சரியான தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் அவர்கள், 'எல்லா பிரச்னைகளுக்கும் காவல்துறையே காரணம் என்னும் மனப்பான்மையை விட்டுவிட வேண்டும்'என்று கூறியுள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் அவர்கள், 'எல்லா பிரச்னைகளுக்கும் காவல்துறையே காரணம் என்னும் மனப்பான்மையை விட்டுவிட வேண்டும்'என்று கூறியுள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது.
காவல்துறையின் அனைத்துப் பணிகளும் ஏதோ ஒரு விதத்தில் சமுதாயத்தினரின் கசப்பான அனுபவங்களோடே தொடர்பு பெறுகின்றன. வீட்டில் திருட்டு நடந்தாலோ, கொலை - கொள்ளை நடந்துவிட்டாலோ, வாகன விபத்து நடந்தாலோ, இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலோ காவல்துறையின் தலையீடு தேவைப்படும்.
வேறு யாராலும் செய்ய முடியாத உதவிகளை காவல்துறையினரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு.
பல்லாண்டுகளுக்கு முன் நான் இந்திய காவல் பணியில் தேர்வு பெற்று புதிதாக அகில இந்தியப் பணிகளில் சேர்க்கப்படும் அதிகாரிகளுக்கான 'நாட்டுடன் ஓர் அறிமுகம்' எனப்படும் 'பாரத தர்ஷன்' பயணத்துக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு காவல்துறைத் தலைவரைப் பார்க்கச் சென்றோம். அவர் தனக்கு நிகழ்ந்த ஓர் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு நாள் நடு இரவில் தொலைபேசியின் மூலம் மிக அவசரமாகத் தொடர்பு கொண்டு, 'ஐயா, எங்க வீட்டில் ஒரு பாம்பு வந்துள்ளது' என்று புகார் தெரிவிக்கிறார் ஒருவர். நடு இரவில் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு படுகோபம் வந்தது. 'என்னடா, நான் ஒரு பாம்பாட்டின்னு நினைக்கிறியா?' என்றார் கோபமாக.
அப்பொழுது அடுத்த முனையில் இருந்தவர் 'ஐயா, நான் உங்களை அணுகாமல் வேறு யாரிடம் போவது? எங்கள் வீட்டில் பாம்புகள் ஆங்காங்கே நெளிகின்றன. குழந்தைகள் அலறித் துடித்து ஓடுறாங்க. என்ன செய்யச் சொல்றீங்க?' என்றார் பாவமாக.
அந்தக் காவல்துறை அதிகாரி கூறியது என் மனதில் அழுத்தமாக பதிந்தது. அது என் வாழ்வில் ஒரு வழிகாட்டிச் செய்தியாக அமைந்தது. ஒருவருக்கு எந்த ஒரு பிரச்னை வந்தாலும், அவர் முதலில் நினைப்பது காவல்துறையைத்தான். இது காவல்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே காட்டுகிறது.
சுனாமியாக இருந்தாலும், புயலாக இருந்தாலும், தீ விபத்தாக இருந்தாலும், எந்த ஒரு நெருக்கடி வந்தாலும், மக்களைப் பாதுகாக்க மூத்த அதிகாரிகள் எதைச் சொன்னாலும் அவர்களுக்குக் கீழ் பணி புரிபவர்கள் முகம் சுளிக்காமல் செய்வார்கள்.
ஒருமுறை நான் ஒரு மென்பொருள் உருவாக்கிக் கொண்டிருந்தேன். இரவு எட்டு மணி வரை தயாராகவில்லை. அடுத்த நாள் அமைச்சர் ஒருவர் ஒரு திறப்புவிழாவில் கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டதால் இப்பணியைத் தள்ளி வைக்க முடியாத நிலை. என்னோடு அந்த மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருக்கு 104 டிகிரி காய்ச்சல். வீட்டுக்குப் போய் ஓய்வு எடுக்கச் சொன்னேன். அவர் மறுத்துவிட்டார். இரவு முழுவதும் என்கூட பணி செய்துவிட்டு, எல்லா பணிகளும் முடிந்த பிறகு காலை ஆறு மணிக்குத்தான் வீட்டுக்குப் போனார்.
மூத்த அதிகாரிகளுக்குப் பெயர் கெட்டுவிடக் கூடாது, காவல்துறைக்கு அசிங்கம் வரக்கூடாது என்ற உணர்வோடு பட்டினியாகக் கிடந்து தன் கடமைகளைச் செய்கிறவர்கள் ஏராளம் பேர் உண்டு. வேறெந்தத் துறையிலும் இல்லாத குடும்ப உணர்வும் கடமையுணர்வும் காவல்துறையில் உள்ளது.
காவல்துறையில் மோசமானவர்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஒருவர் இருசக்கர வாகனத்தில் தன் மனைவியை அழைத்துச் செல்ல, அவள் தவறி விழுந்து, அடிபட்டு, மருத்துவமனையில் அனுமதித்திருக்கும்போது, விசாரணை செய்யும் உதவி ஆய்வாளரிடம் அந்தம்மாவின் கணவர் காயச் சான்றிதழ் கேட்க, அவர் அதற்கு ஒரு விலை நிர்ணயம் செய்து, பிறகு அந்த அம்மா இறந்துவிட்டதால், அந்த விலையை உதவி ஆய்வாளர் உயர்த்திய நிகழ்வும் நடந்துள்ளது. ஆனால் அப்படிப்பட்ட உதவி ஆய்வாளர் போலீஸ் உத்தியோகம் பார்க்கிறார் என்பதைவிட அவர் பிணங்களை விற்கும் உத்தியோகம் பார்க்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
திருச்சி துவாக்குடி சம்பவமும், சமீபத்தில் நடந்த துரதிருஷ்டவசமான தற்கொலைச் சம்பவங்களும், மாண்புமிகு நீதியரசர் அவர்களின் நல்ல புரிதலும் என்னை காவல்துறையினரின் இன்றைய நிலையை சற்றே அலசத் தூண்டின.
தமிழ்நாட்டுக்கு வந்து கடலூர் மாவட்டத்தில் பயிற்சியாளராக சேர்ந்த நான் காவல்துறை மரபின்படி அப்பொழுது டி.ஐ.ஜி.ஆக இருந்த திரு. குமாரசாமி அவர்களைப் பார்க்கச் சென்றேன்.
'கடவுள் இந்த உலகத்திற்கு வர வேண்டுமானால், அவர் அவதாரம் எடுக்க வேண்டும். அப்படித்தான் இவ்வுலகத்தின் அமைப்பு. அவ்வுலகத்திலிருந்து இவ்வுலகத்திற்கு வர மனிதப் பிறவி தேவை. அதனால்தான், தனக்குப் பதிலாக - தன் சார்பாக - அவர் படைத்த மனிதர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அவர் காவல்துறையினரை உருவாக்கியிருக்கிறார்', என்றார் அவர்.
அனைத்து காவல்துறையினரும் தாம் கடவுள் சார்பாகச் செயல்படுவதாக நினைக்கத் தொடங்கினால் பல பிரச்னைகளுக்குத் தீர்வு வரும். கடவுள் சார்பாக செயல்படுபவன் சீருடை அளிக்கும் அதிகாரம் தன்னுடையது என்று என்றைக்கும் நினைக்க மாட்டான். அந்த அதிகாரத்தை தன் இலாபத்துக்காகவோ, இன்னொருவரின் விருப்பத்துக்காகவோ பயன்படுத்த மாட்டார். எது ஒன்று ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நமக்குக் கொடுக்கப்பட்டதோ அதை, வேறு ஒரு நோக்கத்திற்காக எப்படி பயன்படுத்த முடியும்?
அதிகாரம் சமுதாய அமைப்பின் அடிப்படை. அதிகாரம் என்பது என்ன? ஒருவர் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை அவரே முடிவு செய்யாமல் இன்னொருவர் முடிவு செய்வது அதிகாரம். சாலையில் போகும்போது உங்களிடம் வண்டியை நிறுத்தச் சொல்லும் அதிகாரம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உள்ளது. 
ஆனால், உங்கள் வீட்டுக்குள் எந்த இடத்தில் வண்டியை நிறுத்தலாம், எந்த இடத்தில் நிறுத்தக் கூடாது என்று உங்களைக் கட்டாயப்படுத்தும் அதிகாரம் அவருக்கு இல்லை.
ஆக, எது தனிப்பட்ட முறையில் உங்களை மட்டும் பாதிக்கிறதோ அதை காவல்துறை நிர்ணயிக்க முடியாது. ஆனால், எது மற்றவர்களைப் பாதிக்கிறதோ அதை காவல்துறை நிர்ணயிக்கலாம். உங்கள் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் வண்டியை நிறுத்தினால் சுவாசம் பாதிக்கிறது என்று உங்கள் மகளே சொன்னாலும் கூட, அதை காவல்துறையினர் விசாரிக்கவே செய்வார்கள்.
மேற்கண்ட செய்திகளிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன.
1. காவல்துறைக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் சட்டங்களை அமல்படுத்துவதற்காகவே அளிக்கப்பட்டவை.
2. சமுதாயம் சீராக நடைபெற அனைவரும் சட்டங்களுக்குப் பணிந்து செயல்படுவது அவசியம்.
இவ்விரண்டும் தவறில்லாமல் நடந்துவிட்டால் பிரச்னை எதுவும் வராது. ஆனால், அப்படி இருப்பதில்லை.
சட்டங்களை மீறி காரியங்களைச் சாதிப்பவர்கள் பொதுமக்களில் ஏராளமானோர். அதே போல், கடமைகளை நிறைவேற்ற மட்டுமே அளிக்கப்பட்ட அதிகாரங்களை தன் சுயலாபத்துக்காக அல்லது தனக்கு வேண்டியவர்களுக்காக பயன்படுத்தும் காவல்துறையினரும் இல்லாமல் இல்லை.
விளைவாக, ஒரு இழுபறி நிலை ஏற்படுகிறது. சாலையில் நின்று கொண்டிருக்கும் காவல்துறையினரைப் பார்த்து, இருசக்கர வாகனத்தில் வந்திருப்பவர் மனதில், 'இவர் காசு - கீசு கேட்பார் போல' என்றும், காவல்துறையினரின் மனதில் 'இவர் போகும் வேகத்தைப் பார்த்தால், நிறுத்தமாட்டார் போல' என்றும் தோன்றுகிறது. அதாவது, இருவருக்கும் அடுத்தவர் மீது அவநம்பிக்கை. இந்த அவநம்பிக்கையின் விளைவுகள் பலவிதமாகத் தோன்றுகின்றன.
- இவர் பணம் கேட்டார் - என்ற குற்றச்சாட்டு.
- சரி போகட்டும் என்று காவல்துறை இருந்துவிட்டால், தப்பித்துப் போனவர் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியாகக் கூட இருக்கலாமே, ஏன் இவரைப் போகவிட்டார்கள் என்ற கேள்வி எழும். 
- வலுக்கட்டாயமாக நிறுத்தினால், அப்பொழுது வேறுவிதமாக பிரச்னைகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆக, நாமே சமுதாயத்தை சிக்கல்களில் மாட்டிவிடுகிறோம். மிக அரிதாக இருக்க வேண்டிய சட்ட மீறல்கள் வழக்கமாக ஆகிவிட்டன. சட்டத்தை மதிப்பதுதான் இனி விதிவிலக்கு என்ற அடையாளத்துடன் செயல்படும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பணியில் அனைவரும் மும்முரமாக ஈடுபட்டுவிட்டது போல் ஒரு நிலை.
20-30 ஆண்டுகளிலேயே சமுதாயம் ஏன் இப்படி மாறிவிட்டது?
குழந்தைகளுக்கு நெறிமுறைகளை கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடமாக இருந்து வந்த குடும்ப அமைப்பு, அந்தப் பணியை விட்டுவிட்டதால்தான் இந்த விளைவுகள் என்று நான் நினைக்கிறேன்.
அடுத்தவரின் வலியை உணரும் மனப்பான்மையை இழந்து வருகிறோம். ஒரு பெண்ணின் இரு சக்கர வாகனத்தையும், அவரது மொபைல் போனையும் பறிக்க ஒரு இளைஞர், அப்பெண்ணை பயங்கரமாகத் தாக்கி, காயப்படுத்துகிறார். அவளது வலியையும், அவளது பெற்றோர் உணரப்போகும் மன வேதனையையும் உணரும் ஆற்றலை அவனுக்கு யாரும் கொடுக்கவில்லை. உணர்வுகள் அளவில் அவனுக்கும் ஒரு மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லை. சமுதாயம் அவனை மனிதனாக்கத் தவறிவிட்டது.
சிறைத்துறையில் கூடுதல் இயக்குநராகப் பணிணயாற்றியபோது தினமும் புழலுக்குச் சென்று தியான முறைகள் மூலம் அங்கே உள்ள சிறைவாசிகளின் சிந்தனை முறையை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டேன். அவர்களின் மனதில் மனிதநேயம் வளர வளர, அதுவரை அவர்கள் உணராத மகிழ்ச்சியை அவர்கள் பெற்றார்ககள். அவர்களின் ஆழ்மனதில எங்கோ மறைந்திருந்த மனிதன் எழ ஆரம்பித்தான்.
ஒருநாள் ஒரு வியப்பூட்டும் சம்பவம் நடந்தது. காலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு சிறைவாசி மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். இதைக் கண்ட மற்ற சிறைவாசிகள் ஒதுங்கிவிட்டார்கள். இவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நமக்கு ஆபத்து வரும் என்ற பயம் அவர்களுக்கு. ஆனால், மிக மோசமானவர் என்று இன்னொரு மத்திய சிறையிலிருந்து புழலுக்கு அனுப்பப்பட்டிருந்த ஒரு சிறைவாசி, விழுந்த நபரின் பக்கத்தில் சென்று அவருக்கு முதலுதவி அளித்து சிறைக்குள் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
பிறகு நான் அவரிடம் பேசியபோது, அவர், 'மயக்கமுற்று விழுந்தவரை கஷ்டத்தில் பார்த்தது என்னை ஏனோ உறுத்தியது. அவரது துன்பத்தை நான் உணர்ந்தேன்' என்றார்.
இந்நிகழ்வு எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. வியப்பாகவும் இருந்தது. அடுத்தவரின் வலியை தன் வலியாக உணருவதுதான் மனிதனின் மிகப்பெரிய குணம். அந்தக் குணம் சமுதாயத்தில் வளர வளர குற்றங்கள் குறையும். காவல்துறையின் பணிப் பளுவும் குறைந்துவிடும். 
இதை யார் செய்வது? எப்படிச் செய்வது? என்ற கேள்வி எழும்.
முதன்மைப் பொறுப்பு தாய்மார்களுக்குத்தான். ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு ராமர் கதை சொல்லி நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுத்த தாய்மார்களும் பாட்டிமார்களும் இப்பொழுது வளரும் குழந்தைகளைப் பக்கத்தில் உட்கார வைத்து மாமியார்- மருமகள் சண்டையிடும் தொடர்களை அல்லது கிரைம் தொடர்பான, ரத்தத்தில் மிதக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்.
அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் விழிப்புணர்வு ஏற்படுகிறது என்று சிலர் சொல்லலாம். ஆனால், விழிப்புணர்வு என்ன பயன் தருகிறது? விபரீதங்கள் அல்லவா தொடர்கின்றன?
சமுதாயம் மாற ஒவ்வொருவரும் மாற வேண்டும். முதலில் நாம் நிஜத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். நிஜத்தைப் பேச ஆரம்பிக்க வேண்டும்.
நிகழ்கின்ற நிகழ்வுகளினால், ஒரு நீதிமன்றம் காவல்துறையை பயங்கரமாகச் சாடும் என்ற பொது எதிர்பார்ப்புக்கு மாறாக, நீதிமன்றம் எல்லாவற்றையும் எடைபோட்டு நியாயமான முடிவு அளித்தது வரவேற்கத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com