ஒரு நாடு ஒரு மொழி

மனிதர்கள் பேசும் மொழியென்பது பல நூறு ஆண்டுகளில் அறிவால் உண்டாக்கப்பட்டு ஞானத்தால் சீரமைக்கப்பட்டது. அதாவது பேச்சு என்பது வெறும் ஓசையோ, சப்தமோ கிடையாது.

மனிதர்கள் பேசும் மொழியென்பது பல நூறு ஆண்டுகளில் அறிவால் உண்டாக்கப்பட்டு ஞானத்தால் சீரமைக்கப்பட்டது. அதாவது பேச்சு என்பது வெறும் ஓசையோ, சப்தமோ கிடையாது. சமூகத்தில் பல நூற்றாண்டுகளில் உருவான கலை இலக்கியம், பண்பாடு, உளவியல், இறை நம்பிக்கை, குடும்பம், தொழில், வாணிபம் என்று பலவற்றால் கட்டமைக்கப்பட்டது.
மொழியில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் கொண்டது. சில சொற்களுக்குப் பல அர்த்தங்களும், பல சொற்களுக்கு ஓர் அர்த்தமும் கொடுத்து இருக்கிறார்கள். மொழியில் அர்த்தம் இல்லாத சொல் என்பதே கிடையாது. எல்லா சொற்களும் அதற்கான இலக்கணப்படியே பேசப்படுகிறது; எழுதப்படுகிறது.
மொழியில் சொல்லென்பது இனிமையும், நயமும், வசீகரமும் கொண்டது. அது சொல்லப்படும்போது மனம் கவர்கிறது. கேட்கும்போது புளகாங்கிதம் அடைய வைக்கிறது. எனவேதான் சொல் மாலை புனைந்து இருக்கிறார்கள். வாடாத சொல் மாலை காலம் காலமாக நறுமணம் வீசிக்கொண்டு உள்ளது. கவிதையாக ஜீவித்துக் கொண்டு இருக்கிறது. சொல்லில் எத்தனை சொன்னாலும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறார் வள்ளுவர்.
மல்லிகைப் பூ வெண்மையாக இருக்கிறது என்பது அதன் நிறத்தைக் குறிக்கிறது. அதுதான் நேராகச் சொல்லப்படுவது. அதில் சொல்லப்படாதது, மல்லிகைப் பூ சிவப்பாக இல்லை; மஞ்சள் நிறத்தில் இல்லை; வெண்மையென்ற ஒரே நிறத்தைக் கொண்டிருக்கிறது என்பதுதான். அதனைச் சொல்வதும், சொல்ல வைப்பதும் அறிவுதான். மொழியென்பது ஞானத்தின் இருப்பாகிவிடுகிறது. அது மக்களைத் தாய்மொழி மீது பெருமிதமும், பற்றும் கொள்ள வைக்கிறது.
எந்த நாடும் எல்லா காலத்திலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அந்நிய நாடுகளின் படையெடுப்புகள், இயற்கைப் பேரிடர்கள், மக்கள் புலம்பெயர்வு, மக்களின் கிளர்ச்சி, தொழில், வாணிபம் என்பவற்றால் எல்லைகள் மாறி புதிய நாடாகி விடுகிறது.
பழைமையும், பெருமையுங் கொண்ட இந்தியா பல நூற்றாண்டுகளாகப் பன்மொழிகள், பல கலாசாரங்கள், பல சமயங்கள், பல இன மக்கள் கலந்து வாழும் தனியான நாடுகளாகவே இருந்து வந்தது.
பதினேழாவது நூற்றாண்டில் வாணிபம் செய்வதற்காகக் கடல் வழியாக வந்த இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றி, ஆட்சி புரிய ஆரம்பித்தது. கம்பெனியின் மொழியான ஆங்கிலம் நிர்வாக மொழியாக இருந்தது.
1858-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது. அரசின் நிர்வாகம் முழுவதும் ஆங்கிலமயமாக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்களின் மொழியாக அது மாறியது. அது இந்தியாவிற்கு மட்டும் ஏற்பட்ட நிலை இல்லை. அமெரிக்கா, கனடா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்பட பல நாடுகளின் நிர்வாக மொழியாகியது ஆங்கிலம். அரசுப் பணிகள் பல உருவாகின. அவற்றில் பணியாற்றப் பலரும் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சி, கலை இலக்கிய மறுமலர்ச்சியில் ஆங்கில மொழிக்கும் பெரும் பங்கு கிடைத்தது. பல நாட்டு தத்துவ நூல்கள், சமய பனுவல்கள், அரசியல் கட்டுரைகள் எல்லாம் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டன. அதனால் அறிவு பெற விழைந்தவர்கள் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தார்கள். பல நவீன, பழைய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தன.
இங்கிலாந்து அறிவைப் பெறுவதற்கு உரிய களமாகவும் தன் அறிவை நிலைநாட்டக் கூடிய இடமாகவும் இருக்கிறது என்று பிரிட்டிஷ் காலனி நாட்டினர் கருதினார்கள்.
இந்தியாவில் பாரம்பரிய முறையிலான நீதி பரிபாலன முறை கைவிடப்பட்டு, ஐரோப்பிய சட்ட ரீதியிலான முறைக்கு மாற்றப்பட்டு இருந்தது. அது வக்கீல்களின் சாமர்த்தியம் சார்ந்தது. நிறைய பணம் சம்பாதிக்கக் கூடிய தொழிலாகவும், கெளரவம் மிக்கவும் இருந்தது. எனவே இந்திய குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், வருங்காலம் வக்கீல் தொழிலுக்கானது என்பதை அறிந்து கொண்டவர்கள், தம் மக்களை வக்கீல் தொழிலில் உச்சமான பாரிஸ்டர் படிப்பு படிக்க இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்கள். இந்திய இளைஞர்கள் ஆங்கில மொழி வழியாகத்தான் சட்டம் படித்தார்கள்.
சிலர் அரசியல் தத்துவம், இலக்கியம் படித்தார்கள். சாக்ரடீஸ் உரைகளும் பிளேட்டோ குடியரசு தத்துவங்களும், காரல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், 'மூலதன'த்தையும் படித்து அடியோடு மாறிப் போனார்கள். சுதந்திரம், சமத்துவம் மானிடத்தின் பொதுப் பண்பென கொண்டார்கள்.
'ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமைப்படுத்தி ஆள, குடிமக்களை அடிமைகளாக வைத்திருக்க, அவர்களை வறுமையில் வாட வைக்க யாருக்கும் உரிமை இல்லை. மனிதர்கள் சுதந்திரமாகப் பிறக்கிறார்கள். அவர்கள் சுபிட்சமாகவும் பரிபூரண சுதந்திரத்தோடு வாழ வழி செய்து கொடுப்பதுந்தான் அரசாங்கத்தின் ஒரே வேலை' என்ற சித்தாந்தத்தோடு இந்தியா வந்தார்கள். அவர்களுக்கு பாரிஸ்டர் தொழில் மீது இருந்த நாட்டம் போய்விட்டது. அந்நிய நாட்டில், அயல்மொழி மூலமாகவே தங்களையே அறிந்து கொண்டார்கள். ஒரு மனிதனின் சிந்தனை சொல்லில் சொல்லப்பட்டதும் எல்லோர்க்கும் பொதுவாகிவிடுகிறது.
மொழியே அவர்களுக்கு முற்போக்கான சிந்தனைகளைக் கொடுத்தது. அதுதான் கல்வி என்பதன் அடிப்படை. அந்தக் கல்வி மொழி வழியாகவே கிடைக்கிறது.
இங்கிலாந்தில் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்து வந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்வரிசையில் இருந்த தலைவர்களில் சிலர் ஆங்கில மொழியை அடிமையின் சின்னமாகக் கருதினார்கள். அது அந்நிய மொழி என்று பழித்துரைத்தார்கள்.
'நாம் சுதந்திரம் பெறும்போது, தன் நாட்டிற்குச் செல்லும் ஆங்கிலேயர்களோடு அவர்களின் மொழியையும் கப்பல் ஏற்றி அனுப்பிவிட வேண்டும்; ஆங்கில மொழிக்கும் நமக்கும் ஒரு தொடர்பும் இல்லை' என்று உரைத்தார்கள். அதில் முன்னணியில் இருந்தவர் மகாத்மா காந்தி. அவர் 1917-ஆம் ஆண்டில் குஜராத்தில் ஒரு கல்வி மாநாட்டில் உரையாற்றும்போது, 'இந்தியாவில் இந்துஸ்தானிதான் ஆட்சி மொழியாக, பொதுமொழியாக இருக்க வேண்டும்' என்று பிரகடனப்படுத்தினார்.
பாரசீகம், அரபு, சம்ஸ்கிருத மொழிகளின் கலப்பில் உருவானது இந்துஸ்தானி. ஆனாலும் அதில் பாரசீக, அரபுச் சொற்கள் அதிகம். இந்தியர்களில் பலர் இந்துஸ்தானியை ஏற்றுக்கொள்ளவில்லை. சம்ஸ்கிருத்தில் இருந்து உருவான- பன்னிரண்டு பேச்சுமொழிகளை உள்ளடக்கிய இந்திதான் இந்தியமொழி, அது இந்துக்களின் சொந்த மொழியாகக் கருதப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தி மொழியை இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக்க விரைவாகக் காரியங்கள் நடக்க ஆரம்பித்தன.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்று புதிய நாடு உருவாக்கப்பட்டது. பாகிஸ்தானில் வங்காளம், உருது, இந்தி, பஞ்சாபி என்று பல மொழிகள் பேசப்பட்டு வந்தன. 1948-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக இருந்த முகமது அலி ஜின்னா, 'உருது, உருது மொழி ஒன்றே பாகிஸ்தான் ஆட்சிமொழி' என்று அறிவித்தார். அவருக்கு உருது மொழி பேசவோ,எழுதவோ தெரியாது. அவரது தாய்மொழி குஜராத்தி.
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையானவர்களின் தாய்மொழி வங்காளம். அவர்கள் உருது ஆட்சிமொழி என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். 'உருதுவை எங்கள் மீது திணிக்கக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தார்கள். போராட்டங்கள் நடத்தினார்கள்.
1956-ஆம் ஆண்டில் மாணவர்கள் டாக்கா பல்கலைக்கழகத்தின் முன்னே கூடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் அதில் கலந்து கொண்டார்கள். பிப்ரவரி-21-ஆம் தேதி மொழிப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. போலீஸ் துப்பாக்கியால் சுட்டது. சில மாணவர்கள் இறந்து போனார்கள். கிளர்ச்சி அடங்கவில்லை. 1971-ஆம் ஆண்டில் மொழி அடிப்படையில் தனிநாடு உருவாகியது. அதுதான் வங்கதேசம்.
தாய்மொழிக்காகப் போராடி தனி நாடு பெற்ற மக்களை கெளரவப்படுத்தும் விதமாக 1999-ஆம் ஆண்டு முதல் ஐ.நா. சபையின் யுனெஸ்கோ சார்பாக 'உலக தாய்மொழி தினம்' பிப்ரவரி 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அது, அழிவின் விளிம்புக்குச் சென்று கொண்டிருக்கும் தாய்மொழிகளைக் காக்கும் காரியந்தான்.
இந்தியாவின் 'மேலே' இருக்கும் நாட்டில் ஒரு மொழிப்போர் நடைபெற்றதுபோல, 'கீழே' உள்ள தீவு நாடான இலங்கையிலும் நடைபெற்றது. இலங்கை 1948-ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. உடனே ஆங்கிலத்தை அகற்றிவிட்டு சுதேசி மொழிகளான சிங்களம், தமிழ் மொழிகளை ஆட்சிமொழியாக்கினார்கள்.
ஜனநாயகம் என்பது தேர்தல், பொதுமக்கள் வாக்கு பற்றியது. மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, சகோதர மனிதர்களிடையே பகையை வளரவிட்டு வாக்குகளை அள்ளுவதுதான்.
இலங்கையில் எழுபத்தைந்து சதவீதம் பேர் சிங்கள மொழி பேசுகிறவர்கள். எனவே அவர்கள் வாக்குகளை அப்படியே பெற, இங்கிலாந்தில் படித்த சாலமன் பண்டாரநாயகே 1956-ஆம் ஆண்டு தேர்தலில் தன் கட்சி வெற்றி பெற்றால் 'சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி, தமிழுக்கு ஆட்சிமொழி அதிகாரம் இல்லை' என்றார். சிங்கள மொழி பேசும் பெரும்பான்மையானவர்கள் சாலமன் பண்டாரநாயகே கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அவர் கட்சி வெற்றி பெற்று பிரதம மந்திரியானார். தேர்தலில் சொல்லியபடி சிங்கள மொழி ஒன்றே இலங்கையில் ஆட்சிமொழி என்று சட்டம் போட்டார்.
ஒரு நாடு, ஒரு மொழி என்ற சித்தாந்தத்தை புதிதாகச் சுதந்திரம் பெற்ற சுற்றியுள்ள நாடுகளுக்கு இந்தியாதான் பரப்பியது. ஒரு நாடு, ஒரு மொழி என்பது மனித சமுதாயத்தின் மீது ஏவி விடப்படும் வன்முறை. எந்த நாடும் எக்காலத்திலும் ஒரு மொழி நாடாக இருந்ததில்லை. பன்மொழிகள் பேசப்படும் நாடாகவே இருந்து வந்திருக்கிறது.
மனிதர்கள் ஒன்றுபோல் இருப்பினும் உளவியல் ரீதியில் ஒன்றானவர்கள் இல்லை. ஒரு வளமான நாடு என்பதே பல மொழிகள், பல கலாசாரங்கள் இனங்கள் சேர்ந்து இருப்பதுதான். வேற்றுமையில் ஒற்றுமை என்பது மனிதர்களை எல்லா நாட்டிலும் வாழ வைக்கிறது. அதனை அறியவும், அறிந்து செயல்படவும் தெரியாத அரசியல் தலைவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். மனித சமூக விரோதிகள். அவர்கள் எத்தனைதான் பிரபலமாக இருந்தாலும் - நாட்டிற்கு நன்மை செய்வதைவிட தீமையே செய்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com