தொடர்கதையாகும் குழந்தை கடத்தல்...

அண்மையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்ற சென்னையைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்

அண்மையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்ற சென்னையைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின்பேரில், கிராமவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் சென்ற சிலரும் தாக்கப்பட்டு, படுகாயமடைந்தனர். 
இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. மேலும், இத்தகைய குழந்தை கடத்தல் நடவடிக்கைகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தோர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், அவர்களது நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. 
இப்படி செய்யப்படும் வீண் வதந்திகளால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும், இதற்கென உள்ள பெரிய நெட்வொர்க்கைக் கொண்ட கும்பல், தங்களது பணியை செவ்வனே அரங்கேற்றி, பணம் சேர்த்து வருகின்றனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
அதாவது, அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்கதையாகவும், அதிகரித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் நாள்தோறும் 10 குழந்தைகள் காணாமல் போவதாகக் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மாநில குற்றவியல் ஆவண அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, 2011 முதல் 2015- ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 14,716 குழந்தைகள் காணாமல் போனதாகக் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 5,056 என்றும், பெண் குழந்தைகள் 9,660 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 14,174 பேரை போலீஸார் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் கண்டறிந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் 535 குழந்தைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. அவர்களின் தற்போதைய நிலை என்ன என்றும் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு பேர் என்றால், இந்தியா முழுவதும் எவ்வளவு பேர் காணாமல் போயிருப்பர்? 
மேற்கூறிய நான்கு ஆண்டுகளில் சென்னை மாநகரில் மட்டும் சுமார் 2,500 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் ஆண் குழந்தைகள் 1,000 பேர், பெண் குழந்தைகள் 1,500 பேர். இவர்களில் ஏராளமானோர் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த அறிக்கையின்படி, காணாமல் போனவர்களில் அதிகமானோர் பெண் குழந்தைகள் எனத் தெரியவருகிறது. இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகளை மீட்க காவல் துறையினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஈடுபட்டு வந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், யுனிசெஃப் நிறுவனம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், சுமார் 1.5 கோடி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நச்சுத்தன்மைமிக்க தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 15 லட்சம் குழந்தைகள் பாலியல் சார்ந்த தொழில்களுக்காகக் கடத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் சுமார் 4 லட்சம் குழந்தைகள் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குழந்தைகள் கடத்தல் என்பது இந்தியாவில் முக்கிய, தீர்க்க முடியாத பிரச்னையாக விளங்குகிறது. குழந்தை கடத்தல் கும்பலின் முக்கிய இலக்கு ஏழைகள் மற்றும் பிற்பட்ட பகுதிகளில் வசிப்போர். குழந்தைகள் அதிகம் கடத்தப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இவ்வாறு கடத்தப்படுவோர் ஆபத்தான பணிகளிலும் பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று அமெரிக்க அரசுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் கடத்தப்படுவோரில் 61 சதவிகிதம் பெண் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்படும் குழந்தைகள் தவிர, ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்துவதற்காக பெற்றோரே பணத்துக்காகக் குழந்தைகளை விற்கும் அவலமும் இந்தியாவில் அரங்கேறி வருகிறது. இத்தகைய குழந்தைகள் செங்கல் சூளைகள், கட்டுமானப் பணிகள், விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கொத்தடிமைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர். இந்தியாவிலிருந்து நேபாளம், வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். இதற்கென நாடு முழுவதும் பெரிய அளவிலான பல்வேறு கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. 
ஆண், பெண் குழந்தைகளைப் பாதுகாக்க சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்து வருவதுடன், குழந்தைகளைக் கடத்துவோர் மீது தற்போது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் போதாது என்றும் வலியுறுத்தப்படுகிறது. அவ்வப்போது தொழில் நிறுவனங்கள், பெட்டிக் கடைகள், டீக்கடைகளில் குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது குறித்து ஆய்வு நடத்தினாலும், அவர்களது எண்ணிக்கை குறையவில்லை.
இப்பிரச்னைக்கு ஆரம்ப நிலையிலேயே தீர்வுகாண வேண்டுமென்றால், பெற்றோர் போதிய கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும். சமூகம் குறித்த அக்கறை மற்றும் விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும். இத்தகைய பணிகளை மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் செய்து வந்தாலும், அவை முனைப்புடன் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. கடத்துவோருக்கான தண்டனையைக் கடுமையாக்க வேண்டும்.
நாடு முழுவதும் ஏழைகள், பின்தங்கியோர் வசிக்கும் பகுதிகளில் அதிகளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். குழந்தைகளின் நலன் குறித்து அவர்களது போதிய அறிவைப் புகட்ட வேண்டும். அடிக்கடி கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் குழந்தைத் திருமணங்களை ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குழந்தையைக் காணவில்லை என்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதை மட்டும் பணியாகச் செய்யக் கூடாது. 
இத்தகைய பணிகளை மத்திய - மாநில அரசுகள், பல்வேறு அரசுத் துறை நிறுவனங்கள், அரசு சாராத அமைப்புகள் ஆகியவை இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும். குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com