சமாளிப்பாரா சரத் பவார்?

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வர், அக்கட்சியிலிருந்து விலகி விட்டார். தனது எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வர், அக்கட்சியிலிருந்து விலகி விட்டார். தனது எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார்.
 அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர்; கட்சியில் நன்கு பரிச்சயமான முகம்; மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்; கட்சியின் தலைவரான சரத் பவாருடன் இருபது ஆண்டுகள் தொடர்ந்து பயணித்தவர்.
 இருவருக்கும் இடையே இதுவரையில் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் வந்ததில்லை. இந்த நிலையில், தாரிக் அன்வர் திடீரென்று கட்சியில் இருந்து வெளியேறியதற்கு என்ன காரணம்?
 கட்சியின் தலைவர் சரத் பவார், அண்மையில் மராத்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
 இந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 இந்த நிலையில் வெளியான, சரத் பவாரின் தொலைக்காட்சி பேட்டி, தாரிக் அன்வரை அதிருப்தியடையச் செய்துள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து சரத் பவார் தொலைக்காட்சியில் கூறியதாக வெளியான செய்தி, திரித்துக் கூறப்பட்டிருக்கலாம் அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டிருக்கலாம் என்று தாரிக் அன்வர் முதலில் நம்பியிருந்தார்.
 இதுகுறித்து, சரத் பவார் விளக்கம் தருவார் என்று எண்ணிக் கொண்டிருந்தார். இரவு முழுவதும் காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மற்றொரு புறம், தாரிக் அன்வருக்கு மேலும் அதிருப்தி தரும் விதமாக, சரத் பவாரின் கருத்தை வரவேற்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டார்.
 மறுநாள் காலையில், தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகுவதாக தாரிக் அன்வர் அறிவித்தார். "தேசியவாத காங்கிரஸ் கட்சி எப்போதும் மதவாதத்தை எதிர்த்து வருகிறது. பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அதை பலவீனப்படுத்தும் விதமாக சரத் பவார் பேசியது சரியல்ல' என்று சரத் பவார் மீதான அதிருப்திக்குக் காரணம் தெரிவித்திருக்கிறார் தாரிக் அன்வர்.
 ஆனால், அவரது கருத்துக்கு பவார் மறுப்பு தெரிவித்துள்ளார். அடுத்த சில தினங்களில் மராத்வாடா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பவார் பேசும்போது, "நான் மோடியை ஆதரிப்பதாக சிலர் விமர்சிக்கிறார்கள். இதுவரை அவரை நான் ஆதரித்ததில்லை; இனியும் அவரை ஆதரிக்கப்போவதில்லை' என்று கூறினார். இருப்பினும் அதன் பிறகும், தாரிக் அன்வரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் யாரும் ஈடுபடவில்லை.
 இதனிடையே, பவாரின் விளக்கத்தை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
 பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தாரிக் அன்வர், 1980-களில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தார். 1990-களில் கட்சியின் பொதுச் செயலாளரானார். 1999-இல் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை சோனியா காந்தி ஏற்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தினார் தாரிக் அன்வர். அவருடன் சரத் பவார், பி.ஏ.சங்மா ஆகியோரும் போர்க்கொடி உயர்த்தினர்.
 வெளிநாட்டவரான சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை வழங்கக் கூடாது என்று மூவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கட்சியில் இருந்து விலகிய மூவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினர்.
 காங்கிரஸ் கட்சி 2004 மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. அதன் பிறகு, மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாரிக் அன்வர், மத்திய வேளாண் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
 கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிகார் மாநிலத்தின் கத்திஹார் தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் மோடியின் அபார ஆதரவு அலையையும் மீறி வெற்றி பெற்றார்.
 இந்த நிலையில்தான், தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகுவதாக தாரிக் அன்வர் அறிவித்துள்ளார். எனினும், கட்சியின் நிறுவன உறுப்பினரான அவர், ஒரு சாதாரண விஷயத்துக்காக கட்சியில் இருந்து வெளியேறுவதாக கூறுவது நம்பும்படியாக இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகிறார்கள். அவர், காங்கிரஸ் அல்லது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சேர்வதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் ஊகிக்கிறார்கள்.
 மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான தாரிக் அன்வர் அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனம். இதன் பாதிப்பு வரும் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com