ஜெயலலிதா வெளிப்படையான நபராக இருக்கத்தான் ஆசைப்பட்டாரா?

ஜெயலலிதா வெளிப்படையான நபராக இருக்கத்தான் ஆசைப்பட்டாரா?

இது மட்டுமல்ல தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுடனான தனது ‘லிவிங் டுகெதர்’ உறவாகட்டும், குமுதம் இதழில் அவர் எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்திய சுயசரிதையாகட்டும் அனைத்திலுமே ஒரு வெளிப்படைத் தன்மை மட்டுமல்ல..

அவருக்குள்ளும் ஆயிரம் சின்னச் சின்ன ஆசைகள் இருந்திருக்கின்றன!

ஜெயலலிதா ஆரம்பகாலங்களில் தனது கலை மற்றும் அரசியல் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களிலும் அச்சு ஊடகத்தினருடன் மனம் திறந்த நட்பு பாராட்டியவறாகவே இருந்திருக்கிறார். எப்போதிருந்து அவர் பத்திரிகையாளர்களைப் புறக்கணிக்கத் தொடங்கினார் எனில்; அது சட்டசபையில் நடந்த புடவை இழுப்பு சம்பவங்களின் பின்னானதாகவோ, வளர்ப்பு மகன் திருமண விவகாரங்களின் பின்னதாகவோ இருக்கலாம் என்றே அனுமானமாகிறது. அதுவரையிலான ஜெயலலிதா ஒரு மனம் திறந்த பேச்சாளராகவே இருந்திருக்கிறார். இதற்கான சான்றாக இந்தி நடிகையும் பிரபல ஊடகவியளாருமான சிமி கார்வல் என்.டி.டி.வி க்காக ஜெயலலிதாவுடன் நடத்திய நேர்காணலைச் சொல்லலாம். சிமி கார்வலுக்கு ஜெயலலிதா அளித்த பதில்கள் அத்தனையும் மனம் திறந்த நேரடியான பதில்கள். இதில் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி அவரளித்த பதில்கள் அவர் மீது ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்திருந்தது. இதோ அவரது மனம் திறந்த பதில்களில் சில;

சிமியின் கேள்வி: உங்களது அம்மாவைப் பற்றி கூறுங்கள்...அவரும் ஒரு நடிகை தான் இல்லையா?
ஜெயாவின் பதில்: “ஆம்...என் அம்மாவும் ஒரு நடிகை தான். என் அப்பாவின் மரணத்தின் பின் தான் அவர் நடிகை ஆனார். என் அம்மா மிக மிக அழகானவர். 
அப்பா இறக்கும் போது எனக்கு இரண்டு வயது, அப்பாவின் மரணம் இன்று வரை எங்களுக்கு மர்மம் தான். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அம்மா, என்னையும், அண்ணனையும் அழைத்துக் கொண்டு அம்மா வழித் தாத்தா வீட்டுக்கு வந்து விட்டார். அங்கே குடும்பச் சூழல் காரணமாக அம்மா வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம். அந்த வேலையில் கிடைத்த வருமானமும் போதாது என்ற நிலையில் தான் கன்னட சினிமாவில் தனக்கு வந்த வாய்ப்பை அம்மா ஒத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. எங்களை சித்தியின் அரவணைப்பில் தாத்தா வீட்டில் விட்டு விட்டு அம்மா மட்டும் இன்னொரு சித்தியான அம்புஜவள்ளியுடன் சினிமா வாய்ப்புகளுக்கு வசதியாக இருக்குமென சென்னையில் தங்க நேரிட்டது. அம்மா படப்பிடிப்புகளின் இடையில் எப்போதாவது தனக்கு நேரம் கிடைக்கும் போது தான் எங்களைப் பார்க்க தாத்தா வீட்டுக்கு வருவார். அந்நாட்களில் அம்மா என்னை விட்டுப் பிரியக் கூடாது என்பதற்காக அவரது புடவைத் தலைப்பை இறுகப் பற்றிக் கொண்டு தூங்குவேன். ஐந்து வயதில் ஒருமுறை அம்மா தனது புடவையை என் விரல்களில் இருந்து பிரிக்க முடியாமல் அப்படியே புடவையைக் கழற்றி எனது சித்தியை உடுத்திக் கொள்ளச் செய்து விட்டு சென்னைக்குப் போய்விட்டார், தூங்கி எழுந்த மறு நிமிடம் அம்மாவைக் காணாமல் அன்றெல்லாம் கதறி அழுத என்னைச் சமாதானப் படுத்துவது வீட்டிலிருப்பவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. பிறகு ஆறு வயதில் படிப்பிற்காக சென்னைக்கே வந்து அம்மாவுடன் தங்க நேரிட்டாலும் அப்போதும் நான் என் அம்மாவின் அருகாமையை இழந்தவளாகத் தான் உணர்ந்தேன். ஏனெனில் அம்மா படப்பிடிப்புகளுக்காக அதிகாலையில் நான் எழுவதற்கு முன்பே எழுந்து சென்று விடுபவராகவும், இரவில் நாங்கள் உறங்கி நெடுநேரம் ஆன பின்பே களைப்புடன் வீடு திரும்புபவராகவும் இருந்தார்.
ஒருமுறை  பள்ளியில் நான் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றிருந்தேன், அம்மாவிடம் அதைக் காட்ட வேண்டுமென்று பேரார்வத்துடன் இரவு நெடு நேரம் காத்திருந்தேன். அப்போதும் அம்மா வரவில்லை. பிறகு அதைக் கையில் வைத்தவாறு கண்ணீருடன் கூடத்து ஷோபாவில் தூங்கி விட்டேன். அம்மா வீடு திரும்பும் போது கூடத்தில் என்னைக் கண்டதும் ‘என்ன அம்மு பெட்ரூமில் தூங்காமல் இங்கே என்ன செய்கிறாய்? என்று கேட்டார். நான் எனது பரிசைக் காட்டி இதை உன்னிடம் காட்ட வேண்டுமென்று தான் அம்மா இரவு நெடுநேரம் காத்திருந்தேன் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினேன். எனது பதிலைக் கேட்டு அம்மா மிக நெகிழ்ந்து விட்டார்.”
கேள்வி: அம்மா நடிகை என்பதால் உங்களையும் நடிகையாக்க ஆசைப்பட்டாரா?
பதில்: இல்லை, ஆரம்பத்தில் அம்மாவுக்கு நான் நன்றாகப் படித்து இந்தியாவின் உயர்பதவிகள் எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. ஆனால் அவருக்குப் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும். குடும்ப பராமரிப்புச் செலவுகளுக்கு பணம் மிகப்பெரிய பற்றாக்குறையாக இருந்தது. அம்மா தான் நடித்துச் சம்பாதித்த பணத்தை முழுவதுமாக தனது தங்கைகளின் திருமண வாழ்வுக்காக செலவளித்து விட்டார். எங்களையும் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து ஆடம்பரமாக வளர்த்து விட்டார். அதுவரை வீட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் இருப்பதே எனக்கும், அண்ணனுக்கும் தெரியாது. நாங்கள் ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ என்றூ தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்களது குடும்ப நிலமை அப்போது அப்படி இருக்கவில்லை. பொருளாதார கஷ்டங்களுக்காக அம்மா என்னை நடிக்கச் சொல்லி வற்புறுத்தும் நிலை அப்போது தான் வந்தது. அதற்கு முன்பு அம்மாவுக்கு நான் திரைத்துறைக்கு வருவதில் விருப்பம் இருந்ததில்லை. எனக்கும் விருப்பம் இருந்ததில்லை.
கேள்வி: நீங்கள் சந்தோசமாக இருந்த நாட்கள் என்று எதைச் சொல்வீர்கள்?
பதில்: என் பள்ளிக் காலங்கள். அவை தான் நான் நானாக இயல்பாக இருந்த நாட்கள். என் வாழ்வில் நான் நிஜமாகவே சந்தோசமாக இருந்த நாட்கள் என்றால் அது அப்போதைய நாட்கள் தான்.
கேள்வி: ஒரு பள்ளிச் சிறுமியாக உங்களுக்கும் அந்த வயதுக்குரிய கனவுகள், கற்பனைகள் இருந்ததா?
பதில்:
நிச்சயமாக இருந்தது. என் பள்ளி நாட்களில் பிரபல கிரிக்கெட்டர் நார் கண்ட்ராக்டர் மீது ‘கிரஷ்’(ஈர்ப்பு) இருந்தது. டெஸ்ட் மேட்சுகளுக்குச் சென்று அவர் விளையாடுவதை ரசித்துப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அதுமட்டுமல்ல எனக்கு அப்போது ஷம்மி கபூரையும் மிகவும் பிடிக்கும். அவரை சந்தித்ததில்லை. ஆனால் அவரது படங்களும், பாடல்களும் என்றால் எனக்கு அத்தனை இஷ்டம்.”
உரையாடலின் நடுவே சிமியின் உற்சாகமான வேண்டுகோளுக்கு இணங்க முதலில் மறுத்தாலும் பின்பு சிரித்துக் கொண்டே அவருடன் இணைந்து தனக்குப் பிடித்த ஷம்மி கபூர் பாடல்களான 

‘ஆஜா ஷனம்... மதுர் சாந்த், ஷோரி...ஷோரி’ உள்ளிட்ட பாடல்களைப் பாடிக் காட்டுகிறார். 

இந்தப் பேட்டியில் மட்டுமல்ல பழைய தினமணி கதிர் இதழ் ஒன்றில்  வாசிக்க நேர்ந்த செய்தி;

ஒரு முறை கைத்தறிப் புடவைகளை உடுத்தும் பழக்கத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் பிரபலங்களை வைத்து புடவை விற்பனை செய்யும் வகையில் சிறப்புக் கட்டுரை ஒன்றுக்கு தயார் செய்து விட்டு, புடவை விற்கும் பிரபலமாக அப்போதைய அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சியின் புதுக் கொள்கை பரப்புச் செயலாளரான ஜெயலலிதாவை அணுகி இருக்கிறார்கள். தன்னை அணுகிய நிருபரின் வேண்டுகோளுக்கு முதலில் சற்றுத் தயக்கம் காட்டி விசயத்தை முழுவதுமாக கேட்டறிந்த ஜெயலலிதா பின்பு அதன் பின்னிருக்கும் நல்ல நோக்கம் அறிந்ததும் தயங்காமல் நிருபர் குழாமுடன் வந்து புடவை விற்றுக் காட்டியிருக்கிறார். சும்மா அல்ல ஒவ்வொரு கைத்தறிப் புடவை பற்றியும் மிகத் துல்லியமாக விவரம் அறிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு புடவைகளைப் பற்றி தெளிவாக எடுத்துக்கூறி புடவை விற்றுக் காட்டியிருக்கிறார்.

அப்போதெல்லாம் ஜெயலலிதா மீடியா ஃபிரெண்ட்லி மட்டுமல்ல மிகவும் வெளிப்படைத் தன்மை நிறைந்த நபராகவுமே இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இது மட்டுமல்ல தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுடனான தனது ‘லிவிங் டுகெதர்’ உறவாகட்டும், குமுதம் இதழில் அவர் எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்திய சுயசரிதையாகட்டும் அனைத்திலுமே ஒரு வெளிப்படைத் தன்மை மட்டுமல்ல பத்திரிகையாளர்களுடனான அவரது நட்பு கலந்த உறவும் வெளிப்படும் வண்ணமாகத் தான் இருந்திருக்கிறது அவரது ஆரம்ப கால வாழ்க்கை.

இவையெல்லாம் தாண்டி தான் நினைத்தே பார்த்திராத வகையில் தனது வாழ்வைத் தீர்மாணித்த இரண்டு மிகப்பெரும் சக்திகளாக ஜெயலலிதா குறிப்பிடுவது இருவரை தான். முதலாமவர் அவரது தாய் வேதவள்ளி என்கிற சந்தியா. இரண்டாமவர் எம்.ஜி.ஆர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com