வெறும் பேச்சோடுதானா...?

மார்ச் 8-ஆம் தேதி, இன்று ஒரு நாள் மட்டும் மகளிரைப் பெருமைப்படுத்தும்படியான பல நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் நடைபெறுகின்றன.

மார்ச் 8-ஆம் தேதி, இன்று ஒரு நாள் மட்டும் மகளிரைப் பெருமைப்படுத்தும்படியான பல நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் நடைபெறுகின்றன. அன்றிரவோடு அன்றைய 'மகளிர் தின'க் கொண்டாட்டமும் முடிவுக்கு வந்துவிடும். 
'பெண்ணின்' பெருமைகளையும், உரிமைகளையும், பாதுகாப்புகளையும் பற்றிப் பலகாலம் பேசிப் பேசி அவற்றை ஏடுகளில் பதிவு செய்த நல்லறிஞர்களின் நன்மொழிகள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுவடிகளிலும், புத்தக அலமாரிகளிலும் பாதுகாக்கப்பட்டு, நிம்மதியாக இருக்கின்றன. ஆனால், மகளிருக்குத்தான் சங்க காலம் தொடங்கி, சமகாலம் வரை எந்தவிதப் பாதுகாப்புமில்லை; சுதந்திரமுமில்லை; நிம்மதியுமில்லை.
பாரத தேசம், நதி, ஆறு, மொழி, கல்வி, செல்வம், வீரம் எனப் பலவற்றையும் பெண்ணாகவும் பெண் தெய்வங்களாகவும் பாவித்துப் போற்றுவது தமிழர் மரபு. ஆனால், அம்மரபில் வந்துதித்த மகளிர்க்குப் பாதுகாப்பில்லை. 
இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் கோலோச்சி, பல சரித்திர சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். என்றாலும், வீட்டில், நாட்டில், தெருவில், பேருந்துகளில், பள்ளி, கல்லூரிகளில், பணியிடங்களில் என அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளும், பிரச்னைகளும் குடும்ப வன்முறையாக, பாலியல் பலாத்காரமாக, ஒருதலைக் காதலாக, சங்கிலிப் பறிப்பாக பூதாகாரம் எடுத்துவந்து அவர்களை அச்சுறுத்துகின்றனவே! 
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு 50-க்கும் மேற்பட்ட சிறுமியரும், இளம் பெண்களும் பாலியல் வன்முறைக்கும், சீண்டல்களுக்கும், ஒருதலைக் காதல் கட்டாயத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றனராம். அதனால்தான் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, பணியிடத்துக்கோ சென்ற தங்கள் பெண் பாதுகாப்பாக வீடு வந்து சேர வேண்டுமே என்கிற பயத்தில் அன்றாடம் ஒவ்வொரு பெற்றோரும் தவிக்கின்றனர்.
பகவான் ராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்தரும் பெண்மையின் இறைமைத் தத்துவங்களை வலியுறுத்தினார்கள். பகவான் ராமகிருஷ்ணர் பெண்ணைப் பெருந் தெய்வமாகவே கண்டார். ஆண்-பெண் பால் வேற்றுமை அகன்றால் மனித குலம் அமைதி பெறும்; பெண் வளம் பெற்றால் சமுதாயம் வளம்பெறும் என்றார் சுவாமி விவேகானந்தர். யார் கேட்கிறார்கள்?
பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு, உரிமைகள் குறித்து ஒளவையார், வேதநாயகம் பிள்ளை, மகாகவி பாரதியார், திரு.வி.க., போன்றோர் கூறியவை வெறும் ஏட்டோடு இருப்பதால்தான், அன்றாடம் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றை இந்தியா மட்டுமல்ல அனைத்து நாடுகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 
'ஏன் நம்நாடு மற்ற எல்லா நாடுகளைக் காட்டிலும் வலுவிழந்தும் பின்தங்கியும் இருக்கிறது தெரியுமா? இங்குதான் 'சக்தி' அதிகமாக அவமதிக்கப்படுகிறாள். பெண்களை உயர்த்துவதும், மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வதுமே நாம் முதலில் செய்ய வேண்டியது. அப்பொழுதுதான் நம் நாட்டுக்கு நாம் செய்யும் மற்ற நல்ல காரியங்கள் வெற்றியடையும். பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்' என்று இந்தியப் பெண்களின் பெருமையை விரிவாக எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர். 
'இவ்வுலக ஆக்கமும் அழிவும் பெண்ணிடத்திருக்கின்றன' என்கிறார் திரு.வி.க. அவரே, 'பெண்களைக் கேலி செய்வதும், தாழ்த்திப் பேசுவதும், அவர்களிடம் குறும்புகள் செய்வதும், ஆண் தன்மைக்கு இழிவு. பெண்மணிக்கு இழிவு நேருமாயின் அதைப் போக்க ஆண்மகன் விரைதல் வேண்டும். இல்லையேல் அவன் ஆண்பிறவி எய்தியவனாகான்' என்றார். ஆனால், இன்றைக்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்துக் குற்றப்பின்னணியிலும் இருப்பது ஆண்களே!
'பெண்கள் மனித இனத்தின் அழகிய நல்ல பகுதி' என்று கூறிப் பெண்களைக் மேன்மைப்படுத்தியது இஸ்லாம். திருக்குர்ஆனும், நபிகள் நாயகமும் (ஸல்) பெண்களுக்கு மேலான உரிமைகள் பலவற்றை வழங்கிக் கண்ணியப்படுத்தியுள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்களின் கடமைகளையும் உரிமைகளையும் விளக்கத் திருக்குர்ஆனில் 'அன்னிஸா' (பெண்கள்) என்ற ஓர் அதிகாரமே அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.
பெண் குழந்தைகளைக் கொலை செய்வது மகாபாவம் என்றும், பெண் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்கும்படியும் கூறுகிறது திருக்குர்ஆன். 'பெண் குழந்தைதான் மேலான செல்வம்' என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறியுள்ளார்.
'அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையல்ல, நன்மையே செய்கிறாள்' என்பது பைபிள் மொழி (நீதிமொழிகள் 31:11,12). 'சூட்சும புத்தியும் ஞானமு முள்ள ஸ்திரீகள்' என்று போற்றுகிறார் வேதநாயகம் பிள்ளை.
'பெண்களை நம்மவர்கள் மரியாதையுடன் நடத்துவதில்லை' என்கிற பெருங்குறை மகாகவி பாரதிக்கு இருந்ததனால்தான், 'ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும் திட்டுவதும் கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன. சீச்சி! மானங்கெட்ட தோல்வி ஆண்களுக்கு!' என்றும்; 'நாகரீகம் பெற்றுவரும் ஜாதியாருக்கு முதல் அடையாளம் அவர்கள் ஸ்திரீ ஜனங்களை மதிப்புடன் நடத்துவதே யாகும்' என்கிறார். 
இன்றைக்குப் பெண்ணுரிமையும், பெண் சுதந்திரமும், பெண் பாதுகாப்பும் வெறும் எழுத்தோடும், பேச்சோடும், திரைக் காட்சிகளோடும் மட்டும் நின்று போகின்றன. இனிவரும் ஆண்டிலாவது இவற்றை எல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மட்டுமே நாம் 'மகளிர் தினம்' கொண்டாடுவதில் பொருள் இருக்கும்; பெருமையும் கொள்ளலாம். இல்லையேல், ஒரு நாள் மட்டும் பெண்களைக் கொண்டாடும் வழக்கம் மண்மூடிப் போகட்டும்! எந்நாளும் பெண்களைக் கொண்டாடி, அவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பளிக்கும் நன்நாடே இன்றைய தேவை. 
'பெண்' பாதுகாப்பு உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, அரசின் தலையாய கடமையும்கூட! 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற மகாகவியின் திருவாக்கு எப்போது நனவாகப் போகிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com