காலக் கண்ணாடி சொன்ன கதை

நீராவி படிந்த குளியலறைக் கண்ணாடி போல, முகங்கள், காட்சிகள் எல்லாம் மங்கலாக நினைவடுக்கில் புதையுண்டு கிடந்தன.

நீராவி படிந்த குளியலறைக் கண்ணாடி போல, முகங்கள், காட்சிகள் எல்லாம் மங்கலாக நினைவடுக்கில் புதையுண்டு கிடந்தன. ஆனால் அண்மையில் கர்நாடகத்தில் எதிர் எதிராகத் தேர்தலில் போட்டியிட்டு களத்தில் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டு தேர்தலுக்குப் பின் பதவி ஆசையால் கை கோத்துக் கொண்ட சமகால அரசியல் நிகழ்வுகள் கடந்த காலக் காட்சிகளை அகழ்ந்தெடுத்துவிட்டன.
விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு உலவிய தருணம் 90 கள். பரபரப்பிற்குக் காரணம் அன்றைய அரசியல்வாதிகளின் முகமூடிகள் கழன்று அந்தரங்கங்கள்அரங்கேறிய காலம் அது. "ஆசை வெட்கம் அறியாது' என்ற நிஜம் நிரூபணமான வேளை அது.
நவம்பர் 10, 1990
கை தட்டிக் குதூகலிப்பது போல, குடியரசுத் தலைவர் மாளிகை செல்லும் வழியெங்கும் காங்கிரசின் மூவர்ணக் கொடிகள் படபடக்கின்றன. விறைப்பான வெள்ளைச் சீருடை உடுத்திய காங்கிரசின் தொண்டர் படை (சேவாதள்) அணிவகுத்து நிற்கிறது. ராஜீவ், இந்திரா ஆகியோரின் பிரம்மாண்ட படங்கள் கட்டப்பட்ட மாருதி ஜிப்சிகள் வீதிகளில் விரைந்தோடுகின்றன. வருவோர் போவோரையெல்லாம் நிறுத்தி காங்கிரஸ்காரர்கள் வாயில் இனிப்பைத் திணிக்கிறார்கள். 
ஆனால், பதவி ஏற்கப் போவது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவர் இந்திராவின் எதிரி. எமெர்ஜென்சியின் போது இந்திராவால் சிறை வைக்கப்பட்ட காங்கிரஸ்காரர்களில் ஒருவர். அவர் - சந்திரசேகர்.
மக்களவையில் உள்ள மொத்த இடங்களில் 10 சதவீதத்திற்குச் சற்று அதிகமான இடங்களைக் கொண்ட, வெறும் 60 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரான சந்திரசேகர் பிரதமராக பதவி ஏற்கிறார். அன்று அவரது கட்சியினரைவிட அதிகம் மகிழ்ந்து கொண்டாடியவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்கள் முகத்திலும் மனதிலும் பழிதீர்த்துக் கொண்ட பரவசம், நிறைவு, ஆனந்தம். ஆட்சியில் அமர்வது யார் என்பது அன்றைக்கு அவர்களுக்கு இரண்டாம் பட்சம். யாரை வீழ்த்தினோம் என்பதை எண்ணித்தான் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வீழ்த்தியது வி.பி. சிங்கை. ராஜீவ் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர் வி.பி. சிங்.
வி.பி.சிங் அரசிற்கான ஆதரவை பாஜக விலக்கிக் கொண்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே காங்கிரசிடமிருந்து அறிவிப்பு வந்துவிட்டது. வி.பி. சிங் இல்லாத ஜனதா தளத்தை ஆதரிக்க நாங்கள் தயார் என்றது அந்த அறிவிப்பு. 
"கட்சியை நீங்கள் உடைக்கலாம்' என்று சந்திரசேகருக்குக் கொடுக்கப்பட்ட சமிக்ஞை அது. அவரோடு எத்தனை எம்.பிகள் வருவார்கள் என்று உறுதியாகத் தெரியாத சூழல். ஆனால் குறைந்தது 60 பேராவது வந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும். காங்கிரசின் வசம் 211 எம்.பி.க்கள் இருந்தார்கள். ஆட்சி அமைக்க 271 உறுப்பினர்களாவது தேவை. அது மட்டுமல்ல, அப்போதுதான் அந்த எம்.பி.க்களின் பதவி தப்பும். இல்லை என்றால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும்.
ஜனதா தளத்தில் வி.பி. சிங்கிற்கு எதிரான அணியில் நான்கு பிரிவினர் இருந்தார்கள்.உ.பி. முதல்வராக இருந்த முலாயம் சிங்கிடம் 12 எம்.பி.க்கள் இருந்தார்கள். வி.பி.சிங் தேசிய அரசியலுக்குப் போய்விட்ட சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு உ.பி.யை தன்வசப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முலாயம் சிங் முனைந்திருந்தார். அதற்கு "செக்' வைக்கும் விதமாக, எண்ணிக்கையில் மற்றொரு பெரிய சமூகமான "ஜாட்' சமூகத்தைச் சேர்ந்த அஜித் சிங்கை முதல்வராக்கும் முயற்சியில் வி.பி. சிங் குழு இறங்கியிருந்தது. முலாயம் சிங், தன் முதல்வர் பதவி காப்பாற்றப்படும் என்றால் சந்திரசேகரை ஆதரிக்கத் தயாராக இருந்தார். என்.டி. திவாரி மூலம் காங்கிரஸ் அவருக்கு உறுதியளித்தது.
மற்றவர் தேவிலால். அவர் பிரதமர் பதவியின் மீது ஒரு கண் வைத்திருந்தார். ஆனால் தினேஷ் சிங், சிவசங்கர், பல்ராம் ஜாக்கர் ஆகியோர், அவரை பக்கத்திலேயே சேர்க்கக் கூடாது என்று முரண்டு பிடித்தார்கள். அதையே சொல்லி அவரை பிரதமர் ஆக்காமல் - ஆனால் துணைப் பிரதமர் பதவி தருவதாகச் சொல்லி - சமாதானப்படுத்தினார்கள்.
சுப்பிரமணியன் சுவாமி நிதி அமைச்சர் பதவி தனக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி வந்தார்.அதைத் தனக்கு அளிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தான் வி.பி.சிங் அணிக்கு மாறிவிடப்போவதாகவும் கமால் மொரார்கா வெளிப்படையாக அறிவித்தார். இதையெல்லாம் சமாளித்து 60 எம்.பி.களைத் திரட்டினார் சந்திரசேகர். ஜனதா தளம் உடைந்தது. சந்திரசேகர் தன் கட்சிக்கு வைத்த பெயர் ஜனதா தளம் -எஸ். இந்த "எஸ்' என்பது "செக்யூலர்' என்பதைக் குறிக்கவில்லை. சமாஜ்வாதி என்பதைக் குறிப்பது.
எதிரணியில் இருந்தபோது ராஜீவ் காந்தியும் சந்திரசேகரும் பரஸ்பரம் செய்து கொண்ட விமர்சனங்களையும், பின் கைக்கெட்டும் தொலைவில் பதவி வந்ததும் பொழிந்த பாராட்டுக்களையும் இன்று படிக்கும் போது சந்தர்ப்பவாதம் சலங்கை கட்டிக் கொண்டு ஜல் ஜல் எனச் சிரிக்கிறது. "ராஜீவ் தவறுதலாக அரசியலுக்கு வந்துவிட்ட குழந்தை' - இது சந்திரசேகர் 1990 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எதிரணியில் இருந்த போது. "நாட்டைக் காப்பாற்ற நாங்கள் இருவரும் சேர்ந்து உழைக்கத் தீர்மானித்திருக்கிறோம்' இது அதே 1990 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஆட்சியில் அமரும்போது. "சந்திரசேகரோடு கூட்டு வைத்தால் எங்களுக்குத்தான் இழப்பு' - இது ராஜீவ் 1989 - ஆம் ஆண்டு ஜூலையில். "சந்திரசேகர் முன்னாள் காங்கிரஸ்காரர். அவரை நம்புகிறோம்' - இது 1990 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம்!
வி.பி.சிங் வீழ்ந்தவுடன், ஜனதா தளத்தை உடைத்து, உடைந்த பிரிவினரின் ஆதரவோடு தன்னிடம் இருந்த 211 எம்.பி.களைக் கொண்டு ராஜீவை பிரதமராக்காமல், சந்திரசேகரை பிரதமராக்கியது ஏன்? அன்று நாடு ஒரு கொதி நிலையில் இருந்தது. பஞ்சாப் புகைந்து கொண்டிருந்தது. காஷ்மீர் தலைவலி உக்கிரமடைந்திருந்தது. மண்டல் கமிஷன் விவகாரம், பாப்ரி மஸ்ஜித் இரண்டும் கொந்தளிப்பை உருவாக்கிக் கொண்டிருந்தன. இதில் எது வெடித்தாலும் பழி சந்திரசேகர் மீது விழும். இன்னொரு புறம் ராஜீவ் மீது போபர்ஸ் ஏற்படுத்தியிருந்த கறை அப்போது நீங்கியிருக்கவில்லை. நாட்டில் நிலவிய பிரச்சினைகளையெல்லாம் எதிர்கொள்ள வலிமையான ஆட்சி வேண்டும். இன்னொருவர் தயவில் நடக்கும் ஆட்சி பயன் தராது. இன்னும் சொல்லப் போனால் சமரசங்களுடன் நடக்கும் ஆட்சி மேலும் அவப் பெயரைக் கொண்டு வரும் சாத்தியங்களே அதிகம். எனவே, அது சந்திரசேகரைப் பயன்படுத்திக் கொண்டு பின் அவரைக் காங்கிரசிற்குக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தது.
சந்திரசேகர் தன்னுடைய நிலைமையை நன்கு புரிந்து வைத்திருந்தார். தன்னுடைய 60 எம்.பிக்களில் 20 பேரை அணி மாறச் செய்தால் தன் ஆட்சியும் கட்சியும் கவிழ்ந்து விடும் என்பது அவருக்குத் தெரியும். அதனால் அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட அவர் காங்கிரசை தன் பக்கம் கொண்டுவரத் திட்டமிட்டார். அவர் மறைமுகமாக சரத் பவார், குஜராத் முதல்வராக இருந்த சிமன்பாய் படேல் இவர்களின் துணை கொண்டு காங்கிரசிற்குள் ராஜீவிற்கு எதிராக ஒரு அணியை உருவாக்க முயற்சித்தார். அவர்கள் மூலம் பிஜு பட்நாயக், அருண் நேரு, ஆரிஃப் முகமது கான் ஆகியோரையும் ஒருங்கிணைக்க முயன்றார். அவருக்கு கான்ஷிராமின் ஆதரவும் இஸ்லாமியர்களின் ஆதரவும் இருந்தது. திருபாய் அம்பானி,ஜெயந்த் மல்ஹோத்ரா போன்ற தொழிலதிபர்களும் அவருக்கு உதவத் தயாராக இருந்தனர்.
எதையோ பிடிக்கப் போய் அது வேறெதுவாகவோ முடிந்ததை உணர்ந்த ராஜீவ் சுதாரித்தார். ஹரியாணாவில் தேவிலாலின் மகன் சௌதாலா ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவரை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி சந்திரசேகரை வற்புறுத்திக் கொண்டிருந்தார்.அப்படிச் செய்தால் தேவிலால் வெகுண்டெழுவார், அது ஜனதா தளத்திற்குள் பிரச்சினைகளை உருவாக்கும், அதை சமாளிப்பதில் சந்திரசேகர் கவனம் திரும்பும் என்பது அவர் கணக்கு. ராஜீவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, ஹரியாணா காவல் துறையின் உளவுப் பிரிவைச் சேர்ந்த பிரேம் சிங், ராஜ் சிங் என்கிற இரு கான்ஸ்டபிள்களை ராஜீவ் வீட்டின் முன் பணியமர்த்தினார் சௌதாலா. சௌதாலாவோடு முரண்பட்டிருந்த அவரது சகோதரர் ரஞ்சித், ராஜீவிற்கு இந்த உளவு விஷயத்தைத் தெரியப்படுத்தினார்.
ராஜீவ் வெகுண்டெழுந்தார். சந்திரசேகரை சந்திக்க மறுத்தார். அவரது தொலைபேசி அழைப்புக்களைக் கூட நிராகரித்தார்.காங்கிரஸ் நாடாளுமன்றத்தை புறக்கணித்தது. பின் சந்திரசேகர் அரசிற்கான ஆதரவை விலக்கிக் கொண்டது. 1991 - ஆம் ஆண்டு மார்ச் ஆறாம் தேதி, நான்கு மாதங்களுக்குள் பதவியை ராஜினாமா செய்தார்.
அதிகாரத்தின் மீதுள்ள ஆசையால், அதை அடைய குறுக்கு வழிகள் மூலம் அமைக்கப்படும் கூட்டணிகள், பொருந்தா உறவுகள் நிலைப்பதில்லை என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
கேட்கத்தான் நமக்கு காதில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com