புறக்கணிக்கப்படும் திருநங்கையர்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் பணிபுரியும் திருநங்கைகள் பலர் பாலியல் ரீதியான மோசமான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் பணிபுரியும் திருநங்கைகள் பலர் பாலியல் ரீதியான மோசமான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதையும் தாண்டி குடியிருப்பு, வேலைவாய்ப்பு ஏன் கழிப்பிடம் கூட அவர்களுக்கு பிரச்னைதான். பள்ளிகளில் படித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் புறக்கணிப்பு காரணமாகப் படிப்பை பாதியில் கைவிடவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலான திருநங்கைகளுக்கு முறையான கல்வி கிடைப்பதில்லை. கல்வி அறிவு இல்லாததால் முறையான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. 
திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சட்டப்பூர்வமாக அங்கீகரித்து அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். தழிழகத்தில் ஏறக்குறைய 3 லட்சம் திருநங்கையர் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திருநங்கையருக்கான உரிமைகள் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பரவாயில்லை. குடும்ப அட்டைகளில் பாலினம் என்ற வரையறையில் மூன்றாம் பாலினத்தையும் இணைத்திட 2008-ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது திருநங்கையரின் குடியுரிமை சார்ந்த தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்றே சொல்லாம்.
குடும்பத்தால், நண்பர்களால், உறவுகளால் புறக்கணிக்கப்பட்டாலும் அதனையும் தாண்டி சாதித்திருக்கிறார்கள் திருநங்கைகள். இந்தியாவிலேயே முதன்முதலாக சப்-இன்ஸ்பெக்டராக ஆகியிருக்கிறார் தழிழகத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி. இந்த சமூகத்தை சேர்ந்த ரோஸ் வெங்கடேசன் விஜய் தொலைக்காட்சியில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இன்னொரு சேனலில் திருநங்கை பத்மினி பிரகாஷ் செய்தி வாசிப்பாளராக உள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் மெட்ரோ ரயிலில் ஏராளமான திருநங்கைகளுக்கு பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு சிறந்த கல்வி வசதியை அளிக்கும் வகையில் கொச்சி நகரில் திருநங்கைகளுக்கான பள்ளி 2016-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைளுக்கு என தொடங்கப்பட்ட பள்ளி என்ற பெருமையை இந்தப் பள்ளி பெற்றுள்ளது. இந்தப் பள்ளிக்கான விடுதி வசதியும் அங்கு இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகளாக திருநங்கைகளே பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் மகளிர் கல்லூரியில் நாட்டின் முதல் திருநங்கை முதல்வராக மானபி பந்தோபாத்யா பதவி வகித்து வந்தார். மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். இவருடைய சாதனைகள் பல பத்திரிகைகளால் பாராட்டப்பட்டது. ஆனால் அவருக்கு கல்லூரி ஆசிரியைகள் அலுவலர்கள் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை. வேறுவழியில்லாமல் வேதனையோடு பதவியை ராஜினாமா செய்தார்.
திருநங்கைகள் முதலில் குடும்பத்தாராலும் பின்னர் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுகிறார்கள். திருநங்கைகள் நலனில் அரசுகள் அக்கறைகாட்ட வேண்டும். அரசியலைப்புச் சட்டம் மூலம் அவர்கள் போதிய உரிமைகளைப் பெறுவதற்கு அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இவர்களின் உரிமைகளை 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதிசெய்துள்ளது. அது மட்டும் போதாது. அவர்களுக்கென சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.
அவர்கள் சொந்தக் காலில் நிற்கவும், சுயமரியாதையோடு வாழவும், வருமானத்தை உருவாக்கிக் கொள்ளவும் அவர்களுக்கு முறையான வாழ்வாதாரப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மிகக்குறைந்த வட்டியில் தொழிற் கடன்கள் வழங்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் திருநங்கைகள் வேலைகளில் சேர்ந்திட அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
ஆண்கள் திருநங்கைகளை மணந்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும். இதனால் போலியாக மணமுடித்து திருநங்கைகளை சுரண்டிப்பிழைக்கும் நபர்களுக்கு தண்டனையை பெற்றுத் தரவும் திருமணம் முடித்து விட்டுச் செல்ல நினைப்பவர்களிடம் முறையாக போராடி தங்கள் உரிமையை நிலைநிறுத்தவும் திருநங்கைகள் திருமணச்சட்டம் உதவும். படிப்பைத் தொடர அரசு உதவுவதோடு கல்விக்கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும். திருநங்கைகள் பலருக்கு இலக்கியம், நாடகம், இசை என்று பல தளங்களில் இயங்கும் திறன் உண்டு. அவர்களின் திறமையை மேம்படுத்திட அவர்களுக்கு பயிற்சியும் வாய்ப்புகளும் கிடைக்குமாறு செய்யவேண்டும்.
குழந்தைத் தத்தெடுப்பு, சொத்துகள் வாங்குவது என்று பல விஷயங்களில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் தடங்கல்களை நீக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அரசின் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சிகளைப் போல் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் தனியாக குறைதீர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் பிரச்னைகளை நேரடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வாய்ப்பு உருவாகும். திருடர்கள் குடிகாரர்கள் என்று தவறு செய்பவர்கள்கூட குடும்பத்தில் அனுமதிக்கப்படும்போது எங்களை மட்டும் புறக்கணிப்பதும் விரட்டியடிப்பதும் வேதனை தருகிறது என்று திருநங்கையர்கள் புலம்புவதை பார்க்க முடிகிறது. குடும்ப அமைப்பில் நாங்கள் இணைந்திருக்கும் வகையில் அரசு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்கிறார்கள் திருநங்கைகள் வேதனை தோய்ந்த குரலில் - நியாயம்தானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com