அவர்கள் மாற வேண்டும்...

சிலரால் பல்வேறு பெயர்களில் கேலியும் கிண்டலுமாக அழைக்கப்பட்டவர்கள், தற்போது சமூகத்தில் மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரத்தோடு,
அவர்கள் மாற வேண்டும்...


 சிலரால் பல்வேறு பெயர்களில் கேலியும் கிண்டலுமாக அழைக்கப்பட்டவர்கள், தற்போது சமூகத்தில் மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரத்தோடு, திருநங்கைகள் என கௌரவமாக அழைக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் திருநங்கைகளை பெற்றோர் உள்பட இந்தச் சமூகமே புறக்கணித்து வந்தது. தற்போது அந்த நிலை இல்லை. திருநங்கைகளை இந்தச் சமூகம் பரிவுடன் பார்க்கிறது. கல்விக் கூடங்களிலும், பணியிடங்களிலும் அவர்கள் மதிக்கப்படுகின்றனர். 

முன்பெல்லாம் திரைப்படங்களில் திருநங்கைகள் கேலிக்குரியவர்களாகவே சித்திரிக்கப்பட்டிருப்பார்கள். தற்போது அவர்களைப் பெருமைப்படுத்தியே திரைப்படங்கள் வெளியாகின்றன. மொத்தத்தில் அவர்களுக்கு சமூக அந்தஸ்து அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த சமூக மாற்றத்திற்கு ஏற்ப அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டிருக்கிகறார்களா என்பது கேள்விக்குறியே. படித்து, வேலைவாய்ப்பை பெறும் அளவுக்கு சிலர் வளர்ந்து வந்தாலும், பலர் இன்னும் பழைய நிலையிலேயேதான் உள்ளனர்.

தற்போது அவர்கள் எவரையும் மிரட்டும் அளவுக்கு செயல்பட்டு வருகின்றனர். இதனால் இந்த சமூகம் அளித்திருக்கும் அந்தஸ்தை அவர்கள் குறைத்து கொண்டு வருவதாகவே தோன்றுகிறது.

முக்கிய நகரங்களில் கடைகள்தோறும் காசு வசூலிக்கின்றனர். முன்பெல்லாம் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். இப்போது குறைந்தது ரூ.10 வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி வாங்கிச் செல்கின்றனர். திருமண வீடுகளில் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பதாகவும், கடை திறப்பு விழாக்களில் திருஷ்டி கழிப்பதாகவும் கூறி, ஆயிரம், இரண்டாயிரம் எனக் கேட்கின்றனர். இவர்களது ஆபாசமான உடை, நடை, பேச்சு ஆகியவை தற்போது அருவருப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் என்ற இளைஞரை, திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் ஓரிரு நாள்களுடன் மறைந்து விட்டது.

ஆனால் திருநங்கைகள் ரயில்களில் ஏறி மிரட்டி பணம் வசூலிப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குடும்பத்துடன் செல்லும் ஆண்கள், தங்கள் குடும்பத்தினர் முன்னால் தம்மை அவமானப்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களுக்குப் பணம் கொடுக்கும் நிலை உள்ளது.

திருநங்கை என்ற பாகுபாடு இன்றி, சக மனுஷியாகவே மக்கள் மதிக்கும் வேளையில், சில திருநங்கைகளின் அத்துமீறலால், சமூகத்தில் அவர்கள் மீதான பார்வை மாறிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

ஒரு பூக்கடைக்கு சென்றால் இலவசமாக பூ கேட்கின்றனர். கடைக்காரர் கொடுக்க மறுத்தால் அவரை எவ்வளவு கேவலமாக திட்டவேண்டுமோ அந்தளவுக்கு திட்டுகின்றனர். காய்கனி கடை மற்றும் பழக் கடைகளுக்குச் சென்று காசு கேட்கின்றனர். தராவிட்டால் பொருள்களை எடுத்துக்கொள்கின்றனர். ஒருவராகச் செல்வது கிடையாது. குழுவாகவே செல்கின்றனர். ஊர் ஊராகச் சென்று குழுவாக காசு வசூலிக்கின்றனர்.
ஒவ்வொருவருக்கும் பத்து ரூபாய் தர வேண்டும் என்றால், சிறிய வியாபாரிகளின் நிலை என்னாவது? 

சாலைகளை அவர்கள் கடக்கும்போது பார்ப்பவர்களுக்குதான் அச்சம் ஏற்படுகிறது. சேலையை மடித்துக் கட்டிக்கொண்டு அடுத்த பக்கம் பாய்கின்றனர். பேருந்துகளில் கூட்டமாக உட்கார்ந்துகொண்டு உரத்த குரலில் கோரஸாக பாட்டுப் பாடுகின்றனர். மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருக்குமே என்பது குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை. யாராவது தட்டிக்கேட்டால் மொத்தமாக சென்று வாய்கூசும் வார்த்தைகளால் திட்டுகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் கூனிக் குறுகும் நிலை ஏற்படுகிறது.

இவர்களது எல்லை மீறலை இளைஞர்கள் யாரேனும் தட்டிக்கேட்டால், மொத்தமாக சேர்ந்துகொண்டு அவர்களை வசைபாடுகின்றனர். ஒருவேளை அந்த இளைஞர் கைநீட்டிவிட்டால் அதோ கதிதான். வெளி பகுதியில் இருக்கும் திருநங்கைகளையும் கூட்டிக்கொண்டு வந்து மொத்தமாக முற்றுகையிட்டு, ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி விடுகின்றனர்.

இதற்கு பயந்தே யாரும் அவர்களை கண்டிக்க முன்வருவதில்லை. காவல் துறையிடமும் புகார் தெரிவிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் காவல்துறைக்கும் கூட பயப்படுவதில்லை. 

முக்கிய நகரங்களில், இரவு பத்து மணிக்கு மேல், பேருந்து நிலையத்தை சுற்றிலும் ஏராளமான திருநங்கைகளைக் காண முடிகிறது. அவர்கள் தங்களை அழைத்து ஆசையாகப் பேசுவதுபோல் நடித்து, தங்களிடம் இருக்கும் பணத்தை பறித்துக் கொள்கின்றனர் என்கின்றனர் சில இளைஞர்கள். இதனால் சமூகத்தில் தவறான பழக்கம் உருவாகிவிடுமோ என்கிற அச்சம் சமூக ஆர்வலர்களிடம் எழுகிறது.

திருநங்கைகள் ஏன் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். போதிய அளவில் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காதது, குடும்பத்தினர் புறக்கணிப்பதால் ஏற்படும் மன உளைச்சல், பொருளாதாரப் பிரச்னை போன்றவை காரணமாக இருக்கலாம். இக்குறைகளைக் களைய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தவறான வழிகளுக்கு செல்வதிலிருந்தும், தவறான பழக்க வழக்கங்களை கைவிடுவதற்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும். 

திருநங்கைகள் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொண்டுவிட்டால், இந்த சமூகம் அவர்களை மேலும் மதிக்கும். 

மற்ற இரு பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைக்கும் அதே விதமான மதிப்பையும் மரியாதையையும் திருநங்கைகளும் பெற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com