திரும்பவும் வருமா திருவிழாக்கள்?

பருவந்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளப் பாரில் உள்ளோர் எடுக்கும் முயற்சிகள் விழாக்கள் ஆகின்றன. விழித்திருந்து கொண்டாடுவதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துகிற விழைவாகவும் இவை அமைவது வழக்கம்.
திரும்பவும் வருமா திருவிழாக்கள்?

பருவந்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளப் பாரில் உள்ளோர் எடுக்கும் முயற்சிகள் விழாக்கள் ஆகின்றன. விழித்திருந்து கொண்டாடுவதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துகிற விழைவாகவும் இவை அமைவது வழக்கம்.
எத்துணை பெருநகரமாக மதுரை இருந்தபோதிலும் இன்றைக்கும் அங்கே விழாக்கள் நாள்தோறும் நடந்தவண்ணம் இருப்பதைப் பார்க்கலாம். இவ்வாறே வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகரங்கள் பலவும் திகழ்கின்றன.
விழாக்காலங்களில், வெளியூர்களிலிருந்து வந்து இப்பகுதியில் இருக்கலாம். ஆனால், இங்கே இருந்து வேற்றூர்களுக்குப் புலம்பெயர்வது கூடாது என்ற கொள்கை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்திருக்கிறது. அப்படியே தொழில் நிமித்தமாகவோ, தேவை கருதியோ, செல்ல நேரிட்டாலும் பொழுதுக்குள் இல்லந் திரும்புவதை இயல்பாகவும் இலக்கணமாகவும் வைத்திருக்கின்றன நமது ஊர்கள். இப்பண்பும் பழக்கமும் இன்றளவும் ஊர்கள்தோறும் நடைமுறையில் இருப்பதைப் பார்க்கலாம்.
ஊர்களில் விழாத் தொடக்கத்தைக் காப்புக் கட்டு' என்று சொல்வதுண்டு. காப்புக் கட்டிவிட்டால், விழா முடியும் வரை ஊர்மக்கள் ஊரிலேயே இருத்தல் வேண்டும் என்பது பொதுவிதி. அதில் உணவுக் கட்டுப்பாடு, ஒழுக்கக் கட்டுப்பாடு முதலியவற்றை நடைமுறைப்படுத்த, உள்ளூர்த் தெய்வத்தை முன்னிறுத்திச் செயல்படுவதுண்டு.
ஊர் நலனுக்காக உயிர் துறந்த மாவீரனை நினைவுபடுத்துவதாகவோ, மழை தெய்வமாகிய மாரியம்மனை அல்லது ஐயனார், கருப்பர் உள்ளிட்ட காவல் தெய்வங்களைக் கொண்டாடுவதாகவோ - தெய்வத்தை முன்னிறுத்திய திருவிழாக்கள் சிற்றூர்களில் நடத்தப்படுவதைப் பார்க்கலாம்.
ஊருக்குக் காவல் தெய்வம் என்று ஒன்று இருந்தாலும் பலரும் பலவிதமாக வழிபாடு நிகழ்த்திக் கொள்ளப் பல்வேறு தெய்வங்கள் ஊர் தோறும் இருக்கத்தான் செய்யும். அதனால், ஊர்ப் பொதுவிழாக்களில் அவ்வூர்த் தெய்வங்கள் உறையும் மாடங்கள் தோறும் புதுப்பிக்கப் பெற்று, அந்தந்தத் தெய்வங்களுக்கு ஏற்ப, பூசனைகள் செலுத்தப்படுவது பண்டைக் காலம் முதலே நடைமுறையிலுள்ளவை.
அதன் காரணமாக, தெருக்களை ஒழுங்கு செய்வது, ஊருணி, தெப்பக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை மராமத்துச் செய்வது, பொது இடங்களைத் தூய்மைப்படுத்துவது என்று பொது நிலையிலும், வீடுகளைத் தூய்மைப்படுத்திச் செப்பம் செய்து புதுக்குவது என்று தனி நிலையிலும் நடைபெறுகின்றன. இவ்வாறு தம்மையும், தம் இல்லத்தையும், ஊரையும் புதுப்பித்துக்கொள்ள, இத்தகு விழாக்கள் இடமளிக்கின்றன.
குறிப்பாக, தேரோட்டம், தெப்பத் திருவிழா உள்ளிட்டவை, தெய்வத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டாலும், அவை ஊர்நலனைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பெற்றிருக்கின்றன. வீடுகளைத் தூய்மைப்படுத்தித் தெருவில் கொட்டும் நிலை இதனால் தவிர்க்கப்படுகிறது. தேரோடும் வீதிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதோடு, அவை பள்ளம் மேடுகளின்றிப் பரமாரிக்கப்படுகின்றன. மழைநீர்ச் சேகரிப்பு மையமாக இருக்கின்ற தெப்பக்குளம் முறைப்படி மராமத்துச் செய்யப்படுகிறது. உண்ணும் நீர் எடுக்கும் ஊருணிகளில் இருந்து கரகம் எடுக்கப்படுவது வழக்கம். 
எனவே, அதன் வழி அவ்வூருணியின் தூய்மை பேணப்படுகிறது. முளைப்பாரி என்னும் முளைப்பாலிகை வளர்ப்பு, பயிர்க்காப்பின் முன்னோடியாக அமைவதைப்பார்க்கலாம். நவதானியங்களை முளைக்கவிட்டு, விழா நாள்களில் கூடியிருந்து பெண்கள் கும்மியும், ஆண்கள் கோலாட்டமும் ஆடிப் பாடி மகிழ்வர். முளைப்பாலிகை வளர்கிற விதத்தை வைத்தே ஊரில் நடக்கப்போகும் நல்ல, தீய நிமித்தங்களை கணித்துக் கூறும் பெரியவர்கள் ஊரில் இருப்பர். இத்தகு விழாக்களில், அருளாடிகள் முன்னர், தத்தம் மனக்குறைகளையும் இல்லக்குறைகளையும் எடுத்துச் சொல்லித் தீர்வு காணுகிற நடைமுறைகளும் உண்டு.
பொதுவாக, தமிழர்கள் முதற்பொருள்களாகக் கருதிப்போற்றும் நிலத்தையும் பொழுதையும் முன்னிலைப்படுத்தியே இத்தகு விழாக்கள் ஊர் தோறும் எடுக்கப்படுகின்றன. பொதுவாய், முழுநிலவு தோன்றும் பெளர்ணமி நாட்களில் இவ்விழாக்கள் அமைவதைப் பார்க்கலாம். பொழுதுபோக்கு என்பது பிரதானமாக அல்லாமல் பொதுமைப்பண்பையும் ஒருமையுணர்வையும் ஊட்டி, உற்சாகத்தை வளர்க்கும் ஒரு முயற்சியாக அமைவது விழா. தமிழர்களின் தனிப்பெரும்பண்பாகிய விருந்தோம்பல், இதில் தலைமையிடம் பெறுகிறது. சுற்றமும் நட்பும் கூடி, மனம் விட்டுப்பேசி மகிழ்ந்து கொண்டாடுகிற இவ்விழாவில் சான்றோர்கள் அழைக்கப்பெற்றுச் சிந்தனைப் பரிமாற்றம் செய்துகொள்வதும், கலைஞர்கள் வரவேற்கப்பெற்றுக் கலைவளர்க்கும் நிகழ்வுகள் அரங்கேற்றம் பெறுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.
எடுத்ததற்கெல்லாம் நீதிமன்றம் ஏகாமலும், தற்காப்புக்கும் பொதுக்காப்புக்கும் காவல்துறையிடம் முறையிடாமலும் தன்னளவில் பாதுகாத்துக்கொள்ளத் தக்கதோர் முறைமையாக ஊர்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள இவ்விழாக்கள் வழிகோலியிருக்கின்றன.
அறம் பிழையாமையே பேரறமாக, ஊர்ச்சான்றோர்களால் போற்றப் பட்டிருப்பதையும் அவ்வாறு பிறழ்ந்தோர்க்கு அறமே கூற்றம் ஆகியதையும் கூறும் நாட்டுப்புறக்கதைகளும் பாடல்களும் இன்னும் அச்சேறாது அந்தந்தப் பகுதி மக்களால் பாட்டாகவும், கூத்தாகவும் பேச்சு வழக்காகவும் நினைவுகூரப்படுகின்றன.
ஊர் வளர்ச்சிக்கும் பொதுமைக்கும் மன்னர்களால் கொண்டுவரப்பெற்ற பெருந்தெய்வ வழிபாட்டை விடவும் சிறுதெய்வ வழிபாட்டுக்குப் பல்வேறு சிறப்பு இயல்புகள் உண்டு. தெய்வத்தில் சிறிது பெரிது என்பதெல்லாம் கொண்டாடப்படும் முறைமையில் அமைகிறது. பல ஊர்களில் பெருந்தெய்வவழிபாட்டுநிலை குறைந்து தோன்றினாலும் சிறுதெய்வ வழிபாடுகள் நிற்பதில்லை. அதன் நீட்சியான திருவிழாக்களும் நிற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஊர் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் இத்தகு விழாக்களே இன்றியமையாதவை எனக்கருதுகிற போக்கும் இருக்கின்றன. எனவே, அந்தந்தக் காலங்களில் எல்லா ஊர்களின் திருவிழாக்களும் முறைமை தவறாமல் நடக்கின்றன.
இவைபோக, கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப, கலைஇலக்கிய விழாக்களைக் கொண்டாடும் முறைமையும் நடைமுறையில் உள்ளது. காலத்தேவையை முன்னிறுத்தித் தொடங்கப்பெற்ற கம்பன் கழகங்கள், இளங்கோவடிகள் மன்றங்கள், திருக்குறள் அமைப்புகள், திருமுறை விழாக்கள் தலைமுறைகள்தோறும் தக்க ஒழுகலாறுகளை மக்கள் முன் கொண்டு சென்றதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. பள்ளிக் கல்வி கூடப் பெற முடியாத நிலையில் வாழும் மக்களுக்குப் பல்கலைக்கழகங்கள் போல் இத்தகு இலக்கிய அமைப்புகள் வழங்கிய கலைஇலக்கிய அறிவால் செழித்த தலைமுறையினர் நம் கவனத்திற்கு உரியவர்கள்.
இத்தகைய பின்புலங்களோடு எடுக்கப்பெற்றுவரும் திருவிழாக்கள் பலவும் இப்போது உள்ளீடற்ற நிலையில் மிகுதியும் ஆரவாரத்தன்மை கொண்டதாக மலிந்துவருவது கவலைக்குரியதாகிறது. சிறிய பெரிய திரை ஊடகங்களின் கவர்ச்சியினால் பல இடங்களில் பண்பாட்டு நிகழ்வுகள் மரபழிந்து சிதைவுக்கு ஆட்படுவதையும் பார்க்க முடிகிறது. அதனால், கரகம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கூத்து உள்ளிட்ட பல கிராமியக் கலைகள் பேணப்படாது அழிந்து வருகின்றன. ஆர்வமொடு பயிலுகிற இளந்தலைமுறை இல்லாது போனதால் மூத்த கலைஞர்களும் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். அண்டை மாநிலங்களில் பேணப்படுகிற பண்டைக்கலைகளைப்போல் தமிழகத்திற்கே உரிய கலைச்சுவடுகள் இனி இல்லாது போய்விடுமோ என்று கவலை கொள்கிறது மனம்.
பெருகிவரும் மக்கள்தொகை, அருகிவரும் வான்மழை, சிதைந்துவரும் வேளாண்தொழில் உள்ளிட்ட காரணங்களால் புலம்பெயர்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட கிராம மக்கள் இன்றளவும் தாம் பிறந்த ஊர்களை மறக்காமல் வந்து இருந்து விழாக்கள் எடுத்துக் கொண்டாடிவருகிறார்கள். ஆனபோதும் அவ்விழாக்களில் பழமை மரபுகள் பாதிக்குமேல் காணாமல் போய்விட்டன.
முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை முதலான மரபார்ந்த தாவரங்கள் நிறைந்த நந்தவனங்கள் இப்போது அருகிவிட்டன. அக்காலத்தில், உள்ளூர்களில் விளைந்து விழாக்களுக்கு உயிர்ப்பூட்டிய தென்னோலைகளும், வாழைமரங்களும், தோரணங்களுக்குரிய மாவிலைகளும், இன்னபிற இயற்கைப்பொருள்களும் இன்று அதிக அளவில் விலைகொடுத்து வாங்கி நடப்படுகின்றன. அக்கம்பக்கத்துச் சிற்றூர்களில் விளையும் பல பொருள்களையும் கடைபரத்திப் போடும் சிறுவியாபாரிகளின் கடைகளைக் காணோம். 
பயனைவிடவும் கவர்ச்சி மிகக்கொண்ட பன்னாட்டுப் பொருள்களின் விற்பனைக்கூடங்களே இப்போது திருவிழாத்தெருக்களை விழுங்கிவருகின்றன. மூச்சுத்திணறி நிழல் கிடைக்காதா என அனலேறிக் கனல்கிறது கிராமத்துக் காற்று. பல நாட்கள் சாதாரணத் தெருவிளக்குகளும் இன்றிக் கிடக்கும் பல சிற்றூர்கள் இந்த விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில், மின்விளக்கு அலங்காரங்களால் கண் கூசுமளவிற்கு ஒளிர்கின்றன.
ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் மிக்க ஆட்டபாட்டங்கள் நடத்தப்படுவதோடு நிறைவடைந்துவிடுகிற விழாக்களில் உயிர்ப்பில்லை; ஊர்களில் நீர் இல்லை; உறவுகளில் ஈரமில்லை; வழிபாட்டு நிலையில் பக்தியில்லை.
இயற்கைபேணலைக் கைவிடாது அகமும் புறமும் தூய்மையுறப் பழந்தமிழ் மரபோடு விழாக்கள் நடத்துகிற காலம் விரைவில் வருமென, நம்பிக்கை இழக்காமல் காத்திருக்கின்றன நமது ஊர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com