வட்டி உயர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே! 

இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் 6 - ஆம் தேதி அறிவித்துள்ள கடன் மற்றும் நிதிக் கொள்கை' பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. யாரும் எதிர்பாராத நேரத்தில்,

இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் 6 - ஆம் தேதி அறிவித்துள்ள கடன் மற்றும் நிதிக் கொள்கை' பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. யாரும் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத முடிவை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு மேற்கொண்டதே அதற்குக் காரணம். பொருளாதாரம் முன்னேற்றம் அடையத் தொடங்கிய நேரத்தில், ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கிடும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக அதாவது கால் சதவிகிதம் உயர்த்தப்பட்டது ஏன் என்கிற கேள்வி பலர் மனத்திலும் எழுந்ததில் வியப்பில்லை.
ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன? அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல இது. சம்பந்தப்பட்ட குழு இதுவரை இல்லாத வகையில் லிமூன்று நாள் தொடர்ந்து விவாதித்து எடுத்த முடிவு. நாட்டின் பொருளாதார நிலை பல கோணங்களில் அலசப்பட்டது. பொருளாதார நிலை சீரடைந்து வருவது உண்மை. ஆனால் அடுத்து வரும் மாதங்களில் பணவீக்கம் மீண்டும் உயருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், அப்படி நேராமல் தடுக்கவும், ÷ஒருவேளை நேர்ந்தால் அதை எதிர்கொள்ளவும்தான் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஆக இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரெப்போ ரேட்' உயர்த்தப்பட்டுள்ளது. மோடி அரசு அமைந்த பிறகு அறிவிக்கப்பட்டுள்ள முதல் வட்டி அதிகரிப்பு இது. கடந்த காலத்தில், ரகுராம் ராஜன் கவர்னராக இருந்தபோது, ஒவ்வொரு முறையும் கால் சதவீதம் என நான்கு முறை தொடர்ந்து ரெப்போ ரேட்' குறைக்கப்பட்டது. உர்ஜித் படேல் கவர்னர் பொறுப்பை ஏற்ற பிறகு, அவர் பங்குக்கு, கால் சதவீதமாக இரண்டு முறை ரெப்போ ரேட்' குறைக்கப்பட்டது. கடைசி வட்டி குறைப்பு நிகழ்ந்தது 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்.
அதேபோன்று, தற்போதைய வட்டி அதிகரிப்புக்கு முந்தைய அதிகரிப்பு நிகழ்ந்தது ரகுராம் ராஜன் காலத்தில். 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரெப்போ ரேட் ' அரை சதவிகிதம் உயர்த்தப்பட்டு எட்டு சதவிகிதமாக நிலை நிறுத்தப்பட்டது.
தற்போது, நிதிக் குழுவில் இடம் பெற்றுள்ள ஆறு உறுப்பினர்களும் ஒருமனதாக ரெப்போ ரேட்'டை கால் சதவிகிதம் உயர்த்த இசைந்துள்ளனர் என்றால் அதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முதலாவது, கடந்த பல மாதங்களாக சரிந்து கொண்டிருந்த பணவீக்கம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் எதிரொலியாக, உலக அளவில், வளரும் நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள வர்த்தகப் போராட்டங்கள், அதன் காரணமாக எழுந்துள்ள நிலையற்ற தன்மை, அமெரிக்க டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது, அமெரிக்க ரிசர்வ் வங்கி (ஃபெடரல் ரிசர்வ்) அவ்வப்போது வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது, அதன் விளைவாக இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் உள்ள அந்நிய முதலீடுகள் படிப்படியாக வெளியேறுவது - இவை போன்ற பல வலுவான காரணங்களால்தான் இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட்'டை உயர்த்தியுள்ளது.
2018 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், மே மாதம் வரையிலான ஐந்து மாதங்களில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தை மற்றும் முதலீட்டுச் சந்தையிலிருந்து, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனர் என்பது உண்மையிலேயே கவலை அளிக்கும் செய்திதான். ஜூன் மாதம் முதல் வாரம் வரை, இந்திய முதலீட்டுச் சந்தையிலிருந்து வெளியேறிய அந்நிய முதலீடு 6.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 45,000 கோடி) ஆகும். இவை இந்திய ரூபாயின் மதிப்பு குறைய வழிவகுத்துவிட்டன.
அதே ÷நேரம், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தற்போதைய வட்டிக் குறைப்பு நடவடிக்கையின் நோக்கம் அந்நிய முதலீடுகள் வெளியேறுவதைத் தடுப்பது அல்ல. ரிசர்வ் வங்கி மற்றும் நிதிக்கொள்கை குழுவின் முக்கிய நோக்கம் உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே' என்கிறார்.
எது எப்படி இருந்தாலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-19 நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என்று ஏற்கெனவே அறிவித்ததை மீண்டும் ரிசர்வ் வங்கி உறுதி செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதேநேரம், பணவீக்கத்தைப் பொருத்தவரை, நிதிக் கொள்கைக்குழு ஏற்கெனவே கணித்திருந்த 4.4 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாக அதிகரித்திருப்பது கவலையளிக்கும் அம்சம் என்பது உண்மையே. உலக அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரித்திருப்பதே, இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்கிற கணிப்புக்கு அடிப்படையாக உள்ளது. சென்ற மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 66 டாலராக (ரூ. சுமார் 4,400) இருந்தது, தற்போது 74 டாலராக (ரூ. சுமார் 5,000) அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு கடுமையானதும் அதிக காலம் நீடிக்கக்கூடியதுமாகும் என்கிறது நிதிக் கொள்கைக் குழு. இந்நிலையில் இந்தியாவில் ரெப்போ ரேட்' இம்மாத முதல் வாரத்தில்தான் உயர்ந்தது என்றாலும், அதற்கு சில நாள்கள் முன்பே சந்தையில் வட்டி விகிதம் அதிகரித்துவிட்டது.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனம்' கருத்துத் தெரிவிக்கையில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ' வட்டி விகித அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று கூறியுள்ளது.
ஆனால், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமாரின் கருத்து வேறு விதமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு நடுநிலையானது என்றும் அவ்வப்போது மாறும் நிலைமைக்கேற்ப தனது செயல்பாடுகளை அது மாற்றிக்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதில் வியப்பளிக்கும் விஷயம் என்னவெனில், கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் வளர்ச்சியை முன்னிட்டு, வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று வாதாடி வந்தது. இந்
நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்திருப்பதை மத்திய அரசு நியாயப்படுத்தியிருக்கிறது.
வரும் செப்டம்பரில் பண வீக்கம் 4.8 அல்லது 4.9 சதவீதமாக இருக்கும் என்பது ரிசர்வ் வங்கியின் கணிப்பு.
ஜி.டி.பி. என்கிற நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு, 2018-19-இன் முதல் அரையாண்டில் 7.5 சதவீதமாகவும், இரண்டாவது அரை ஆண்டில் 7.3 அல்லது 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை அறிவித்த இம்மாதம் 6-ஆம் தேதியில், பத்து ஆண்டுகளுக்கான அரசு பத்திரங்களின் (BONDS) வட்டிவிகிதம் 7.91ஆக உயர்ந்திருந்தது. அதேபோல் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 67.15 ரூபாயிலிருந்து 66.92-ஆக ஆனது. பருவமழை உரிய காலத்திலும் ஒரே சீராக, பரவலாகவும் பொழியுமானால் பணவீக்கம் கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
ஒருவேளை கச்சா எண்ணெயின் விலை மீது மத்திய அரசின் வரிவிதிப்புக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு, அதன் லிமூலம் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறையுமானாலும் பணவீக்கம் குறையக்கூடும். அதனால் வட்டி வீதம் குறையலாம்.
இது ஒருபுறம் இருக்க, தற்போதைய நிலையில் ரெப்போ' வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், கணிசமான அளவில் அந்நிய முதலீடுகள் மீண்டும் இந்தியாவுக்கு வருவதற்கு வழி பிறக்கும்.
அதேநேரம், மேற்கூறிய வட்டி உயர்வு, சாதாரண மற்றும் நடுத்தர மக்களை எப்படி பாதிக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.
வீட்டுக்கடன், வாகனக்கடன், தனி நபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் உடனடியாக அதிகரிக்கும். அதன் விளைவாக வாடிக்கையாளர்கள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகை (ஈ.எம்.ஐ.)அதிகரிக்கும். இதனால் பலருடைய குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழக்கூடும்.
நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். ரிசர்வ் வங்கியின் முக்கியக் கடமை, வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்கு தடையில்லாமல் வழங்க வழிவகுப்பதே. அதே சமயம், பணவீக்கம் அதிகரிக்காமலும் அதன் காரணமாக விலைவாசி ஏற்றச் சுமை மக்கள் தலையில் விழாமலும் பார்த்துக்கொள்ளவும் வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கிக்குப் புதிய கவர்னர்கள் வரலாம்; அவர்கள் மாறலாம். இதுவரை ரிசர்வ் வங்கியின் கவர்னர்களாக பல பெரும் புள்ளிகள் வந்துள்ளனர். மன்மோகன் சிங், டாக்டர் சி.ரங்கராஜன், பிமல் ஜலான், ஒய்.வி.ரெட்டி, டி.சுப்பராஜ், ரகுராம் ராஜன் இப்போது உர்ஜித் படேல் என பல வல்லுநர்கள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பை ஏற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்குமே மேற்கூறிய இரட்டை இலக்கை எட்ட வேண்டும் என்பதே பிரதான குறிக்கோளாக இருந்து வந்துள்ளது.
இந்த இலக்கை எட்டுவதற்கு ரிசர்வ் வங்கியின் கையில் உள்ள ஒரே ஆயுதம் ரெப்போ ரேட்' மட்டுமே. அதனை எவ்வளவு சிறப்பாகக் கையாள முடியுமோ, அவ்வளவு சிறப்பாக அவர்கள் கையாண்டு வந்துள்ளனர். ஆக, ரிசர்வ் வங்கியின் தற்போதைய வட்டி உயர்வு நடவடிக்கை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே என்பது தெள்ளத் தெளிவு.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com