தலைசாய்த்த வங்கத்தின் தங்கமகன்

தூங்குகின்றபோதுகூட பாரதத்தாயின் பாதமலர்களை மறவாதவர்கள் வங்கத்து மக்கள்' என்றார் மகாகவி பாரதியார். "நாளைக்கு இந்தியா சிந்திக்கப் போவதை, இன்றைக்கே சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் வங்கத்து மக்கள்' என்றார

தூங்குகின்றபோதுகூட பாரதத்தாயின் பாதமலர்களை மறவாதவர்கள் வங்கத்து மக்கள்' என்றார் மகாகவி பாரதியார். "நாளைக்கு இந்தியா சிந்திக்கப் போவதை, இன்றைக்கே சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் வங்கத்து மக்கள்' என்றார் பண்டித ஜவாஹர்லால் நேரு. அந்த வங்கத்தில் தோன்றிய அறிவுப் பிழம்பான டாக்டர் அசோக் மித்ராவை (10.04.1928 - 01.05.2018) அண்மையில் காலன் கொள்ளை கொண்டு போனதால், ஓர் அறிவுஜீவியின் இடம் வெற்றிடம் ஆகிற்று.
அசோக் மித்ரா டாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். அவருடைய அசாத்திய ஆற்றலை உணர்ந்த லக்னௌ பல்கலைக்கழகம், உடனடியாக மித்ராவை பொருளாதாரப் பேராசிரியராக அமர்த்தியது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு, தில்லி பொருளியல் பள்ளி (ஈங்ப்ட்ண் நஸ்ரீட்ர்ர்ப் ர்ச் உஸ்ரீர்ய்ர்ம்ண்ஸ்ரீள்) அவரை இருகரம் ஏந்தி வரவேற்றது. பின்னர் நெதர்லாந்திலுள்ள ரோட்டர்டாம் பல்கலைக்கழகம் அவரை பொருளாதாரத்தில் முதன்முதலில் நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஜான் டின்பெர்கன் வழிகாட்டுதலில் பிஎச்.டி. மாணவராக ஏற்க இசைந்தது. 
பொருளாதார உலகத்திற்குப் புத்தொளி ஊட்டக் கூடிய ஓர் ஆய்வைத் தந்த பிறகு, 1956-ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய மித்ரா, தேசிய பொருளாதார ஆய்வு ஆணையத்தில் நிபுணராகச் சேர்ந்தார். பின்னர் பொருளாதார அமைச்சரவையில் தனியதிகாரியாகவும் பணியாற்றினார். 1961-ஆம் ஆண்டு, உலக வங்கியால் வாஷிங்டனில் நிறுவப்பட்ட பொருளாதார மேம்பாட்டு இயக்ககத்தில், உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால், உலக வங்கி, தன் பணிகளை அனைத்து மக்களுக்கும் சென்று சேரும்படியாகச் செயலாற்றாததால், அதனைக் கடுமையாக விமர்சித்துவிட்டு வெளியேறினார்.
இந்தியா திரும்பிய அசோக் மித்ரா, கொல்கத்தாவில் முதன் முதலில் தொடங்கப்பெற்ற இந்திய நிர்வாகவியல் நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனம் மேனாள் பாதுகாப்பு அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனனுடைய மூளைக்குழந்தையாகும். அதனால் இயல்பாக அனைவருமே மார்க்சீயத்தைச் சுவாசக் காற்றாகப் பெற்றிருந்தனர்.
1970-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்திக்கு பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றுவதற்காக மித்ரா அழைக்கப்பட்டார். இந்திரா காந்தியின் "வறுமையை ஒழிப்போம்' எனும் கொள்கை மித்ராவுக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவருக்கும் மித்ராவுக்கும் நல்லிணக்கம் இருந்தது. என்றாலும், இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்துத் தம் பதவியை ராஜிநாமா செய்தார் மித்ரா. மேலும், நெருக்கடி நிலையைக் கண்டித்து பத்திரிகைகளில் கூர்மையான கணைகளையும் தொடுத்தார். அதனால், அசோக் மித்ராவின் அனைத்து எழுத்துகளுக்கும் தடை விதித்தார் பிரதமர் இந்திரா காந்தி.
இதற்கிடையில், இங்கிலாந்திலுள்ள பிரைட்டன் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் இயக்ககத்திலிருந்து, பேராசிரியர் - ஆய்வாளர் பதவிக்கு அசோக் மித்ராவுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்ற மித்ரா, இலண்டனில் இருந்து கொண்டே "தி எகானமிஸ்ட்'பத்திரிகையில் நெருக்கடி நிலையைக் குறித்து காரசாரமாகக் கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.
நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பிறகு இந்தியா திரும்பிய அசோக் மித்ரா, மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதி பாசு தலைமையில் நிதியமைச்சராக 1977-இல் இருந்து 1986 வரை பணியாற்றினார். அவர் நிதியமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், மத்திய அரசு, வடகிழக்கு மாகாணங்களை, குறிப்பாக, மேற்கு வங்கத்தைப் புறக்கணிப்பதை, மேடைகளிலும், பத்திரிகைகளிலும் கடுமையாகக் கண்டித்தார். தாம் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் நிரூபித்து வந்தார், அசோக் மித்ரா.
முதலமைச்சர் ஜோதிபாசுவுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் 1986-ஆம் ஆண்டு நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகினார், மித்ரா. ஆயினும், 2010-ஆம் ஆண்டு ஜோதிபாசு அமரத்துவம் அடைந்தவுடன், அசோக் மித்ரா, "ப்ரண்ட்லைன்' பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டி, அவர்களுடைய பெருந்தன்மையான உறவை எடுத்தியம்புகின்றது.
அந்த பேட்டியில், "நாங்கள் மிகவும் கடுமையாக உழைத்தோம். மேற்கு வங்கத்திலே நாங்கள் தொடங்கிய முன்மாதிரிப்பணிகள் எல்லாம், இந்திய தேசத்தின் வரைபடத்தையே மாற்றிவிடக்கூடும் எனக் கருதினோம். நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலங்களை வழங்கினோம். உழவர்களுக்கு வார உரிமைகள் (60-க்கு 40) வழங்கி, அவர்களின் உரிமைகளை உறுதி செய்தோம். கிராமப்புறங்களில் மூன்று அடுக்குப் பஞ்சாயத்து அமைப்பை நிறுவினோம். அடித்தள மக்களிடமிருந்து தொடங்கி, மேல்நோக்கிச் செல்லும் நிர்வாகத்தை அமைத்திட முயன்றோம்' என்று கூறினார்.
ஆட்சியைவிட்டு வெளியேறிய பிறகும் மார்க்சிஸ்ட் கட்சி, அவரை கெüரவமாகவே நடத்தியது. "உழைக்கும் வர்க்கத்தின் ஈடேற்றத்திற்காகவும், அடித்தட்டு மக்களுக்கு வாழ்வு தருவதற்காகவும் அசோக் மித்ரா பதவியை விட்டு வெளியேறுகிறார்' எனப் பொலிட்பியூரோ தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், அவரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பின்னர் மாநிலங்களவையில் தொழில் வர்த்தகத் துறை நிலைக்குழுவின் தலைவராகவும் ஆக்கியது.
அசோக் மித்ரா ஒரு பொருளியல் வல்லுநராக மட்டுமல்ல, கவிஞராகவும், எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் திகழ்ந்தார். பன்முகம் கொண்ட படைப்பாளியாக விளங்கினார். அரசியல் களத்திலிருந்து விலகிய பின்னர் கவிஞர்களோடும், ஓவியர்களோடும், இசை வல்லுநர்களோடும் கலந்துறவாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 
"இஷ்யூஸ் இன் டெவலப்மென்ட்', "சைனா' ஆகிய தலைப்புகளில், "எகானமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி' பத்திரிகையிலும் "டெலிகிராப்' நாளிதழிலும் அவர் எழுதி வந்த கருத்துகள் அனைவராலும் பாராட்டப்பட்டன.
அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் "தி ஹூட்லம் இயர்ஸ்' எனும் கட்டுரைத் தொகுப்பும், "தி ஸ்டார்க்நெஸ் ஆப் இட்' எனும் நூலும் ஆங்கில வாசகர்களிடம் நல்வரவேற்பைப் பெற்றன. மேலும், "பிராட்லர்ஸ் டேல்' எனும் வாழ்வியல் தொகுப்பு, ஆங்கிலத்தில் வெளியானதோடு, வங்க மொழியிலும் வெளியிடப்பெற்றது. ஆங்கிலத்திலும், வங்க மொழியிலும் மித்ரா வல்லாண்மையோடு திகழ்ந்தார்.
மித்ரா வங்க மொழியில் சில புதினங்கள் உள்பட 20 நூல்களை எழுதியுள்ளார். வங்க மொழிக்கு மித்ரா ஆற்றியுள்ள சேவையை மதித்து 1996 - ஆம் ஆண்டு அவருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 
அவர் தனது 85- ஆவது வயதில், "அரெக் ராகம்' எனும் தலைப்பில் மாதமிருமுறை பத்திரிகையொன்றை வெளியிட்டு வந்தார்.
எழுத்துலகத்தில் மித்ராவுக்குச் சில கசப்பான அனுபவங்களும் உண்டு. நெருக்கடி நிலை காலத்தில் அவர் "கல்கத்தா டைரி'"எனும் நூலையும், "டெர்ம்ஸ் ஆப் டிரேட் அண்ட் கிளாஸ் ரிலேஷன்ஸ்' எனும் நூலையும் எழுதி வைத்திருந்தார். 
பல பதிப்பாளர்களை அணுகி அவற்றை வெளியிட வேண்டுமென்று கேட்டபோது, ஒருவரும் முன்வரவில்லை. ஆனால், நெருக்கடி காலம் நீங்கியவுடன், இலண்டனிலுள்ள "ப்ரான்ங் கால்' எனும் பதிப்பகம், அவற்றுக்கு 250 பவுண்ட் முதல் தவணையாகக் கொடுத்து, அந்நூல்களை வெளியிட்டது. 
அசோக் மித்ரா இறுதிக்காலம் வரையில் எழுத்தையும் பேச்சையுமே தம் இரண்டு கண்களாகப் பாவித்து வந்தார். கடைசிக் காலத்தில் அவருடைய கை கொண்டு எழுத முடியாதபொழுது "கணசக்தி' எனும் பத்திரிகைக்கு, வாய்மொழி மூலமாகவே வரைவுகளை வழங்கினார். அஜய் தாஸ்குப்தா எனும் மூத்த பத்திரிகையாளர், மித்ரா சொல்லச் சொல்ல எழுதிக்கொள்வார்.
1981-ஆம் ஆண்டு அசோக் மித்ரா மேற்கு வங்க நிதியமைச்சராகவிருந்தபோது, அவர் தலைமையில் கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில், பாரதியும் இந்திய சுதந்திரமும் குறித்த தலைப்பில் பேசினேன். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபொழுது, நேரம் இரவு எட்டு மணிக்கு மேலாகிவிட்டிருந்தது. அசோக் மித்ராவின் கார் ஓட்டுநர் காரைக் கொண்டுபோய் தலைமைச் செயலகத்தில் நிறுத்திவிட்டு, வீட்டிற்குச் சென்றுவிட்டார். அசோக் மித்ரா வெளியே வந்தபொழுது, கார் இல்லை. விழாக்காரர்கள் அவருக்கு வாடகைக்கார் ஏற்படுத்தித்தர முயன்றனர். ஆனால், அவர், "எனது வீடு அருகில்தான் உள்ளது; நான் நடந்து சென்றுவிடுவேன்' என்று கூறி, நடந்தே போய்விட்டார். 
வங்கத்தின் தங்கமகன் தன் இறுதி மூச்சை நிறுத்துவதற்கு முன், "எந்தப் பெரிய சாதனையையும் செய்தேன் எனச் சொல்லிக் கொள்ள இடமேதுமில்லாத எனது எளிய வாழ்க்கையில், எனக்குத் தெளிவாகவும், முழுமையாகவும் மனநிறைவு அளித்த இரண்டு செய்திகள் உள்ளன. ஒன்று, நான் இரவீந்திரநாத் தாகூர் பேசிய மொழியையும், அவர் வளர்த்த கலை - பண்பாட்டையும் கொண்டு பிறந்தேன். இரண்டு, தொடக்கத்திலிருந்து, எனது சிந்தனையும் மனசாட்சியும் மார்க்சீய சிந்தனைகளில் ஒளிவீசப்பட்டு துலங்கின' என்று கூறியுள்ளார். மானுடத்தில் நாம் நம்பிக்கையிழக்காமல் இருப்பதற்கு அசோக் மித்ரா போன்ற தங்கமகன்கள் அவ்வப்போது வந்து, முதலுதவி செய்துவிட்டுப் போகிறார்கள். 
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com