ஒலி மாசு என்னுமொரு பூதம்!

நீர் மாசு, காற்று மாசு ஆகியவை பல்லாண்டுகளாக நம் நாடெங்கும் வியாபித்திருந்தாலும், ஒலி மாசு இப்போதுதான் ஒரு பூதாகரப் பிரச்னையாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

நீர் மாசு, காற்று மாசு ஆகியவை பல்லாண்டுகளாக நம் நாடெங்கும் வியாபித்திருந்தாலும், ஒலி மாசு இப்போதுதான் ஒரு பூதாகரப் பிரச்னையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பொது இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற சகித்துக் கொள்ள முடியாத குணாதிசயங்களில் ஒன்று அதிக சத்தம் உண்டாக்குதல். நம் நாட்டில் எங்கு சென்றாலும் சத்தம், சத்தம், சத்தம்.
 ஒருவருக்கொருவர் பேசுவது, தொலைக்காட்சி, தொலைபேசி பயன்படுத்துவது என்று எல்லாவற்றையும் உரக்கவே செய்கின்றனர். பிறருக்கு இடையூறாக இருக்கும் என்று எவரும் எண்ணுவதில்லை. பல வீடுகளில் காலை எழுந்தவுடன் முதலில் செய்யும் வேலை தொலைக்காட்சியில் பக்திப் பாடல்களைப் போடுவதுதான். அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ அடுத்த வீட்டுக்காரர்களின் தூக்கம் தொலைந்தது.
 காலை நடைப்பயிற்சி செல்லும் பலரும் செல்லிடப்பேசியில் அதிக ஒலியுடன் பாடல்களைக் கேட்டுக் கொண்டு செல்கிறார்கள். இன்னும் சிலர் குழுவாக நடந்தபடி உரத்த குரலில் பேசிக் கொண்டு செல்கிறார்கள். நடைப்பயிற்சி மேற்கொள்வதே அமைதியான காலைவேளையில் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறவேண்டும் என்பதற்காகத்தான். அந்த அமைதியைக் கெடுத்து, நடைப்பயிற்சி மேற்கொண்டு பிறருக்கு தொல்லை தரலாமா?
 இப்போதெல்லாம் புதிதாக மற்றுமொரு தொல்லை. வணிக வளாகங்களிலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் உள்ள காவலாளிகள் இரவு, பகல் எந்நேரமும் வானொலியில் திரைப்படப் பாடல்களை அதிக சத்தத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யார் சொல்வதையும் இவர்கள் காதுகொடுத்துக் கேட்பதில்லை.
 தெருவில் தேநீர்க் கடைகளும், சாலையோரச் சிற்றுண்டிகளும் அதிகாலையிலிருந்து நள்ளிரவுவரை இயங்குகின்றன. அங்கெல்லாம் வானொலியில் எல்லா நேரமும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தெருவில் போகும் ஆட்டோக்கள், டெம்போக்கள், கார்கள், பேருந்துகள், வேன்கள் எல்லாமே நம் காது கிழியும் வண்ணம் ஒலிப்பான்களை அழுத்துவதோடு, திரைப்படப் பாடல்களை அலறவிட்டுக் கொண்டும் போகின்றன.
 மருத்துவமனை, கல்விக்கூடம் ஆகியவற்றின் அருகில் அதிக ஒலி எழுப்பக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால் மருத்துவமனைகளிலேயே மூலைக்கு மூலை தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்து நிகழ்ச்சிகளை உரத்த ஒலியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நோயாளிகளுக்கு இந்த "ஒலி மாசு' அளிக்கும் வேதனை பற்றி மருத்துவமனை நிர்வாகங்களுக்குக் கவலையே இல்லை.
 அது மட்டுமல்ல, காத்திருக்கும் ஒவ்வொரு நோயாளியும், அவர் கூட வந்திருப்பவரும் செல்லிடப்பேசியை எடுத்துப் பேச ஆரம்பிக்கிறார்கள். "டாக்டர் இன்னும் வரவில்லை', "நான் பத்தாவது டோக்கன்', "இப்போது உள்ளே போகப் போகிறேன்' என்று நேரடி வர்ணனை வேறு செய்கிறார்கள். " சத்தம் போடாதீர்கள்' என்றும் "கைபேசியை அணைத்து வையுங்கள்' என்றும் அங்கங்கு அறிவிப்பு வைத்திருப்பது இவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. பலவித ரிங்டோன்களின் ஒலியும், பலரும் உரத்த குரலில் பேசும் ஒலியும் - அப்பப்பா, தாங்க முடிவதில்லை. பேருந்திலோ, ரயிலிலோ பயணிக்கும்போதும் கூட ஒலி மாசு நம்மைத் துரத்துகிறது. சில பயணிகளின் உரத்த பேச்சுக் குரலும், செல்லிடப்பேசியில் ஒலிக்கும் பாடல்களும் நிகழ்ச்சிகளும் இனிமையாக அமைய வேண்டிய பயணத்தை மிகவும் கொடுமையான அனுபவமாய் ஆக்குகின்றன.
 திருமண நிகழ்ச்சி, கல்லூரி விழா, விற்பனை விழா, அரசியல் நிகழ்ச்சி என எதுவாக இருப்பினும் முதலில் வந்து சேருவது "ஸ்பீக்கர் செட்'தான். திருமண அரங்கில் மங்கல இசை வாசிப்பவர்களுக்கு தனித்தனி மைக்குகள், மந்திரம் ஓதும் புரோகிதருக்கு தனி மைக், நான்கு மூலைகளிலும் "ஸ்பீக்கர்கள்', அங்கு யார் பேசுவதும் யாருக்கும் கேட்காது. அங்கு வருபவர்கள் வாயை இறுக மூடிக் கொண்டு உட்கார்ந்துவிட்டுப் போக வேண்டியதுதான். விற்பனை விழா என்றாலே ஒரு கூடாரத்தைப் போட்டுக் கொண்டு, இரண்டு பக்கமும் ஸ்பீக்கர்களை வைத்து சினிமாப் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள்.
 அரசியல் நிகழ்ச்சி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. எப்போதோ வரப்போகும் தலைவருக்காகத் தெருவை அடைத்து மேடை அமைத்து, இரண்டு ஸ்பீக்கர்கள், ஐம்பது நாற்காலிகள், காது கிழியும்படி பாடல்கள் என்று அதிகாலையிலிருந்தே ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களை யார் கேட்பது?
 நாலைந்து கல்லூரி மாணவர்கள் சேர்ந்தாலே ஒரே கூச்சல், களேபரம்தான். உணவு விடுதிகளில், இவர்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மிக உரத்த குரலில் பேசிச் சிரித்து, பக்கத்தில் உள்ளவர்கள் முகம் சுளிக்கும்படி நடந்துகொள்கிறார்கள். சுற்றுச் சூழல் மாசு பற்றிப் படித்துக் கொண்டே இவர்கள் ஒலிமாசு ஏற்படுத்துவதை என்னென்பது? மேல் நாட்டவரைப் பார்த்து எதையெதையோ பின்பற்றும் நம் இளைய தலைமுறை அவர்களைப் போல் மெல்லிய குரலில் அடுத்தவருக்குத் தொந்தரவு தராத வண்ணம் பேசக் கற்றுக்கொள்ளக் கூடாதா?
 வெளிநாட்டுப் பயணங்களின் போது அந்நாட்டு மக்கள் எவ்வளவு கூட்டம் கூடும் இடத்திலும் அமைதி காப்பதைப் பார்க்கும்போது "நம் நாட்டு மக்கள் இந்தப் பண்பினைக் கற்றுக் கொள்ளலாகாதா?' என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.
 ஒருமுறை வெளிநாட்டுப் பயணம் முடிந்து விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். அது கென்ய நாட்டு விமானம். அமைதியான இரவு நேரப்பயணம். பணிப்பெண்கள் இரவு உணவைப் பரிமாறிக் கொண்டு இருந்தனர். நம்நாட்டு இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டு பணிப்பெண்களை அழைத்து,"பிரியாணி கொண்டு வா', "சீக்கிரம் வா' என்று இந்தியிலும் அரைகுறை ஆங்கிலத்திலும் பேசி, உரக்கச் சிரித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
 அத்தனை பயணிகளும் அருவருப்போடு அவர்களைப் பார்த்தார்கள். இந்தியர்கள் என்றால் உரத்த சத்தம் போடுபவர்கள் என்ற மேலைநாட்டாரின் எண்ணம் உண்மை என்றல்லவா ஆகிறது!
 கோயில்களால் ஏற்படும் ஒலிமாசைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். முன்பெல்லாம் கோயில்களில் ஓதுவார்கள் இருப்பார்கள். அவர்கள் மனமுருகிப் பக்திப் பாடல்களைப் பாடுவார்கள். அவற்றைக் கேட்கும்போது உடல் சிலிர்க்கும்; கண்களில் நீர் பெருகும். ஆனால், இப்போது பல கோயில்களில் பாடல் உள்ள ஒலி நாடாக்களை உரக்கப் போட்டு விடுகிறார்கள். ஒலி பெருக்கியில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கோயில்களில் மணியடிப்பதைக் கூட இயந்திரம் செய்கிறது. மனிதர் இறைவனை உளமார நினைத்து மணி அடிப்பது எப்படி, இயந்திரம் "டாண், டாண்' என்று இடைவிடாமல் அடிப்பது எப்படி? பக்தி ஆடம்பரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் ஆனதன் விளைவுதான் கோயில்களிலும் ஒலிமாசு வியாபித்திருப்பது.
 விநாயக சதுர்த்தி களேபரம் இப்போதுதான் முடிந்தது. அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் ஊர்வலங்களும், கூச்சலும், பட்டாசுச் சத்தமும், ஆட்டமும், பாட்டமும் எங்காவது சத்தமில்லாத தீவு இருந்தால் அங்கு ஓடிப்போய் விடலாம் என்று தோன்றியது. கோயில் திருவிழாக்களின் போது இரவு முழுதும், பாட்டுக் கச்சேரி, பட்டாசுச் சத்தம்தான். மாணவர்கள் படிக்க முடிவதில்லை, வயதானவர்கள் தூங்க முடிவதில்லை. தீபாவளியின் போது இரவு பத்து மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை இருக்கிறது. அதே தடை மற்ற நாள்களுக்குப் பொருந்தாதா?
 கட்டடத்தை இடிப்பது, டிரில்லிங் செய்வது போன்ற பணிகளை பலர் இரவு முழுவதும் செய்கிறார்கள். இது சட்டப்படி குற்றம். என்றாலும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சகித்துக் கொண்டு போகிறார்கள். தவறி யாராவது காவல் துறையினரிடம் புகார் செய்தாலும் அது காவலர்கள் சம்பாதிப்பதற்குதான் வழிவகுக்கிறதே தவிர, புகார் தந்தவருக்கு நிவாரணம் கிடைப்பதில்லை. நகரங்களில்தான் இப்படி என்றால் கிராமங்களிலும் இரவு நேரங்களில் டிராக்டர் கொண்டு உழுகிறார்கள்; பொக்லைன் ஓட்டுகிறார்கள்- அதுவும் சத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டு. நகரத்திலாவது சட்டம் பேசலாம், கிராமத்தில் அதுவும் முடியாது.
 காற்று மாசு என்றால் மூச்சு விட முடியாது- தில்லி ஓர் எடுத்துக்காட்டு. நீர் மாசு என்றால் குடிக்கத் தண்ணீர் கிடையாது, நோய்கள் பல வரும் - திருப்பூர், வாணியம்பாடி, ஆம்பூர் எடுத்துக்காட்டு. ஒலி மாசு என்றால் என்ன விளைவு? நமது கேட்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும், மன அழுத்தம் ஏற்படும், ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது மனநிலைகூட பாதிக்கப்படும்.
 ஒலி மாசைப் பற்றிய விழிப்புணர்வு எல்லாருக்கும் தேவை. பொது இடங்களில் செல்லிடப்பேசியின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி எங்கு இருப்பினும் அகற்றப்பட வேண்டும். நகரமைப்புப் பிரிவு, ஒவ்வொரு நகரத்திலும் குடியிருப்புப் பகுதி, வணிகப்பகுதி, பொழுதுபோக்குப் பகுதி என்று வரையறுத்து ஒன்றுக்கொன்று இடையூறின்றி அமைக்க வேண்டும். வருங்காலத்தில் "கேட்கும் திறன் குறைந்த' ஒரு தலைமுறை உருவாகிவிடக் கூடாது என்ற அக்கறையுடன் நாம் இனியேனும் செயல்படவேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 சுற்றுச்சூழல் ஆர்வலர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com