தொடர்பாக முழு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எனவே இத்திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தச் சாலை அமையவுள்ள மாவட்டங்களில் பொதுமக்களிடம் முழுமையாகக் கருத்து கேட்டு, அதை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு அரசு ஆணையிடும் கருத்துக் கேட்புப் பணி அடுத்த மூன்று மாதங்களில் முடிந்துவிடும். மக்களின் கருத்துகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் ஆய்வுக்கு உள்படுத்தி, அந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
பெரும்பான்மையான மக்கள் பசுமைவழிச் சாலையை எதிர்க்கவில்லை, தங்களது விவசாய நிலங்களை பாதிக்காமலும், கிராமங்கள், மலைப் பகுதிகளை அழிக்காமலும் மாற்றுப் பாதையில் இச்சாலையை அமைக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருகின்றனர்.
பெரும்பான்மையான மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப இத்திட்டத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. மாற்றங்கள் வேண்டும் என்றுதான் மக்களும் வேண்டுகின்றனர். எந்தத் திட்டத்தையும் திறந்த மனதோடு அணுகினால் மட்டுமே செயல்பாட்டுக்கு வரும்.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ,அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அதன் உறுப்பு நாடுகளின் சிறப்புக் கூட்டத்தில் இந்தியா பேசும்போது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஓரணியில் திரள வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் உலக அளவில் மட்டுமல்லாமல், உள்ளூர் அளவிலும் காக்கப்பட வேண்டும். சேலம் - சென்னை எட்டுவழி பசுமை வழித் திட்டத்தால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் பல கிராமங்கள் அடியோடு அழிக்கப்படுகின்றன. 10 ஆயிரம் கிணறுகள், லட்சக்கணக்கான தென்னை, பாக்கு, மாமரங்கள் பறிக்கப்படுகின்றன. பல லட்சம் வாழைகள் அழிக்கப்படுகின்றன. 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் பாதிக்கப்படுகின்றன.
ஏராளமான பள்ளிக்கூடங்கள், கோயில்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இடிக்கப்படுகின்றன. விவசாயிகளின் வீடுகளும், விளைநிலங்களும் பறிக்கப்படுவதால் அவர்கள் இருப்பிடங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெல் விளையும் பூமி அழிக்கப்படுவதால், தமிழ்நாட்டின் நெல் உற்பத்தி பாதிப்படையவும், பஞ்சம் ஏற்படவும் வழி ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஜருகு மலை, அருநூற்று மலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்தி மலை, வேதி மலை ஆகிய 8 மலைகளின் வன நிலங்களை எடுத்து சாலை அமைக்கப்பட உள்ளது.
அதற்கு ஈடாக வேறு நிலம் அரசு வழங்கி அங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வன நிலங்களில் மரங்கள் மட்டும்தானா உள்ளன? ஏராளமான வன விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழிடங்களும் அழிக்கப்படுகின்றன. தொன்று தொட்டு வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் சீரழிவுக்கு உள்ளாகும்.
எட்டு மலைகளைக் குடைந்து சுரங்கம் அமைக்கப்பட உள்ளது என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படாதா? இந்த எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்தினால் தங்களுக்குப் பெரிய பாதிப்பு வரும் என்று அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இதனை அதிகாரிகள் அரசுக்குக் கூறாமல் மெளனம் சாதிக்கின்றனர். காவல்துறை அவர்களைப் பேச விடாமல் அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. உளவுத்துறை என்ன செய்கிறது?
இதுபற்றி சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசுகையில், பசுமை வழிச் சாலைக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்தச் சாலையின் நீளமே 277.30 கி.மீட்டர்தான். இதன் மூலம், 60 கி.மீ. தொலைவு குறைகிறது. இதனால் எரிபொருள் தேவை, தேய்மானம், பயண நேரம் குறைகிறது. இந்தச் சாலை நவீன தொழில்நுட்பத்துடன் எந்த விபத்தும் ஏற்பட முடியாத வகையில் அமைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
மன்னர் ஆட்சி வேறு; மக்கள் ஆட்சி வேறு. மக்கள் ஆட்சி என்பது என்ன? மக்களால் மக்களுக்காக ஆளப்படும் ஆட்சியாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் மக்களின் கருத்தறிய வேண்டாமா?
தேர்தல் காலத்தில் தெரிவிக்கப்படும் வாக்குறுதிகள் என்ன ஆயின? ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபின் அந்த ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை எண்ணிப் பார்க்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் மக்களுக்காக உழைப்பதற்காகத்தான் பதவி என்று பேசிய பேச்சுகள் மறந்து போய் விட்டதா? மக்கள் எப்போதும் மறந்து போவதில்லை.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு போதிய உணவு, பாதுகாப்புக்கு அவசியமான படை பலம், அரசிடம் மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இவை மூன்றும் நல்ல அரசாங்கத்திற்குத் தேவையானவையாகும்' என்றார் சீன ஞானி கன்பூஷியஸ்.
நல்ல அரசாங்கம் எதை இழந்தாலும் சரி செய்து விடலாம், ஆனால் மக்களின் நம்பிக்கையை மட்டும் இழந்துவிடலாகாது. சென்னை-சேலம் பசுமைவழிச் சாலையை அமைப்பதற்கு முன் மத்திய அரசு அறிவுறுத்தியபடி மாநில அரசு மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்தை அறிய வேண்டும்.
அரசின் திட்டங்கள் எல்லாம் மக்களுக்காக என்றால் மக்களைச் சந்தித்து அவர்களிடம் பேசி அவர்கள் அனுமதியைப் பெறுவதுதானே முறை?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com