ஆரோக்கியம் காப்போம்

மனிதர்களின் உடலை இறைவனின் அருட்கொடை என்றால், உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு அற்புதமான வரம் என்று சொல்லலாம். மனித உறுப்புகளின் சிகரமான மூளை, தன் ஆணைக்கேற்றபடி

மனிதர்களின் உடலை இறைவனின் அருட்கொடை என்றால், உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு அற்புதமான வரம் என்று சொல்லலாம். மனித உறுப்புகளின் சிகரமான மூளை, தன் ஆணைக்கேற்றபடி அவற்றை ஆட்டிவைப்பதுடன், அவை ஒவ்வொன்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அதிசயமான ஆச்சரியம். உடலை சமநிலையில் வைத்திருப்பதற்கும், ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் உறுப்புகளே மருத்துவர்கள் போல் இயங்குகின்றன.
 உடலைப் போர்த்தியிருக்கும் தோலிலிருந்து, தலையில் கவசம் போல் அமைந்திருக்கும் மயிர்க் கற்றைகள் மற்றும் கால் விரல்களின் நுனியைக் காக்கும் நகங்கள்வரை எல்லாமே நம்மை, வெப்பம், குளிர் மற்றும் நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கென்றே இறைவனால் கொடுக்கப்பட்டவை.
 வெளியுறுப்புகள் மட்டுமின்றி உள்ளுறுப்புகளான செரிமான மண்டலம், சுவாச மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றின் உறுப்புகள் மீது போர்த்தப்பட்டிருக்கும் சளிப்படலம், கிருமித்தொற்று ஏற்படுவதைத் தடுப்பதால், நோய்களில் இருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
 இது மட்டுமல்லாது, நோய்களில் இருந்து உடலைக் காக்கவென்றே நோய் எதிர்ப்பு மண்டலமும் உள்ளது. இது உருவாக்கும் நோய்க் கிருமி எதிர்ப்பு பொருள், கிருமிகளிடம் இருந்து தோன்றும் நச்சுப்பொருள்களுடன் போராடி உடலை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
 நோய் எதிர்ப்பு பொருள்களால் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாத நேரங்களில் மட்டுமே நோய்க்கான அறிகுறிகள் உடலில் தோன்றுகின்றன. இன்னும் சொல்லப் போனால், நம் உடலில் ஒவ்வாப் பொருள்கள் அல்லது கிருமிகளின் ஊடுருவலே நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்வினையாற்றத் தூண்டுகிறது.
 எங்கும் நிறைந்திருக்கும் கிருமிகளின் தாக்குதலால் பெரும்பாலான நேரங்களில் பாதிப்பு ஏற்படாததற்கு நோய் எதிர்ப்பு மண்டலமே காரணமாகும்.
 சில நேரங்களில், நம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்வதற்கு சிறிது அவகாசம் தேவைப்படும். அதுவரை நமக்கு எங்கே பொறுமை இருக்கிறது? எதற்கெடுத்தாலும் மருத்துவர்களை நாடும் காலமாகி விட்டது.
 உடலில் இது இந்த அளவில்தான் இருக்க வேண்டும் என்று அழகுக் கலை வல்லுநர்களால் வரையறுக்கப்பட்டு அழகு அளவீடு செய்யப்படுகிறது. ஆனால் தோலின் உள்ளே இருக்கும் ரத்தமும், சீழும், சளிப்படலமுமே நம் ஆரோக்கியத்திற்கு அழகூட்டுகின்றன. ரத்த ஓட்ட மண்டலமும், செரிமான மண்டலமும் சீராக இயங்கினால் அது நல்ல ஆரோக்கியத்திற்கான அறிகுறியாகும்.
 வளர்சிதை மாற்றத்தின் (அணுக்களின் செயல்பாடுகள்) காரணமாக உடல் அணுக்களில் உருவாகும் கழிவுகளை ரத்தம் இடையறாது தன்னுடன் கழிவு மண்டல உறுப்புகளான சிறுநீரகம், நுரையீரல், தோல், பெருங்குடல் போன்ற உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கிறது.
 பிறப்பில் இருந்து இறக்கும் வரை நாம் சிறுநீர், மலம் சேகரிப்பிற்காக ஒரு சிறிய கழிப்பறையை நம் உடலுக்குள் சுமந்து திரிகிறோம் என்றால் அது மிகையாகாது.
 இன்னுமொரு ஆச்சரியமான விஷயம், நம் உடல் உறுப்பு கடிகாரம் போல் செயல்படக்கூடிய தன்மையுடையது. ஒரு வேலையை நமக்கு நினைவுபடுத்த கடிகாரத்தில் ஒலிப்பானை நாம் தயார் செய்கிறோம் அல்லவா?
 அதுபோலவே, நாம் உண்பது, உறங்குவது, எழுவது இயற்கை கடன்களைக் கழிப்பது ஆகியவற்றை ஒரு நாளின் எந்த நேரத்தில் செய்கிறோமோ அதே நேரத்திற்கே உறுப்புகள் பழக்கப்பட்டு அனிச்சை செயல்கள் போன்று நம்முடைய விருப்பத்திற்கு அப்பாற்பட்டு நடக்கின்றன. இதன் காரணமாகவே நம் உடல் "பயாலஜிகல் கிளாக்' என்று அழைக்கப்படுகிறது.
 உடலின் செயல்பாடுகளில் பலவும் ஏன், எப்படி என்று எந்த மருத்துவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாதபடியே உள்ளன. நரம்பு மண்டலத்தின் உறுப்பான மூளை, நரம்புகள் மற்றும் மரபணுக்கள் போன்ற சிக்கலான உடற்கூறுகள் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளன.
 மொத்தத்தில் நம் உடல் ஆழ்கடல் போல் கண்டுபிடிக்க முடியாத பல ரகசியங்களையும், அற்புதங்களையும் கொண்டது
 முன்பெல்லாம் மக்களை அரிதாகத் தாக்கிய பல நோய்கள் இன்று அடிக்கடி பாடாய்ப்படுத்துகின்றன. மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமிகள், மருந்துகளின் தாக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள தங்களின் மரபணுக்களை புதிதாக மாற்றிக் கொள்ளும் விசித்திரமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நம் கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய கிருமிகளின் இந்த அளப்பரிய ஆற்றல் கூட ஒரு விந்தைதான்.
 ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வாங்கிய வீட்டு உபயோக பொருளை, ஓர் இயந்திரத்தைப் பராமரிக்க அதிகமாக சிரமப்படுகிறோம், ஆனால், விலை மதிப்பற்ற நம் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு அந்த அளவிற்காவது முயற்சிக்கிறோமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
 நமது உடல் கூட ஒரு இயந்திரம் போல்தான். அக்கறையுடன் பராமரிக்காவிடில் உறுப்புகள் பழுதாகி விடும். அல்லது உடல் தன் இயக்கத்தையே நிறுத்தி விடக்கூடும்.
 எனவே, நம்மால் முடிந்தவரை, நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பசித்த பின் புசிப்பது, ஆரோக்கியத்திற்கு ஆகாதவற்றைப் புறந்தள்ளுவது, உடல் உழைப்பு, ஆழ்ந்த உறக்கம், பரபரப்பற்ற அமைதியான உள்ளம் ஆகியவை சீரான உடல் இயக்கத்திற்கு முக்கியமானவை.
 ஆரோக்கியம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாதது. அதனை இழந்தபின்தான் பலரும் அதன் அருமையை உணர்கிறார்கள். நாம் இப்போதே உணர்ந்து அற்புதமான நமது உடலைப் போற்றுவோம்! ஆரோக்கியத்துடன் வாழ்வோம்!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com