உயிர் துறக்கும் தமிழ் நதிகள்

ஆங்கில மொழிவழிக் கல்விக்கு நாம் அடிமையாகிவிட்டோம். வேலை வாய்ப்பு, உயர்கல்வி என்று பல காரணங்கள் இருப்பினும்,

ஆங்கில மொழிவழிக் கல்விக்கு நாம் அடிமையாகிவிட்டோம். வேலை வாய்ப்பு, உயர்கல்வி என்று பல காரணங்கள் இருப்பினும், தமிழைப் பயின்ற மாணவர்களுக்குப் பிழையில்லாமல் நான்கு வாக்கியம் தமிழில் எழுத முடியவில்லை. வல்லினம், மெல்லினம் தெரியவில்லை. துணைக்கால் போடக்கூடத் தெரியவில்லை! இன்று தமிழ்மொழி ஆடையின்றி இருப்பதைப் போல் நாளை நதிகளும்.
மத்திய அரசைக் காரணம் காட்டி மாநில அரசு தப்பிக்கும். நதியில் நீர் இல்லாவிட்டால் என்ன? மணல் உள்ளதே. ரூ. 2000 விற்ற மணல் 20,000, 30,000 என்று விற்கும்போது, தமிழா! தண்ணீரைப் பற்றி உனக்கு ஏன் கவலை? மணலை விற்றுப் பணம் பண்ணும் ஆசையில் சமூக விரோதிகளால் கொல்லப்பட்ட நாங்குனேரி காவலர் ஜகதீஷ்துரை, பிணமானார். நதிகளும் பிணமாகின்றன. தண்ணீரை நிலை நிறுத்தும் ஆற்றல் கொண்ட மணலை அள்ளிய பின், அந்த நதிக்குத்தான் வாழ்வு உண்டா?
காவிரி ஒப்பந்தத்தை மீறி, வழக்கு நிலுவையில் உள்ளதைப் பொருட்படுத்தாமல் தமிழ்நாடு அரசின் எதிர்ப்புகளையும் மீறி, மத்திய நீர் வள ஆணையம் நீர் தர மறுத்தபோதும், சொந்த மாநில நிதியைக் கொண்டு கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹாரங்கி அணைகளைக் கட்டி முடித்தார், கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ். அந்த முதல்வர், அம்மாநில விவசாயிகள் மீது அக்கறை கொண்டிருந்தார். ஆனால், தமிழ்நாட்டிலோ பரம்பிக்குளம் - ஆழியார் ஒப்பந்தத்தில் உள்ள ஆனை மலையாறு அணைகளைக்கூடக் கட்டாத தமிழ்நாடு அரசு, 48 ஆண்டுகளாக சாக்குப் போக்கு சொல்லி வருகிறது. நதிநீர்ப் பங்கீட்டில் 'காவிரி காவிரி' என்று இல்லாத தண்ணிக்குக் குரல் தூக்கும் தமிழினம், நம் எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை மறந்தே போய்விட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாட்டு எல்லையில் உள்ள நதிகள் கேரளம் வழியே அரபிக்கடலில் கலந்து வீணாவதைக் கண்டறிந்த வேட்டைக்காரன் புதூர் வி.கே. பழனிச்சாமி கவுண்டர் அப்போது அரசாண்ட காமராஜரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல, இரு மாநில விவசாயிகளும் பயன்பெற பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத்திட்டம் உருப்பெற்று அணைகள் கட்டப்பட்டாலும், ஒப்பந்தப்படி சில ஆறு இணைப்புகள் கண்டு கொள்ளப்படவில்லை.
1970-இல் தமிழ்நாடு - கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நிகழ்ந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் நாட்டுக்கு ஆனை மலையாறு திட்டம் முழுமையாகச் செயல்படவில்லை. 
ஆனை மலையாறு திட்டத்தின் கீழ், 1. ஆனை மலையாறு- (2.5 டி.எம்.சி); 2. மேல் நீராறு -(9.0 டி.எம்.சி); 3. கீழ் நீராறு- (2.5 டி.எம்.சி); 4. தமிழ்நாடு சோலையாறு - (2.5 டி.எம்.சி); 5. பரம்பிக்குளம் -தூணக்கடவு-பெருவாரிப்பள்ளம் - (14 டி.எம்.சி). 
மேற்கண்ட ஐந்தில் நான்கு கட்டி முடிந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள். ஆனால், ஆனைமலையாறு அணை தொடங்கப்படவில்லை. காரணம், ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஷரத்துப்படி கேரள அரசு இடைமலையாறு திட்டத்தை முடித்தபின் ஆனைமலையாறு தொடங்க வேண்டும். 1990-இல் கேரள அரசு இடைமலையாறு திட்டத்தை நிறைவேற்றிவிட்டது. 
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதைபோல் உள்ளது. இடைமலையாறு திட்டத்தைக் கேரள அரசுக்கு ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி முடித்துக் கொடுத்துள்ளது. போபாலில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மின் உற்பத்தி நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளது. ஆனால், நாம் ஏன் ஆனைமலையாறு அணைத்திட்டத்தைத் தொடங்கவில்லை? மாநில அரசின் மெத்தனத்தால் ஆண்டுக்கு 2.5 டி.எம்.சி தண்ணீரை 1990-க்குப் பின் அணை கட்டாத காரணத்தால் 20 ஆண்டுகால இழப்பைக் கணக்கிட்டால், 50 டி.எம்.சி அதாவது, 5 லட்சம் ஏக்கர் விளைச்சல் போய்விட்டது. ரூ.50 கோடி செலவில் 1990 விலைவாசியின்படி தயாரித்து அனுப்பப்பட்ட ஆனைமலையாறு அணைத்திட்டம் மத்திய நீர் மற்றும் மின்சார ஆணையம் என்ற கிடங்கில் போட்டுவிட்டார்கள். எப்போது கண்டுபிடித்து, என்று பணி தொடங்கும் என்பதே யோசனையாக உள்ளது. சோற்றில் மறைந்த பூசணிக்காய் இப்போது அழுகி நாற்றமெடுத்தாலும், வீசுவது காவிரி நாற்றமே; ஆனைமலையாறை அமுக்கிவிட்டது.
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் 1958 நவம்பர் 9-ஆம் தேதியிலிருந்து அமல் செய்யப்பட்டது. இது காவிரி டெல்டா பாசனத் திட்டத்திற்குப் பிறகு உருவான இரண்டாவது பெரிய அணைக்கட்டுக்கான திட்டமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மீது பாயும் ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு ஆகிய ஆறுகளையும், சமவெளியில் பாயும் ஆழியாறு, பாலாறு, ஆகிய இரண்டு ஆறுகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட பரப்பிக்குளம் ஆறு திட்டத்தில் ஆனைமலை ஆறு இன்றளவும் இணைக்கப்படவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்படி திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். செய்தார்களா? கூடிக் கூடிப்பேசியும் விவாதம் முடிந்தபாடில்லை.
இரு மாநிலங்களிலும் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கட்சி மாற்றம், பொதுப்பணித்துறை அமைச்சர்கள் மாற்றம், உயர்மட்டக்குழு அதிகாரிகள் மாற்றம் ஏற்பட்டதே தவிர, ஆனைமலையாறு திட்டம் விடிவு பெறவில்லை. இவ்வாறு முடங்கிய திட்டத்தைப் புதைபொருள் ஆய்வு செய்து தோண்டி எடுப்பார்களா?
தமிழ்நாட்டில் உள்ள நதிகளில் நீர் வழங்கி, விவசாயம் செய்து, விளைந்ததைக் கொள்முதல் செய்து லாபமா நஷ்டமா என்று ஏற்படும் சந்தேகத்தை விட, நதிகளை வற்ற வைத்து மணல் அள்ளும் தொழிலில் உள்ள லாபத்தில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டில் நிறைய நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளவர்களும், விவசாயிகள் என்ற போர்வையில் ரியல் எஸ்டேட், கந்துவட்டி செய்யும் செந்தமிழ் ஃபைனான்சியர்களும், 'செம்மொழியே எங்கள் தமிழ்' என்று முழுங்கும் போர் வாட்கள் எல்லாம் அரசியல் புரிதல்களோடு மணல் அள்ளி, இதை எதிர்க்கும் காவலர்களையும், வருவாய்த்துறை அதிகாரிகளையும் தமிழ்வாளால் கொல்லும் போக்கு, குறைந்தபாடில்லை!
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமாயுள்ள கொடைக்கானல் மலைத்தொடரை ஓர் உதாரணமாகக் கொள்வோம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் கொண்ட கொடைக்கானல் எங்கள் தமிழ்மலை. தாண்டினால் வரும் தாண்டிக்குடி எங்கள் தமிழ் மலை; தாண்டிக்குடி தாண்டினால் தடியன் குடிசை எங்கள் தமிழ்மலை; அதைத் தாண்டி வந்தால் முறுக்கடி-அமைதிச்சோலை - பன்றிமலை எங்கள் தமிழ்மலை. மேலே மேலே ஏறி 7000 அடி உயரத்தில் உள்ள தோணி மலை எங்கள் தமிழ்மலை. இங்குதான் குடவனாறு உற்பத்தியாகிறது. மூலிகைச் சாறுடன் கலந்த அக்குடவனாற்றுத் தண்ணீர் மாசில்லா நன்னீர். தண்ணீர் சுத்தி அங்கு. இங்கு சுத்திக்குரிய தண்ணீரை சுத்தம் செய்து தானே குடிக்கிறோம்! 
மலைக்கதை இன்னும் முடியவில்லை. முறுக்கடி தாண்டி வடமேற்கு வழியில் பழனி மலை. பழனிமலை செல்வதற்குள் கே.சி.பட்டி, பாச்சலூர், சரிவுச் சூழலில் சண்முகாநதி பாலாறு - பொருந்தலாறு குதிரையாறு வரதமா நதி, பரப்பலாறு என்று பல நதிகள் உற்பத்தியாகி இறக்கத்தில் வேடசந்தூர் வழியில் குடகனாற்றில் கலந்து, பின்னர் கரூர் அருகில் காவிரியில் கலக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்பு விட்டுப்போன ஒரு பெருமலைத் தொடர்பு, திண்டுக்கல்லில் சிறுமலை என்று அழைக்கப்பட்டாலும் அதன் நீட்சி கிழக்கே, நத்தம் வரையிலும், தெற்கே அழகர் மலை வரையிலும் தொடர்ச்சி உண்டு. நத்தம் செல்லும் வழியில் கோபால்பட்டியின் மலைப்பகுதி அய்யலூர் வரை கோம்பை, காக்கேயம்பட்டி என்று பல மலைகள் சூழ்ந்த திண்டுக்கல், சங்ககாலக் குறிஞ்சித் திணையின் இலக்கணம். இன்று பாலையாகிவிட்டது. கமலை வைத்து இரைத்த நாளெல்லாம் பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போனது. கொடைக்கானல் மலைப் பகுதியில் பாரம்பரிய மரங்களை வெட்டி காபி, ஆரஞ்சு, ஏலக்காய், உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பீன்ஸ், செளசெள சாகுபடி ஒரு பக்கம். சிறுமலைத் தொடரிலும் அப்படித்தான். பழைய மரங்கள் வெட்டப்பட்டன. ஏராளமான சுனைகளும் வற்றிவிட்டன. மரத்தை வெட்டியதோடு சும்மா இருந்தார்களா? குடவனாறு பரப்பலாறு, வரதமா நதி, சண்முகா நதிகளின் மணலையும் அள்ளி விற்றார்கள். சிறுமலைத் தொடரிலிருந்து இறக்கத்தில் ஓடும் சிறு சிறு ஓடைகளின் மணலையும் விற்றார்கள்.
தமிழ் மலையில் விளையும் தமிழ் மணலை அள்ள தமிழர்களுக்கு உரிமையில்லையா? சின்னச் சின்ன ஓடைகளைக் கூட விட்டு வைக்கவில்லையே. திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடும் பல சிற்றாறுகளின் பெயர்கள் விட்டுப்போயிருக்கலாம். ஆனால், அந்தச் சிற்றாறுகளின் மணல் திருட்டு விட்டுப்போகவில்லை. எண்ணெய்க் கிணறுகளுக்குத்தான் ஆழ்துளை போடுவார்கள். இங்கு தண்ணீருக்கு 2000 அடி துளை போடப்படுகிறது. ஆற்று மணலை அள்ளிவிட்டு அதனருகிலேயே ஆழ்துளைகள். தண்ணியும் வரவில்லை; எண்ணெய்யும் வரவில்லை; மணலையும் விற்றுவிட்டோம். 
'உலகிலேயே ஒப்பற்ற வீரமும், ஆழ்ந்த அறிவும், வரலாற்றுப் பாரம்பரியமும் கொண்டவர்கள் தமிழர்கள்' என்ற பெருமையெல்லாம் தலையணைக்கு உறைபோட மட்டும்தானா? நதிகளைக் காப்பாற்றுவதற்கில்லையா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com