அலைச்சல்கள் ஓயுமா?

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்பங்கள் தங்களின் வருமானத்துக்குள் வயிறார உணவு உட்கொள்வதற்குப் பொது விநியோக திட்டமே வெகுவாக உதவி வருகின்றது. 

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்பங்கள் தங்களின் வருமானத்துக்குள் வயிறார உணவு உட்கொள்வதற்குப் பொது விநியோக திட்டமே வெகுவாக உதவி வருகின்றது. 
உணவுப் பொருள்கள் மற்றும் மண்ணெண்ணையின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்து கொண்டே வரும் நிலையில், ரேஷன் கடைகளில் விற்கப்படும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், சமையல் எண்ணை போன்றவற்றைப் பெறுவவதையை பலரும் விரும்புகின்றனர். 
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, அரசுகள் மாறினாலும் ரேஷனில் சலுகைகள் தருவதில் மாற்றம் இருந்ததில்லை. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதெல்லாம் போய், தற்போது இலவச அரிசி வழங்கப்படுகிறது. 
தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டு இலவசங்களை வாரி வழங்கிய அரசியல் கட்சிகள், பட்ஜெட் என்று ஒன்று இருப்பதைப் பற்றிக் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. அதனால், ரேஷனில் தரப்படும் இலவசங்களுக்கான மானியத்தொகை மாநில வரி வருமானத்தின் கணிசமான பகுதியை விழுங்கத் தொடங்கியது. 
அதே சமயம், மத்திய அரசு நிறைவேற்றிய தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் காரணமாக, தேசிய உணவுக் கழகத்திடமிருந்து (பொது விநியோகத் திட்டத்திற்காக) பெறப்படும் அரிசியின் விலை அதிகரித்தது. மேலும், ரேஷனுக்கான மாதாந்திர ஒதுக்கீடுகளை மத்திய அரசு குறைக்கவும் செய்தது. 
இவ்வகையில் நமது மாநில அரசு வருடந்தோறும் சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் வரை அதிகமாக ஒதுக்கீடு செய்யவேண்டியுள்ளது.
இந்நிலையில் போலி ரேஷன் கார்டுகளை வைத்துக்கொண்டு மானிய விலைப் பொருள்களை வாங்குவதைத் தவிர்க்கும் வகையில், ஆதார் எண் இணைப்புடன் கூடிய ஸ்மார்ட் கார்டு என்னும் மின்னணு அட்டையின் மூலம் ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. 
உணவு வழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், தேசிய அளவில் சுமார் இரண்டு கோடியே அறுபது லட்சம் போலி குடும்ப அட்டைகளும், தமிழக அளவில் சுமார் பத்து லட்சம் போலி குடும்ப அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேற்கண்ட பத்து லட்சம் கார்டுகளுக்காகவும் சேர்த்துத் தமிழக அரசு செலவழித்து வந்த மானியச் சுமை தற்போது குறைந்திருக்கிறது.
இந்நிலையில், மின்னணு அட்டைதாரருக்கு பதிலாக வேறு யாராவது பொருள்களைப் பெறுவதை அனுமதிக்காமல், கார்டுக்குரிய நபரான குடும்பத் தலைவர் அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நேரில் வந்து பொருள்களைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற புதிய நடைமுறையினைத் தமிழக அரசு கொண்டு வர உள்ளது.
அப்படி நேரில் வரும் நபரின் கைவிரல் ரேகை பயோ மெட்ரிக் முறையில் சரிபார்க்கப்பட்டு, அதன்பிறகே பொருள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் பதினைந்தாம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்காக முப்பத்து நான்கு கோடி ரூபாய் செலவில் பயோ மெட்ரிக் உபகரணங்கள் வாங்கப் பட்டுள்ளனவாம். 
சிலர் ரேஷன் பொருள்களைப் பெற்று வெளிமார்க்கெட்டில் விற்று லாபம் அடைவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.
அதே நேரத்தில், உண்மையிலேயே நேரில் வந்து பொருள்களைப் பெற முடியாத நிலையில் இருப்பவர்களை இந்தத் திட்டம் பாதிக்கும் என்பதையும், ரேஷன் கடைப் பணியாளர்களுக்கும் இதனால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். 
அலுவலக வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமன்றி, அன்றாடக் கூலி வேலைக்குச் செல்பவர்களும் இம்முடிவினால் பாதிக்கப்படுவர். வீடுகளில் பத்துப் பாத்திரம் துலக்கிப் பிழைப்பை நடத்தும் பெண்கள், கட்டட வேலை செய்பவர்களெல்லாம் இன்னொருவரின் உதவியுடன்தான் ரேஷன் பொருள்களைப் பெறமுடியும். 
மேலும், அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணை, மண்ணெண்ணெய் போன்ற அனைத்தையும் ஒவ்வொரு மாதமும் ஐந்தாறு முறையாவது ரேஷன் கடைக்கு நடையாய் நடந்தால்தான் வாங்க முடியும். இதற்குத்தான் பிறரின் ஒத்துழைப்பு கைகொடுக்கிறது. 
இது மட்டுமன்றி, வயதானவர்களும், நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாதவர்களும் ரேஷன் பொருள்களைப் பெற முடியாமல் போகும் அல்லவா? இதற்கு என்னதான் தீர்வு ?
நேரில் வருகின்ற பயனாளிகளில் ஒவ்வொருவரின் விரல் ரேகையும் பயோ மெட்ரிக் சாதனத்தைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு, அதன் பிறகே பொருள்கள் வழங்கப்படும் என்பதுதான் கவலை தருகிறது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு இதனால் வேலைப்பளு அதிகரிக்கும் என்பது ஒரு பக்கம் இருக்க, இம்முறையினை நடைமுறைப் படுத்துவதற்குத் தடையில்லா மின்சாரத்துடன், தடையில்லா அகண்ட அலைவரிசை வசதியும் இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அனைத்திலும் (மலைப் பிரதேசங்களில் உள்ள கடைகள் உட்பட ) இவ்வசதிகள் எல்லா வேலை நாள்களிலும் தடையின்றிக் கிடைப்பதை அரசு முதலில் உறுதி செய்ய வேண்டும்.
ஏற்கெனவே, தில்லி மாநகரத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு, அதனால் பொதுமக்களுக்கு சிரமங்கள் அதிகரித்ததால், கடந்த பிப்ரவரி மாதத்தில் அதனைக் கைவிடுவதாக அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அமைச்சரவை முடிவெடுக்க வேண்டியதாயிற்று.
எனவே, பயனாளிகளே நேரில் வரவேண்டும் என்பதையும், அவர்கள் ஒவ்வொருவரின் விரல்ரேகையையும் சரிபார்த்த பிறகே பொருள்கள் வழங்கப்படும் என்பதையும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com