இறக்குமதி மணலும் செயற்கை மணலும்

வேளாண்மைக்கு அடிப்படை மண் வளம். வளமான மண்ணில் உயிர்ச்சத்து உள்ளதால் வேளாண்மை செழித்துப் பசுமை வளர்கிறது. மண் வளம் விவசாயம் என்றால் மணல் வளம் தொழிலின் தேவையாக உள்ளது.

வேளாண்மைக்கு அடிப்படை மண் வளம். வளமான மண்ணில் உயிர்ச்சத்து உள்ளதால் வேளாண்மை செழித்துப் பசுமை வளர்கிறது. மண் வளம் விவசாயம் என்றால் மணல் வளம் தொழிலின் தேவையாக உள்ளது. யுகம் யுகமாக உலகம் தோன்றிய நாளிலிருந்து மேட்டுப்பகுதியிலும் மலைகளிலும் பெய்த மழை வெள்ளமாகப் பெருகி, ஆறாக ஓடி, இறுதியில் கடலில் சங்கமமாகும்போது கற்களின் நுண் துகள்கள் மணல் வடிவில் நதிகளிலும், காட்டாறுகளிலும் சேமிப்பாகியுள்ளன. இப்படிப்பட்ட ஆற்று மணல் வெள்ளநீரைத் தன்னுள் இறக்கி மேல்மட்ட ஊற்றுக்கிணறுகளை உருவாக்குவதால் நீரின் ஆதாரமாகவும் மணல் வளம் திகழ்கிறது. 
புதிய தொழில் உலகத்தில் கான்கிரீட் வீடுகளின் காரணமாக மணலின் தேவை உயர்ந்து வருகிறது. வீடுகள் மட்டுமல்ல, தொழிற்சாலைகள், மேம்பாலம், அணைக்கட்டுகள் கட்டவும் மணல் தேவைப்படுவதால் மணல் வளம் சுரண்டப்படுகிறது. சிமெண்டு உற்பத்திக்கும் மணல் வேண்டும்.
கடற்கரைகளில் ஏராளமாக மணல் உள்ளது. பாலைவனங்களில் மணல் உள்ளது. ஆனால் பாலைவன மணலும் கடல் மணலும் வேலைக்கு ஆகாது. பாலைவன மணல் சிமெண்ட்டோடு ஒட்டாது. கடற்கரை மணல் உப்பரித்துவிடும். ஆகவே ஆற்று மணலைக் கொண்டுதான் கட்டடங்களை எழுப்ப முடியும். இன்றைய இந்தியாவில் ஆற்று மணல் தேவை 50 கோடி டன். உள்ளூரில் கிடைப்பது 25 கோடி டன். சரிபாதித் தேவைக்கு மலேசியாவிலிருந்தும் கம்போடியாவிலிருந்தும் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
கப்பலில் நிலக்கரி வந்தது. கப்பலில் கச்சா எண்ணெய் வந்தது. இப்போது கப்பலில் ஆற்று மணல் வருகிறது. தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமினியம் போல் ஆற்று மணலும் ஒரு சுரங்கப் பொருள். அப்படித்தான் சட்டமும் கூறுகிறது. ஆற்று மணலை யாரும் அள்ளிச் செல்லவேண்டுமானால் உரிமம் வேண்டும். அப்படிப்பட்ட உரிமம் அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர்களுக்கும், ஆளுங்கட்சி சார்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 
இது ஒருபுறம் இருக்க, அரசியல் பின்புலம் இல்லாத எம்.ஆர்.எம். ராமையா நிறுவனம் ஆற்று மணல் இறக்குமதி செய்தபோது பிடிபட்டு சட்டச்சிக்கலில் மாட்டிக் கொண்ட விவரம் சுவையானது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக நல்ல தரமான ஆற்று மணல் மலேசியாவில் ஓடும் சுங்காய் பஹாங் நதியிலிருந்து அள்ளப்பட்டு, அன்னதோரோத்தியா' என்ற கப்பலில் 55,000 டன்- அதாவது 1,850 லாரி கொள்ளளவுக்கு, 14-10-2017 அன்று தூத்துக்குடி துறைமுகத்தில் வந்து இறங்கியது. எம்.ஆர்.எம்.ராமைய்யா நிறுவனத்தின் அதிபர் விஜயராஜ் இந்த மணலை இறக்குமதி செய்தவர். இறக்குமதியானவுடன் கட்டட நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் குவிந்தன. 
ஒரு கோடி டன்னுக்கு மேல் ஆர்டர் வந்ததால் இரண்டாவது கப்பலுக்குத் திட்டமிட்டார். ஆனால் அவர் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இறக்குமதி உரிமம் இருந்தும் கூட, போக்குவரத்துத் தடை காரணமாக தமிழ்நாடு காவல்துறை கன்னியாகுமரியில் தடுத்து நிறுத்திவிட்டது. 
தமிழ்நாடு அரசின் விதிப்படி மணல் அள்ள பொதுப்பணித்துறையின் ஒப்புதல் வேண்டும். அந்த சட்டத்தில் இறக்குமதி விநியோகம் பற்றிய குறிப்பு இல்லை. விவகாரம் நீதிமன்றம் சென்றது. மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைப்படி முறையான இறக்குமதி உரிமம் பெற்று இருந்ததால் உயர்நீதிமன்றத் தீர்ப்பு விஜயராஜுக்கு ஆதரவாக இருந்தது. மாநில அரசு மணல் கடத்தல் விதிமுறையில் இறக்குமதி மணல், விநியோகம் பற்றிய குறிப்பு இல்லாத காரணத்தால் விஜயராஜின் மணல் லாரியைப் பறிமுதல் செய்ய முடியவில்லை. 
அக்குறையைப் போக்க 8-12-2017-இல் ஒரு புதிய திருத்தத்தை மாநில அரசு கொண்டு வந்தது. அதன்படி இறக்குமதி செய்யப்படும் மணல், பொதுப்பணித் துறைக்கு மட்டுமே விற்கப்பட வேண்டும். இந்த சட்டத்தை இறக்குமதியாளர் லட்சியம் செய்யாமல் உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மாநிலக் கட்டுமான நிறுவனங்களின் மணல் தேவையைப் பூர்த்தி செய்தார். மாநில அரசு விஜயராஜுக்கு ஆதரவான உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும்படி, உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தும், தீர்ப்பு ஆதரவாக இல்லை.
இப்படிப்பட்ட நெருக்கடியில்தான் நம்பியாறு நதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளிய மாஃபியா கும்பலைத் தடுத்து நிறுத்தியபோது சிறப்புப் பிரிவு காவலர் விஜய்துரை படுகொலை செய்யப்பட்டார். இதனால் தமிழக அரசு நெருக்கடிக்கு உள்ளானது. உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்ட சூழ்நிலையில், சட்ட விதிகளை மீறி திருட்டு மணல் அள்ளும் கோஷ்டிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் அளவில், உயர்நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழுவின் அறிக்கை, மணல் மாஃபியாக்களின் நடவடிக்கைளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 
மணல் விலை நிர்ணயத்திலும் கொள்ளை நிகழ்ந்து வருகிறது. தமிழக அரசு நிர்ணயித்த விலை 1 டன் மணல் ரூ.1,050 என்றாலும் ஆற்று மணல் சந்தையில் விற்கப்படுவது ரூ. 4,000. எட்டு டன் லாரிலோடு ரூ. 30,000 முதல் 40,000 வரை விற்கப்படுகிறது. காவிரி கொள்ளிட ஆறுகளில் மட்டும் 24 மணல் குவாரிகளுக்கு அனுமதி உள்ளது. அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் மணல் அள்ளுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தாமிரபரணி, பாலாறு, தென்பெண்ணை என்று பல ஆறுகளிலும் மணல் மாஃபியாக்களின் கைவரிசை எட்டியுள்ளது. 
ஒரு பக்கம் மணல் மாஃபியாக்களின் அழுத்தம். மறு பக்கம் கட்டட நிறுவனங்களின் தேவை காரணமாக தமிழ்நாடு அரசு வேறு வழி இல்லாமல், உலகின் பல நாடுகளிலிருந்து ஆற்று மணல் இறக்குமதியை அனுமதித்துள்ளது. மாநில பொதுப்பணித் துறை 30 லட்சம் டன் இறக்குமதிக்கு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரி ரூ. 578.3 கோடி ஒதுக்கியுள்ளது.
விஜயராஜ் தூத்துக்குடி வழியே இறக்குமதி செய்த மணல் பிடிபட்டதால் தூத்துக்குடியைத் தவிர்த்துவிட்டு கேரள மாநிலம் கொச்சியில் இரண்டாவது மணல் கப்பலை நிறுத்தி கேரள அரசுக்கு டன் ரூ. 2,000 விலையில் வழங்கியுள்ளார். தமிழ் நாடு அரசு கேட்ட விலை ரூ.1,050. இதனால் கேரளாவிற்கு லாபம். கேரளாவில் சந்தை விலை ரூ.2,500தான். இதுவே தமிழ்நாட்டில் ரூ. 3,500. கர்நாடகாவில் மணல் விலை ரூ.5,000 முதல் 6,000 வரை என்பதால் தமிழ்நாட்டிலிருந்து மணல் கர்நாடக மாநிலம் செல்கிறது. 
இதை நிறுத்த கர்நாடக அரசும் மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்கிறது. மகாராஷ்டிரமும் ஆந்திரமும் ஆற்று மணல் இறக்குமதியில் இறங்கிவிட்டன. எனினும், அதிகபட்ச இறக்குமதியை கேரள மாநிலம் செய்துள்ளதால் கேரள மாநிலத்தில் ஆற்று மணல் சகாய விலையில் கிடைக்கிறது.
ஆற்று மணல் தேவையில் தன்னிறைவுள்ள மாநிலங்கள் உத்தரகண்ட், ஹரியாணா, பஞ்சாப் மட்டுமே. குஜராத், ராஜஸ்தான் 20 சதவீதம் பற்றாக்குறை. உத்தரப் பிரதேசம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கர்நாடகம் 30 சதவீதம் பற்றாக்குறை. அதிகமான பற்றாக்குறை தமிழ்நாட்டில்தான். கிடைப்பது 18 லட்சம் டன், தேவையோ 60 லட்சம் டன். 
ஆற்று மணலின் தேவையை எவ்வளவு காலம்தான் இறக்குமதி மூலம் நிறைவேற்ற முடியும்? ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆற்று மணல் சுரண்டல் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளது. சுரண்டப்படும் சுரங்கப் பொருள்களில் ஆற்று மணல் மட்டுமே 80 சதவீத பங்கு வகிக்கிறதாம். கடந்த பத்தாண்டுகளில், மணல் தேவை நான்கு மடங்கு உயர்ந்துவிட்டது. உலக நதிகள் எல்லாமே பிரச்னைகளாகிவிட்டன. நதிகளைக் காப்போம்' என்பது நீரை மட்டுமல்ல, மணலையும் சேர்த்தே. மலேசியா, கம்போடியா, பிலிப்பின்ஸ் நாடுகளில் ஏற்றுமதியைத் தடைசெய்யும்படி சமூக ஆர்வலர்களின் கிளர்ச்சி எழுந்துவிட்டது. ஆற்று மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. விவசாயம் அழியும் ஆபத்து உள்ளது. 
ஆற்று மணல் இல்லாமல் கட்டடங்கள் எழுப்ப முடியுமா? கட்டடத் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் மூன்று வகையான மணல்களை உருவாக்கியுள்ளனர். முதலாவது எம்.சாண்ட். அதாவது, செயற்கை மணல். இயற்கையாக மணல் உருவாவதைப் போல் செயற்கையாக பாறைகளையும் சுரங்க கற்களையும் 150 மைக்ரோன் அளவில் பொடியாக்கி உற்பத்தி செய்யப்படுகிறது. எம்.சாண்ட் தொழிற்சாலைகள் கர்நாடகத்தில் மட்டும் உள்ளன. ஏனெனில், இந்தியாவிலேயே கர்நாடகத்தில்தான் ஆற்று மணல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இது கட்டடத்தை உறுதியாக்கும் என்றாலும் எதிர்காலத்தில் இதனால் கருங்கல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற புரளி உருவாகலாம்.
இரண்டாவது மாற்று மணல். சிமெண்டு, செங்கல் கான்கிரீட் குப்பைகளை 150 மைக்ரோன் அளவில் தூளாக்கினால் கிடைப்பது. இதில் சூழல் பிரச்னை இல்லை. ஆண்டுதோறும் 3 கோடி டன் அளவில் இந்தியாவில் கட்டடக் குப்பைகள் சேர்கின்றன. இதற்கு மூன்று தொழிற்சாலைகள் (தில்லியில் 2, ஆமதாபாத்தில் 1) உள்ளன. 
மூன்றாவது, நிலக்கரி சுரங்கக் கழிவிலிருந்து செயற்கை மணல் தயாரிக்கும் திட்டம் உள்ளது. இதற்கு நாகபுரி அருகே இடம் தேர்வாகியுள்ளது. 
நாளுக்கு நாள் ஆற்று மணலின் தேவை உயர்ந்து கொண்டே போகிறது. நகரமயமாதல் துரித கதியில் நிகழ்கிறது. புதிய புதிய வீடுகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், மேம்பாலம், புதிய புதிய தொழிற்சாலைகள் என்று, வளர்ந்து வரும் தேவைக்கேற்ப நம்மூர் ஆறுகள் மணலை அள்ளிக் கொடுக்காது. ஆற்று மணல் இறக்குமதி தேவைதான். ஒரு எல்லைக்கு மேல் அதுவும் இயலாதபோது செயற்கை மணல். செயற்கை மணலிலும் பிரச்னை வந்தால் பழையபடி மண்ணைக் குழைத்துச் சுவரெழுப்பி வீடு கட்டிக்கொள்ள வேண்டியதுதான்!

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com