ராகுலின் பாண்டவர் பூமி...

'கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தகுதிகளில் ஒன்று'

'கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தகுதிகளில் ஒன்று' - 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இப்படித்தான் தனது உரையை ஆரம்பித்தார் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.
ஏறத்தாழ 34 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த உண்மையை தற்போது காங்கிரஸ் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்ததும், முந்தைய காங்கிரஸ் அரசுதான் நல்லாட்சி தந்தது என தொடர்ந்து கூறி வந்ததும் இதே ராகுல் காந்திதான்.
கடந்த 4 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத தோல்விகள் அவருக்கு படிப்பினையைக் கொடுத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இத்தகைய கருத்தை அவர் வெளிப்படுத்தியிக்கிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸின் தவறுகளை ஒருபுறம் ஒப்புக்கொண்டாலும், அதே மேடையில் இதுவரை இல்லாத அளவு பாஜகவையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார் ராகுல். அதிலும் உச்சமாக பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கெளரவர்கள் என்றும், காங்கிரஸார் பாண்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.
லட்சுமண ரேகை உவமையையும், மகாபாரத தர்மயுத்த உதாரணங்களையும் பெரும்பாலும் பாஜகவினரே மேற்கோள் காட்டுவர். தற்போது அந்த சொல்லாடலை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்.
அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் கோயில், கோயிலாகச் சென்று ராகுல் வழிபட்டதும், தற்போது இதிகாசக் கூற்றுகளை எடுத்தாளுவதும் எத்தகைய அரசியல் சாணக்கியம் என்பது தெரியவில்லை. எவ்வாறாயினும், பாஜகவின் ஹிந்துத்துவ வாக்கு வங்கியை இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஓரளவேனும் சிதைக்க முடியும் என ராகுல் திடமாக நம்புகிறார் என்றே கருதத் தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் தேசிய மாநாட்டின்போது மேலும் ஒரு கடுமையான விமர்சனத்தை ராகுல் முன்வைத்தார். அதாவது, பாஜகவின் தலைவராக கொலைக் குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவர் (அமித் ஷா) உள்ளார் என்று அவர் கூறினார்.
அதற்கு உடனடியாக பாஜகவிடம் இருந்து பதிலடி வந்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் பிணையில் வந்த ராகுல், பாஜக தலைவரைப் பற்றிப் பேசுவதா? என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற ஊழல்களையும், கலவரங்களையும் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார்.
இந்தத் தருணத்தில் இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பொதுவாக ராகுல் காந்தி தெரிவிக்கும் கருத்துகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பாஜக விரிவான விளக்க அறிக்கையை வெளியிடுவதில்லை. அறியாச் சிறுவன் (பப்பு) என்றும், அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என்றும்தான் அவரை பாஜக தலைவர்கள் விமர்சிப்பது வழக்கம்.
இன்னும் சொல்லப்போனால், ராகுல் காந்தியை தங்களுடைய அரசியல் எதிரியாகக் கருதவில்லை என்ற தோற்றத்தையே பாஜகவினர் ஏற்படுத்தி வந்தனர். ஆனால், சமீபத்திய அரசியல் மாற்றங்கள் ராகுலுக்கு உரிய பதிலுரைகளை அளிக்க வேண்டிய நிர்பந்தத்தை பாஜகவுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ராகுலின் பதவி உயர்வு காரணமாக இருக்கலாம்.
அல்லது, பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தானிலும், உத்தரப் பிரதேசத்திலும் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அக்கட்சி அடைந்த தோல்வி அதற்குக் காரணமாக இருக்கலாம். அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய சந்திரபாபு நாயுடு, பாஜக - காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை மத்தியில் உருவாக்க முயன்று வருவதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
தேசிய அரசியலில் மூன்றாவது அணியை உருவாக விடக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. 
காங்கிரஸும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு வேறுபாடு உள்ளது. பாஜகவைப் பொருத்தவரை, மூன்றாவது அணி உருவாகவிடாமல் தடுத்தாலே வாக்கு வங்கி சிதறி, அது அக்கட்சிக்கு சாதகமாக அமையும் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில், காங்கிரஸுக்கோ மாற்று அணி அமையாமல் தடுப்பதுடன், ஒத்த கருத்துடைய கட்சிகளை எல்லாம் தங்களுடன் கைகோக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதன் காரணமாகவே காங்கிரஸ் தேசிய மாநாட்டில், பாஜகவைத் தோற்கடிக்க புதிய அரசியல் உத்தி கையாளப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தேசிய மாநாடு என்பதால், அதை அரசியல் அரங்கமே உற்று நோக்கியது. அதற்கு தகுந்தாற்போல அவரது உரையும் வீராவேசமாக அமைந்தது. பாஜகவை வீழ்த்தி மீண்டும் காங்கிரஸை அரியணையில் ஏற்றுவதே முக்கியக் குறிக்கோள் என்பது அவரது மொத்த உரையின் மையக் கரு. ஆனால், அதை எவ்வாறு சாத்தியப்படுத்தப் போகிறார் என்பதுதான் இப்போதைய கேள்வி.
ஒரு காலத்தில் நாடு முழுவதும் கொடிகட்டிப் பறந்த காங்கிரஸ் கட்சி, தற்போது வெறும் 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. கட்சியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் மாநில அளவில் பலப்படுத்துவதற்கு முன்னால் வட்டக்கிளை அளவில் இருந்து வலுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது. அதை சாத்தியமாக்கி தனது சூளுரையை ராகுல் வென்றெடுப்பாரா என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com