வாய்மொழி உணர்த்திய வாய்மை

'நீங்கள் சொல்வது உண்மையாயிருக்க வேண்டிய அவசியமில்லை; ஆனால் அது பொய்யாயிருக்கக் கூடாது!'

'நீங்கள் சொல்வது உண்மையாயிருக்க வேண்டிய அவசியமில்லை; ஆனால் அது பொய்யாயிருக்கக் கூடாது!' என்றார் ஒரு பெரியவர், தனது பேச்சுக்கிடையில்!
ஓடும் பேருந்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அவர் பக்கத்திலிருப்பவரிடம் இதைச் சொன்னார். இதன் 'தோற்றக் காரணம்' அறியாது போனாலும், அவர்களது உரையாடலைக் கவனிக்கச் செய்தது.
'எல்லாருக்கும் எல்லா உண்மைகளும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை; தேவையேற்பட்டால் ஒழிய, சொல்லியாக வேண்டிய கட்டாயமுமில்லை. நிறையபேர் 'உண்மை சொல்கிறேன் பேர்வழி' என்று குழப்பங்களைத்தான் உண்டாக்கிவிடுறாங்க!' என்று பொதுவாய்ச் சொன்னார் பெரியவர்.
'அதுக்காக உண்மை சொல்லாமல் இருக்கலாமா?' என்றார் அடுத்தவர்.
'அதனாலே சொல்பவருக்கும் நன்மையிருக்கணும்; கேட்பவருக்கும் நன்மையிருக்கணும்' என்று அவர் சொல்லியபோது, எனக்குள் பாரதியார் பாடல் மின்னல் பாய்ச்சியது.
'ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்கு
உண்மை தெரிந்தது சொல்வேன்!'
எத்தனையோ உண்மைகளைத் தெரிந்து வைத்திருந்தாலும், அதனைச் சொல்வதனால் ஊருக்கு நல்லது நடப்பதற்கானதாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அது மட்டுமல்ல, ஊருக்கு நல்லது சொல்லத்துணிகிறவர்கள், தனக்கு அது உண்மை என்று தெரிந்த பிறகே சொல்லவும் வேண்டும். பாரதியின் பாடலில் இடம்பெறும் 'எனக்கு' என்ற சொல்லுக்கு அழுத்தம் கொடுத்துப் பார்த்தால், அந்த'என்னோடு' சேர்த்து 'என் நெஞ்சத்துக்கும்' இடம் கொடுத்துவிடுகிற பாங்கைப் பார்க்கலாம். 
அதுதான் எது உண்மை, எது பொய் என்பதைச் சீர் தூக்கிப் பார்க்க வல்ல தராசு. அது நடுநிலையாகஇருக்கவேண்டும். ஒருபால் சாய்ந்தால் அதில் ஏதோ சார்பிருப்பதாகக் கண்டுபிடித்துவிடலாம். நெஞ்சம் கண்டு பிடித்துவிடும். அதற்கு மாற்றாகச் சொல்லி, அந்தக் கணத்தில் தப்பித்தும் விடலாம். அதற்குப் பிறகு காலமெல்லாம் அது பொய்யென்று கண்டுகொண்ட நெஞ்சு சுடுமே, அந்தச் சூடு நெஞ்சைத் துளைக்கும் துப்பாக்கிச் சூட்டை விடவும் அதிக வேதனை தரும். அதனைத் தவிர்க்கவும் முடியாது; உள்ளில் இருந்து உதிர்க்கவும் முடியாது. 
தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
என்பது அனுபவம் உணர்த்தும் உண்மையாக அப்போது தெரியும். அது சுட்டுக் கொண்டே இருக்கும். அவ்வாறு சுடும் உண்மையின் வேதனையை மறைக்க மேற்கொள்ளும் பொய்மிகு பாவனை இன்னும் அழுத்தமாய் உள்ளிருந்து சுடும்.
உள்ளதை உள்ளபடி உரைப்பது உண்மை என்கிற நிலையிலிருந்து விலகி, உள்ளதை, உள்ளியவாறு (நினைத்தபடி) சொல்லத் தொடங்கியது, கற்பனை. அதில், உண்மையின் சாரம் குறையக் குறைய, அது பொய்யுருக்கொள்ள நேரவே, 'கண்ணால் காண்பதும் பொய்: காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்' எனும் நிலையில், பொய்யானது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலை. இங்கே பொய்யை முன்னிறுத்தி, மெய் தலைநிற்கத் தொடங்குகிறது. அறிவின் செயற்பாடு மெய்ப்பொருள் காண்பதாய் அமைகிறது.
நடைமுறையில் உண்மை எப்போதும் ஒன்றாக இருக்க, பொய்கள் பலவாகிப் பெருகி விடுகின்றன. அப்போதெல்லாம் உண்மை சுடுகிறது. அதனால்தான், உள்ளத்தால் பொய்யாது ஒழுகச் சொல்கிறார் திருவள்ளுவர். 
பொய் ஒருபோதும் நிலைக்காது. அது சீட்டுக்கட்டில் கட்டுகிற வீடு மாதிரி. ஒரு பொய் சொல்லி, அதைக் காப்பாற்ற இன்னொரு பொய் சொல்லி, இரண்டையும் காப்பாற்ற இன்னும் நான்கு பொய்கள் சொல்லி, நான்கு பதினாறாய்ப் பெருகும். ஆனால், அவ்வாறு சொல்லப்பட்டதில் ஒன்று உண்மையில்லை என்று கண்டுபிடிக்கப்படுகிறபோது, எழுப்பிய அத்தனை பொய்யடுக்குகளும் மொத்தமாய்ச் சரிந்து விழுந்து ஒன்றும் அற்றுப் போகும்.
தாற்காலிமாகத் தப்பிப்பதற்காகவோ, ஒரு வசதிக்காகவோ சொல்லத் தொடங்கும் பொய், சொல்வோருக்கும் கேட்போருக்கும் ஆபத்தை விளைவிப்பது நிச்சயம். இன்னும் பலர், சுவாரசியத்திற்காகப் பொய் சொல்லத்தொடங்கி, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். 'அவர் வாயைத் திறந்தாலே வர்றதெல்லாம் பொய்' என்று புத்தகம் போல மனிதர்களைப் படித்துக் கொண்டிருக்கும் படிக்காத கிராமத்துப் பெரியவர்கள் சொல்லக் கேட்டதும் நினைவுக்கு வருகிறது.
அதற்குப் பிறகு, அவர்களே வெளிவர நினைத்தாலும் வெளிவர முடியாத அபாயக் கூண்டு அது. கிடைக்கப் போகும் தண்டனைக்கோ, கஷ்டத்துக்கோ, சின்னஞ்சிறு அவமானத்துக்கோ பயந்து பொய் சொல்ல முயலுகிறவர்கள். அதனைக் காப்பாற்ற அடுத்தடுத்து பொய் சொல்ல ஆரம்பித்து, பொய்க்கே அடிமையாகிப் போகிறார்கள். ஒரு கட்டத்தில் அவருக்கு உண்மை எது? பொய் எது என்றே பிரித்தறிய முடியாத நிலை வந்துவிடுகிறது. அவர்கள் பொய்யர்களாகிப்போகிறார்கள். அவர்கள் கூறுவதை, 'பொய்யர்தம் மெய்' என்றே மாணிக்கவாசகர் அடையாளப்படுத்துகிறார். புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும்அஞ்சேன் என்பது மணிவாசகம். புற்றில் உறைகிற கொடிய பாம்பினைவிடவும் பொய்யர்தம் மெய் அஞ்சத்தக்கது என்பது அவர் உணர்த்தும் அனுபவ உண்மை.
இத்தகு பொய்யர்களின் கூடாரமாய் பூமி போய்விட்டால் அறமானது ஆணிவேரோடு அற்று அழிந்து போய்விடும். அதன் பின்னர் என்ன சொல்லி, செய்து யாது பயன் என்று அஞ்சித்தான் பொய்யாமொழிப்புலவர்,
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று 
என்றார் போலும்.
நடைமுறை வாழ்க்கையில், பொய் சொல்லி, ஒருவரையோ, அல்லது ஒரு விஷயத்தையோ காப்பாற்ற எடுத்துக்கொள்கிற முயற்சி இருவரையும் பொய்யராக்கிப் புறங்கடை நிறுத்திவிடும். அதற்குமாறாக, ஒரேயொரு உண்மை சொல்லி அதற்கான பலனை நன்மையோ தீமையோஅனுபவித்துக் கொண்டுவிடலாம் என்கிற மனப்பாங்கு வந்துவிட்டால், பல்வேறு மன அழுத்தங்களிலும் மனஉளைச்சல்களிலும் இருந்துவிடுபட முடியும். அதனால் ஏற்படும் அறப் பிறழ்ச்சியில் இருந்து தப்ப இயலும். அது வீட்டுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. இந்த நிலைப்பாடு தவறியதால்தான் இன்றைக்குப் பல்வேறு சிக்கல்கள் அன்றாட வாழ்வில் மலிந்து கிடக்கின்றன என்றால் அது மிகையில்லை. உடலளவில் வல்லவர்களாக வாழ்கிற பலரும் உள்ள அளவில் நல்லவர்களாக வாழ முடியாத நிலைக்கு ஆளாக நேர்கிறது.
உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான இடத்தில் வாய்மையைக் கொண்டுவந்து நிறுத்துகிறார் வள்ளுவர்.
வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
என்று அடிப்படையைச் சொல்கிறார். யாது ஒன்றுக்கும் தீமை தராத வரையில்தான் அது வாய்மை. தவறினால், அது பொய்யாய்ப் போய்விடும் என்று மறைமுகமாக எச்சரிக்கை செய்கிறார். 'தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம்: பயப்பின் பொய்ம்மையாம்' என்பது பரிமேலழகர் விளக்கம்.
அத்தகு வாய்மையும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுப் பொய் சொல்ல வேண்டி வந்தால் என்ன செய்வது என்று நடப்பியல் அனுபவம் எழுப்புகிற கேள்விக்கும் அவர் பதில் தருகிறார்.
பொய்மையும் வாய்மையிடத்த...
இந்தக் குறளின் முதற்பகுதியைச் சொல்லியே பலர் தமது பொய்மைக்குக் காவலாய் பொய்யாமொழிப் புலவரைத் துணைக் கொள்கிறார்கள். அதுவே ஒரு பொய்! உண்மையில் அவர் சொல்ல வருவது வேறு. அது பொய்தான்; அது ஒருபோதும் வாய்மையாகாது. வாய்மை வேறு; பொய் வேறு. அது வாய்மையின் இடத்தில் இருக்கிறது, அவ்வளவுதான். அப்படி இருப்பதனாலேயே, அது வாய்மை ஆகிவிடாது. அதுமட்டுமல்ல, அப்படி அந்த இடத்தில் இருப்பதற்கு ஒரு தகுதியும் வேண்டுமல்லவா? அது புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்றால்தான் இருக்க முடியும்; குற்றமற்ற நன்மை தருகிற வரைக்கும்தான் அதற்கு அங்கே இடமுண்டு. அது தவறினால், தானாகவே அங்கு இருக்கும் தகுதியை இழக்கும் என்பது உறுதி.
ஆக, பொய்கள் மலிந்துகிடக்கும் இந்த உலகில் முதலில் பொய்யிலிருந்து விடுபட உரிய வழி, அது புரைதீர்ந்த நன்மை பயப்பதாக இருக்கிறதா எனப்பார்த்து, வாய்மையின் இடத்தில் பொய்யை வைத்துப் பார்க்கலாம்.
பின்னர் தன்நெஞ்சு துணையாக, பொய்யாமையிலிருந்து விடுபடலாம். அதற்கு மனத்தூய்மை அவசியம். உடல் தூய்மைக்கு நீரைப் பயன்படுத்தும் நமக்கு, மனத்தூய்மைக்கு வாய்மையைப் பரிந்துரைக்கிறார் வள்ளுவர்.
வாய்மையே மனத் தூய்மையைத் தருகிறது. மனதின் தூய்மை வாக்கில் தூய்மையை வழங்குகிறது. மனமும் வாக்கும் தூய்மையுறுகிறபோது, செயலும் தூய்மையடையத் தொடங்கும்.
இது தனிநபர் வாழ்வில் தொடங்கி பொதுவாழ்வுக்கும் உரியதாகிறபோது அறம் தலைநிற்கும். அபாயம் பல வழிகளில் நீங்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com