வங்கிக் கடன் மோசடியும் அதற்கு அப்பாலும்...

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி நிகழ்த்திய மோசடி குறித்து பல தரப்பிலும் புகார்கள் கூறப்படுகின்றன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி நிகழ்த்திய மோசடி குறித்து பல தரப்பிலும் புகார்கள் கூறப்படுகின்றன. இந்த மோசடியில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, அதன் ஊழியர்கள், ஆடிட்டர்கள் உள்ளிட்ட பலருக்கும் பொறுப்புண்டு. ஆனால் அனைவரும் தங்கள் பொறுப்பை பிறர் மீது சுமத்தவே விழைகிறார்கள். இதன் காரணமாக, இந்த மோசடியின் முழுமையான பரிமாணம் கண்ணுக்குப் புலப்படாமல் போகிறது. 
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை, தனது வாடிக்கையாளரான நீரவ் மோடிக்கு உதவும் வகையில், வெளிநாடுகளிலுள்ள அலகாபாத் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி ஆகியவற்றின் கிளைகளுக்கு கடன் பத்திர ஒப்பந்தக் கடிதம் (லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங்-எல்ஓயு) அளித்தது. அதன் அடிப்படையில் நீரவ் மோடி, அவரது மாமா மெஹுல் சோக்ஸி ஆகியோரின் நகை வர்த்தக நிறுவனங்கள் எந்தக் கேள்வியுமின்றி வெளிநாட்டு வங்கிக் கிளைகளில் ரூ. 12,717 கோடி கடன் பெற்றன. 
வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவோர் சிரமமின்றி வர்த்தகம் செய்ய ஏதுவாக கொண்டுவரப்பட்ட முறையே எல்ஓயு. இதன்படி, நீரவ் மோடி நிறுவனத்துக்கு வெளிநாட்டுக் கிளைகள் அந்நாட்டு நாணயத்தில் கடனளிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி பொறுப்பேற்றுக் கொண்டது. 
இது ஒரு வங்கி வர்த்தக நடைமுறை. இதற்காக நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு வட்டியும், கட்டணமும் செலுத்துவார். ஆயினும் குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தக் கடனை அடைக்காவிட்டால் வங்கி நடவடிக்கை எடுக்கும். இதுவே நடைமுறை. 
இந்தக் கடனுக்கு ஈடாக, இந்தியாவில் நூறு சதவீத அடமானம் வைக்கப்பட்டிருக்க வேண்டும். தவிர, இந்தக் கடனை 90 நாள்களுக்குள் திருப்பிச் செலுத்தாவிட்டால், பஞ்சாப் நேஷனல் வங்கி, கடனளித்த வெளிநாட்டு வங்கிக்கு அந்தப் பணத்தைத் திருப்பித் தரும். இந்த கால வரையறையை நீரவ் கும்பல் ஓராண்டாக உயர்த்திக் கொண்டது. தவிர, இந்தியாவில் அதற்கு ஈடான அடமானமும் வைக்கப்படவில்லை. 
அதாவது, நீரவ் மோடியும் மெஹுல் சோக்ஸியும் பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலர்கள் சிலருடன் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு, பழைய கடன்களை அடைக்காமலே, எல்ஓயு முறையில் வெளிநாடுகளில் இயங்கும் பல வங்கிகளில் புதிய கடன்களைப் பெற்றுள்ளனர். இதுதான் மோசடியின் அடிப்படை.
இந்த எல்ஓயு முறைக்கு உதவ உலகளாவிய 'ஸ்விப்ட்' என்ற கணினி வழி ஒப்பந்தப் பரிமாற்ற முறை 1973-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. உலக நாடுகளின் வங்கிகளிடையிலான பாதுகாப்பான நிதிப் பரிமாற்றத்துக்கு இதற்காக ஒப்பந்தம் உள்ளது. இதன்படி அனுப்பப்படும் எல்ஓயு உத்தரவாதக் கடிதங்கள் எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த வசதியைத்தான் நீரவ் மோடி கும்பல் துஷ்பிரயோகம் செய்துள்ளது. 
எந்த ஒரு வங்கியிலும் ஸ்விப்ட் முறையில் எல்ஓயு அனுப்பப்பட்டால் அதை 'கோர் பாங்கிங் சிஸ்டம்' (சிபிஎஸ்) எனப்படும் மையக் கட்டுப்பாட்டு நிர்வாக முறையுடன் ஒருங்கிணைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வெளிநாடுகளில் வாடிக்கையாளருக்காகச் செய்யப்படும் நிதிப் பரிமாற்றங்கள் வங்கிப் பேரேட்டில் பதிவாகும். ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கியின் சில ஊழியர்கள் நீரவ் மோடியுடன் கைகோத்துக் கொண்டு, இந்த பரிமாற்றங்களை சிபிஎஸ் முறையிலிருந்து மறைத்துவிட்டனர்.
இந்த மோசடியில் நீரவ் மோடிக்கோ, மெஹுல் சோக்ஸிக்கோ பஞ்சாப் நேஷனல் வங்கி நேரடியாக கடன் அளிக்கவில்லை. ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் இயங்கும் பிற வங்கிகளின் கிளைகளில் கடன் பெற உத்தரவாதம் அளித்திருக்கிறது. ரொக்கப் பரிமாற்றம் இல்லாத இந்த வகையிலான வங்கிச் செயல்பாடுகளில் குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்பட்டதா என்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். இத்தகைய ரொக்கமற்ற கடன்கள், வங்கிப் பேரேட்டில் முழுமையான கடன்கள் பிரிவில் இடம் பெறாது; மாறாக, அவசரத் தேவை என்னும் விதத்தில் தற்செயல் கடனாகவே (கன்டிஜென்சி லயபிலிட்டிஸ்) பட்டியலிடப்படும். 
ஒருவகையில் இதுவும் வாராக்கடன் போன்றதே. வங்கியில் முறைப்படி விண்ணப்பித்து கடன் பெற்றவர் குறிப்பிட்ட காலத்துக்குள் அதை வட்டியுடன் திருப்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அது வாராக்கடன் ஆகிறது. அது வங்கிப் பேரேட்டில் பதிவாகி இருக்கும். ஆனால், எல்ஓயு முறையில் வெளிநாடுகளில் பெற்ற கடன் திரும்ப வராவிட்டால், அதற்கு உத்தரவாதம் அளித்த வங்கியின் மறைமுகமான வாராக்கடனாகவே அது மாறும். இதுவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் தற்போது நிகழ்ந்துள்ளது.
வங்கியின் வாராக்கடன்களும், மறைமுகமான தற்செயல் கடன் பொறுப்புகளும் வங்கியின் மூலதனத்தில் துண்டு விழ வைப்பவை. 2017 செப். 30 -ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் (ரூ. 7,33,974 கோடி), தனியார் வங்கிகளின் (ரூ. 1,02,808 கோடி) மொத்த வாராக்கடன் அளவு ரூ. ரூ. 8.37 லட்சம் கோடி ஆகும். இது பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வெளிவருவதற்கு முன் எடுக்கப்பட்ட மதிப்பீடாகும். இந்த வாராக்கடன்களின் அளவு மார்ச் 2018-இல் ரூ. 9.5 லட்சம் கோடியை எட்டக் கூடும்.
உண்மையில் இதைவிட பல மடங்கு அதிகமாக தற்செயல் கடன் பொறுப்புகள் இருக்கக்கூடும். அவற்றை வங்கி ஆண்டறிக்கையில் சேர்க்காமல் இருப்பது, அவற்றின் வர்த்தக அத்துமீறல்களை மறைக்க உதவுகிறது. எல்ஓயு, வங்கி கடன் பத்திர ஓப்பந்தம் (லெட்டர் ஆஃப் கிரெடிட்-எல்ஓசி) போன்றவை இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. எனினும், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, இந்த நடைமுறையிலுள்ள சிக்கலை அம்பலப்படுத்திவிட்டதால், வாராக் கடன்களின் அளவு நம்மை திகைக்க வைப்பதாக அமையலாம். ஏனெனில் தற்செயல் பொறுப்புக் கடன்களும் வாராக்கடன்களின் மற்றொரு வடிவமே.
உதாரணமாக, 2017 மார்ச் வரையிலான காலகட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தற்செயல் பொறுப்புக் கடன்களின் அளவு ரூ. 3.32 லட்சம் கோடி. இதில் மும்பை கிளையில் நீரவ் மோடி கும்பல் நடத்திய முறைகேட்டின் அளவு மட்டுமே ரூ. 12,171 கோடி! 
நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் தற்செயல் பொறுப்புக் கடன்களின் ஒட்டுமொத்த அளவு ரூ. 151.61 லட்சம் கோடியாகும். இது நாட்டின் ஓராண்டு உள்நாட்டு உற்பத்தி மதிப்பைவிட (ஜிடிபி- ரூ. 141.58 லட்சம் கோடி) அதிகமாகும். தவிர, அனைத்து வங்கிகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பான ரூ. 149.94 லட்சம் கோடியைவிடவும் இது அதிகம். 
இதுபோன்ற கடன்களை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம் என்பதற்கு ரிசர்வ் வங்கி வரையறை விதித்துள்ளது. வங்கியின் சொத்து மதிப்பில் 36 சதவீதத்தை ஸ்டேட் வங்கிகளும், 41 சதவீதத்தை பிற தேசிய வங்கிகளும் அவசரத் தேவையாக தற்செயல் பொறுப்புக் கடனாக அளிக்கலாம். ஆனால் தனியார் வங்கிகள் 106 சதவீதத்துக்கு மேல் தற்செயல் பொறுப்புக் கடன்களை அளிக்கின்றன. சில வெளிநாட்டு வங்கிகளோ 927 சதவீதத்துக்கு மேல் அவசரக் கடன்களை அளிக்கின்றன. 
இந்தியாவின் வங்கி வர்த்தகத்தில் வெளிநாட்டு வங்கிகளின் பங்களிப்பு 4% முதல் 5% மட்டுமே. ஆனால் அவற்றின் தற்செயல் பொறுப்புக் கடன்களின் மதிப்பு ரூ. 75 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது நாட்டின் தற்செயல் பொறுப்புக் கடன்களில் சரிபாதி வெளிநாட்டு வங்கிகளால் உருவானவை. 
இத்தகைய நிலையில், தற்செயல் பொறுப்புக் கடன் முறையில் மேலும் பல மடங்கு கடன் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதை யாரும் மறுக்க இயலாது. ஒரே ஒரு பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த முறைகேடு மூலமாகவே இந்திய வங்கித் துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது. 
இந்த பரிதாபகரமான சூழலிலிருந்து இந்திய வங்கிகள் தப்ப வேண்டுமானால், வங்கிகள் அனைத்தும் தனியார்மயமாக வேண்டும் என்று அசோசேம், ஃபிக்கி போன்ற வர்த்தக அமைப்புகள் யோசனை கூறியுள்ளன. 
2008-ஆம் ஆண்டு உலக அளவில் வங்கிகள் சந்தித்த நெருக்கடிக்கு தனியார் வங்கிகளே காரணம் என்பதை அந்த அமைப்புகள் மறந்துவிட்டன. பல தனியார் வங்கிகள் திவாலானதால்தான் 1970-களில் அவை தேசியமயமாக்கப்பட்டன என்ற வரலாற்று உண்மையையும் மறக்கக் கூடாது. இந்த வாதத்தால் பொதுத் துறை வங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மையை நியாயப்படுத்துவதாகப் பொருளல்ல. தனியார் மயமாக்கத்தால் ஊழியர்களின் திறன் மேம்படும் என்றும் கூற முடியாது. 
இந்த விகாரத்தில் வங்கி ஊழியர்களை குற்றம் சாட்டும்போது, அவர்களைக் கண்காணிக்காமல் தவறவிட்ட மேல்மட்ட நிர்வாகத்தையும் கண்டிக்க வேண்டும். 
இந்த விவகாரத்தால் வங்கிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையைப் போக்க வேண்டுமானால், உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். முதலாவதாக, அனைத்து வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன்கள், தற்செயல் பொறுப்புக் கடன்களின் அளவினை முழுமையாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும். நோயைக் குணப்படுத்த அதன் காரணத்தைக் கண்டறிவதும் அவசியம் அல்லவா?
வங்கிகளில் நிகழும் நிதி மோசடிகளின் சுமை மக்கள் மீதே விழும். கடன் மோசடிகளால் இழக்கப்படும் பணம் நாட்டுக்கு நிதிச் சுமையாகும். எனவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடும் நடவடிக்கைகளை எடுத்து, வங்கித் துறையை கட்டுக்குள் வைப்பது காலத்தின் கட்டாயமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com