கருப்புப் பணம்: புழுக்களாக மாறும் முதலைகள்

கருப்பு பண ஒழிப்பின் முதல் படியாக நவம்பர் 8 ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார்.
கருப்புப் பணம்: புழுக்களாக மாறும் முதலைகள்


கருப்பு பண ஒழிப்பின் முதல் படியாக நவம்பர் 8 ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் எல்லோருடைய அன்றாட வாழ்க்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியது. போர்காலங்களில் ஏற்படும் அசாதாரண சூழல் காணப்பட்டது. இதுவும் ஒரு போர் தான். கூடவே இருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நடக்கும் போர்.

கருப்பு பண விவகாரத்தில், நாட்டில் ஒளிந்திருக்கும் கருப்புப் பணம் எவ்வளவு என்பதை பற்றி பலதரப்பட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டன. மிகத் துல்லியமாக மதிப்பீடுகளை செய்ய முடியாமல் போனாலும், கிட்டத்தட்ட 3 முதல் 5 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணமாக ஒளிந்திருக்கும் என்றும், அதில் பெரும்பாலானவை வங்கியில் டெபாசிட் செய்யப்படாமல் அழிந்து போகும் என்று கணக்குப் போட்டார்கள். பெரிய பொருளாதார புலிகளின் ஏட்டுக் கணக்கு இது. இது சாத்தியமா? இதற்கு விடை காண்பதற்கு ஜனவரி 2017 வரை காத்திருப்பதுதான் ஒரே வழி. ஆனால், தற்போதைய சூழலை வைத்து அரசின் முயற்சி வெற்றியை கொடுக்குமா என்பதை ஓரளவுக்கு கணித்துவிட முடியும்.

கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் இதைப் பற்றிய கட்டுரைகளை படிக்க முடிகிறது.

“ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நினைத்த அளவுக்கு வெற்றியை கொடுக்காது. இது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்பதாக ஊடகங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இவை உண்மைக்கு புறம்பானவை என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளவும் முடியாது.

இதைப் பற்றிய சில விவரங்களை பார்ப்போம்.

நவம்பர் 8, 2016 வரை 17,165 மில்லியன் 500 ரூபாய் நோட்டுகளும், 6858 மில்லியன் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. கொஞ்சம் விரிவாக சொல்ல வேண்டுமென்றால், ரூ 8.58 லட்சம் கோடி மதிப்பிலான ஐநூறு ரூபாய் நோட்டுகளும், 6.86 லட்சம் கோடி மதிப்பிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், மொத்தத்தில் ரூ 15.44 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளதாக கடந்த செவ்வாய் கிழமையன்று மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வல் ராஜ்யசபையில் தெரிவித்தார்.

28 நவம்பர் அன்று 500, 1000 ரூபாய் நோட்டுகளாக ரூ 8.44 லட்சம் கோடி வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதாவது 8.44 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

இவை முதல் 18 நாட்களில் மக்களிடமிருந்து பெறப்பட்டவை.

எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் CRR. வங்கிகள் மக்களிடமிருந்து பெற்ற வைப்பு நிதியில் (Fixed Deposits) 4 சதவிகிதத்தை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைப்பார்கள். இதை Cash Reserve Ratio - CRR என்று சொல்வார்கள். நவம்பர் 8-ம் தேதியன்று ரிசர்வ் வங்கியில் உள்ள CRR ன் மதிப்பு 4.06 லட்சம் கோடி. இவை எல்லா வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கிக்கு CRR ஆக அனுப்பப்பட்டவை. பொதுவாக இவ்வளவு பெரிய தொகையை, அதிக மதிப்புள்ள பணமாக, அதாவது 500, 1000 ரூபாய் நோட்டுகளாகவே ரிசர்வ் வங்கிக்கு அனுப்புவது வழக்கம்.

நவம்பர் 28 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்தபடி வங்கிகளில் மக்களால் செல்லுத்தப்பட்ட தொகை 8.44 லட்சம் கோடி. நவம்பர் 8-ம் தேதி ரிசர்வ் வங்கியில் கையிருப்பு CRR 4.06 லட்சம் கோடி. ஆக, 12.5 லட்சம் கோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டு, வங்கிகளிடம் சென்றடைந்து விட்டது. டிசம்பர் 30 வரை, மீதமிருக்கிற நாட்களில் மேலும் 2.5 லட்சம் கோடி வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் நடந்தால், கிட்டத்தட்ட15 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்திலிருந்து, வங்கியை சென்றடையும் என்று எதிர்பார்க்கலாம்.

இதனால், 3 முதல் 5 லட்சம் கோடி வரை கருப்புப் பணமாக இருக்கும் என்று செய்யப்பட்ட மதிப்பீடு பொய்த்துப்போகும் என்று சில ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன.

அச்சடித்த பணம் பெரும்பாலும் திரும்பி வந்துவிட்டது என்றால், நாட்டில் கருப்புப் பணம் இல்லை என்று அர்த்தமா? நிச்சயமாக இல்லை. கருப்பு பணம் புதிய வடிவத்தை எடுத்துள்ளது என்பதுதான் உண்மை.

பிரதமர் மோடி அவர்களே, ஒருவேளை உங்கள் முயற்சி நினைத்த வெற்றியை கொடுக்காமல் போகலாம். நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்று எதிர்கட்சிகள் கூச்சலிடலாம். ஆனால் உங்கள் முயற்சி வெற்றியடைந்து விட்டது என்பதுதான் உண்மை. முந்தைய அரசுகள் செய்யத் துணியாத ஒரு சிறப்பான செயலை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

சமுதாயத்தில் ஒரு பொதுவான கருத்து ஒன்று உண்டு. அதிகமான பணிகளை செய்யும் போது தவறுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். குறைவான பணிகளை செய்யும் போது தவறுகளின் எண்ணிக்கையும் குறையும். எந்த பணியும் செய்யாமல் இருக்கும் போது, தவறேதும் நடப்பதில்லை. அதனால் தவறை வைத்து ஒருவரின் நிர்வாகத் திறனை முடிவு செய்ய முடியாது. தவறே செய்யாதவன் புதிதாக எதையும் முயல்வதில்லை என்பதுதான் உண்மை.

கருப்பு பண முதலைகள், பணத்தை மூட்டையில் கட்டி வீட்டில் வைத்திருப்பார்கள் என்று யாராவது கணக்கு போட்டிருந்தால், அது அவர்களின் தவறு. கையில் இருக்கும் கருப்பு பணத்தை யாரும் பணமாகவே வைத்திருப்பதில்லை. அவற்றை தங்கமாகவும், சொத்துக்களாகவும் உருமாற்றியிருப்பார்கள். ஆகையால் கருப்பு பணத்தின் மீதான நடவடிக்கை என்பது, கருப்பு பணம், தங்கம், பினாமி சொத்துக்கள் ஆகிய மூன்றின் மீதும் சேர்த்து எடுக்கப்படும் நடவடிக்கை. தற்போது மூன்றில் ஒரு பங்கு பணிகள் மட்டுமே முடிந்திருக்கிறது. ஆகையால் இது வெற்றி, தோல்வி ஆகியவற்றை பேசும் தருணமல்ல.

இன்று நாம் பார்த்துக் கொண்டிருப்பது கருப்பு பணத்தின் மீதான நடவடிக்கை. அடுத்ததாக தங்கம் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளையும் அரசு வெளியிட்டுள்ளது. தங்கத்தின் விற்பனையையும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. விரைவில் பினாமி சொத்துக்களின் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

கருப்பு பணம், தங்கம், பினாமி சொத்துக்கள் ஆகிய மூன்றின் மீதும் முழுமையான நடவடிக்கை எடுத்த பின்னர் மட்டுமே கருப்புப் பணத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் முழுப் பலனை கொடுத்ததா என்பது தெரியவரும். அதற்கு முன் அரசின் மீது தொடுக்கப்படும் விமர்சனங்கள், வெறும் வாதங்களாக மட்டுமே இருக்கும்.

இதைப் பற்றி மேலும் படிக்கும் முன் ஒரு குட்டிக் கதையை படிப்போம்

ஒரு நாடு. அந்த நாட்டில் திருடர் கூட்டம் ஒன்று இருந்தது. கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தது. திருடர்களை உயிரோடு பிடிக்க அரசர் பல முயற்சிகளை எடுத்தார். பலனில்லை. மக்கள் படும் அவதி அரசனை கோபமடையச் செய்தது.

‘திருடர்களை கொன்று பிணத்தை கொண்டு வருபவர்களுக்கு லட்சம் பொற்காசுகள்', என்று ஒரு அறிவிப்பை அரசர் வெளியிட்டார்.

அன்றிலிருந்து மக்கள் நேரடியாக திருடர்களை தேடும் பணியை தொடங்கினர். சில திருடர்களும் பிடிபட்டனர். மக்கள் அவர்களை கொன்று பிணத்தை அரண்மனையில் ஒப்படைத்தனர். சன்மானத்தை பெற்றுக் கொண்டனர்.

விஷயம் திருடர் கூட்டத்தை அடைந்தது. மக்களிடமிருந்து தப்பிக்க வழி தெரியாமல் திருடர்கள் காட்டில் சென்று மறைந்து கொண்டனர்.

காட்டில் ஒரு சாது இருந்தார். அவருக்கு அரசனை பிடிக்காது. அரசனுக்கு எதிராக யாராவது செயல்பட்டால் அவர்களுக்கு உதவுவார்.

இந்த நிலையில் மக்கள் கூட்டமாக திருடர்களை தேடி காட்டுக்குள் நுழைந்தார்கள். பயந்துபோன திருடர்கள் சாதுவிடம் ஓடினர். ‘தங்களை காப்பாற்றும்படி' கெஞ்சினர்.

சாது சில மந்திரங்களை உச்சரித்தார். அவ்வளவுதான்! திருடர்கள் அனைவரும் சிங்கங்களாக மாறினர். காட்டில் அங்குமிங்கும் ஓடினர்.

திருடர்களை தேடி வந்த மக்கள் சிங்கக் கூட்டத்தை கண்டு பயந்து ஓடினார்கள். ‘திருடர்களை தேடும் பணிக்கு சிங்கங்கள் இடையூறாக இருப்பதாக', அரசனிடம் முறையிட்டனர்.

‘சிங்கங்களை கொன்று அதன் உடலை கொண்டு வருபவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும்', என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார் அரசர்.

சிங்கங்களை கொல்வதற்காக காட்டிற்குள் மக்கள் படையெடுத்தனர். சிங்கங்கள் மீண்டும் சாதுவிடம் ஓடின. சாது மீண்டும் சில மந்திரங்களை உச்சரித்தார். இம்முறை சிங்கங்கள், யானைகளாக உருமாறின.

திடீரென்று யானைக் கூட்டம் வருவதைப் பார்த்த மக்கள் பயந்து போனார்கள். அரசனிடம் சென்று முறையிட்டனர்.

‘திருடர்களை பிடிக்க தடையாக இருக்கும் யானைகளை கொல்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும்', என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அரசர்.

மக்கள் மீண்டும் காட்டிற்கு விரைந்தனர். இம்முறை அவர்களின் இலக்கு யானைகள். பயந்து போன யானைகள் சாதுவை சந்தித்தன. சாது மீண்டும் மந்திரங்களை உச்சரித்தார்.

இம்முறை யானைகள் அருவருக்கத் தக்க புழுக்களாக மாறின.

‘திருடர்களே! கவலை வேண்டாம். புழுக்களை யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள். சிறிது காலம் புழுக்களாக இருங்கள். பிரச்னை ஓய்ந்த பின்னர் உங்கள் மீண்டும் திருடர்களாக மாற்றிவிடுகிறேன்', என்று சொன்னார் சாது.

புழுக்களாக உருமாறிய திருடர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், பிரச்னை வேறு ஒரு உருவில் முளைத்தது. சாது பேசியதை ஒரு ஒற்றன் கேட்டுக் கொண்டிருந்தான். அரசனிடம் சென்று நடந்ததை சொன்னான்.

சிறிது நேரம் யோசித்தார் அரசர். பக்கத்தில் அமர்ந்திருந்த மந்திரியின் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.

சற்று நேரத்தில் ஒரு வீரன் காட்டுக்குள் சென்றான். மரத்தடியில் அமர்ந்திருந்த சாதுவின் தலையை வெட்டினான். அரண்மனைக்கு திரும்பி சாதுவின் தலையை அரசனிடம் கொடுத்தான்.

பக்கத்தில் இருந்த மந்திரி அரசனிடம் பேசினார்.

‘அரசே! திருடர்களுக்கு உதவும் சாதுவின் தலையை துண்டிக்கச் சொன்னீர்கள். ஆனால், புழுக்கள் உருவில் இருக்கும் திருடர்களை ஏன் தண்டிக்கவில்லை?' என்று கேட்டார் மந்திரி.

‘நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தாதவர்களை ஏன் கொல்ல வேண்டும்? சாதுவின் மரணத்திற்கு பிற்கு திருடர்கள், திருடர்கள் அல்ல. வெறும் புழுக்கள். இனி அவர்கள் நினைத்தாலும் யாருக்கும் தீங்கிழைக்க முடியாது. எந்த சக்தியும் இல்லாத கேவலமான புழுக்களாக மீதமுள்ள நாட்களை கழிக்கப் போகிறார்கள். இதுதான் அவர்களுக்கு காலம் அளித்த தண்டனை', என்றார் அரசர்.

இந்தக் கதையில் வரும் சூழல் நம் நாட்டில் உருவாகியுள்ளது.

பிரதமர் மோடியின் முயற்சியை தவறாக சித்தரிக்க பல அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் முயல்வதை பார்க்க முடிகிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு முழுப் பலனைத் தராது என்று பல ஊடகங்கள் சொல்கின்றன. ‘எங்கள் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லுங்கள்', என்று பல தலைவர்கள் பிரதமரை வலியுறுத்துகின்றனர்.

பிரதமர் அவர்களே! இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. பதிலளிக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆனால், மக்களை திசை திருப்பும் அரசியல்வாதிகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் அரசியல்வாதிகளே! ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். இப்போது நடக்கும் போர் அரசுக்கும், கருப்பு பண முதலைகளுக்கும் மட்டுமே. அரசுக்கும், பிற அரசியல் கட்சிகளுக்குமல்ல. இந்த வித்தியாசத்தை மக்கள் உணர்ந்துள்ளார்கள். நீங்களும் வேறுவழியின்றி ஏற்றுக் கொள்ளும் காலம் விரைவில் வரும்.

கதையில் திருடர்கள் உருமாறினார்கள். அதைப் போல தங்கங்களாகவும், பினாமி சொத்துக்களாகவும் மாறியிருக்கும் கருப்பு பணத்தின் உருமாற்றத்தை அரசு கண்டுபிடிக்கும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்று நம்புவோம்.

 கண்டுபிடிக்கப்பட்ட சொத்துக்களும், தங்கங்களும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் தன்னுடைய நியாயமான உழைப்பில் வாங்கியது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு (Burden of Proof) சொத்தின் உரிமையாளரை சேர்ந்தது என்று அறிவிக்க வேண்டும். அதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

 சோதனையின் போது பிடிபடும் கணக்கில் காட்டப்படாத தங்கத்திற்கும், சொத்துக்களுக்கும் வரி விதிக்கும் முறை கைவிடப்பட்டு, அவற்றை அரசுக்கு சொந்தமாக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வரவேண்டும்.

 பினாமி சொத்துக்கள் தொடர்பான புகார்களை மத்திய அரசு சார்பில் நேரடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பலம் பொருந்திய அமைப்பை உருவாக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளில் அதிக இடம் பிடித்திருப்பது, சோதனையில் சிக்கும் கத்தை கத்தையான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள். ஒரு தனி மனிதனுக்கு எப்படி இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. இந்த விஷயத்தில் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அரசுக்கு எதிராக பலர் செயல்பட்டிருக்கிறார்கள். கதையில் வரும் சாதுவைப் போல பல கருப்பு அதிகாரிகள் கருப்பு பண முதலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். கருப்பு அதிகாரிகளின் கொட்டத்தை அடக்கினால், கருப்பு பண முதலைகள், எதற்கும் உதவாத புழுக்களாக மாறுவது நிச்சயம். சாதாரண குடிமகன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நமது பாரத பிரதமர் நடவடிக்கைகளை எடுப்பார்.
நம்பிக்கையோடு காத்திருப்போம்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com