குப்பையில் மாணிக்கம்

ஒரு நாட்டில் சுத்தம், சுகாதாரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறேதோ, அந்த அளவிற்கு அந்நாட்டு மக்களின் கலாசாரம் மேம்பட்டிருக்கிறது என்பது பொருள்.

ஒரு நாட்டில் சுத்தம், சுகாதாரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறேதோ, அந்த அளவிற்கு அந்நாட்டு மக்களின் கலாசாரம் மேம்பட்டிருக்கிறது என்பது பொருள். சுத்தம் ஓர் ஒழுங்குணர்வு, எல்லோரிடமும் ஒருமித்தால்தான் பளிச்சிடும். 
எல்லா நகரங்களிலும் சவாலாக இருக்கக்கூடிய பிரச்னை, கழிவுகளையும், குப்பைகளையும் நிர்வகிக்கும் மேலாண்மை. நகரங்களில் சிதறிக்கிடக்கும் குப்பை எல்லார் கண்களையும் உறுத்துகிறது. அதுவே நகர மக்களின் மனப்போக்கு, நகர நிர்வாகம், ஏன் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிர்வாக மேலாண்மைக்கே அளவுகோலாகிறது. குப்பையைக் கூட அகற்ற யோக்கியதை இல்லையா என்று கேட்கத் தோன்றும்.
இதனால்தான் மத்திய அரசு "ஸ்வச் பாரத்' திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான அம்சம் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் அவலத்தை நீக்குவது. இந்தியாவில் 62 சதவீத மக்கள் கழிப்பறையின்றி திறந்தவெளியில் இயற்கை அழைப்பை நிறைவு செய்யும் கேவலம் தொடர்கிறது.
சிங்கப்பூர், மலேசியா சென்று வரும் தமிழர்கள் அங்கு ஒழுங்கு மரியாதையாக சட்டத்திற்கு உட்பட்டு குப்பை போடாதவராக இருக்கிறார்கள். அவர்கள் சென்னை வந்ததும் எச்சில் துப்புவதும், குப்பை போடுவதும் பொது இடங்களைப் பாழாக்குவதும் தங்களின் சுதந்திரத்திற்கு அடையாளம் போல நடந்து கொள்வதை என்னவென்று சொல்வது? வெட்கித் தலை குனிய வைக்கும் நடத்தை இந்தியர்களுக்கே உரித்தானது போலும்! 
மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தியுள்ளது. இது 2016 -ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டம் "நகராட்சி திடக்கழிவு சட்ட விதிகள் 2000' - த்தின் திருத்தி அமைக்கப்பட்ட வடிவம். இந்த விதிகள், புறநகர்ப் பகுதிகள், குடியிருப்புகளுடன் கூடிய சிறு நகரங்கள், விசேஷ பொருளாதாரக் கட்டமைப்புகள், வியாபாரத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா மையங்கள் மற்றும் வரலாற்றுப் பெருமைக்குரிய இடங்களுக்கும் பொருந்தும்.
குப்பைகள் உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது இந்த விதிகளின் முக்கிய நோக்கமாகும். குப்பை உற்பத்திக்கு பொறுப்பானவர்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பை, பாதிப்பு ஏற்படக்கூடியவை என்று தரம் பிரித்து அதனை உரிய வகையில் கழிவு செய்ய வேண்டும். 
திறந்தவெளியில் குப்பை போடுவது, எரிப்பது, நீர்நிலைகளில் கழிவு பொருட்
களை போடுவது, புதைப்பது ஆகியவை விதி மீறலாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும். 
தூய்மைத் துணிகள் (சானிடரி நாப்கின்ஸ்), கழிக்கப்பட்ட மருந்து வகைகள் இவற்றை மூடி, மக்காத குப்பை தாங்கிய கூடைகளில் போட வேண்டும். 
குப்பை பொறுக்குவோர், குப்பைகளை சேகரித்து வியாபாரம் செய்வோர் இவர்களை இணைத்து நிர்வகிக்க இந்த விதிகளில் இடமுண்டு. இதற்கான முயற்சியை உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு நல சங்கங்கள் எடுக்கலாம்.
பயணியர் விடுதிகள், சிற்றுண்டி விடுதிகள் கழிவு பொருட்களை தங்களின் இருப்பிடங்களிலேயே சமன் செய்ய வேண்டும் அல்லது உள்ளாட்சியோடு இணைந்து கழிவுகளை தரம் பிரித்து விதிகள்படி பதம் செய்ய வேண்டும். 
ஐயாயிரம் சதுர மீட்டருக்கு அதிகமான குடியிருப்பு வளாகங்கள், குப்பைகளை தரம் பிரித்து, மக்கக்கூடிய மற்றும் தாவரக் கழிவுகளை வளாகத்திற்கு உள்ளேயே எருவாக பதம் செய்து - மக்காத மற்றும் மீண்டும் உபயோகத்திற்கு வரக்கூடியவற்றை குப்பை அகற்றும் அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதனால், பல அடுக்கு மாடி குடியிருப்புகள் உருவாக்கும் கழிவுகள் தெருவிற்கு வராது. 
சாலையோர சிறு வியாபாரிகள், கழிவுப் பொருட்களை தனி கூடையில் போட்டு, குப்பை அகற்றும் ஊழியரிடம் அளிக்க வேண்டும். 
மேலும், தொழில் வளாகங்கள், "கேடட் கம்யூனிட்டி' எனப்படும் வாயிற்கதவடைத்தக் கூட்டு குடியிருப்புகள் உற்பத்தி செய்யும் குப்பைகளை அவர்களே பதம் செய்ய வேண்டும். அதற்கென்று மொத்த பரப்பில் ஐந்து சதவிகிதத்தை ஒதுக்க வேண்டும். சிறு தொழில் செய்பவர்கள், தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு பொருட்களை பதம் செய்வதற்கு செயல் குறிப்பு அளித்து கழிவு செய்ய வேண்டும். 
சென்னையில் நாள் ஒன்றுக்கு 4,500 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு களையப்படுகிறது. இதில் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் 700 மெட்ரிக் டன். ஒரு நாளைக்கு ஒரு நபர் உருவாக்கும் குப்பையின் அளவு சுமார் 700 கிராம். இதில் உணவு தாவர கழிவு 40.25% ப்ளாஸ்டிக் 5.86%. பல்வேறு இடங்களிலிருந்து பெறப்படும் குப்பையில் குடியிருப்பு பகுதிகளிலிருந்து 68%, வணிக பகுதி 16%, அரங்குகள், பள்ளிகள், நிறுவனங்கள் 14%. சென்னயில் தினசரி கனரக வாகனங்கள் மூலம் இரு முறையும், இலகுரக வாகனங்கள் மூலம் மூன்று முறையும் குப்பைகள் அகற்றப்படுகின்றன. ஒரு சில இடங்களில் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை உரமாக்குவதற்கும், அதிலிருந்து எரிவாயு தயாரிப்பதற்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக் போன்ற நெகிழ்வுப் பொருட்களை துகள்களாக்க பதினைந்து மண்டலங்களில் இயந்திர நிலையம் உருவாக்கப்பட்டு, அந்தத் துகள்கள் சாலை போடுவதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. 
தரம் பிரிக்கப்பட்ட மக்காத குப்பைகளை அடக்கம் செய்ய, வடசென்னையில் கொடுங்கையூர் தென்சென்னையில் பெருங்குடி ஆகிய இரு இடங்களில் 200 ஏக்கர் பரப்பில் நிலம் உள்ளது. இந்த இரு "குப்பை அடக்கம் செய்யும் மையங்'களும் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாநகராட்சி தலைமையிடத்திலிருந்து பார்வையிடப்படுகிறது. 
கட்டுமானப்பணிகளின்போது சிமென்ட், கான்க்ரீட் போன்ற பாகங்கள் விழுகின்றன. வீடுகள் பராமரிப்புப் பணியின்போது கழிவுப் பொருட்கள் வீடுகளின் முன்பாக நடை பாதைகளில் போடப்படுகின்றன. ஒரு வீட்டில் பராமரிப்பு வேலை நடந்தால் மற்ற வீடுகளிலும் டைல் ஒட்டுவது தரை தளம் போடுவது என்று பணிகள் துவங்கி விடுகிறார்கள். ஆனால், கழிவுகளை சரியாக அப்புறப்படுத்துவதில்லை. நாட்கணக்காகக் கிடக்கிறது. விதிகளின்படி, உள்ளாட்சியோடு தொடர்பு கொண்டு கட்டணம் செலுத்தி இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற நகரங்களில் கட்டடக் கழிவுகளை அகற்ற நியமிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் உள்ளன. கட்டடக் கழிவுகளை இயந்திர நொறுக்கிகள் மூலம் துகள்களாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆனால், நமது நகரங்களில் ஏதாவது சாலை ஓரத்தில் இருட்டு நேரத்தில் கொட்டி விட்டு தப்பி விடுகிறார்கள். இது சென்னையில் சர்வ சாதாரணமாக நடக்கிறது.
தரம் பிரித்து குப்பையை அகற்ற வேண்டும் என்று விதிகள் இருந்தாலும் செயல்பாட்டில் இல்லை. சில இடங்களில் மக்கள் தரம் பிரித்து கொடுத்தாலும் அதை அகற்றும் மாநகராட்சி அல்லது தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் அவற்றைச் சேர்த்து எடுத்து சென்று மண்டல கழிவு நிலையங்களில் கொட்டி விடுகின்றனர். 
குப்பைகளைக் களையும் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு அவசியம். அதற்காக பல முயற்சிகளைத் தனியாரும் உள்ளாட்சி துறையும் எடுக்கின்றன. ஆனால் முழுமையடையவில்லை. சென்னையில் சிறியதும் பெரியதுமாக சுமார் 900 குடிசை பகுதிகள் உள்ளன. அதிகமான குடிசை பகுதிகள் கொண்ட நகரம் சென்னை என்றால் மிகையில்லை. கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆகிய ஆறுகளும் அவற்றை இணக்கும் பக்கிங்காம் கால்வாயும் கரையோரம் குடிசை அமைக்க வசதி கொடுக்கின்றன. பல இடங்களில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் பெருகும் குப்பைகளை அகற்றுவது பெரும்பாடு. மூன்றாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே குப்பை வீசப்படும். சூடான சமையல் கழிவு நீரை அப்படியே கொட்டுவார்கள். இரு குடியிருப்பு பகுதிக்கு நடுவே மலை போல குப்பை வளர்ந்து விடும். எடுக்க எடுக்க விளையும். துர்நாற்றம் வீசும். குப்பை கூளம் நடுவே அன்றாட வாழ்க்கை சுழலும்.
நடுத்தர மற்றும் வசதியுள்ள பகுதி வாசிகளும் குப்பை நிரப்புவதில் சளைத்தவர்கள் இல்லை. நாம் ஏன் இவ்வாறு இருக்கிறோம்? சுத்தம், சுகாதாரம் பற்றிய உணர்வில்லையா? இதனால் எவ்வளவு வியாதிகள் பரவுகின்றன என்று சிந்திப்பதில்லையா?
"வேஸ்ட் டு வெல்த்' - குப்பையிலிருந்து பணம் அள்ளலாம் என்பதை அறிந்திருந்தும் குப்பையிலேயே உழல்கிறோமே! 
வீட்டை சுத்தமாகப் பெருக்கி மெழுகி குப்பையை வீட்டி ற்கு முன்னால் தெருவில் கொட்ட எப்படி மனசு வருகிறது? 
தெருக்களில் குப்பைக் குவியல் இருப்பது எல்லாருக்குமே தலைகுனிவுதான். 
இதற்கு முக்கிய காரணம் இயலாமை அல்ல, முயலாமைதான். நாம் நினைத்தால் முடியும். எந்த ஒரு பிரச்னைக்கும் முனைப்பாக செயல்பட்டால் தீர்வு கிடைக்கும். பிரச்னையை பெரிதாக்கி எதிர்கொண்டால் பிரமிப்பாக இருக்கும். அதையே சிறியதாக பிரித்துப் பார்த்தால் சுலபமாகத் தீரும். பெரிய குடியிருப்புகளில் வசிப்போர், சில சட்ட திட்டங்களை தங்களுக்குள் வகுத்து செயல்படுகிறார்கள். குப்பையைத் தரம் பிரித்துப் போட வேண்டும் என்கிற வழிமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இவ்வாறு எல்லாப் பகுதிகளில் வசிப்போரும் செயல்பட்டால் நாம் எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியும். 
இவ்வளவு விதிகள் இருக்கின்றன. ஆனால் விதி மீறலுக்கு எவ்வளவு அபராதம்? அதை எவ்வாறு அமல்படுத்துவது என்பது பற்றி தெளிவில்லை. மற்ற நகரங்களில் உள்ளது போல் பறக்கும் படை அமைத்து கண்காணித்து விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் விடிவு பிறக்கும்.
"குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்தி கொடி வளராதோ' என்ற பாரதியின் வாக்கு நினைவில் கொண்டு உணவுதான் குப்பையாகிறது குப்பைதான் உரமாகி உணவாகிறது என்பதை உணர்வோம். மரத்தில் இருந்தால் இலை, உதிர்ந்து விழுந்தால் சருகு, குவிந்தால் குப்பை, மக்கினால் எரு! எருக்குழிகள் தான் தாவரங்களின் கருக்குழி. 
சென்னையை குப்பையில்லா நகரமாக்குவோம். அது நம் கையில்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com