எரிபொருள்: விலையேற்றமும் தீர்வும்!

இந்த நூற்றாண்டில், உலக சந்தையில் அனைத்து நாடுகளாலும் உற்று நோக்கப்படும் ஒரு பயன்பாட்டு பொருள் (Commodity) உண்டென்றால்,

இந்த நூற்றாண்டில், உலக சந்தையில் அனைத்து நாடுகளாலும் உற்று நோக்கப்படும் ஒரு பயன்பாட்டு பொருள் (Commodity) உண்டென்றால், அது கச்சா எண்ணெய்தான் என்று உறுதியாக சொல்லலாம். அதன் விலையில் ஏற்படும் ஏற்றமும் வீழ்ச்சியும் உற்பத்தி நாடுகள் மற்றும் பயனாளி நாடுகளின் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் படைக்கும் வல்லமை படைத்தவை என்று சொன்னால் அது மிகையாகாது.
உற்பத்தி பெருக்கம் அல்லது குறைப்பு, போருக்கான சூழ்நிலை, எண்ணெய் வள நாடுகளின் மீது பொருளாதாரத் தடை ஆகியவை, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஆக்ரோஷ தாண்டவத்திற்கு (voleint price fluctuations)  சில முக்கிய காரணங்களாகும். அமெரிக்க அதிபரின் அதிரடி அறிவிப்புகளையும் இந்த காரணங்களுடன் தற்போது சேர்த்துக் கொள்ளலாம்.
ப்ரென்ட் ப்ளெண்ட்(Brent blend), வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டெர்மீடியட் (ரபஐ), துபாய், ஓமன் ஆகியவை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயிப்பில் அளவு கோல்களாக பயன்படுத்தப்படுகின்றன. பீப்பாய் (Barrel) என்பது விற்பனை விலை அளவு கோலாகும். ஒரு பீப்பாய் சுமார் 159 லிட்டர் கச்சா எண்ணெயை உள் அடக்கியதாகும். இதிலிருந்து, சுமார் 50 முதல் 80 லிட்டர் வரை பெட்ரோல் அல்லது டீசலைப் பிரித்தெடுக்கலாம். 
இதைத் தவிர, பிரித்தெடுக்கும் முறையைப் பொருத்து, 1,500 விதமான துணைப் பொருள்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. துணைப் பொருள்களில் கெரோசின், கேஸ் ஆகிய எரி பொருள்களும் அடங்கும்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2000-ஆம் ஆண்டிலிருந்து 2008 வரை, பீப்பாய்க்கு 25 டாலரிலிருந்து 144 டாலர் வரை சென்று உச்சத்தை தொட்டது. சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் தேவை அதிகரித்ததும், பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு (Organisationof petroleum exporting countries)  தங்கள் உற்பத்தியை குறைத்ததும் அசாதாரண விலை உயர்வுக்கு வித்திட்டன. 
உலகப் பொருளாதார மந்த நிலையினால், 2008-ஆம் வருட இறுதியில், எண்ணெய் விலை வேகமாக வீழ்ச்சி அடைந்து 40 டாலரைத் தொட்டது. அதற்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மறுமலர்ச்சி, 125 டாலர் வரையிலான மற்றொரு விலை ஏற்ற படலத்திற்கு வழி வகுத்தது. இந்த படலம் 2014-இல் முடிவுக்கு வந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் இறங்குமுகத்தைக் கண்டது. 
2014-15-ஆம் ஆண்டுகளில், அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளின் பொருளாதார மந்த நிலையால், கச்சா எண்ணெயின் தேவை குறைந்தது. ஆனால், சில எண்ணெய் வள நாடுகள், பல்வேறு காரணங்களுக்காகத் தங்கள் உற்பத்தியை குறைக்க மறுத்தன. தேவைக்கு அதிகமான உற்பத்தியால் உலக சந்தையில், அதன் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தது. 
இந்த விலை வீழ்ச்சி, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது எனலாம். 
கடந்த சில வருடங்களாகக் கட்டுண்டு அமைதியாக, அதிக அசைவுகள் இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் என்ற புலி, மீண்டும் தட்டி எழுப்பப்பட்டு, உலக நாடுகளின் பொருளாதாரத்திற்குப் பல விதங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் விதமாக தனது வழக்கமான பீதியைப் பரப்பும் கர்ஜனையுடன் தற்போது சீறிப் பாய ஆரம்பித்து விட்டது. 
கடந்த ஏப்ரலில் பீப்பாய் ஒன்றுக்கு 65 டாலர் அளவில் சுழன்று கொண்டிருந்த கச்சா எண்ணெய் விலை, திடீரென தன் மேல்நோக்கு பயணத்தைத் தொடங்கி, தற்போது 80 டாலர் அளவில் மையம் கொண்டிருக்கிறது. இந்த நகர்வின் இலக்கு 100 டாலருக்கு மேல் என 'மெரில் லின்ச்' மற்றும் 'பேங்க் ஆஃப் அமெரிக்கா'வின் கச்சா எண்ணெய் பற்றிய ஆராய்ச்சி பிரிவுகள் கணித்திருக்கின்றன.
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்த உடன்படிக்கையிலிருந்து விலகுவது என்றும் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு, இந்த விலையேற்றப் பதற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 
இந்த அறிவிப்பின் விளைவாக, எண்ணெய் வளத்தில் ஐந்தாவது இடத்தை வகிக்கும் ஈரான், அதன் கச்சா எண்ணெய் உற்பத்தியைச் சந்தைப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும். அதனால், உலக நாடுகளின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடைவெளி ஏற்பட்டு, எண்ணெய் விலை ஏற்றம் காணும் என்று எதிர்கால விலையை நிர்ணயிக்கும் ஊக வணிக சந்தை (Futures and options market)  பங்கேற்பாளர்கள், தங்கள் சதுரங்கக் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளதும் இதற்கு மற்றொரு காரணமாகும்.
பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பும், ரஷியாவும் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக வெளியான கருத்துகளும், வெனிசூலாவில் அரசியல் ஸ்திரமின்மையும்கூட தற்போதைய விலை ஏற்றத்திற்கு வழி வகுத்திருக்கின்றன எனலாம்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் அளவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது என்பதிலிருந்தே, அதன் விலை ஏற்றம், பண வீக்கம் போன்ற பக்க விளைவுகளால், நம் பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை எளிதாக ஊகித்து விடலாம். 
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த சில மாதங்களில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருப்பதால், இறக்குமதிக்குச் செலுத்த வேண்டிய அந்நிய செலாவணி தொகை பெருமளவில் அதிகரிக்கும். இறக்குமதி மதிப்புக்கு ஏற்ப ஏற்றுமதியின் மதிப்பு உயரவில்லையானால், ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதற்கு வாய்ப்பு அதிகம். 
2022-ஆம் ஆண்டுக்குள், கச்சா எண்ணெய் இறக்குமதியை 10% வரை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெட்ரோலில் 10% வரை, சர்க்கரைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கரும்பிலிருந்து பிரித்து எடுக்கப்படும் துணைப் பொருளான எத்தனால்(Ethanol) என்ற எரிபொருளைக் 
கலக்க, எண்ணெய் வளத் துறை திட்டமிட்டது. 
ஆனால், அதற்குத் தேவையான 140 கோடி லிட்டர் அளவிலான எத்தனால் கிடைக்காததால், அந்தத் திட்டம் முழுமையாக இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரேசில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்தத் திட்டத்தை ஏற்கனவே அமல் செய்து, தங்கள் நாடுகளின் எண்ணெய் இறக்குமதியைக் கணிசமாக குறைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
நம் மத்திய அரசாங்கத்தைப் பொருத்தவரை, எண்ணெய் என்ற புலி, பொதுமக்களிடமிருந்து வரியை கறக்கும் பசுவாகத்தான் தொடர்ந்து கையாளப்பட்டு வருகிறது.
2017-ஆம் ஆண்டு, ஜூன் முதல், தங்கத்தைப் போல் பெட்ரோல் விலையையும், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தினமும் நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரம், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. 
ஆனால், கடந்த நான்கு வருடங்களில் நிகழ்ந்த எண்ணெய் விலை சரிவு பொது மக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படாமலேயே, நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், விலை ஏற்றம் மட்டும் உடனடியாக பாமரனின் பாக்கெட்டைப் பதம் பார்த்து விடுகிறது. 
பெட்ரோல், டீசலுக்கான தற்போதைய விலை ஏற்றம், முழு சுமை தூக்கி செல்லும் ஒட்டகத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் கடைசி வைக்கோலாகும். இதற்கு முழுக் காரணம், பெட்ரோலுக்காக நாம் செலுத்தும் விலையில், 86% அரசாங்க வரியாகும். அந்த வரியை குறைப்பதற்குப் பதிலாக, 11% வரை உயர்த்தப்பட்டிருப்பதுதான் எரிபொருள்களின் விலை உயர்ந்த நிலையிலேயே நீடிப்பதற்கு முக்கியக் காரணமாகும். 
கடந்த நான்கு வருடங்களில் பெட்ரோல் பொருள்களின் மீதான வரி விதிப்பின் மூலம், அரசாங்கம் வசூலித்த தொகை 16.57 லட்சம் கோடி ரூபாய். இந்தத் தொகையில் 46% மத்திய அரசின் கலால் வரியும், 40% மாநில அரசுகளின் விற்பனை வரியும் அடங்கும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு சில மாற்று யோசனைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் ஒன்று, ஓ.என்.ஜி.சி. போன்ற எண்ணெய் நிறுவனங்களின் உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கப்பட்டு வந்த சர்வதேசச் சந்தை விலையால் குவிந்த அசாதாரண லாபத்தில் ஒரு பகுதியை விலை குறைப்புக்கு பயன்படுத்துவதாகும். 
ஆனால், இந்த நடவடிக்கை, எண்ணெய் துறையில் புதிய முதலீட்டாளர்களைக் கவர்ந்து இழுக்கத் தடையாக அமைந்து விடக்கூடும் என்பதால், அம்மாதிரி செயல்பாடுகள் உகந்தது அல்ல என்ற கருத்தும் நிலவுகிறது.
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, நெய்க்கு அலைவது போல, மாற்று யோசனைகளில் கவனம் செலுத்தாமல், எரிபொருள் விற்பனையை ஜி.எஸ்.டி. வரையறைக்குள் கொண்டு வர முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 
அதிகபட்ச வரியான 28% வரி விதிக்கப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே, இந்த விஷயத்தில், ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஒப்புதலைப் பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். எரிபொருள்களின் அசாதாரண விலை ஏற்றம், அவர்களின் அன்றாடப் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுவிடக் கூடியது. பெட்ரோலியப் பொருள்களின் மீது அவர்கள் சுமக்கும் கனமான வரிச்சுமையை ஓரளவுக்காவது உடனடியாகக் குறைப்பதுதான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசின் கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com