பாலியல் பண்பாடு

சமுதாயம் மாறிக்கொண்டு இருக்கிறது. பாலியலில் உயர்வு தாழ்வு பாராட்டாத பண்பாட்டுச் சமுதாயமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆண்கள்அனுபவித்து வந்த விருப்ப

சமுதாயம் மாறிக்கொண்டு இருக்கிறது. பாலியலில் உயர்வு தாழ்வு பாராட்டாத பண்பாட்டுச் சமுதாயமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆண்கள்அனுபவித்து வந்த விருப்ப வேட்டைக்கு அடிபணிய மறுக்கிறது. மாற்றத்தை ஏற்பவர்களையும் எதிர்கொள்பவர்களையும் அழைத்துக் கொண்டு பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 
ஆண்களுக்காகவே கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த உலகில் தங்களுக்கு மூச்சு முட்டுவதாகப் பெண்கள் நினைக்கிறார்கள். ஆண்களின் விருப்ப அதிகார உலகில் வாழ, தங்களுக்கு உடன்பாடில்லை என்பதை வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் உணர்த்தத் தொடங்கியிருக்கிறார்கள். 
உடை நடை மட்டுமில்லாமல் பெண்கள் தங்களுக்கான உலகையும் தாங்களே வடிவமைத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். இருக்கிற விழுமியங்கள் எல்லாம் ஆண்களின் விருப்பத்துக்குப் பெண்கள் வாழும் வாழ்க்கை முறைக்காக உருவாக்கப்பட்டவை என்றுகருதுகிறார்கள். அதனால் இதுவரை சொல்லப்பட்டுள்ள விழுமியங்கள் எல்லாவற்றிலிருந்தும் முரண்பட்டு நிற்க விரும்புகிறார்கள்.
கடந்த காலத் தேவைக்காக உருவாக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆண், பெண் மன நிலையின் உளவியலுக்குள் அடங்கிப் போக மறுக்கிறார்கள். பழைய உளவியலைக் கட்டுடைத்துப் புதிய உளவியலை ஆண்களுக்கும் கட்டமைக்கும் தகுதியைப் பெண்கள் பெற்றிருப்பதாக நம்புகிறார்கள். 
இப்போது களத்தில் ஆணும் பெண்ணும் எதிர் எதிராக நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை ஆண்கள் அனுபவித்து வந்த சீண்டல் உரிமை கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இயற்கை உணர்வு எனும் கருத்தில் இருக்க வேண்டிய எதிர்பால் ஈர்ப்பு, முன்பு எப்போதையும் விட ஆண்களிடம் வன்முறையாகவும் வக்கிரமாக மாறிக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு, நாடு, மொழி, சாதி, மதம் கடந்து ஒற்றைக் குரலில் பெரும்பாலும் ஆண்களை நோக்கியே கை காட்டுகிறது. 
பண்பாடு, நாகரிகம் எல்லாம் பெண்களைப் பக்குவப்படுத்தி இருப்பதைப் போல ஆண்களைப் பக்குவப்படுத்தாமல் போனதற்குக் காரணம் என்ன?
வயது கடந்தும் வக்கிரம் கடக்க முடியாதவர்களாக ஆண்கள் இருப்பதாகச் சொல்லப்படுவதற்கு அடிப்படை என்ன? அக்டோபர் 15, 2017 அன்று சுட்டுரை (டுவிட்டர்) யில் மிலானா என்பவரால் வெளியிடப்பட்ட பாலியல் சீண்டல் (மீ டூ) செய்தி, விடிவதற்குள் இரண்டு இலட்சம் பேரைஎட்டியது எப்படி? முகநூலில் 47 இலட்சம் பேரைச் சென்றடைந்தது எப்படி? வாழ்விடங்களில், வழிபாட்டு இடங்களில், கல்விக்கூடங்களில், விளையாட்டுப் பயிற்சிகளில், இசை உலகில், இராணுவத்தில் கூட விதிவிலக்கின்றி பாலியல் சீண்டல் உலகம் முழுதும் ஆண்களை நோக்கியே கைநீட்டுகிறதே எப்படி? 
பாலியல் உணர்வு என்பதும் எதிர்பால் ஈர்ப்பு என்பதும் உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவானவைதாம். தொடக்கத்தில் அந்த உணர்வுகள் இனவிருத்திக்காக உடலியல் அடிப்படையிலேயே இருந்திருக்க வேண்டும். பின்னர் அது உளவியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். பறவை, விலங்கு போன்ற அஃறிணை உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் பாலுணர்வில் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. பறவை விலங்குகளுக்குப் பாலியல் ஈர்ப்பு இப்போதும் உடலியல் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது. ஆனால், மனிதர்களின் பாலுணர்வு உடலியல் கடந்து பண்பாட்டுடன் வளர்க்கப்பட்டுவந்திருக்கிறது. அதனால்தான் தாய், தந்தை, உடன்பிறப்பு, முறை மாப்பிள்ளை, பெண் என்று சொந்தங்களுக்குள்ளும் வரையறை செய்து கொண்டிருக்கிறார்கள். 
அந்தப் பாலியல் பண்பாடு என்பது மனிதர்களுக்கு உளவியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஆண்களின் உளவியல் மட்டும் பாலியல் சீண்டலுடன் கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
கலித்தொகையில் ஒரு காட்சி: பாலியல் சீண்டலை எதிர்கொள்ளும் மோர் விற்கும் பெண்ணின் பதில் வினை பதிவாகியுள்ளது. கொஞ்சம் மோர் கேட்டால் கொடுக்கிறேன் என்பதற்காக வெண்ணெய் கேட்கிறாயே என்று ஆணின் பாலியல் சீண்டலை மறுத்துவிட்டுப் போகிறாள் கலித்தொகைப் பெண்.
அகநானூற்றில், நெல்லும் உப்பும் நேரே கொள்மின் என்று கடல் உப்பு விற்க வந்த பெண்ணிடம், உன் உடல் உப்பு என்ன விலை? என்று கேட்டு பாலியல் உணர்வோடு வழிமறிப்பவனைக் கடிந்து கடந்து போகிற பெண்ணைக் காண முடிகிறது.
கலை இலக்கியங்கள் பெரும்பாலும் பெண்கள் என்றால் உடல் அழகைப் போற்றுகின்றன; ஆண்கள் என்றால் வீரத்தைப் போற்றுகின்றன. அப்படியெல்லாம் பெண்களையும் ஆண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதும் பார்க்கத் தூண்டுவதுமாகக் கலை இலக்கிய வெளிப்பாடுகள் இருக்கக் காரணம் என்ன? 
நமது கடந்த கால வரலாறு என்பது போர்களின் நாட்குறிப்பாகவே இருக்கிறது. அவர்கள் அடிக்கடி போர் செய்திருக்கிறார்கள். ஆடு, மாடு, நாடு ஆகியவற்றைப் பிடிக்க சண்டையிட்டு இருக்கிறார்கள். கூடவே பெண்களையும் சிறைபிடித்திருக்கிறார்கள்.
போரில் தோற்றுப் போகும் நாட்டின் பெண்களின் நிலைபற்றி பகவத் கீதை சொல்கிறது. ஒரு குலம் அழிந்தால், அந்தக் குலத்தின் நிலைத்த வழக்கங்கள் தொலைந்து போகும்; அந்த வழக்கங்கள் தொலைந்து போனால், மொத்த குலத்தையும் பாவம் பீடிக்கும்(1:39).
பாவம் மேலோங்கினால், ஓ! கிருஷ்ணா, அந்தக் குலத்தின் பெண்கள் கெட்டுப்போவார்கள். ஓ! விருஷ்ணியின் வழித்தோன்றலே கிருஷ்ணா- பெண்கள் 
கெட்டுப் போனால், வர்ணக் கலப்பு ஏற்படுகிறது (1:40).
பாபிலோன் அரசன் நேபுகாத்நேசர் ஜெருசலேம் மீது படையெடுத்து வெற்றி பெற்றபின் யூதர்களையும் இளைஞர்களையும் பெண்களையும் போர்க் கைதிகளாகப் பிடித்துச் சென்றதை விவிலியம் சொல்கிறது.
இலக்கியத்தில் மகள் மறுத்து மொழிதல், மகட்பாற் காஞ்சி ஆகியபாடல்கள் பெண்களுக்காக நடந்த சண்டைகளுக்குச் சான்றுகளாக இருக்கின்றன.
மரத்தில் எழுந்த தீப்பொறி காட்டை அழிப்பதைப் போல இவளால் இந்த ஊர் அழியப் போகிறது என்று ஊர் மக்களின் புலம்பலைப் புறநானூற்றுப் பதிவு காட்டுகிறது.
போர் நடக்கப் போகும் இடத்திலிருந்து, எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்மின் என்று பெண்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியதற்கும் பெண்களைச் சிறைபிடித்துச் சென்றதற்கும் புறநானூறு சாட்சி சொல்கிறது. பெண்கள் கவர்ந்து செல்லப்பட்டதற்கு அழகு மட்டும் காரணமாக இருந்திருக்குமா?
போரில் இருபக்கமும் ஆண்களே இறந்து போயிருக்கிறார்கள். அதனால் ஆண்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போயிருக்கிறது. ஆனால், மீண்டும் மீண்டும் போர் செய்ய ஆண்கள் வேண்டும். ஆண்களைப் பெற்றுத்தர பெண்கள் வேண்டும். ஆண்களின் எண்ணிக்கை, குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கையைத் தீர்மானிப்பதில்லை. நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அந்த நாட்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததே. எனவே பெண்களைச் சிறைபிடித்து வந்திருக்கிறார்கள். 
அதனால் குறைந்த எண்ணிக்கையில் ஆண்களும் அதிக எண்ணிக்கையில் பெண்களும் இருக்கும் சமுதாயமாக அது இருந்திருக்கிறது. ஆகவே, இருக்கிற ஆண்களின் மனதில் பாலியல் தூண்டல் விதைக்கப்பட, ஆண்களின் உளவியலை அவ்வாறு கட்டமைக்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். அதனால் ஆண், பெண் இருவருக்கும் பொதுவான எதிர்பால் ஈர்ப்பு ஆண்கள் மனதில் வேறு வகையில் உருவாக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய மனநிலையைக் கட்டமைக்க, சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறப் பாடல்கள் இலக்கியங்கள், பெரிதும் பயன்பட்டிருக்கலாம். அதனால்தான் ஆண்களுக்கான காதலும் வீரமுமே அகம் புறம் என்று கலை இலக்கியங்களில் பாடுபொருள்களாக இருந்திருக்கலாம்.
கால ஓட்டத்தில் இப்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பணிகள் பொதுவாகிவிட்டன. தான் பெண் என்பதை வீட்டுக்குள் மட்டுமே ஒரு பெண் உணரும் காலம் வந்திருக்கிறது. பணியிடங்களிலும் பொது இடங்களிலும் ஆண்களும் பெண்களும் தங்கள் பால் வேறுபாடுகளை மறக்கும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் ஈன்று புறம் தருதல் மட்டும் பெண்ணின் கடமையன்று. ஆணுக்கு நிகராக அனைத்துப் பணிகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். இராணுவப் பணிகளிலும் பெண்களைச் சில நாடுகள் ஈடுபடுத்துகின்றன. ஈழப் போர்க்களத்தில் பெண்களின் பங்களிப்பு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
பணிகள் பொதுவாகிக் கொண்டிருக்கின்றன. ஆண்களைப் போலவே பெண்களும் களத்தில் நிற்கிறார்கள். ஆண், பெண், மூன்றாம் பாலினர் ஆகிய அனைவருக்கும் பொதுவான புதிய உலகம் உருவாகி வருகிறது. ஆனாலும் பாலியல் சீண்டல் ஆண்களைவிட்டு அகல மறுக்கிறது. 
கடந்த காலத்தில், போர்க்காலத் தேவைக்கேற்ப, கலை இலக்கியங்களால் கட்டமைக்கப்பட்ட ஆண்களின் சீண்டல் உளவியல் இன்னும் கட்டுடைக்கப்படாமல் இருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப ஆண்களின் உளவியலைக் கட்டமைக்க வேண்டிய கலை இலக்கியங்கள் இப்போதும் திரைப்படம் உள்பட கடந்த கால ஆண்களின் உளவியல் கட்டுமானத்தைக் காப்பாற்றும் முயற்சியிலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக வரத் தொடங்கி இருக்கிற ஒரு சில கலை இலக்கியப் படைப்புகளின் எண்ணிக்கையும் செல்வாக்கும் வீச்சும் பெருகி ஆண்களின் கடந்த கால உளவியல் கட்டமைப்பை மாற்ற வேண்டும்; இன்றைய உலகத்திற்கான பாலியல் பண்பாட்டை உருவாக்கும் காலம் வரவேண்டும்; வரும்.

கட்டுரையாளர்:
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com