அரசின் நோக்கம் நிறைவேற...

அண்மையில், விருதுநகர் மாவட்டத்தில், ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், பிரசவத்துக்காக சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

அண்மையில், விருதுநகர் மாவட்டத்தில், ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், பிரசவத்துக்காக சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு பணி மருத்துவர் இல்லை. ஊழியர்கள் செல்லிடப்பேசி மூலம் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பிரசவம் பார்த்தார்களாம். ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மூச்சுவிடத் திணறியதால் ராஜபாளையத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள்ளாக குழந்தை இறந்து விட்டது. குழந்தை இறப்புக்கு பணி மருத்துவர் இல்லாததே காரணம் எனக் கூறி அந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 
கடந்த ஜூலையில் திருப்பூரில் ஆசிரியை ஒருவருக்கு வீட்டிலேயே சுகப் பிரசவம் நடந்தது. நஞ்சுக் கொடி வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு அந்த பெண் இறந்தார். அதுமுதல் இந்த வீட்டில் பிரசவம்' என்பது பொதுவெளியிலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்படும் பொருளாகி விட்டது.
பெண்களுக்கு பிரசவம் என்பது லேசானது அல்ல. அது மறுபிறவி போன்றது. பிரசவம் இயற்கையாகவோ அல்லது அறுவைச் சிகிச்சை மூலமோ நிகழலாம். பாரம்பரிய முறைப்படி வீட்டில் பிரசவம் பார்ப்பது ஒரு குற்றமா என்ற கேள்வி எழலாம். வீட்டில் நடைபெறும் பிரசவங்களால் தாய்-சேய் உடல் நலத்துக்கோ, உயிருக்கோ ஆபத்து ஏற்படலாம் என்பதால் அதை தவிர்க்க அரசு தீவிர அக்கறை காட்டுகிறது. மருத்துவமனைகளில் பிரசவங்கள் நிகழ்ந்தால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்படும். இன்றைய நவீன மருத்துவ வளர்ச்சியில், வீட்டில் சுகப் பிரசவம் நடந்தாலும் அதற்குப் பிறகு மருத்துவர் கண்காணிப்பு அவசியம். அப்போதுதான் தாய்-சேயின் உடல்நிலையில் சில பின் விளைவுகளை தவிர்க்க முடியும். 
2014-16 -இல் தமிழ்நாட்டில் தாய்-சேய் இறப்பு விகிதம் 66 (ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளில்) ஆகும். இது தற்போது 62 ஆகக் குறைந்துள்ளது. இது நாட்டில் மூன்றாவது இடம். முதல் இடத்தில் கேரளமும் (46), இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரமும் (61) உள்ளது. எனவே, 2023-ஆம் ஆண்டுக்குள் தாய்-சேய் இறப்பு விகிதத்தை 25 முதல் 30 சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில் நடக்க வேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.
ஆனால், பெண்கள் மருத்துவமனையை நாடாமல் வீட்டில் சுகப் பிரசவத்தையே விரும்புகின்றனர். அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டாம். நோய்த்தொற்று இருக்காது. மயக்க மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் கிடையாது. பின்கவனிப்பு குறைவு. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பணச் செலவுதான். 
சிறிய தனியார் மருத்துவமனைகள் முதல் பெரு நிறுவன (கார்ப்பரேட்) மருத்துவமனைகள்வரை வணிகமே பிரதான நோக்கம். இங்கெல்லாம் சுகப் பிரசவம் என்பது அபூர்வம். மருத்துவக் காரணங்களைத் தவிர்த்து அதிகமாக அறுவைச் சிகிச்சை மூலமே பிரசவம் நடக்கிறது. அதற்கு காரணம், கர்ப்பிணிக்கு இயற்கையான பிரசவ வலி ஏற்படும் வரை சில மருத்துவர்கள் காத்திருப்பதில்லை. நேர சிக்கனத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்து விடுகின்றனர். சில சிறப்பு மருத்துவர்கள் பல மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். 
எனவே, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அறுவைச் சிகிச்சையை மேற்கொள்கின்றனர். சில மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு அறுவைச் சிகிச்சைகளுக்கு இலக்கு உண்டு. சில பெண்கள் வலி தாங்க முடியாமலும், நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அறுவைச் சிகிச்சை பிரசவத்தை விரும்புவதும் உண்டு. எனவே, அரசு மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளில்தான் அதிகமாக அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் நடக்கின்றன.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் 10 சதவீதம் வரையில் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் நடக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், கிராமப்புறங்களை ஒட்டியுள்ள தனியார் மருத்துவமனைகளில் 12.9 சதவீதம் அறுவை சிகிச்சை பிரசவம் என்றால், நகரங்களில் இது 28.3 சதவீதமாகவும், தனியார் மருத்துவமனைகள் கோலோச்சும் பெரிய நகரங்களில் இது 50 சதவீதத்தை எட்டுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நகரங்களைப் பொருத்து பிரசவத்துக்கான சிகிச்சை கட்டணம் ரூ. 50 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவாகிறதாம். இது எல்லாருக்கும் சாத்தியமல்ல.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை இலவசம்தான் என்றாலும் கிராமப்புற பெண்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றால் அங்கு சில வேளைகளில் மருத்துவர்கள் இருப்பதில்லை. பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இடைப்பட்ட நேரத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அரசு தலைமை மருத்துவமனைகளில் இட
நெருக்கடி. அன்பளிப்பு' அளித்தால்தான் முறையான சிகிச்சை என்ற நிலை. சில மருத்துவமனைகளில் மருந்து இல்லை, மாத்திரை இல்லை எனக் கூறி அவற்றை வெளியே வாங்கி வரச் சொல்வதும் உண்டு.
பிரசவத்துக்கு ஓரிரு நாள்கள் காலதாமதம் ஆகும் என்றால் மருத்துவமனையின் சுகாதார சீர்கேட்டால் அங்கு தங்கி இருக்க முடியாத நிலை. இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும் கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்வதைவிட வீட்டில் சுகப் பிரசவம் நடப்பதையே விரும்புகின்றனர். 
எனவே, தாய்-சேய் இறப்பு விகித்தை குறைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேற வேண்டுமானால், கெடுபிடிகளை கைவிட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளையும் மேம்படுத்தி 24 மணி நேரமும் மருத்துவர்களும், ஊழியர்களும் பணியில் இருத்தல் மற்றும் தரமான சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் கர்ப்பிணிகள் நம்பிக்கையுடன் மருத்துவமனைகளுக்கு செல்வர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com