வெற்றுச் சொல் அல்ல; வரலாற்றுச் சொல்!

ஒரு நாட்டில் வாழும் ஒருவர் வாழும் நாட்டாலும், பேசும் மொழியாலும், அந்த நாட்டில் வாழும் உரிமை படைத்த இனத்தாலும் என மூன்று வகைகளில் அழைக்கப்படுகிறார்.

ஒரு நாட்டில் வாழும் ஒருவர் வாழும் நாட்டாலும், பேசும் மொழியாலும், அந்த நாட்டில் வாழும் உரிமை படைத்த இனத்தாலும் என மூன்று வகைகளில் அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டிற்கு உரிய பகுதிகள் பறிக்கப்பட்ட பொழுது ம.பொ.சி, நேசமணி, இராசாசி போன்றோர் உரிமைக்குரல் கொடுத்ததையும், தமிழ் இனம் அயலக நாடுகளிலும் மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட பொழுது தமிழக மக்கள் தலைவர்கள் காப்பாற்ற முன்வந்ததும் நாடு, இனம் என்பதற்கு சரியான சான்றுகளாகும்.
 "தமிழியக்கம்' என்ற சொல்லை இன்று உருவாக்கப்படும் சொல்லாகக் கொள்ளக்கூடாது. தமிழோடு அரவணைத்து பல வரலாறுகளை உள்ளடக்கிய சொல்லாகும். தமிழியக்கம் என்ற சொல், "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி' என்ற பெருமை கொண்ட தமிழ் மொழியின் உயிர்ப்பைக் காக்கும் சொல்லாகும்.
 தமிழ்மொழிக்கு வரும் கேடுகளை நீக்கிக் காக்கும் காவலர்களாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தொல்காப்பியர், பவணந்தி, அமிர்த சாகரர், இளங்கோ அடிகள், சங்கப் புலவர்கள் என எண்ணற்றோர் வாழ்ந்ததால் தமிழியக்கத்திற்கான தேவை இருக்கவில்லை.
 தமிழ்மொழி "தன் நிலை தாழாமை' என்ற நிலையிலிருந்து நிலைகுலையும் பொழுது, அதை எதிர்கொள்ள அவ்வப்போது தமிழியக்கங்களைத் தோற்றுவித்த பெருமக்கள் பலருண்டு. அண்ணாமலை அரசர், ஆசிரியர் கல்கி, "ரசிகமணி' டி.கே.சி., ஆர்.கே சண்முகனார், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆகியோர் தமிழிசை இயக்கமாகி தமிழிசையைக் காத்தனர்.
 14.11.1901 பாண்டித்துரை தேவரால் மதுரை தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. 16.4.1938-இல் தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தை தமிழ்ச்சங்கம் கண்டார். இவை தோற்றுவாயாக அமைய பல சங்கங்கள் ஊர்ப் பெயர்களாலும் புலவர்கள் பெயர்களாலும் இயங்க ஆரம்பித்தன.
 தமிழ்மொழியைத் தூய்மைப்படுத்த வேண்டும் ஆங்கில மொழியின் ஊடுருவலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தினமணி 21.6.14 அன்று 370 அமைப்புக்களை அழைத்து தலைநகர் தில்லியில் இரண்டு நாள் மாநாடு நடத்தி உலகம் முழுதும் தமிழை எப்படிப் பரப்பலாம் என்று கருத்தரங்கு நடத்தியது. மேதகு அப்துல் கலாம் "தினமணி' இலக்கிய அமைப்புகளின் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தமிழ் செழிக்க அவர் ஆறு அம்சத் திட்டத்தை அறிவித்தார்.
 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1945-இல் ஒரே இரவில் பாடிய நூல் "தமிழியக்கம்'. 73 ஆண்டுகளுக்கு முன் அவர் எந்த சிந்தனையில் தமிழ்
 நலம் கெடாமல் இருக்க வேண்டும் என்று பாடினாரோ அவர் பாடிய கருப்பொருளில் உள்ளவை இன்றும்கூட நடைமுறைத் தேவையாக இருப்பதை நாம் உணர முடிகிறது.
 அவர், வணிகர், அரசியல் தொடர்பாளர்கள், புலவர்கள், குடும்பத்தார், கோயிலார், அறத்தலைவர், விழா நடத்துவோர், கணக்காயார், மாணவர், பாடகர், கூத்தர், பாட்டியற்றுவோர், சொற்பொழிவாளர், ஏடெழுதுபவர், பெரும் செல்வந்தர் என்ற பலவகையினர் எப்படி தமிழைப் பேணவேண்டும் என்று பாடியுள்ளது இன்றும் பொருந்துகிறது. 73 ஆண்டுகளுக்கு முன் கண்ட அதே நிலை நீடிக்கிறது.
 73 ஆண்டுகளுக்கு முன் நாம் இன்று தெருவில் காணும் வணிக விளம்பர பலகையில் ஆங்கிலம் இருப்பதைப் பாடுகிறார்
 வாணிகர் தம் முகவரியை
 வரைகின்ற பலகையில் ஆங்கிலமா
 வேண்டும்
 மாணுயர்ந்த செந்தமிழால்
 வரைக என அனைவர்க்கும் சொல்ல வேண்டும்
 இவ்வரிகளை அனைவரும் மேடைகளில் கூறுகிறோம். விளம்பரப் பலகையில் உள்ள ஆங்கிலத்தை அழிக்க 73 ஆண்டுகளும் தார் கொண்டு அழிக்கும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
 பெரும் செல்வர்களுக்கு அவர் பாடுவது இன்றைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
 தமிழுக்கு பொருள் கொடுங்கள்
 தமிழறிஞர் கழகங்கள் நிறுவிடுங்கள்
 தமிழ்ப்பள்ளி கல்லூரி தமிழ்
 தமிழ் ஏடு பலப்பலவும் நிலைக்கச்செய்வீர்!
 என்று அறிவுறுத்தும் நீண்ட பாடலாக இத்தொகுப்பில் உள்ளது.
 உலகத் தமிழர்களை ஒரு குடையின் கீழ்கொண்டுவரும் முயற்சிகள் பல நடக்காமலில்லை. பாவணார் "உலகத் தமிழ்க்கழகம்' உருவாக்கினார். அதன் கிளைகள் உலகத் தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ளன. முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் உலகத் தமிழ்ச்சங்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி வைத்தார்.
 அதற்கு கட்டடம் இப்பொழுதுதான் கட்டப்பட்டு செயல்படத் தொடங்கி உள்ளது.
 வி.ஜி.பி சந்தோசம், உலக நாடுகளில் 26 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியிருக்கிறார். உலகத் தமிழர்களுக்கு இடர் வரும்பொழுது பழ. நெடுமாறனால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரமைப்பு குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றி வருகிறது.
 உலக நாடுகளில் பல மாநாடு கருத்தரங்குகளை பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனின் பன்னாட்டு தமிழுறவு மன்றம் நடத்தியுள்ளது. திருக்குறளை அடிப்படையாக வைத்து உலகத் திருக்குறள் பேரவையை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர் குன்றக்குடி அடிகளார், முனைவர் மோகன்ராசு ஆகியோர்.
 இவ்வேளையில் தமிழை செம்மொழியாக நடுவண் அரசு ஏற்றுக் கொண்ட வரலாற்றுச் செய்தியை அறிதல் வேண்டும். ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழ்மொழி புறக்கணிப்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் உருவான பொழுது "தமிழ்மொழி செம்மொழி' என்ற அழுத்தமான கருத்துக்களை பரிதிமாற் கலைஞர் நூலாகப் பதிவு செய்தார்.
 அவர் கருத்துகளை மையமாக வைத்து தமிழை செம்மொழியாக்கிட பல சங்கங்கள் மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் இந்திய மாநிலங்களில் நடத்தின. அவற்றுள் தலைநகர் தமிழ்ச் சங்கம், பெங்களுர் தமிழ்ச் சங்கம், தில்லி தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழுறவு மன்றம், தமிழ்ச் சுரங்கம் முதலிய அமைப்புகள் குறிப்பிடத்தக்கன. இப்போராட்டம் இரண்டாண்டுக்கு மேல்நடந்தன.
 மணவை முஸ்தபாவும், புலவர் சுந்தரராசனும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டனர். மேதகு அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது, நாடாளுமன்ற உரையில் தமிழ் செம்மொழியாக மத்திய அரசின் பட்டியலில் இடம் பெறும் என்ற நிலையான தொண்டினைச் செய்து மறைந்தார்.
 இந்த அளவோடு நின்று விடாமல் அன்றைய முதல்வர் கருணாநிதி மத்திய செம்மொழி நிறுவனத்தையும் தமிழகத்திற்கு கொண்டுவந்து அமைத்து விட்டார். இப்பணி அவர் முன்னெடுத்த வள்ளுவர் கோட்டம், குமரியில் திருவள்ளுவார் சிலை ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கது.
 காமராஜர் முதலமைச்சராக இருந்த பொழுது உயர்நிலைப் பள்ளிகள் 8,500 என்ற எண்ணிக்கையிலும் நடுநிலைப்பள்ளிகள் 32,000 என்ற எண்ணிக்கையிலும் தொடங்கப்பட்டன. இன்று ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படுகின்றன. மூடப்பட்ட பல பள்ளிகளில் 20, 30 மாணவர்களே உள்ளனர் என்று ஊடகச் செய்திகள் வருகின்றன.
 தனிப்பட்ட முறையில் தம் தொண்டுகளால் தமிழியக்கமாக விளங்கிய உ.வே.சா., தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், கா.சு. பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, ச.சோ. பாரதியார், பாரதிதாசன், சிதம்பரநாதனார், தெ.பொ.மீ., பாவாணர், க. வெள்ளைவாரணர், பெருஞ்சித்திரனார், முத்தமிழ் அறிஞர் கி.ஆ. பெ. விசுவநாதம், சாலை இளந்திரையன், நா. அருணாசலம், தமிழண்ணல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மறைய இன்று அவ்விடங்கள் பூர்த்தி செய்ய முடியாத வெற்றிடமாக உள்ளன.
 இந்தி தேசிய மொழி என்ற நிலைபேறு அடைந்துவிட்டதால் வளரும் மாணவ சமுதாயம் அம்மொழியைப் படிக்க முற்பட்டு சென்ற ஆண்டைவிடப் பத்து விழுக்காடு கூடுதலாகப் படிக்கின்றனர் என்ற செய்தி வருகிறது.
 தமிழ், தமிழ்நாடு, தமிழினம் என்ற முப்பெரும் உயிரோட்டம் கொண்ட அமைப்புகள் உலகத் தமிழர் இயக்கம், உலகத் தமிழ் இயக்கம் என்று உருவாவதை பிற மொழி ஊடுருவல், புதிதாய் பிறந்த நாகரிகம், மரபு மீரிய வாழ்க்கை உள்ளிட்டவை தின்றுவிடும் திமிங்கலங்களாக உருவெடுத்திருக்கின்றன.
 தமிழியக்கம் வெற்றுச் சொல்லல்ல, வரலாற்றுச் சொல் என்பதை இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு யார் எடுத்துச் சொல்வது?
 ஊடகங்களிடையே பிறமொழி ஊடுருவல் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் ஒரு தமிழியக்கம் என்பது காலத்தின் கட்டாயம்!
 
 கட்டுரையாளர்:
 மேனாள் தமிழ்த்துறை தலைவர்,
 அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com