கண்காணிப்பு தேவை

நாடெங்கும் உள்ள குழந்தைகள் நலக் காப்பகங்கள் அனைத்திலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

நாடெங்கும் உள்ள குழந்தைகள் நலக் காப்பகங்கள் அனைத்திலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
நாடு முழுவதிலும் 9,462 குழந்தைகள் நலக் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் காப்பகங்களில், முறையாகப் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வரும் காப்பகங்களின் எண்ணிக்கை 7,109 மட்டுமே. இவற்றில் பெரும்பாலான காப்பகங்களை நடத்துவதற்கு அரசே நிதியுதவி செய்கிறது. இத்தகைய காப்பகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நிகழ்வது அதிர்ச்சியளிக்கிறது.
ஏனெனில், முறையாக அவை பதிவு செய்யப்பட்டிருப்பதால், காப்பகத்தில் பெண் வார்டன்கள் பணியில் இருப்பது, எத்தனை குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கான பராமரிப்புச் செலவு விவரம், உணவு, உறைவிட வசதி, காற்றோட்டமான அறைகள் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் மாதந்தோறும் அரசுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. அரசு சாராமல் தன்னார்வ அமைப்புகள் நடத்தும் சில காப்பகங்களிலும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கின்றன. 
அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலம் தேவ்ரியா பகுதியில் உள்ள காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், அங்கு தங்கியிருந்த 24 சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டதும் நாளேடுகளில் வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தன.
அதற்கு முன்னதாக பிகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள காப்பகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக செய்திகள் வந்து, அவை மருத்துவ ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது. குழந்தைகள் காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 99 சதவீதம் பேர் பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள்தான். இதில் சிலர் பிறந்தவுடன் குப்பைத் தொட்டி அல்லது தெருக்களில் வீசப்பட்டு யாரோ சிலரால் வளர்க்கப்பட்ட பெண் குழந்தைகள். 
அறிவு கொண்ட மனித வுயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம்' என்று தனது புதுமைப்பெண்' பாடலில் முத்தான வரியைக் கொடுத்தார் பாரதியார். இன்றைய சமூகத்தில் இன்னும் பெண்களுக்கான விடுதலை கிடைத்துள்ளதா என்றால் இல்லை என்றே கூறலாம். பிறக்கும் குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். 
பெண் சிறார்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள், சில ஆன்மிக இடங்களிலும் நிகழ்வதுதான் அவலத்திலும் அவலம். மதக்கோட்பாடுகள், நன்னெறிகள் கற்றுத்தருகிறோம் எனக்கூறி நல்லெண்ணங்களை மனதில் விதைப்பதாக எடுத்துரைத்து கொடுஞ்செயல் புரியும் அயோக்கியர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் என்ற பெயரில், வக்கிரமான எண்ணங்களில் ஊறிக்கிடக்கும் மனித மிருகங்களின் காம இச்சைக்கு அப்பாவி குழந்தைகளை பலிகொடுக்கும் போக்கு தொடர்வது வேதனையளிக்கிறது.
பெரும்பாலும் காப்பகம் நடத்துபவர்கள் அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள்தான். அவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசு அவர்களுக்குக் காப்பகம் நடத்துவதற்கான அங்கீகாரம் வழங்குகிறது. ஆனால் அற்ப எண்ணம் கொண்டவர்கள், காப்பகத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளை தங்களுடைய குழந்தைகள் போல பாவிக்காமல் இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபடுகிறார்கள்.
கடவுள் உள்ளமே, கருணை இல்லமே' என்று பாடினான் ஒரு கவி. காப்பகம் கடவுள் உறையும் புனித இடமாக இருக்க வேண்டும். சிறார்களை கொடுமைப்படுத்தும் மையமாக மாறி விடக்கூடாது. தன்னிடம் அடைக்கலம் தேடி வரும் ஆதரவற்ற குழந்தைக்கு, ஒரு நல்ல தாயாக, தந்தையாக இருந்து அவர்களின் வாழ்க்கைப் பாதையை நல்வழிப்படுத்தி, சமூகத்தில் அவர்கள் உயர்நிலை அடைய உதவ வேண்டும். 
சிறு குழந்தைகளிடம் பாலியல் வன்முறை நிகழ்த்துவோருக்கு தூக்குத் தண்டனை வழங்க அண்மையில் போக்சோ' சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்திய தண்டனையியல் சட்டத்தின் முந்தைய பிரிவுகளில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கே தண்டனை இருந்தது. ஆனால் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிகள் இருந்ததில்லை. அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. 
இந்தச் சட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இத்தகைய வழக்குகளில், விசாரணை என்ற பெயரில் காலம் தாழ்த்த அனுமதிக்கக் கூடாது. வன்கொடுமை நிகழ்ந்தது என மருத்துவ ஆய்வில் நிரூபணமான சில நாள்களிலேயே தண்டனை வழங்கினால் மட்டுமே சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க முடியும். 
மாவட்டந்தோறும் செயல்படும் இந்தக் காப்பகங்கள் மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஒரு குழுவினர் காப்பகங்களை நாள்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
காப்பகம் நடத்துவோரே குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவருக்கு மட்டுமல்லாது, அவரைக் காப்பாற்ற நினைக்கும் அதிகாரிகளுக்கும், குற்றவாளிக்கு நிகரான தண்டனை வழங்கப்பட வேண்டும். 
இவற்றையெல்லாம் நிறைவேற்றினால் மட்டுமே காப்பகத்தில் நிகழும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அரசு ஆவன செய்யுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com