நீரவ் மோடி வங்கிகளுக்கு போதித்த பாடம்

பல லட்சம் கோடி ரூபாய் அளவில் வாராக்கடன் எனும் சுனாமியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வங்கிகள், மத்திய அரசின் மறு முதலீட்டு திட்டத்தினால் புத்துயிர் பெற்று மீண்டு

பல லட்சம் கோடி ரூபாய் அளவில் வாராக்கடன் எனும் சுனாமியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வங்கிகள், மத்திய அரசின் மறு முதலீட்டு திட்டத்தினால் புத்துயிர் பெற்று மீண்டு எழுந்துவிடும் என்ற நம்பிக்கை நிழலில் நாம் அனைவரும் இளைப்பாறிக் கொண்டிருக்கும் தருணத்தில், வங்கி கடன் மோசடிகள் பற்றிய செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து, நம்மை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன.
செயல்பாட்டு வழி முறைகளில் ஏற்பட்ட சில குறைபாடுகள்தான் இம்மாதிரி மோசடி நிகழ்வுகளுக்கு காரணம் என்று சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்டாலும், அந்த குறைபாடுகளை குறைந்த இடைவெளியில் அடையாளம் கண்டு, சரி செய்யாமல்விட்டதுதான் பெரிய நிர்வாக குறைபாடு என்ற முடிவுக்கு வருவதற்கு பெரிய பொருளாதார நிபுணத்துவம் தேவை இல்லை.
புலனாய்வு அமைப்புகள், இந்த நிகழ்வுகளின் பிண்ணனியை ஆராய்ந்து, அனைத்து குற்றவாளிகளையும் தேடிக் கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்து அவர்களை தண்டிப்பதற்குள் ஆண்டுகள் பல ஓடிவிடும். நீதிமன்றங்களில் வழக்கின் வாதங்களை வலுப்படுத்த தேவையான அனைத்து ஆவணங்களும் சிதைக்கப்படாமல், புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டும். வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல், கடனாளிகள் எல்லை தாண்டி தப்பித்துவிட்டால், அந்நிய நாட்டு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டிய கட்டாயத்தில், இந்த அமைப்புகளின் பணி மிகக் கடினமாகிவிடும். இந்த சூழ்நிலையில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், வங்கிகள் இம்மாதிரி மோசடிகளில் இழந்த தொகையை முழுவதும் மீட்டு எடுப்பது என்பது இயலாத காரியம் என்பதை நாம் அறிவோம். 
வங்கிகளில் பெருந்தொகை கடன் மோசடிகள் அரங்கேறுவதற்கு முக்கிய காரணம், கடனாளிகள், வங்கி நிர்வாகத்தைவிட அதிக நுண்ணறிவும், ஆற்றலும், சமயோசித புத்தியும், சமூக அந்தஸத்தும், வலுவான தொடர்புகளும் பெற்றிருப்பதுதான் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆகவே, இவர்களின் மோசடி நடவடிக்கைகளிலிருந்து, வங்கி நிர்வாகங்கள் பாடம் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை.
சமீப காலங்களில், தங்க நகை மற்றும் வைர வியாபாரங்களுக்கு பல வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள், வசூலிக்க முடியாமல் வாராக்கடன்களாக மாறிய அனுபவங்கள் பகிரப்படாமல் அல்லது பகிரப்பட்டு பாடம் கற்கப் படாமல் இருந்தது வங்கி நிர்வாகங்கள் அறிந்தே செய்த தவறாகும். தங்கம் மற்றும் வைர வியாபாரத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் வழங்கும்போது, பிணை மதிப்பீடுகளுக்குத் தேவையான நுண்ணறிவு வங்கிகளிடம் அறவே கிடையாது என்று சொல்லலாம். 
பல வகைப்பட்ட வைரங்கள், தரத்திற்கு ஏற்ப பல்வேறு மதிப்புடையவை. அவைகளுக்கான தர மதிப்பீட்டு திறமை பிரிவு வங்கிகளில் இல்லை. அதற்கு பதிலாக, மற்ற எல்லாவற்றையும்விட, கடனாளியின் சமூக அந்தஸ்துக்கான மதிப்பீடு ஒன்றை மட்டுமே, பெரும் அளவில் கடன் வழங்குவதற்கும், வழங்கப்பட்ட கடனை வசூல் செய்யாமல் இருப்பதற்கும் வங்கிகளால் பின்பற்றப்படும் தவறான நடைமுறை என்பது பெரும் குறையாகும். 
நல்ல சமூக அந்தஸத்து உள்ளவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் வங்கிகளிடையே வேரூன்றி இருப்பது இம்மாதிரி நிகழ்வுகள் மூலம் வெட்டவெளிச்சமாகின்றது. இது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டிய ஒரு பெரும் குறையாகும்.
நீதிமன்றம் வேதனையுடன் சுட்டிக் காட்டும் அளவுக்கு, 25,000 ரூபாய் கல்விக் கடனுக்கு ஆயிரம் வினாக்களை எழுப்பி, கடனை மறுக்கப் பாடுபடும் வங்கி அதிகாரிகள், பெருந்தொகை கடனாளிகளிடம் எந்தவித வினாக்களையும் எழுப்பாததை செயல்பாட்டு வழிமுறையிலுள்ள குறை என்பதைவிட, அவர்களின் செயல்திறன் மற்றும் சமூக நலனுக்கான அக்கறையில் குறைபாடு என்றே கருதலாம். 
பெரும்பாலும், வைரம் போன்ற அரிய வகை கற்களுக்கான மூலப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை பட்டை தீட்டப்பட்டு, குறிப்பிட்ட பிராண்ட் பெயருடன் பெருமளவில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது நடைமுறை வியாபாரமாகும். இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் நிதித் தேவைகளை சமாளிக்க வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்களில் நிதி உதவி வழங்கி, பன்னாட்டு வியாபாரத்தை ஊக்குவிக்கின்றன. 
அவ்வாறு வழங்கப்பட்ட கடன் திட்டத்தின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு, அதை விற்றவர்களுக்கு செலுத்த பயன்படுத்தப்படுகிறதா என்று வங்கிகள் கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். மேலும், வங்கி கடனில் கொள்முதல் செய்யப்பட்ட மூலப்பொருள் மேம்படுத்தப்பட்டு / பதப்படுத்தப்பட்டு விற்கப்பட்டால்தான், அந்த விற்பனை தொகையை பயன்படுத்தி, கடனாளி கடனை திரும்ப செலுத்த முடியும். இல்லையென்றால், அந்த கடன் வாராக்கடனாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம். 
வைர ஏற்றுமதி வியாபாரத்தில் பல தில்லுமுல்லுகள் நடைபெறுவதாக முந்தைய வங்கி மோசடிகள் மூலம் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வெளிநாட்டில் பெயரளவில் இயங்கும் தங்கள் குழு சார்ந்த துணைநிறுவனங்களுக்கு வைரக்கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அதற்கான கடன் தொகை பெறப்பட்டுவிடும். ஆனால், விலை மதிப்பற்ற கற்களுக்கு பதிலாக, சாதாரண கற்கள் அனுப்பப்பட்ட திகில் மோசடி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இம்மாதிரி மோசடிகளால் வங்கிகளின் பொருளாதார இழப்பு ஏராளம். தற்போதைய நிகழ்வுகளும், ஏறக்குறைய இந்த மோசடி சூத்திரத்தின் அடிப்படையில்தான் நிகழ்ந்திருக்கிறது எனலாம். இம்மாதிரி, கடந்த கால இழப்பு சரித்திரக் குறிப்புகளை வங்கிகள் புரட்டிப் பார்த்து பாடம் படிக்க மறந்தது பெரும் குறையாகும். 
ஒவ்வொரு வங்கியிலும், பெரும் செலவில், ஐ.டி. துறை இயங்கி வருகின்றது. வங்கிகளின் வணிக செயல்பாடுகள் கணினிமயமாக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் பல செயல்பாடுகள் கணினி தொடர்பில்லாமல், கையேட்டு முறையிலேயே (manual process) நடத்தப்பட்டு வருகின்றன. பல வங்கிகளின் நிலை இதுதான். ஆனால், கணினி இணைப்பு இல்லாத செயல்பாடுகளை அறவே துறக்க, வங்கி நிர்வாகங்கள் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது பெரும் குறையாகும். 
வங்கி அதிகாரிகளை கவர்வதற்காக, மோசடி நோக்குடன் செயல்படும் கடனாளிகள் அவ்வப்போது பல கவர்ச்சி வலைகளை விரித்துக் கொண்டிருப்பார்கள். அந்த வலைகளில் சிக்காமல் தப்பித்தால்தான் வங்கி அதிகாரிகளால் தங்கள் கடமையை செவ்வனே ஆற்ற முடியும். கடனாளி-அதிகாரி நெருங்கிய கூட்டணியைத் தவிர்க்கும் நோக்கத்துடன், குறிப்பிட்ட இடைவெளியில் அதிகாரிகளை வேறு பொறுப்புகளுக்கு மாற்றும் வழிமுறை வங்கிகளில் இருந்துவருகிறது. ஆனால், மேல்மட்ட நிர்வாக கூட்டணியுடன் பல அதிகாரிகள் இந்த நடைமுறையிலிருந்து தப்பி வருவதைக் கண்டுபிடிக்க, வங்கி நிர்வாகம் தவறியது பெரும் குறையாகும். ஆழ்ந்து ஆய்வு செய்தால், இது போன்ற குறைபாடுகள் மற்ற வங்கிகளிலும் நிலவுவதைக் கண்டுபிடித்து, அதை நிவர்த்தி செய்யலாம்.
கடந்த பல ஆண்டுகளாக தம்மைச் சுற்றி நடக்கும் மோசடிகளை சிறிதும் உணராமல் பணிபுரிந்த குறிப்பிட்ட வங்கிப் பணியாளர்களின் அணுகுமுறை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அர்ப்பணிப்பு, முழு ஈடுபாடு, சமூக நோக்கு ஆகிய குண நலன்கள் பணியாளர்களிடையே வளர்க்கப்பட வேண்டிய அவசியத்தை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. 
மூன்றாண்டு குறுகிய காலத்திற்கு தலைமைப் பதவிக்கு அமர்த்தப்படும் அதிகாரிகள், வங்கி சொத்துப் பாதுகாப்பைவிட, தங்கள் சொந்த பாதுகாப்புக்கே முதலிடம் வழங்குவதாக கருத்துகள் நிலவி வருகின்றன. தங்கள் சொந்த பாதுகாப்புக்கு இவர்கள் அரசியல் தொடர்புகளை நாடுவதால், பல நிர்வாக செயல்பாடுகளில் அவர்களின் சொற்படி நடக்கவேண்டியது அவசியமாகிறது. இதனால், வங்கி சொத்து பாதுகாப்பு பிறழும் வாய்ப்புகள் உள்ளன.
மோசடி தொடர்ந்த கடந்த சில ஆண்டுகளில், அந்த மோசடிகளில் வங்கித் தலைமைப் பதவிக்கு அமர்த்தப்பட்ட அதிகாரிகளின் நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், பொது சொத்துகளைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறியதற்கான தார்மிக பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டியது அவசியமாகும்.
வங்கிகளின் அனைத்து செயல்பாடுகளையும் மேற்பார்வையிடும் பொறுப்பை வகிக்கும் வங்கி நிர்வாகக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள், அவை சம்பந்தமான நுண்ணறிவைப் பெற்றவர்களாக இருப்பது மிக அவசியமாகும். அனைத்து பொது துறை வங்கிகளின் நிர்வாக செயல் குழுக்களையும் கூர்ந்து ஆராய்ந்து, அவைகளை மறு சீரமைப்பது மிக அவசியமாகும். 
அரசு கஜானாவை நிர்வகிக்கும் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகள், ஒவ்வொரு குடிமகன் செலுத்தும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை பெருமளவில் விழுங்கி, அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் வல்லமை படைத்தவை என்ற சமூக உணர்வு, வரும் காலங்களில் வங்கி அதிகாரிகளின் மனதில் வேரூன்றி வளர வேண்டும். 
வங்கித் தொழில் நிர்வாகத்தை பொருத்தவரை, அதிகாரிகள் தங்களின் செயல்பாடுகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஆக்கவும் செய்யலாம்; அழிக்கவும் செய்யலாம். அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மட்டும்தான் ஒவ்வொரு இந்திய குடிமகனும் எதிர்பார்க்கிறான் என்று சொன்னால் அது மிகையாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com